ஆரம்பத்தில் மனைவியை தன்னோடு வரும்படி அழைத்து முரண்டு பிடித்த மாதவன் கூட, நாளடைவில் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
“நாலு அறை போட்டு பொண்டாட்டியை இழுத்துட்டு வரத் துப்பில்லாம, அவ சொன்னதுக்கெல்லாம் ஆடுறியா நீ?” ஆப்பு அசைத்த குரங்கு போல, மாதவனின் அம்மா தான் அவனிடம் சண்டைக்கு வந்தார்.
“அது சரி… அதே நாலு அறையை, ஆரம்பத்திலயே அப்பா உங்களுக்கு குடுத்துருந்தா, நீங்களும் அவசியம் இல்லாம அடுத்தவங்க குடும்ப விஷயத்துல தலையை நுழைச்சிருக்க மாட்டீங்க. ஒரு குடும்பத்தை கலைச்ச பழியும் எம்மேல விழுந்திருக்காது.” பதிலுக்கு அவர் மீது பாய்ந்திருந்தான் மாதவன்.
மனைவியின் பணி நியமனத்திற்குப் பிறகு, அங்கே வீடு பார்த்து, உதவிக்கென்று ஊரிலிருந்தே நம்பிக்கையான பெண்ணை அழைத்து கொண்டு போய் நியமித்து, என்று எல்லா வேலைகளிலும் ராகவனோடு இணைந்து கொண்ட மாதவன், இப்போது மாதம் ஒருமுறை மனைவி மக்களைப் பார்க்க காஞ்சிபுரத்துக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
‘நான் மட்டும் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொண்டிருந்தால், மைத்துனனின் வாழ்க்கை இப்படி கலைந்து போயிருக்காது’ என்ற ஆதங்கம் இப்போதும் மாதவனின் மனதை அரித்து தின்று கொண்டுதான் இருக்கிறது.
அதைச் சொல்லி மாதவன் ஆதங்கப்படும் போதெல்லாம், ராகவன் தான் அவனைத் தேற்ற வேண்டியிருந்தது.
‘இதற்காகத்தானே என்னை விட்டுவிட்டு ஓடினாள். அந்த வகையில் எல்லாம் நன்றாக நடந்ததே, அதுவேப் போதும்’ என்ற எண்ணம் தான் ராகவனுக்கு.
“அக்கா, பிள்ளைங்க ஆலு சப்பாத்தி கேட்டாங்க. நீ உருளைகிழங்கு மட்டும் வேகவச்சு வை. நான் வந்து, சப்பாத்திக்கு மாவு பிசையிறேன்” என்ற ராகவன், மாதவனோடு வெளியே செல்லத் தொடங்க,
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அத்தான், நாங்களும் வரோம்… “ என்றபடி மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் ஜெயந்தியின் கணவன் நிர்மல்.
ஆமாம்… ஜெயந்தியோடு திருமண நிச்சயம் முடிந்திருந்த, அதே நிர்மல் தான்.
“என்ன சகல, உன்னையும் ஜெயந்தி தூங்கவிடலயா?” தன்னைப் போல் ஒருவன் என்ற சந்தோசத்தில் மாதவன் உற்சாகமாக கேட்க,
“என்ன சொன்னீங்க அத்தான்?” என்று கேட்டபடியே கணவனுக்கு பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள் ஜெயந்தி.
“இல்ல… ஜெயந்தியும் வரணும்னு சொன்னாளே… வரலையான்னு கேட்டேன்.” சட்டென்று மாதவன் சமாளிக்க, அங்கே சிரிப்பு அலை எழுப்பி அடங்கியது.
“சர்வம் சக்தி மயம். அப்புறம் எதுக்கு ண்ணா வாயைக் குடுத்துட்டு வம்புல மாட்டிக்கணும்.” பளீரென்று சிரித்தான் நிர்மல்.
