அத்தியாயம் 16
“ஏம்மா, புத்தி புல்மேய போயிடிச்சா? இன்டிகேட்டர் போடா ம உன் இஷ்டத்துக்கு வண்டியை திருப்புற?”
மெயின்ரோட்டிலிருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் கிளைச் சாலையில், திடீரென்று ஸ்கூட்டியை திருப்பியிருந்த மலர்விழியால், தடுமாறியிருந்த பைக்காரன் திட்டினான்.
“சாரி ண்ணா…” பதட்டத்தில் முகமெங்கும் முத்து முத்தாக வியர்த்துப் போனவளாக சொன்னாள் மலர்விழி.
“ஆ ஊன்னா, இது ஒண்ணைத் தூக்கிட்டு வந்துடுங்க. நான் கொஞ்சம் சுதாரிக்கலைன்னா, ரெண்டு பேரும் நடுரோட்டுல தான் உருண்டுருக்கணும்.” கோபமாக கத்திய பைக்காரன், மலர்விழியின் முகத்திலிருந்து என்ன கண்டானோ, “சரி… சரி… இனியாவது பாத்துப்போ” என்றுவிட்டு நகர்ந்தான்.
அந்த குரலில் மறைந்திருந்த அக்கறையில் கண்கள் கசிந்தது மலர்விழிக்கு. என்னை யாரேன்றே தெரியாத வழிப்போக்கனுக்கு இருக்கும் அக்கறை கூட, இந்த மூன்று மாதங்களாக ராகவனின் மனைவி என்று அறியப்படும் என்மீது, ராகவனின் உறவுகளுக்கு இல்லையே என்று சுணங்கிப் போனாள்.
‘அட நீ வேறம்மா… ராகவனோட பொண்டாட்டி நீ ங்குறது தான் அவங்க கஷ்டமே. இதுல உம்மேல கரிசனம் வந்துட்டாலும்…” என்று நக்கலடித்தது மனது.
அப்போதைக்கு வீட்டுக்கு செல்ல மனமின்றி, சிவன் கோவிலை நோக்கி வண்டியை விட்டாள் மலர்விழி.
கோவிலுக்கு வந்து, எப்போதும் ராகவன் விடும் மரத்திற்கு கீழே வண்டியை விட்டுவிட்டு, ஆற்றுக்குச் செல்லும் பாதையில் நடந்தவளின் மூளையை, மாதவனின் அம்மா பேசிய வார்த்தைகளே மறுபடியும், மறுபடியும் வண்டாய் குடைந்தது.
ஆமாம்… ஆனந்தியின் கணவன், மாதவனின் அம்மா தான். மாதவனின் வீட்டுக்குத் தன்னந்தனியாக மலர்விழி சென்றுவிட்டு திரும்பி வந்திருக்கிறாள். அவள் அங்கே சென்றது ராகவனுக்கு தெரியாது.
வேகமாக ஆற்றுப்படிகளில் இறங்கி, கால்களை நீருக்குள் விட்டு, படியில் அமர்ந்து கொண்டாள் மலர்விழி. தண்ணீரின் குளுமையாலும், மாலை நேரத்து இதமான காற்றாலும் கூட, அவள் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை.
கடந்திருந்த மூன்று மாதங்களில் ஆனந்தி, மாதவன் விஷயம் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே தான் செல்கிறது. கூடுதலாக, ஜெயந்தியின் திருமணம் வேறு, நிச்சயத்தோடு நின்று போயிருந்தது. மாதவன் வீட்டில் பாடிய, அதே பல்லவியைப் பாடித்தான் இவர்களும் திருமணத்தை நிறுத்தியிருந்தார்கள்.
அன்று, அதைத்தான் தமையனிடம் கதிரேசன் ஃபோன் மூலம் சொன்னது.
விஷயத்தைக் கேட்டதும் ராகவன், மலர்விழி இருவரும் அரண்டு போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்பா என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று, விஷயம் தெரிந்த உடனே தன் வீட்டுக்கு சென்று விட்டான் ராகவன்.
