அந்த கலெக்டர் பங்களாவில் அறைகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. இருந்தாலும் தானே முன்னின்று அனைவரும் தூங்க ஏற்பாடு செய்தாள் மலர்விழி.
“ராகவன் கோபப்பட்டா, கொஞ்சம் பொறுத்துக்கோ மலர்.” தூங்கச் செல்வதற்கு முன்னர், ஆனந்தி தான் மலர்விழியிடம் சொன்னது.
ஆனந்தியின் வார்த்தைகளில் சட்டென்று ஒரு பதட்டம் வந்து உடம்பில் ஒட்டிக் கொண்டாலும், “அட்வைஸ் எல்லாம் ஓகே. பால் சொம்பு மட்டும் தான் அண்ணி மிஸ்ஸிங்.” கேலியாக கண்களைச் சிமிட்டினாள் மலர்விழி.
“ஓஹ்… அம்மணிக்கு அப்படியொரு நினைப்பிருக்கோ? மொதல்ல சிங்கத்தோட வாயில விழுந்து சிக்கி சின்னாபின்னமாகாம வெளிய வா” என்று சிரித்தாள் ஆனந்தி.
மதிய உணவையும், இரவு உணவையும், ஹோட்டலில் சுந்தர் ஆர்டர் கொடுத்து விட, கிடைத்த நேரங்களில் எல்லாம், பெண்கள் தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசி நட்பை வளர்த்திருந்தார்கள். அந்த நட்பு தந்த தைரியத்தில் இருவராலும் கேலியாக பேச முடிந்தது.
ராகவனின் வாழ்க்கையில் அவள் இல்லாத ஐந்து வருடக் கதையையும் ஆனந்தியும், ஜெயந்தியுமாக மலர்விழிக்கு சொல்லி முடித்திருந்தார்கள். பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, தங்கள் வீட்டுக்கு வந்து சண்டைபிடித்த ஆனந்தி இல்லை இது என்பது புரிந்து விட்டது மலர்விழிக்கு.
உண்மையில் ஆனந்தி மீது எப்போதுமே மலர்விழிக்கு கோபம் இருந்ததில்லை. ‘தங்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்று வந்துவிட்டால் யாராக இருந்தாலும் அப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள்’ என்ற எண்ணம் தான் அவளுக்கு.
இப்போது உள்ளன்போடு ஆனந்தி பழக, மலர்விழியின் மனம் ஆனந்தியை ஏற்றுக் கொண்டது.
ஆனந்திக்கு குட்நைட் சொல்லிவிட்டு தன்னுடைய ரூமை நோக்கி நகர்ந்த மலர்விழிக்கு, நாள் முழுவதும் தன்னிடம் முறுக்கிக் கொண்டே அலைந்த கணவனை நினைக்கும் போது கொஞ்சம் கண்ணைக்கட்டத் தான் செய்தது.
ஆமாம்… தங்களுக்கு கிடைத்த முதல் தனிமையில், “எப்படி இருக்கீங்க ராகவ்?” மலர்விழி தவிப்போடு கேட்க,
“எப்படி இருந்தா உனக்கென்ன?” ராகவனிடமிருந்து முறைப்போடு கூடிய கேள்வியே பதிலாக வந்தது.
அதேபோல, சாப்பாட்டு வேளைகளில் பரிமாறும்போது, மலர்விழி எதுவும் கேட்டால் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்தான் ராகவன்.
ஆக, தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் உன் மீது கோபமாக இருக்கிறேன் என்று மலர்விழிக்கு தெரியப்படுத்திக் கொண்டேதான் இருந்தான் ராகவன்.
தன்னுடைய அறைக்கு முன் வந்துநின்று, ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்ட மலர்விழி மெதுவாகத் கதவைத் திறந்து உள்ளே பார்த்தாள்.
கட்டிலில், தன் இரண்டு தோள்களையும் மக்களுக்கு தாரை வார்த்துக் கொண்டு ராகவன் படுத்திருந்தது, மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.