சென்னையில் வேலை பார்த்த நிர்மல், அந்த வேலையை விட்டுவிட்டு, ‘சர்வம் ஜெயந்தி மயம்’ என்று குற்றாலத்தில் ஜெயந்தி வேலை பார்த்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, ஒருவழியாக அவளை சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டது எல்லாம் தனிக்கதை.
ஆமாம்… மலர்விழி ராகவனின் வாழ்க்கையிலிருந்து மறைந்து போவதற்கு முன்பாகவே, குற்றாலத்திற்கு வந்து ஜெயந்தியை சமாதானம் செய்ய முயற்சி செய்திருந்தான் நிர்மல்.
“உங்க வீட்டுல இருந்து மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்து கல்யாண விஷயம் பேசணும். என் அண்ணா, அண்ணி கூட காலத்துக்கும் நான் தொடர்புல தான் இருப்பேன். இதுக்கெல்லாம் சம்மதம்னா இந்த கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்.” நிர்மலின் இடைவிடாத முயற்சிக்கு, இதுதான் ஜெயந்தியின் பதிலாக இருந்தது.
நிர்மல் தன் பேச்சாலே பெற்றவர்களையும் கரைத்திருந்தான். மறுபடியும் திருமண பேச்சை தொடங்கலாம் என்றிருந்த நிலையில், மலர்விழி காணாமல் போய்விட, “நீங்க எல்லோரும் தான், என் அண்ணி இந்த முடிவை எடுக்க காரணம்” என்று மறுபடியும், திருமணத்திற்கு எதிர்ப்புக்கொடி பிடித்தாள் ஜெயந்தி.
நிர்மல் இந்தமுறை ராகவனே சரணம் என்று வந்து விட்டான். ராகவன், எவ்வளவோ சொல்லியும், “சீக்கிரம் அண்ணியை கண்டுபிடிங்க ண்ணா. அண்ணி வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று விட்டாள் ஜெயந்தி.
கிட்டத்தட்ட ஒருவருடம் கழிந்தும் ஜெயந்தி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் நிற்க, ராகவன் தான் அதட்டி, உருட்டி ஜெயந்தியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான்.
இப்போது மூன்று வயதில் ‘ராகவி’ என்ற பெண் குழந்தையும் உண்டு அந்த தம்பதியருக்கு. ம்ம்… முற்று முழுதாக அண்ணனின் பெயரைத் தழுவியே, தன் பெண்குழந்தைக்கு பெயர் வைத்திருந்தாள் ஜெயந்தி.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இன்றுதான் அவர்களின் ராகவிக்கு மூன்றாவது பிறந்த நாள். அதைக் கொண்டாடவே அனைவரும் ராகவனின் வீட்டில் கூடியிருக்கிறார்கள்.
கொண்டாட்டம் என்று இல்லை, தங்களுக்குள் சொல்லி வைத்து விடுமுறையில் ஊருக்கு வரும் உடன்பிறப்புக்கள் இருவருமே, வந்து இறங்கும் இடம் தங்கள் உடன்பிறந்தவனின் வீடுதான்.
ஆமாம்… இங்கே வந்து இறங்கிவிட்டு, பிறந்த வீட்டுக்கு போய் தலையை காட்டிவிட்டு வருவார்கள். கதிரேசன் மட்டும் தான், ஏதோ போனால் போகட்டும் என்று தனது பயணப்பையை அங்கே இறக்கிவிட்டு, இங்கே வந்து இவர்களோடு சேர்ந்து கொள்வான்.
அத்தனை இடநெருக்கடியாக இருக்கும் போதும், அவர்களின் ஜாகை அண்ணன் வீட்டில் தான். உடன்பிறந்தவர்களின் வசதிக்காகத் தான் ராகவன் வீட்டையே விஸ்தரித்தது.
ஆக, பிள்ளைகள் நால்வரும் சொல்லி வைத்தது போல தங்களிடமிருந்து விலகி நிற்பதில், அவர்களின் பெற்றோருக்கு சமீபகாலமாக வருத்தமே. நாட்டாமை அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார். அவர் மனைவி, தன் மக்களிடம் புலம்பித் தீர்த்துவிடுவார்.