“உன்னை தலைப்பிள்ளையா பெத்ததுக்கு எத்தனையோ நாள் பெருமைபட்டுருக்கேன். ஆனா, இன்னைக்கு ஏன்டா உன்னைப் பெத்தோம்னு நினைக்க வச்சிட்ட” என்று வெறுப்பை கக்கினார் தெய்வானை.
“இந்த குடும்பத்தை கெடுக்க வந்தவனோட கால், என் வீட்டுலயே படக்கூடாது. வெளியே போச்சொல்லு அவனை” என்று மனைவியிடம் குதித்தார் குமாரசாமி.
ஆனால் ஜெயந்தியோ, “கவலப்படாத ண்ணா. நல்லகாலம் இவங்க சுயரூபம் கல்யாணத்துக்கு முன்னாடியேத் தெரிஞ்சிடிச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கோ. இனிமே அவங்களா இறங்கி வந்தாக்கூட எனக்கு அந்த குடும்பம் வேண்டாம்” என்றாள் தெளிவாக.
யோசித்துப் பார்த்தால் ஜெயந்தியின் பேச்சு சரி என்று தான் ராகவனுக்கு பட்டது. எனவே மாப்பிள்ளையோடோ, அந்த குடும்பத்தோடோ எந்த விதமான சமரச முயற்சியிலும் இறங்க முற்படவில்லை ராகவன்.
அப்படி இறங்கினாலும் என்ன சொல்லுவார்கள் என்று மாதவனின் அம்மா தான் சேம்பிள் காட்டியிருந்தாரே. எனவே, வேறு ஒரு நல்ல வாழ்க்கையை தங்கைக்கு அமைத்து கொடுத்துவிட வேண்டும் என்று முழு முயற்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனால், அக்கா ஆனந்தியின் வாழ்க்கை தான் ராகவனை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்கியிருந்தது. சிறிது நாட்கள் மனைவியைப் பிரிந்து இருந்தால், அவள் அருமை புரிந்து தானாக அத்தான் இறங்கி வருவார் என்ற ராகவனின் நினைப்பை மாதவன் பொய்யாக்கியிருந்தான்.
அதுவும் வாரத்தில் ஒருநாள், கட்டாயமாக மனைவி மக்களை வந்து பார்த்துவிட்டு செல்லும் மாதவன், இன்னும் ராகவனை டென்ஷனாக்கினான்.
அக்கா கணவனிடம் கேட்டால், தனக்கும் பெற்றவர்களின் பிடிவாதத்தில் அதிருப்தியே. ஆனால், என்னால் அவர்களை எதிர்க்க முடியாது என்று ஓட்டை விழுந்த ரெக்கார்டாக சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னான்.
ஆக, தன் உடன்பிறந்த பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு, ராகவனின் நிம்மதி அவனிடமிருந்து காததூரம் விலகி நின்றது.
இவ்வளவு ஏன்? புதுமணத் தம்பதியருக்கேயான கொஞ்சல்களும், குலாவல்களும் கூட ராகவன், மலர்விழிக்கிடையே பஞ்சமாகிப் போனது.
இதில், யோசிக்கிறேன் பேர்வழி என்று நள்ளிரவு கட்டிலில் எழும்பி அமர்ந்து, இருட்டை வெறிக்கும் கணவனின் நடவடிக்கைகள் மலர்விழியை பயங்கொள்ளச் செய்தன.
‘ஏதாவது செய்து கணவனின் நிம்மதியை திரும்ப கொண்டு வந்துவிட மாட்டோமா?’ என்ற எண்ணத்தில் தான் ராகவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் மாதவனின் வீட்டுக்கு கிளம்பிச் சென்றாள் மலர்விழி.
பள்ளியில் முழுவருடத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. கணவனை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த மலர்விழிக்கு, மாதவனின் வீட்டுக்கு செல்ல முதலில் சின்ன தயக்கம் இருந்தது என்னவோ உண்மை தான்.