கட்டவிழ்ந்த கன்றுகளாக பிள்ளைகள் இன்று ஆட்டம் போட்டதில் வழக்கத்தைவிட சீக்கிரமாகவே தூங்கி வழிந்தார்கள். அவர்களோடு ராகவனும் ஏற்கனவே படுக்கையறைக்கு வந்திருந்தான்.
கதவை சாத்திவிட்டு கட்டிலை நோக்கி நடந்தாள் மலர்விழி. உறவுகளுக்கு மத்தியில் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாத மலர்விழிக்கு, தனியேக் கணவனைக் காணவும், அதுவும் பிள்ளைகளோடு காணவும், கணவனைக் கட்டிக்கொண்டு ஓ வென்று அழவேண்டும் போல இருந்தது.
கணவனின் உடன்பிறப்புகளுக்கு நியாயம் செய்கிறேன் என்று அவனுக்கு தான் செய்திருக்கும் அநியாயம் புரிந்தது.
கட்டிலுக்கு அருகில் வந்து, பிள்ளைகள் தகப்பனைக் கட்டிக்கொண்டு தூங்கும் அழகை ரசித்தபடி நின்றிருந்தவளுக்கு, அந்த அரையிருளில் தன்னையே கணவன் கூர்மையாக பார்த்துக் கொண்டிருப்பது புரிய, தடுமாறினாள்.
“கலெக்டர் மேடம்… என்ன இந்த பக்கம்?” அவளை எதிர்பார்த்து நீண்ட நேரமாக காத்திருந்தவனிடமிருந்து, கிண்டலாக வந்தது கேள்வி.
நாள் முழுவதும் கணவனின் உதாசீனத்தில் குளித்திருந்தவளுக்கு அந்த கேள்வி என்னவோ போலிருக்க, கட்டிலில் அமர்ந்து அவன் கையை உரிமையாகப் பிடித்துக்கொண்டு, “யாரோ போல பேசாதீங்க ராகவ்” என்றாள் வேண்டுதலாக.
“யாரோ போல இல்ல ம்மா. நீ இப்போ எனக்கு யாரோவே தான். எனக்கு கல்யாணமாகி, ஊர்ல ரெண்டு பிள்ளைங்க கூட இருக்காங்க. யாரும் சொல்லலையா உனக்கு?” மலர்விழியின் கையை உதறியபடி, படுநக்கலாக கேட்டான் ராகவன்.
“என்னைத் தவிர வேற யாரையும் உங்களால மனைவியா நினைச்சுக்கூட பாக்க முடியாதுன்னு எனக்கு தெரியும் ராகவ். சும்மா விளையாடாதீங்க.” லேசான அதட்டல் குரலில் சொன்னாள் மலர்விழி.
“அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு டி, என்னை வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன? அவ்ளோ ஈசியா போய்ட்டனா இந்த ராகவன் உனக்கு?” கிட்டத்தட்ட உறுமினான் ராகவன்.
ராகவனின் சத்தத்தில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த மகள் உறக்கம் கலைந்து சிணுங்கினாள்.
சட்டென்று மகளின் அருகில் படுத்து தன் அணைப்புக்குள் கொண்டுவந்து, தட்டிக்கொடுக்க ஆரம்பித்த மலர்விழி, “ராகவ், ப்ளீஸ்… கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. பிள்ளைங்க முழிச்சிடப்போறாங்க” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
“ஆடத் தெரியாதவ, தெரு கோணலா இருக்குன்னு சொன்னாளாம். அப்பிடித்தான், எங்கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்ன உடனே பிள்ளைங்களை சாக்கா வச்சி எஸ்கேப் ஆகப் பாக்குறியா?” பிள்ளைகள் என்ற மந்திரச்சொல் ராகவனைக் கட்டுப்படுத்த, குரலில் சத்தத்தை குறைத்து, உஷ்ணத்தை ஏற்றியிருந்தான் ராகவன்.