அதிலும் ராகவன் இந்த ஐந்து வருடங்களாக பெற்றவர்களிடமிருந்து முற்றுமுழுதாக விலகியே நிற்கிறான்.
மலர்விழி, இங்கிருந்து சென்ற புதிதில், ராகவனுக்கும் சுசீலாவுக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்து பார்த்தார் தெய்வானை.
இவ்வளவு ஏன்? கஸ்தூரியே நேரிடையாக தன் மகள் சுசீலாவை திருமணம் செய்து கொள்ளும்படி ராகவனை வற்புறுத்தி இருக்கிறார்.
அதற்கு ராகவன், “இப்போ நான் உங்க அண்ணன் மகன் ராகவன் கிடையாது. மலர்விழியோட புருஷன். இன்னொரு பொண்ணோட புருஷன் கிட்ட, உங்க பொண்ணை கட்டிக்க சொல்லுறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா?” என்று முகத்திலடித்தார் போல கேட்டே விட்டான்.
ராகவனின் இந்த கேள்விக்கு பிறகு, கஸ்தூரி மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்து விட்டார்.
என்றாலும், விட்டேனா பார் என்று பெரிய மகள் ஆனந்தி மூலம் மகனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க தெய்வானை முயன்றார்.
ஏற்கனவே, தம்பி மனைவி அவனைவிட்டு பிரிந்திருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற மனவேதனையில் இருப்பவளோ தாயின் முயற்சிக்கு உடன்பட மறுத்து, “எனக்கு ராகவன் தனியா நிக்குறது வருத்தம் தான். அதுக்காக, இன்னொரு கல்யாணம் பண்ணுன்னு என்னால கண்டிப்பா சொல்ல முடியாது ம்மா. எனக்கு நம்பிக்கை இருக்கு, சீக்கிரம் மலர்விழி வந்துடுவா. என்தம்பி வாழ்க்கையும் நல்லாயிருக்கும்” என்று முடித்து விட்டாள்.
ராகவனோடு பிறந்த பெண்கள் இருவரும் இப்படி என்றால், கதிரேசனின் அன்பு வேறுமாதிரி. ஆமாம்… அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பிக்கவும், “அண்ணன் சிங்கிளா நிக்கும்போது கண்டிப்பா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எத்தனைக் காலம் ஆனாலும் பரவாயில்ல, அண்ணி வந்தபிறகு தான், நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று ஒரே பிடியாக நிற்கிறான்.
ராகவன், சாம, தான, பேத, தண்ட முறைகளை கையிலெடுத்த பின்னும் தன் முடிவிலிருந்து இறங்கிவர மறுத்து நிற்கிறான் கதிரேசன்.
ஆக, மனையாள் என்ற வாழ்நாள் பந்தம் ராகவனை விட்டு விலகிப் போயிருந்தாலும், உடன்பிறப்புக்கள் என்ற இரத்த பந்தம், அவனை சோர்ந்துபோக விடாமல் தாங்கி நிற்கிறது.
மத்தியானம் சாப்பாடு வேளைக்கு கதிரேசனும் வந்து சேர, இன்னும் கலகலப்பானது வீடு.
இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு பின்னால் இருக்கும் பெரிய மல்லிகை பந்தலுக்கு கீழே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்திருந்தபடியால், வெயில்தாழ, அக்கா பிள்ளைகளின் துணையோடு அங்கே அலங்கரிக்கத் தொடங்கியிருந்தான் கதிரேசன். மற்றவர்கள் எல்லோரும் நாற்காலியை போட்டு அந்த பந்தலுக்கு கீழே தான் அமர்ந்திருந்தார்கள்.