‘ஆனால், குருவி இருக்க பனம்பழம் விழுவது போல, தான் சென்று ஏதாவது நல்லது நடந்துவிட்டால் சந்தோஷம் தானே’ என்ற எண்ணத்தில் மதியத்திற்கு மேல் மத்தளம்பாறைக்கு கிளம்பி விட்டாள் மலர்விழி.
தென்காசிக்கு செல்லும் நேரங்களில், அக்காவின் வீட்டுக்கு செல்லும் வழியை மலர்விழிக்கு காட்டிக் கொடுத்திருக்கிறான் ராகவன்.
அதைப் பிடித்துக் கொண்டு மலர்விழியும் மாதவனின் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
தயங்கித் தயங்கி படியேறியவளைப் பார்த்து, “யாரு நீ?” என்று, ஏகவசனத்தில் அதட்டலாகவே மாதவனின் அம்மா வேணி கேட்டார்.
மலர்விழி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், “ஓ… நீதானா அது? என்று மேலுங்கீழுமாக அளவிட்ட வேணி,
“நீயெல்லாம் என்ன பொண்ணு டி? உன்னால இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையை இழந்து நிக்குறாங்க. மூனு குடும்பம் நிம்மதியை இழந்திடிச்சி. எல்லாரோட நிம்மதியையும் தின்னுட்டு, குற்ற உணர்ச்சியே இல்லாம புருஷன் கூட உன்னால எப்பிடி கொஞ்சி குலாவ முடியுது?” மலர்விழியை அசூசையாக பார்த்தபடி கேட்டார் வேணி.
இப்படியொரு குற்றச்சாட்டை எதிர்பாராத மலர்விழி ஸ்தம்பித்து போனாள். அதுவும் வேணி பேசிய வார்த்தைகள் தந்த அர்த்தம், ஓராயிரம் ஊசிகளை உடம்பில் குத்தியது போலிருந்தது.
ஆரம்பமே ஜெகஜோதியாக வேணி ஆரம்பித்து வைக்க, திகைத்துப்போய் நின்றிருந்த மலர்விழியிடம், “சொல்லு… நீ எதுக்கு இந்த பக்கம் வந்துருக்க?” அதட்டலாக கேட்டார் வேணி.
வந்த காரியம் நடக்க வேண்டுமே, எனவே தன்னுடைய வலியை ஒதுக்கி வைத்துவிட்டு, “ராகவனோட அக்கா என்ன தப்பு பண்ணுனாங்கன்னு இப்பிடி பண்ணியிருக்கீங்க? ப்ளீஸ்… அவங்களை வீட்டுக்கு கூப்டுக்கோங்களேன்.” மெதுவாக பேசினாள் மலர்விழி.
“அடி ஆத்தி! ஆம்பிள்ளையை பேரைச் சொல்லி கூப்பிடுறா பாரு, இதுலயிருந்தே உன் லட்சணம் தெரியுதே” என்று நொடித்துக் கொண்ட வேணி,
“அப்போ நீ தான் தப்பு செய்துருக்கன்னு ஒத்துக்கிறியா? செய்த தப்பை திருத்திக்கிறதா இருந்தா சொல்லு, நான் அவளை கூப்டுக்கிறேன்” என்றார் பேரம் பேசும் தொனியில்.
“சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?” ஏதோ, நல்லதாக நடந்தால் போதும் என்ற எண்ணத்தில், அந்த வேணி பேசிய எதையும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் கேட்டாள் மலர்விழி.
“ராகவன் கிட்ட ஏற்கனவே சொல்லிட்டனே, அவன் சொல்லலையாக்கும்?” என்று, நம்பாத பார்வை பாத்தவர், “நீ ராகவனை விட்டுட்டு போயிட்டாலே, இங்க தானே எல்லாம் ஒழுங்காயிடும்” என்றார் மலர்விழியின் முகத்தில் பார்வையைப் பதித்து.
