எதிரில், தான் எதிரியாக பாவிக்கும் மலர்விழி வரவும், அலட்சியமாக அவள் மீது பார்வையை பதித்த ரமேஷ், “ம்ஹூம்… ஆனாலும் இந்த தமிழ்நாடு அழகான ஒரு கரகாட்டக்காரியோட கலைச்சேவையை மிஸ் பண்ணிடிச்சே ப்பா… இல்லைன்னா நாமளும் நெஞ்சுல பசக்கு பசக்குன்னு…”
குரலில் நக்கல் கூத்தாட பேசியவனை,
வேண்டுமென்றே முடிக்கவிடாமல் இடைமறித்த அவன் நண்பன், “மாப்ள… என்னடா சொல்லுற?” என்று கேலியாக பதறினான்.
“அட… ரூபா நோட்டை குத்தியிருக்கலாம்னு சொல்ல வந்தேன் ப்பா” என்று ரமேஷ் சொல்ல, இருவருமே வெடித்து சிரித்தார்கள்.
அவ்வளவு தான்… ஒரே எட்டில் அவர்களை அடைந்திருந்த மலர்விழி, பளார் பளாரென்று இருவரையும் மாறி மாறி அறைந்திருந்தாள்.
அத்தனை நளினமாக இருப்பவளுக்குள், அப்படியொரு ராட்சசி மறைந்திருப்பாள் என்று எதிர்பாராத அந்த பேடிகள் தடுமாறிப் போனார்கள். தாங்கள் அறைவாங்கியதை யாரும் பார்த்து விட்டார்களோ என்று பதறிப் போய் இருவரும் அங்குமிங்கும் பார்க்க,
“இவ்வளவு தான்… இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை. இதுக்கு மேல என்னைப் பத்தி பேசுனா… ஏன்? பேசணும்னு நினைச்சா கூட தொலச்சிடுவேன்.” இருவரின் முகத்துக்கு நேராக ஆள்காட்டி விரலை நீட்டி உறுமினாள் மலர்விழி.
ரமேஷ் தன்னைப் பற்றி பேசுவது எல்லாம், அவ்வப்போது தன் தோழிகள் மூலம் மலர்விழியின் காதில் வந்து விழத்தான் செய்யும். இத்தனை நாட்களாக பொறுமை காத்தவள், எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து இன்று விளாசிவிட்டாள்.
அந்நேரம் அங்கே வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அட்டெண்டர் ஒருவர், மலர்விழியின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து கிடந்த புத்தகங்களை எடுத்து அவளிடம் நீட்டியபடியே, “ஏதோ சத்தம் கேட்டுதே, என்னாச்சு மேடம்?” என்று அக்கறையாக விசாரித்தார்.
“கொசு தொல்லை ரொம்ப ஓவரா இருந்தது அண்ணா. அதான் அடிச்சேன். வேறொண்ணுமில்ல.” கைகளை ஒன்றோடொன்று தட்டியபடி புத்தகத்தை வாங்கிக் கொண்டு படியேறினாள் மலர்விழி.
அதிர்ச்சியில் அலங்க மலங்க முழித்தபடி நின்று கொண்டிருந்த இருவரையும் பார்வையிட்டபடியே, “நானும் கவனிச்சிட்டு தான் இருக்குறேன் மேடம். ரொம்ப ஓவராத்தான் இருக்குது கொசுக்கடி. மொத்தமா கொசு மருந்து அடிச்சாத் தான் சரிவரும்” என்றபடியே படியேறினார் அந்த அட்டெண்டர்.
மாலை, பள்ளிவிடும் நேரத்திற்கு சரியாக வந்திருந்தான் ராகவன். கணவனைக் கண்டதும், தாயிடம் ஓடும் சேயாக ஆவலாக வந்தாள் மலர்விழி.
எத்தனை தான் நிமிர்வாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், வார்த்தைகளில் துவேஷத்தைக் காட்டிய மனிதர்களால் கொஞ்சம் சோர்ந்து தான் போயிருந்தாள் மலர்விழி.
அதைக் கண்டுகொண்ட ராகவன், “என்னாச்சு மலர்? முகம் டல்லா இருக்கு?” என்று கேட்டான். கணவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இல்லாததால், “வீட்டுக்கு போய் சொல்லுறேன்” என்ற மலர்விழி,
“உங்க அத்தானைப் பாத்தீங்களா? என்ன சொன்னாங்க?” ஆவலாகக் கேட்டாள்.
“வா, வீட்டுக்கு போய் பேசுவோம்” என்ற ராகவனிடமும் சோர்வே.