‘அம்மாடி… தன் கணவனுக்கு இப்படி எல்லாம் கூட பேசத்தெரியுமா?’ அசந்தே போய்விட்டாள் மலர்விழி.
எல்லாவற்றிற்கும் காரணம் தன்னுடைய செயல்தான் என்பது புரிய, கணவனின் மனக்கிலேசத்தை அப்போதே, அந்த விநாடியே போக்கிவிட வேண்டும் என்ற வேகம் எழும்பியது.
தங்களுடைய பேச்சில் பிள்ளைகள் இருவரின் தூக்கமும் கெட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் தூங்கிவிட்ட மகளை, தனக்கு அந்தப் பக்கம் சுவர் ஓரமாக கட்டிலில் விட்ட மலர்விழி, ராகவன் மீது காலைத் தூக்கிப் போட்டபடி ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருந்த மகனையும் கையில் தூக்க முயன்றாள்.
அவ்வளவு தான்… “பிள்ளைங்களை எங்கிட்டயிருந்து பிரிக்கிறதுல தான் உனக்கு எவ்வளவு சந்தோஷம், இல்ல” என்றான் ராகவன் ஒருமாதிரி குரலில்.
கணவனின் சிறுபிள்ளைத்தனமான பேச்சில், தன் முயற்சியை கைவிட்ட மலர்விழி, “நான் அப்படி செய்வேன்னு நினைக்கிறீங்களா நீங்க?” என்றாள் அடிபட்ட குரலில்.
“நினைக்குறது என்ன? அதுக்கு சாட்சியா தான், இதோ, இரண்டு பேரும் இருக்காங்களே” என்று பிள்ளைகளைச் சுட்டிக் காட்டினான்.
“ஐயோ ராகவ்… நான் எப்பிடி சொல்லுவேன்? அப்போ… உங்களை விட்டுப் போகும் போது நான் கன்சீவ் இல்ல. அன்னைக்கு… அன்னைக்கு… லாஸ்ட் டே, நாம…” என்றவள் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாற,
அவனோ, “ஓ… அப்போ எல்லாம் ப்ளான் பண்ணிதான் செய்திருக்க?” என்றான் குற்றம்சாட்டும் குரலில்.
‘கடவுளே… இதில் எல்லாமா திட்டமிட முடியும்?’ மனதிற்குள் அலறியவள்,
“இல்ல ராகவ், கன்சீவன்ஸி… அது எதேச்சையா நடந்தது. அது கூட, நான் வீட்டை விட்டு போனதை சேர்த்து குழப்பிக்காதீங்க. இன்ஃபேக்ட், அந்த டைம்ல நம்ம பேபீஸ் மட்டும் என்வயித்துல இருந்திருந்தாங்கன்னா நான் போயிருக்கவே மாட்டேன்.” கணவனின் மனதில் பதியும்படி மென்மையான குரலில் சொல்லியபடியே கட்டிலில் எழும்பி அமர்ந்தாள் மலர்விழி.
“யாரு? நீ, என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டியா? குட் ஜோக். எந்த பிரச்சனை வந்தாலும் நீ என்னை விட்டு ஓடுறதுலயும், என்னை விட்டுக்குடுக்குறதுலயுமே தான் குறியா இருந்துருக்க. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி நீ தான் உலகம்னு இருந்துருக்கேன்.”
விரக்தியில் இதழ்கள் வளைய சொன்ன ராகவன், தானும் படுக்கையிலிருந்து எழும்பி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான். அவன் கைகளோ மகனை தடவியபடியே இருந்தது.
“அப்படி உங்களை விட்டு விலகுற முடிவை நான் எப்போ எடுத்திருந்தாலும், உங்க நல்லதுக்காக மட்டும் தான் எடுத்திருப்பேன் ராகவ்.” தன்னை புரிய வைத்துவிடும் வேகத்தில் பேசினாள் மலர்விழி.