‘ஏற்கனவே ராகவனிடம் சொல்லிவிட்டாரா? அப்படி என்றால் ராகவனும் இங்கே வந்திருந்தானா? என்னிடம் சொல்லவேயில்லையே’ என்று நினைத்த மலர்விழி,
‘என்னை வருத்தப்பட வைத்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்க மாட்டார்’ என்று சரியாக யூகம் செய்தாள்.
தன்னை வருத்தத்தின் பிடியில் தள்ளிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தனியாளாக பாரம் சுமக்கும் கணவன் மீது இப்போதும் கணக்கில்லாமல் காதல் பொங்கியது மலர்விழிக்கு. அந்த காதல், என்ன செய்தாவது கணவன் துன்பத்தை போக்கியே ஆக வேண்டும் என்ற உந்துதலைத் தர, யோசனையின் பிடியில் நின்றவளிடம்,
“சும்மா எப்படி போறதுன்னு யோசிக்கிறியா? இவ்வளவு நாள் ராகவன் கூட இருந்ததுக்கு தாராளமாக பணம் வாங்கிக்கோ. உனக்கு கேட்க ஒருமாதிரி இருந்தா, எங்கிட்ட சொல்லு நானே நல்ல தொகையா வாங்கித் தரேன்.” ஒரு காதல் உள்ளத்தில் நெருப்பள்ளி கொட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேரம் பேசினார் வேணி.
அவ்வளவு தான்… நொறுங்கிப் போனாள் மலர்விழி. நீ ராகவனை விட்டு விலகிவிடு என்று சொன்ன வார்த்தைகளே உயிர் வலி கொடுக்க, அதில், அவளுக்கும் ராகவனுக்குமான உறவுக்கு விலைபேசிய வேணியை அடித்து துவைக்கும் ஆவேசமே வந்தது.
ஏற்கனவே பிரச்சனையின் வீரியம் வீறுகொண்டு நிற்க, தன்னுடைய சின்னச் சின்ன செயல்களும் அதை தூண்டி விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட மலர்விழி,
“எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்கிற உங்க ஆணவம், கண்டிப்பா ஒருநாள் அடிவாங்கும்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“இவ பெரிய உத்தமி… எனக்கு சாபம் கொடுக்க வந்துட்டா, போ டீ.” வேணியின் குரல் கணீரென்று காதில் விழ, வண்டியை கிளப்பியிருந்தாள் மலர்விழி.
ஆக, ஏதாவது நல்லது செய்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மலர்விழி அங்கே சென்று, காயப்பட்டு திரும்பியது தான் மிச்சம்.
சலசலவென்று காலை உரசிச் செல்லும் ஆற்றுநீரை குனிந்து பார்த்தாள் மலர்விழி. அவள் மனதைப் போலவே நீரும் கலங்கலாகவே இருந்தது.
அந்த நாளின் சோதனை அத்தோடு முடிவடையவில்லை என்பது தெரியாமல், ஆற்று நீரை அள்ளி முகம், கை, கால் கழுவிவிட்டு கோவிலுக்குள் சென்றாள் மலர்விழி.
மனதை ஒரு நிலைப்படுத்தி ப்ரார்த்தனையை முடித்துவிட்டு வெளி மண்டபத்திற்கு வந்த மலர்விழியை,
“உள்ளூர் சாமியை எல்லாம் விட்டுட்டு இங்க வந்திருக்கீங்களே! என்ன விஷயம் தெய்வா க்கா?” என்ற கோதையின் குரல் நிறுத்தியிருந்தது.
குரல் வந்த திசையைப் பார்த்தாள் மலர்விழி. சற்றுத் தள்ளி, ஒரு தூணில் சாய்ந்தபடி ராகவனின் அம்மா தெய்வானையும், அவருக்கு அருகில் கோதையும் அமர்ந்திருந்தார்கள்.
“ஏன்? நீ மட்டும் தான் இங்க எல்லாம் வருவியா? நாங்கெல்லாம் வந்தா கொலக்குத்தமா என்ன?” சலித்தபடியே கேட்டார் தெய்வானை.