மலர்விழி வைத்து வளர்க்க ஆரம்பித்திருந்த மல்லிகைச் செடி அது. இரும்பு கம்பியால் பந்தல் அமைத்து அதற்குமேல் படர விட்டிருந்தான் ராகவன். இத்தனை வருடங்களில், மிகப்பெரிய பந்தலாகவே மாறியிருந்தது அந்த சின்ன மல்லிகைச் செடி.
அந்த மல்லிகைப் பந்தலை சீரியல் பல்பாலும், கலர் பேப்பர்களாலும், வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கத் தொடங்கிய கதிரேசன், ஒரு கொடியைப் பிடித்து லேசாக வளைக்க முயல, “டேய்… டேய்… என்ன டா பண்ணுற?” என்று பதறியபடி தம்பியின் பக்கத்தில் வந்து நின்றான் ராகவன்.
மல்லிகைப் பந்தலை கதிர் அலங்கரிக்கத் தொடங்கவுமே, ஒரு பதட்டத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் செயலில், அவனோடு பிறந்த பெண்மக்கள், “ஓஹோ…” என்று சத்தமிட,
“இது உங்க காதல் மல்லிகைன்னு தெரியும் ண்ணா… உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷலோ, அப்படித்தான் எங்களுக்கும். சோ, டோண்ட் வொர்ரி” என்று கண்களைச் சிமிட்டினான் கதிரேசன்.
இது அத்தனையையும், அங்கே இருந்து பார்த்துக் கொண்டிருந்த தெய்வானையின் இதயத்தில், பளாரென்று பலம் கொண்ட மட்டும் யாரோ அறைந்தது போலிருந்தது. கூடவே, ‘இப்படியும் காதலிக்கப்பட கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று, ஒரு பெண்ணாக சிறு பொறாமை கூட அவரிடம் எட்டிப் பார்த்தது.
ஆமாம்… பெண்மக்களையும், அவர்கள் பெற்ற பிள்ளைகளையும் சாக்கிட்டு, இப்போதெல்லாம் தெய்வானையின் வருகை அங்கே இருக்கிறது.
ஆனால், வந்தாயா, வா என்ற பாவனை தான் ராகவனிடம். அவரிடம் பேச்சு எதுவும் கிடையாது.
மகனின் இந்த பாவனையை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒருமுறை அவன் கைகளைப் பிடித்து, “ராகவா, பிள்ளைங்களோட கல்யாண விஷயத்துல பெத்தவங்களுக்கும் ஆசை, கனவு இருக்கத் தானே செய்யும்? எங்களோட பேச்சு எல்லாமே, அந்த கனவு கலைஞ்சு போன ஆதங்கத்துல வந்தது டா. அதை பெரிசு படுத்தாத.” கிட்டத்தட்ட கெஞ்சவே செய்திருக்கிறார் தெய்வானை.
அப்போதும், உணர்வுகளை தொலைத்த கல் போன்ற முகபாவனை தான் ராகவனிடம்.
இப்போதெல்லாம், இன்னொரு பயம் தெய்வானையின் மனதை ஆட்டிப்படைக்கிறது. ஆமாம்… மலர்விழியை கோவிலில் வைத்து அவர் பேசிய அதிகப்படியான பேச்சுக்கு,
“என் வயித்து பிள்ளைங்க இல்லைன்னா, உங்களுக்கு ஆம்பிள்ளை பசங்க, வாரிசுங்களே இந்த ஜென்மத்துல கிடையாது” என்ற மலர்விழியின் வார்த்தைகள், அடிக்கடி ஞாபகம் வந்து அவரை பயமுறுத்துகிறது.
மூத்தமகன், தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவிக்காக தனிமைத் தவம் இருக்கிறான் என்றால், இளையவனோ தமையனுக்காக வேண்டி திருமணத்தை தவிர்க்கிறான். ‘அப்படியானால் அந்த மலர்விழி சொன்னது போல நடந்துவிடுமோ?’ மனம் ரகசியமாக கேள்வி கேட்டு அவரைப் பதற வைக்கிறது.