“கேட்டனா? உங்கிட்ட எனக்கு நல்லது செய்யின்னு நான் கேட்டேனா?” மறுபடியும் குரலை உயர்த்தினான் ராகவன்.
எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுத்து ஏட்டிக்கு போட்டியாக பேசும் கணவனின் செயலில் ஆயாசம் வந்தது மலர்விழிக்கு.
‘நான் மட்டும் பிரிவில் பூரித்து போயா கிடந்தேன்? பிரிவின் வலி இருவருக்குமே பொது தானே. அதைச் சொன்னால், எல்லாம் உன்னால் தான் என்பான்.’
‘உன் அக்கா பிரச்சனை நான் அங்கு இல்லாமல் போனபிறகு தானே ஒரு முடிவுக்கு வந்தது என்று சொன்னால், அதுவும் காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்வான்’ என்ற எண்ணம் ஓடியது மலர்விழிக்கு.
ஆக, திடீரென்று குழந்தைகளைப் பார்த்ததில் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் கணவன், தான் எதைச் சொன்னாலும் சமாதானம் ஆக போவதில்லை, என்பதை புரிந்து கொண்ட மலர்விழி சமாதான உடன்படிக்கையை தள்ளி வைக்க முடிவு செய்து, முகத்தை லேசாக சுழித்தாள்.
அடுத்து என்ன வார்த்தை மனைவி வாயிலிருந்து வரும், அதை அடித்து துவம்சம் செய்யலாம் என்று முழுவேகத்தில் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கண்களில் அது தவறாமல் விழ,
“என்னாச்சு? முகத்தைச் சுழிக்கிற? நான் பேசுறதைக் கேட்க அவ்வளவு கொடுமையாவா இருக்கு உனக்கு?” என்று, அப்போதும் சண்டைக்கு கோர்த்துக் கொண்டு வந்தான்.
“ஐயையோ… அப்பிடி இல்ல ராகவ். எனக்கு லேசா வயிறு வலிக்குது” பதறியபடி சொன்ன மலர்விழி, தன் குரலில் வலியைக் கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருந்தாள்.
“வயிறு வலிக்குதா? என்ன திடீர்னு? ஹாஸ்பிடல் போய்டலாமா?” இவ்வளவு நேரமும் மனைவியை கதறவிட்டவன், இப்போது பதறிப்போய் கேட்டான்.
“இல்ல… இரண்டு நாளா அன்டைம்ல சாப்பிட்டது, கேஸ்ட்ரிக் ப்ராப்ளத்தை கொண்டு வந்திடிச்சி போல. ஹாஸ்பிடல் எல்லாம் போக வேண்டாம். கொஞ்சம் டைஜின் சிரப் குடிச்சா சரியாப் போயிடும்.” முகத்தில் வேதனையின் சாயலை நிறுத்தி, பேசி முடித்தாள் மலர்விழி.
“டைஜின் இருக்கா, இல்ல போய் வாங்கிட்டு வரணுமா?” நீருக்குள் மறைத்து வைத்த காற்றடைத்த பந்தைப்போல, முழுமூச்சில் மனைவி மீதான ராகவனின் அக்கறை வெளியே வந்து, அவனை பரபரப்பாக கேள்வி கேட்க வைத்தது.
“ம்ம்… இருக்கு” என்று முணுமுணுத்தவள், அது இருக்கும் கபோர்ட்டை நோக்கி கையை நீட்டினாள். அரைஇருட்டில் அதை எடுக்க மனமின்றி, பிள்ளைகள் தூங்குவதையும் பொருட்படுத்தாமல் அறையின் மின்விளக்கை இயக்கி, எடுத்துக் கொடுத்து மனைவியை குடிக்க வைத்தான்.
மறுபடியும் விளக்கை அணைக்கும் வரைக்கும் மலர்விழிக்கு தான் திக்திக் என்றிருந்தது. பின்னே, சிரிப்பில் துடித்த இதழ்களை இழுத்து பிடித்து கட்டுப்படுத்தி வைத்திருந்ததை ராகவன் கண்டுகொண்டால், வேறு வினையே வேண்டாமே.