“இல்லக்கா, இப்படியெல்லாம் திடீர்னு நீங்க வரமாட்டீங்களே, அதான் கேட்டேன். யாரு, ராகவன் அப்பா கூட வந்தீங்களா?” விபரம் தெரிந்து கொள்ள நயமாக பேசினார் கோதை.
“இல்ல… அவங்க வெளியூர் போயிருக்காங்க, ஜெயந்தி வேலைவிட்டு வர லேட்டாகும். தனியா இருக்க என்னவோ போல இருந்தது, அதான் ஒரு ஆட்டோவைப் பிடிச்சு வந்துட்டேன்” என்றார் தெய்வானை.
“அதுவும் சரிதான், வீட்டுக்குள்ளே அடைஞ்சி கிடக்குறதுக்கு பதிலா, இப்பிடி கோவில் குளம்னு போய் நம்ம மனப்பாரத்தை கடவுள் கிட்ட கொட்டினாலாவது நல்லது நடக்கும்.” தெய்வானையின் வாயைப் பிடுங்கப் பார்த்தார் கோதை.
தெய்வானையோ அதை ஆமாம் என்று ஆதரிக்காமலும், இல்லை என்று மறுத்து பேசாமலும் இருந்தார்.
ஏற்கனவே இளம்பெண்கள் பேச்சை காது கொடுத்து கேட்டு பெற்ற அனுபவத்தில், அங்கே நிற்க மனமின்றி நகர்ந்த மலர்விழியை கண்டுகொண்ட கோதை,
“அக்கா, உங்க மருமக” என்று தெய்வானையின் கையைச் சுரண்டினார்.
கோதையின் பார்வையைத் தொடர்ந்த தெய்வானை, மலர்விழியைப் பார்த்ததும், “கண்ட கழுதையும் எனக்கு மருமக ஆகிட முடியுமா?” என்றார் கோபமாக.
“என்ன க்கா இப்படி சொல்லிட்டீங்க. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் விலகிப்போற சொந்தமா இது? நாளைக்கே பேரன் பேத்தின்னு உங்க வீட்டுக்கு வாரிசு வந்துட்டா, எடுத்து கொஞ்சாமப் போகப் போறீங்களா? இல்ல, எம்மருமகளுக்கு காணாதுன்னு சொல்லாமத் தான் இருக்கப் போறீங்களா?” என்றார் கோதை வேண்டுமென்றே.
“ச்சீய்… இவளையே அசிங்கம்னு நான் சொல்லிட்டு இருக்குறேன். இதுல இவ வயித்துப் பிள்ளைங்க எங்க வீட்டு வாரிசா? கொஞ்சம் பார்த்து பேசு கோத.” கோபமாக பேசியதோடல்லாமல், அருவருப்பாக மலர்விழியைப் பார்த்து உதடு சுழித்தார் தெய்வானை.
அவ்வளவு தான்… புகைந்து கொண்டிருந்த மலர்விழியின் இதயம், சட்டென்று தீப்பற்றிக் கொண்டது. நின்றவள்,
“என்ன சொன்னீங்க… என்ன சொன்னீங்க… என் வயித்து பிள்ளைங்களை உங்க வீட்டு வாரிசா ஏத்துக்க மாட்டீங்களா? இப்போ நான் சொல்லுறேன், நல்லா கேட்டுக்கோங்க. என் வயித்து பிள்ளைங்க இல்லைன்னா, உங்களுக்கு ஆம்பிள்ளை பசங்க, வாரிசுங்களே இந்த ஜென்மத்துல கிடையாது, ஞாபகம் வச்சுக்கோங்க.” நிறுத்தி நிதானமாக சொல்லிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றாள்.
“இந்த எடுபட்ட சிறுக்கி எம்பரம்பரைக்கே சாபம் குடுத்துட்டு போறா பாரேன் கோத.” அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி சத்தம் போட்டார் தெய்வானை.