“பெத்த பொருத்தம் தான்.” கேலியாக சொல்லியபடியே, பைக்கில் ஏறி அமர்ந்தாள் மலர்விழி.
வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் அதே கேள்வியை மலர்விழி கேட்க, பதில் சொல்லாமல் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான் ராகவன்.
தன் அத்தானும், அவருடைய பெற்றவர்களும் பேசியதை நினைத்துப் பார்த்தவனுக்கு, ‘ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்?’ என்ற எண்ணம் தான்.
ஆமாம்… ஆனந்தியின் கணவனிடம் பேசியதில் காரியம் எதுவும் ஆகாமல், வீட்டுக்கு சென்று அவனுடைய பெற்றவர்களையும் பார்த்து, பேசிவிட்டே வந்திருக்கிறான் ராகவன்.
ஆனால் முடிவு தான்…
கணவனின் அணைப்பின் அளவு கூடிப் போகவும், அவன் மனம் வருந்துவது போல எதுவுவோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மலர்விழி, ராகவனின் முதுகில் மெதுவாக தட்டிக் கொடுத்தாள்.
பதில் சொல்லாமலேயே மனைவியை பதற வைக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்ட ராகவன், “எங்க அப்பா, அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டு, சீக்கிரமா வந்து அக்காவை கூப்டுக்கிறேன்னு சொல்லுறார் அத்தான்.” மாதவனிடமிருந்து தனக்கு சாதகமாக வந்த பதிலை மட்டுமே சொன்னான்.
“உண்மையாவா?” நம்பாமல் கேட்டாள் மலர்விழி.
“அது என்ன அப்படி கேட்டுட்ட?” மனைவியின் மூக்கைப் பிடித்து ஆட்டி அதில் முத்தம் ஒன்றை வைத்த ராகவன், “போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிக்கோ. நான் டீ போட்டு தரேன்.”
மனைவியை படுக்கையறைக்குள் தள்ளிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டான் ராகவன். மனமோ, மாதவனை சந்தித்ததில் போய் நின்றது.
“அத்தான், உங்ககிட்ட பேசணும்.” உரக்கடைக்கு சென்ற ராகவன், நலன் விசாரித்தல் எதுவுமின்றி இப்படித்தான் பேச்சை ஆரம்பித்தான்.
அவன் பேச்சிலேயே அடக்கப்பட்ட கோபம் இருப்பதை புரிந்து கொண்ட மாதவன், கடையின் பொறுப்பை அங்கே வேலை செய்யும் நபரிடம் ஒப்படைத்து விட்டு, ராகவனோடு வெளியே வந்தான்.
இருவரும் ஒரு ஹோட்டலுக்கு வந்து, ஒதுக்குப்புறமான இருக்கைகளில் எதிரெதிராக அமர்ந்து கொண்டார்கள்.
“உன்னால எம்பொண்டாட்டி பிள்ளைகளை நான் பிரிஞ்சு இருக்க வேண்டியதா போச்சு.” ஆளுக்கு முந்திக்கொண்டு ராகவன் மீது குற்றம் சுமத்தினான் மாதவன்.
“எம்மேல பழி சுமத்தி, உங்க இயலாமையிலிருந்து தப்பிக்க பாக்குறீங்கன்னு உங்களுக்கு புரியலயா த்தான்?” அக்கா கணவனை கூர்மையாக பார்த்தபடி கேட்டான் ராகவன்.
“என்னை அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்தியதே நீ தான. நீ மட்டும் ஒழுங்கான ஒரு பொண்ணா பாத்து கல்யாணம் செய்திருந்தா, இன்னைக்கு எனக்கு இந்த பிரச்சனை உண்டா, சொல்லு?” என்றான் பதிலுக்கு மாதவன்.
திரும்பத் திரும்ப எல்லோரும் அந்த புள்ளியிலேயே வந்து நிற்க, ராகவனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
“அத்தான்… என் மனைவியை பத்தி விமர்சிக்க உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது” என்றான் கோபமாக.
“அப்போ நீயும் இதைப்பத்தி எங்கிட்ட பேசாத, என் அப்பா, அம்மாகிட்டயே போய் பேசு” என்றான் மாதவன்.
“இரண்டு பிள்ளைங்களை பெத்த பிறகும் இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்ல?” கொஞ்சம் சூடாகத்தான் வந்தது ராகவனின் பேச்சு.
“உன்னை மாதிரி எல்லாம் என்னால சுயநலமா முடிவெடுக்க முடியாது. எனக்கு, எம்பெத்தவங்களும் முக்கியம்.” ராகவனுக்கு குறையாத கோபத்தில் பேசினான் மாதவன்.