டைஜினைக் குடித்தவள் மெதுவாக படுத்துக்கொள்ள, சில வினாடிகள் இடைவெளியில் மலர்விழியின் வயிற்றில் ராகவனின் கை பதிந்தது. அதுவும் வெற்று வயிற்றில் பதிந்தது.
வீட்டில் உறவினர்களின் வருகை இருக்க, வெளியே இருந்து வந்ததும் குளித்து முடித்து மறுபடியும் புடவையே கட்டியிருந்தாள் மலர்விழி.
வயிற்றில் கணவனின் கை பதியவும் தூக்கிவாரிப்போட, கணவனின் கைக்கு மேல் தன் கையை வைத்த மலர்விழி, “எ… என்ன செய்றீங்க ராகவ்?” என்று திக்கித் திணறினாள்.
“அப்பிடியே உன்னை கடிச்சு திங்குற மூட்ல எல்லாம் நான் இப்போ இல்ல. வயித்தை தடவி விட்டா கொஞ்சம் வலி குறையுமேன்னு தான் தடவுறேன்.” கடுகடுத்தவனின் கை மனைவியின் வயிற்றை மென்மையாக தடவிக் கொடுத்தது.
ஐந்து வருடங்களுக்கு பிறகு கணவனின் ஸ்பரிசம் பெண்ணவளை மெய்சிலிர்க்க வைத்தது. அதை கண்மூடி அனுபவித்தவளுக்கு, ராகவனின் கை வயிற்றில் ஆங்காங்கே தயங்கித் தயங்கி பயணம் செய்வது போலிருந்தது.
அவள் எண்ணம் சரிதான் என்பது போல, “டெலிவரி நார்மலா? சிசேரியனா?” கம்மியக் குரலில் கேட்டான் ராகவன்.
“நார்மல் தான்” மெதுவாகச் சொன்னாள் மலர்விழி.
“இது கூட எனக்குத் தெரியல. என்னை எந்த நிலமைல கொண்டு வந்து நிறுத்திருக்கன்னு புரியுதா உனக்கு?” மறுபடியும் ராகவன் சிலிர்த்துக் கொண்டான். இதற்குமேல் தாங்காது என்ற எண்ணத்தில் அவன் இடையோடு கைகொடுத்து தன்னருகே கட்டிலில் சரித்த மலர்விழி,
“தலைவரே, நடந்தது நடந்தது தான். அதை நம்மால மாத்தவே முடியாது. அதனால, அதைப்பத்தி பேசிப்பேசி நேரத்தை வீணாக்காதீங்க. ஐந்து வருஷம் கழிச்சு நாம ரெண்டு பேரும், ஒரே ரூம்ல, ஒரே பெட்ல நம்ம பிள்ளைங்களோட இருக்குறோம். அந்த சிச்சுவேஷனை அனுபவிங்க தலைவரே.” ராகவனின் மார்பை தன் கையால் லேசாக தட்டிக் கொடுத்தபடியே சொன்னாள்.
அந்த கைக்கு மாயம் செய்யும் தந்திரம் தெரிந்திருந்ததோ என்னவோ, “ஐந்து வருஷக் கோபம். என்னை ஒரே நாள்ல சமாதானம் பண்ணிடலாம்னு நெனைச்சிடாத” முறுக்கிக் கொண்டான் ராகவன்.
“இல்ல, நினைக்கல…” கணவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்த மலர்விழி, தன் முகத்தை அவன் மார்புக்கு இடம் மாற்றினாள்.
“ஏய்… தள்ளிப் போடி.” வார்த்தைக்கு மாறாக ராகவனின் கைகள் மலர்விழியின் தோள்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
அதற்குமேல் எதுவுமே தேவையில்லை என்பது போல இருவருமே மோனநிலையில் திளைத்திருந்தார்கள்.