“பொல்லாத பரம்பரை… ஒன்ரையனா பரம்பரை.” அலட்சியமாக பேசியபடியே நடந்தாள் மலர்விழி.
“ஏய் நின்னு பேசு டி… பேசுற வாயை கிழிச்சிடுறேன்.” அவள் பின்னால் ஓடிவந்தார் தெய்வானை.
சட்டென்று நின்ற மலர்விழியோ, “இதோ, நின்னுட்டேன், சொன்னதை செய்ங்க பாப்போம்” என்றாள் சவாலாக.
குளவி தன் குஞ்சுகளை கொட்டிக்கொட்டி விஷமாக்குமாமே, அப்படித்தான் தெய்வானையின் பேச்சும், நடவடிக்கைகளும், மலர்விழியையும் அடாவடியாக பேசத் தூண்டியிருந்தது.
“உனக்கு திமிரு… எம்புள்ளையை வளைச்சி கைக்குள்ள போட்டுகிட்டோம் ங்குற திமிரு. அதான் இப்பிடி ஆணவமாப் பேசுற.” மலர்விழி நின்றுவிடுவாள் என்று எதிர்பாராத தெய்வானை தன் ஆற்றாமையை வார்த்தையாக கொட்டினார்.
“ஆமா… அப்படித்தான்” என்றபடி ஸ்கூட்டியை நோக்கி மறுபடியும் நடந்தாள் மலர்விழி.
“எதுக்கு எங்க உயிரை வாங்குற? பேசாம, எங்கயாவது போய் தொலைய வேண்டியது தானே. அப்படி என்ன உன் சொகம் தான் பெரிசுன்னு எம்மகனை பிடிச்சு தொங்கிட்டு கிடக்குற?” மலர்விழியின் பின்னோடு வந்து, தெய்வானை வெறுப்போடு சொல்ல,
“கவலையேப் படாதீங்க, இந்த ஜென்மத்தில மட்டும் இல்ல, ஏழேழு ஜென்மத்துக்கும் ராகவனுக்கு நான் தான் பொண்டாட்டி. அவரை இப்போதைக்கெல்லாம் விடுற எண்ணம், சுத்தமா எனக்கில்ல.” கேலியான குரலில் சொல்லி விட்டு, வண்டியை கிளப்பி சென்றுவிட்டாள் மலர்விழி.
தெய்வானையை பதறவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏட்டிக்கு போட்டியாக பேசியவளுக்கு, அங்கிருந்து நகர்ந்ததும் ஆயாசமாக வந்தது.
‘ஒரு நபரை பிடிக்கவில்லை என்றால், இடம், பொருள், ஏவல் பார்க்காமல் இந்த அளவிற்கு கூட இறங்கி பேசமுடியுமா? அப்படி என்ன நான் இவர்களை விட குறைந்து போனேன்?’
இந்த சிந்தனையோடு வீடுவந்து சேர்ந்தவளை, கேட்டுக்கு அருகே கையில் அலைபேசியோடும், கண்களில் தேடலோடும் நின்றிருந்த ராகவன் தான் வரவேற்றான்.
அவன் கையில் ஃபோனைக் கண்டதும், ஃபோனை கொண்டு வராதது ஞாபகம் வர, “கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, தல, வச்சி செய்யப் போறார் போலயே. உனக்கு இன்னைக்கு நேரமே சரியில்ல. எங்கப் போனாலும் சிக்கி சின்னாபின்னமாகுறடி மலர்விழி.” அவள் உள்மனது கிடந்து அலறியது.
அதையும் மீறி தன்னைத்தேடி, தனக்காக காத்து நிற்கும் கணவனின் செயல், புண்பட்ட நெஞ்சிற்கு புனுகு பூசியது போல இருந்தது.
காம்பௌண்ட்டுக்கு வெளியே ஸ்கூட்டியை மலர்விழி நிறுத்த, “எங்க போறேன்னு சொல்லிட்டு போகல. ஃபோனையும் கைல கொண்டு போகல. இது என்ன புது பழக்கம் மலர்?”