தன் இருமகன்களின் வாழ்க்கையும் சரியாக வேண்டும் என்றால் அவள் ஒருத்தியின் வருகை கட்டாயம் இங்கே தேவை, என்பது போல உணர்ந்து கொண்ட தெய்வானை, இப்போதெல்லாம் சீக்கிரம் மலர்விழி இருக்குமிடம் தெரிந்துவிட வேண்டும் என்ற வேண்டுதலை தன்னுடைய ப்ரார்த்தனையில் சேர்த்திருக்கிறார்.
பிறந்தநாள் கொண்டாடும் ஜெயந்தியின் மகளோடு சேர்த்து, ஆனந்தியின் பிள்ளைகளுக்கும் புதுத்துணி எடுத்து கொடுத்திருந்தான் ராகவன். கேக் வெட்டி முடிக்கவும், பிறந்தநாள் பேபிக்கு போலவே மற்றவர்களுக்கு பரிசும் கொடுத்திருந்தான்.
அதைக் கைகளில் வைத்துக் கொண்டு தேவலோகமாக ஜொலித்த மல்லிகை பந்தலுக்கு கீழே குடுகுடுவென்று ஓடிக் கொண்டிருந்தார்கள் மூவரும்.
சாப்பாடு கூட பிள்ளைகள் விருப்பப்படியே ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து வரவைக்கப்பட்டிருந்தது. அங்கேயே டேபிள் போட்டு உற்சாகமாக சாப்பிட்டு முடித்துக் கொண்டார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் தெய்வானை கிளம்ப, “அப்பாவுக்கு கொண்டு குடுங்க ம்மா” என்று பாத்திரத்தில் உணவை வைத்து கொடுத்தாள் ஆனந்தி.
“அக்கா, தங்கச்சி ரெண்டு பேர்கிட்டயும் நம்ம வீட்டுலயிருந்து ராகவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போங்கன்னு சொன்னா மட்டும், அவன் சாப்பிட மாட்டான்னு எடுக்க மாட்டீங்க. இப்போ, இங்கயிருந்து கொண்டு போனா மட்டும் உங்க அப்பா சாப்பிடுவாரோ?” நொடித்துக் கொண்டாலும், வாங்கிக் கொண்டே சென்றார் தெய்வானை.
இரவு பத்து மணி வரைக்கும் அங்கேயே அமர்ந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாக கொட்டமடித்து விட்டே, உறங்குவதற்காக எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள்.
தன் அறைக்குள் வந்த ராகவனால், மாமா, மாமா என்று தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு பாசமழை பொழிந்த சகோதரிகளின் பிள்ளைகளோடு, தன் பிள்ளைகளும், மனைவியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
காலையில் கனவில் கண்ட பிள்ளைகளின் முகத்தை மறுபடியும் ஞாபகத்துக்கு கொண்டுவர முயன்றவனிடம், இதுவரையில் இருந்த உற்சாகம் வடிந்து போனது.
சோர்வாக, படுக்கையில் விழுந்தவன் மொபைலை எடுத்து யூட்டூபை திறந்தான். இப்போது ராகவன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருந்ததோடு, யூட்டூபிலும் பெயர் சொல்லும் அவளிற்கு வளர்ச்சி பெற்றிருந்தான்.
அவனுடைய வீடியோவிற்கு வரும் கமெண்டில் யாரேனும் சந்தேகம் கேட்டிருக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக யூட்டூபை திறந்தவனுக்கு, ஐந்துவருட தேடலுக்கான விடையே அங்கிருந்தது.
ஆமாம்… ‘இராஜஸ்தானில், பழமைவாதிகளிடம் சிக்கிக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கலெக்டர். தவிக்கும் குடும்பத்தினர்’ என்ற தலைப்பில் பார்க்க கிடைத்த வீடியோவில், இரண்டு குழந்தைகளோடு ஒரு குடும்பம் சூழ நின்றிருந்தாள் மலர்விழி…