“ஹ்ம்ம்…” என்றவன், தங்களுக்கு நடுவே மகனைக் கொண்டு வர, மகளைக் கொண்டு வந்தாள் மலர்விழி. இருவரின் கைகளும் பிள்ளைகளைத் தட்டிக் கொடுத்தபடியே இருந்தது.
“ட்வின் பேபீஸ்… டெலிவரி அப்போ ரொம்ப கஷ்டப்பட்டியா?” திடீரென்று ராகவன் கேட்க, மென்குரலில் தன் பிரசவநேரத் தேடல், தவிப்பு என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தாள் மலர்விழி.
ம்ம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தவனின் ம்ம்… எல்லாம், சில நேரங்களில் சாந்தமாகவும், ஆற்றாமையாகவும் காதலாகவும், ஏன், சிலநேரங்களில் ரௌத்திரமாகவும் நீண்ட நேரத்திற்கு அந்த அறையில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
மறுநாள் காலையில் பிள்ளைகள் தான் அவர்களை எழுப்ப வேண்டியதாக இருந்தது. ஆமாம்… அப்படியொரு உறக்கம் இருவருக்கும்.
பெற்றவர்களை தங்களோடு படுக்கையில் கண்ட சிறியவர்களுக்கோ உற்சாகம் கரைபுரண்டோடியது. அதை அவர்கள் மீது உருண்டு புரண்டு வெளிப்படுத்தினார்கள்.
பிள்ளைகளோடு இருவரும் அறையை விட்டு வெளியே வரும்போது அங்கே காலை உணவையே அனைவரும் முடித்திருந்தார்கள்.
அதில் மலர்விழிக்கு கொஞ்சம் வெட்கமாகிப்போக, “தூங்குறது எல்லாம் ஒண்ணும் கொலக்குத்தம் கிடையாது” என்ற சிதம்பரத்தின் மனைவி, குடும்பமாக அவர்களை அமரவைத்து பரிமாறினார்.
வீட்டுப் பெண்களே ஆளுக்கொரு வேலையாக செய்து, காலை உணவை தயார் செய்திருந்தார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், மற்றவர்கள் ஊருக்கு கிளம்புவதாகச் சொல்ல, “இங்க எவ்வளவோ டூரிஸ்ட் ப்ளேசஸ் இருக்கு, இருந்து பாத்துட்டு தான் போகணும்” பிடிவாதமாக அனைவரையும் நிறுத்தி வைத்தாள் மலர்விழி.
முற்று முழுதாக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அவர்களோடு தானும் எல்லா இடங்களுக்கும் போய் வந்தாள் மலர்விழி. அத்தனை பேருக்கும் அவர்கள் வயதிற்கு தகுந்தாற்போல அந்த ஊருக்கு வந்ததன் ஞாபகமாக பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்தாள்.
அந்த பயணம் எல்லா விதத்திலும் வந்தவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்க, நான்காவது நாள் எல்லோரும் கிளம்பினார்கள். அவர்களோடு ராகவனும் கிளம்பி நின்றான்.
அதைக்கண்டு மலர்விழி அடைந்த அதிர்ச்சியை விட, அவர்கள் மக்கள் அடைந்த அதிர்ச்சி தான் அதிகம். அதிலும் நாச்சி… அவளை அமைதிப்படுத்தவே முடியவில்லை ராகவனால்.
“நீ இங்கே இருக்கவில்லையா? இதோ, நானும் உன்னோடு வருகிறேன்” என்று கிளம்பி நின்றாள் அவனுடைய பெண்ணரசி.
ராகவனுக்கு அதில் பயங்கர பெருமிதம். “பாரடி என் மகளை…” என்பதுபோல ஜம்பமாக மனைவியைப் பார்த்து வைத்தவன், மகளைக் கைகளில் அள்ளி சமாதானம் செய்ய முயற்சித்தான். அவளோ சமாதானமடைய மறுத்து ராகவனையே தண்ணி குடிக்க வைத்தாள்.