மலர்விழியின் கைகளிலிருந்து ஸ்கூட்டியை வாங்கி காம்பௌண்டுக்குள் ஏற்றி, ஓரமாக விட்ட ராகவன் கண்டிப்பான குரலில் கேட்க, பரிதாபமாக முழித்தாள் மலர்விழி.
“சரி… எங்க போய்ட்டு வர்ற?” மனைவியோடு வீட்டுக்குள் நுழைந்தபடியே கேட்டான் ராகவன்.
“கோயிலுக்கு” சட்டென்று பதில் சொன்னாள் மலர்விழி.
“அதுக்கு முன்னாடி.” சளைக்காமல் பார்த்தபடி ராகவன் கேட்டதிலேயே அவனுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மலர்விழி, எதுவும் சொல்லாமல் மௌனமாகிப் போனாள்.
“உனக்கு இது தேவையா மலர்? எதுக்கு இப்படி எல்லார்கிட்டயும் போய் அவமானப்பட்டுட்டு வர்ற?” மலர்விழியின் தோள்கள் இரண்டையும் பற்றி லேசாக உலுக்கியபடி கேட்டான் ராகவன்.
“உன் வைஃபை தனியா எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சி, எதுக்கு எங்கம்மாகிட்ட பேச்சு வாங்க வைக்கிற?” ராகவனுக்கு அழைத்து, மாதவன் இப்படி கேட்டபிறகு தான் மலர்விழி அங்கே சென்றதே அவனுக்கு தெரியும்.
உரக்கடையில் இருந்த மாதவனுக்கு விஷயத்தை சொன்னது அவனுடைய தந்தை. ஆரம்பத்தில் ராகவனுடைய திருமண விஷயத்தில் அதிருப்தியாக இருந்த மனிதர், நாளடைவில் தெளிந்திருந்தார். மனைவி தேவையில்லாமல் இந்த பிரச்சனையை பெரிது பண்ணுகிறாள் என்று நினைத்தாலும் அவரால் சொல்லிவிட முடியாது. எனவே அமைதி காக்கிறார்.
“நான் போய் பேசினாலாவது ஏதாவது நல்லது நடந்துடாதா ங்குற ஆசையில தான் போனேன். ஆனா, அந்த அண்ணாவோட, அம்மா…” என்ற மலர்விழி கணவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்தபடி லேசாக விசும்பினாள்.
“அதெல்லாம் மனுஷங்க கிட்ட எதிர்பார்க்கணும், இவங்க கிட்ட இல்ல…” என்ற ராகவன், “எது செய்றதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லிட்டு செய்திருக்கலாம்ல, இப்போ பாரு…” என்றவன் மலர்விழியின் முகவாயைப் பற்றி கண்ணீரை விரல்களால் சுண்டி விட்டான்
“என்ன செய்யப் போறீங்க? உங்க கூட பிறந்தவங்களோட லைஃபை எப்பிடி சரி செய்யப் போறீங்க?” ராகவனை அப்படியே பார்த்தபடி கேட்டாள் மலர்விழி.
“இப்பிடி கேட்டா, உடனே என்ன பதில் சொல்ல முடியும் மலர்? தைரியமா இரு, பாத்துக்கலாம்” என்றான் ராகவன்.
“என்ன பாப்பீங்க? இல்ல, என்ன பாப்பீங்கன்னு கேக்குறேன். ஆளாளுக்கு என்னைப் பாத்து, நீதான் அந்த பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்தவன்னு பழி போடுறதையா? இதுக்கு தான், உங்களுக்கு நான் வேண்டாம்னு சொன்னேன். அப்பவும் பாத்துக்கலாம்னு தான் சொன்னீங்க. ஆனா, இப்போ வரைக்கும் என்ன பாத்துருக்கீங்க நீங்க, சொல்லுங்க?”
ராகவனின் மார்பை தன்னிரு கைகளால் லேசாக தள்ளியபடி கேட்ட மலர்விழி, தன் மன அழுத்தம் அத்தனையையும் அவனிடம் இறக்கி வைக்க முயன்றாள்.