அப்படி இப்படி என்று ஒருவழியாக மகளை சமாதானம் செய்திருந்த ராகவன், எல்லோரோடும் கிளம்பி சென்றே விட்டான்.
கிளம்பும் முன்னர், அறையில் வைத்து மனைவிக்கு ஒரு இதழொற்றலைக் கொடுத்துவிட்டே சென்றிருந்தான் மலர்விழியின் மன்னவன்.
கடந்திருந்த நான்கு நாள்களில் கணவனாக அவன் உரிமை எடுத்துக் கொண்டது அப்போது மட்டும் தான். மற்றபடி ஐந்து வருட இடைவெளியை இருவருமே தாண்ட முயற்சி செய்யவில்லை.
இதோ, ராகவன் ஊருக்கு வந்து ஒரு வாரமாகிறது. இன்று, ஞாயிற்றுக்கிழமை. வாரம் முழுமைக்கும் ஓடிக்களைத்த மக்கள் ஓய்வாக இருக்கும் நாள்.
ராகவனும் மதிய உணவுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டே எழும்பி வந்து வீட்டு வாசலில் நின்றிருந்தான்.
வெயில் தாழ்ந்து, மாலை நேரத்து இளவேனில் காற்று சிலுசிலுவென்று வீசத் தொடங்கியிருந்தது.
கண்ணுக்குத் தெரியாமல் சோக இழை ஓடும் ராகவனின் கண்கள், இப்போதெல்லாம் ஜீவகளை பொருந்தியதாக பளபளத்துக் கொண்டிருந்தது. இதழ்களில் நிரந்தரமாக ஒரு புன்னகை தங்கிப் போனது.
எல்லாவற்றுக்கும் காரணம் அவன் மனைவி, மக்கள் என்று சொல்லவும் வேண்டுமோ? தினமும் தவறாமல் வீடியோகால் அழைப்பில் மக்களோடு தொடர்பில் இருந்தவன், மனைவியைக் கொஞ்சம் தவிக்கவிட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஆமாம்… அவனுடைய பெரும்பான்மையான நேரப்பேச்சு மக்களோடே இருக்கும். ஏதோ போனால் போகிறது என்பது போல மட்டுமே மனைவியோடு ஒரு பேச்சு. அதில் அவன் மனைவிக்கு ஏகவருத்தம் என்பதுவும் அவனுக்கு தெரியும்.
“ராங்கி… ஐந்து வருஷமா என்னைத் தவிக்க விட்டல்ல, இப்போ நீயும் அனுபவி.” வில்லங்கமாக ராகவனின் மனம் முணுமுணுத்துக் கொண்டாலும், நேர்மாறாக இதழ்கள் புன்னகையில் விரிய, மக்களுக்கு அழைப்பதற்காக ஃபோனை கையிலெடுத்தான்.
அந்நேரம், வீட்டுக்கு முன்னால் வந்து நின்ற காரிலிருந்து அவன் மனைவி, பிள்ளைகளோடு இறங்கிக் கொண்டிருந்தாள்.
“ஒருவார்த்தை வர்றேன்னு சொன்னாளா பாரேன்? ராங்கி…ராங்கி.” வாய்விட்டு முணுமுணுத்தபடி நின்றிருந்தவனை, “ப்பா…” என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட அவன் மக்கள், “சர்ப்ரைஸ்…” என்று கத்தினார்கள்.
இருவரையும் இரண்டு கைகளில் அள்ளிக்கொண்ட ராகவனுக்கு உண்மையிலேயே சர்ப்ரைஸ்ஸாகத் தான் இருந்தது.
தகப்பனின் கன்னத்தை தங்கள் முத்தத்தால் எச்சில் படுத்திய சிறியவர்கள், “நம்ம வீடா ப்பா?” என்று கேட்டபடியே அவனிடமிருந்து நழுவி கால் முளைத்த சிட்டுகளாக வீட்டுக்குள் ஓடினார்கள்.