ஆனால் அவனோ, “ஆளாளுக்கு சொல்லுறாங்க ன்னா, இன்னும் யாரெல்லாம் சொன்னாங்க?” என்று கேட்டான்.
சட்டென்று சுதாரித்துக்கொண்ட மலர்விழி, “நேர்ல சொன்னா மட்டும் தானா? வேற யாருமே சொல்லியிருக்க மாட்டாங்களா என்ன?” கோவிலில் நடந்தவற்றை மறைத்து, ராகவனிடமே கேள்வி கேட்டாள்.
ராகவனின் அம்மா பேசியவை சாதாரண வார்த்தைகள் இல்லையே. அவற்றை கணவனிடம் சொல்லி, அவனையும் எதற்கு வருத்தப்பட வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால், தன் செயல்களால் அவனை வருத்தப்பட வைக்கிறோம் என்று தெரியவில்லை அவளுக்கு.
ஆக, கணவனின் நிம்மதியை மீட்டுவிட வேண்டும் என்று கிளம்பிச் சென்றவள், நிம்மதி இழந்ததோடல்லாமல் கணவனையும் படுத்தி வைத்தாள்.
அதன் பிறகு மௌனமாகவே வீட்டுக்குள் நடமாடியவர்கள், இரவு உணவையும் முடித்து படுக்கைக்கு வந்தார்கள்.
இருவரின் முக பாவனையும், அவரவர் யோசனையில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லியது. அமைதியாகவே படுத்துக் கொண்டார்கள்.
அத்தனை களேபரத்திற்கு நடுவில் திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட, முதல்நாள் இரவை ஏகாந்தமாக கழித்துக் கொண்ட தம்பதியரை, அவர்கள் துயிலும் கட்டிலின் மெத்தையும், தலையணைகளும், சிறிது நாட்களாக தேடித்தேடி அலுத்துப் போனவைகளாக ஏக்கத்தோடு பார்த்து வைத்தன.
“எனக்கொரு யோசனை, அதை ப்ரொசீட் பண்ணுவோமா?” அங்கே நிலவிய அமைதியை கிழித்துக் கொண்டு முதலில் பேசிய மலர்விழி, நகர்ந்து வந்து கணவனின் மார்பில் தலைசாய்த்துக் கொள்ள, “இன்னைக்கு ஏதோ சம்பவம் போல” ரகசியமாக கண்ணடித்துக் கொண்டன அந்த அஃறிணைப் பொருட்கள்.
“என்ன யோசனை மலர்? சொல்லு…” மலர்விழியின் முகத்தோடு தன் முகத்தை சேர்த்துக் கொண்ட ராகவன் ஆவலோடு கேட்டான்.
“இல்ல… நான் கொஞ்ச நாளைக்கு சென்னைக்கு போயிடுறேன். நீங்க எல்லார்கிட்டயும் நாம பிரிஞ்சிட்டோம்னு சொல்லுங்க. கண்டிப்பா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நாம சேர்ந்துக்கலாம்.”
எப்படி என் யோசனை என்பது போல மலர்விழி ராகவனின் முகத்தைப் பார்க்க, ‘அடப் போம்மா… நீ சம்பவம் பண்ணிட்டாலும்’ என்று அலுத்துக் கொண்டன சற்றுமுன் உற்சாகக் கூத்தாடிய அதே வஸ்துகள்.
“வாவ்… சூப்பர் ஐடியா. நீங்க திரும்ப வந்தவுடனே, மறுபடியும் எல்லாத்தையும் மொதல்லயிருந்து ஆரம்பிப்பாங்களே, அப்போ என்ன செய்வீங்க மேடம்? வாழ்க்கை முழுசும் உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுவீங்களா? இல்ல, ஒரேயடியா என்னை விட்டுட்டே ஓடிருவீங்களா? அதையும் கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க.” குரலில் கோபம் எட்டிப்பார்க்க கேட்டான் ராகவன்…