“அப்போ, உங்களைப் பெத்தவங்க உங்க பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிடுன்னு சொன்னாக் கூட, உடனே பண்ணிடுவீங்களா?” புருவத்தை நெறித்தபடி கேட்டான் ராகவன்.
“நீ அதையும் நடக்க வச்சிடுவ போல.” அலுத்துக் கொண்டான் மாதவன்.
“ஓ… செய்துடுவீங்களோ? பொலி போட்டுருவேன் எல்லாரையும்.” கோபத்தில் பற்களைக் கடித்த ராகவன், உடனே தணிந்து, “இப்போ நான் என்னதான் செய்யணும்னு நீங்க சொல்லுறீங்க த்தான்?” சலித்துப்போன குரலில் கேட்டான்.
“ராகவா, நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு அதைப்பத்தி கவலயில்ல. ஆனா, நான் என் பெத்தவங்களை பகைச்சிக்க முடியாது. கொஞ்சநாள் போகட்டும். அவங்களை சமாதானம் செய்துட்டு எம்பொண்டாட்டி பிள்ளைங்களை கூப்டுக்கிறேன்.”
இதுதான் முடிவு என்பது போல மாதவன் பேச, அங்கிருந்து நேராக மாதவனின் வீட்டுக்கே வந்துவிட்டான் ராகவன்.
அவனுக்கு முன்னரே, அவன் பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். கைகட்டி, வாய் பொத்தி நிற்கவில்லை, அவ்வளவு தான். ஆனால், அவ்வளவு பவ்யமாக அமர்ந்திருந்தார்கள் மாதவனின் பெற்றோர்கள் முன்னால்.
ராகவனுக்கு தன் பெற்றவர்களை அப்படி பார்க்க வலித்தது. அதுவும், கம்பீரமாகவே அப்பாவை பார்த்து பழகிவிட்டு, அப்படிப் பார்க்க முடியவேயில்லை அவனால்.
“நல்லவேளை ராகவனும் வந்துட்டான். ஒண்ணா உங்காந்து பேசி முடிவெடுத்துடலாம்” என்ற மாதவனின் அம்மா, “உக்காரு ராகவா” என்று சொல்ல, அமர்ந்தான்.
எந்த இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தார்களோ என்னவோ, ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
“என்னோட வாழ்க்கை முடிவு, எப்படி உங்க குடும்பத்தை பாதிக்கும்னு இன்னும் எனக்கு புரியல?” மாதவனின் பெற்றோரைப் பார்த்து கேட்டு, அங்கு நிலவிய அமைதியை கலைத்தான் ராகவன்.
“உன் அக்கா பிள்ளைக்கு காது குத்தி மொட்டை போடுறதுல இருந்து, அவங்க கல்யாணம் வரைக்கும் உன்னைத்தானே தாய்மாமன்னு முன்ன நிறுத்துறோம். அப்போ உன்னோட முடிவுகள் எங்க குடும்பத்தை பாதிக்காதா என்ன?”
சவாலாக கேட்ட மாதவனின் அம்மா, “ராகவா, பேசாம அந்த பொண்ணை விட்டுட்டு, நம்மாளுங்களா பாத்து வேற கல்யாணம் பண்ணிக்கோ. இந்த பிரச்சனையை இத்தோட முடிச்சிக்குவோம்” என்றார் பெரிய மனது செய்து.
“எதுக்கு வெளிய பொண்ணு பாக்கணும், இவங்கையில தாலி வாங்க எங்க அண்ணி மக சுசீலா ரெடியா இருக்கா.” எனக்கும் இந்த முடிவில் சம்மதம் என்பது போல பேச்சில் இடைபுகுந்தார் தெய்வானை.
“ஒருவேளை, இரண்டாம் தாரம்னு சொல்லிட்டு அந்த பொண்ணு சம்மதிக்க மறுத்தா, எங்க சைட்ல ஏகப்பட்ட பொண்ணுங்க இருக்காங்க. அவங்கள்ள யாரையாவது ஒருத்தரை ஏற்பாடு பண்ணிடலாம்” என்றார் மாதவனின் அம்மா.
“இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா…” அளவிடும் பார்வையோடு கேட்டான் ராகவன்.
“உங்க அக்கா எங்க வீட்டையும் எம்பையனையும் மறந்துட வேண்டியது தான்.” எந்தவித உறுத்தலின்றி அசால்டாக பதில் சொன்னார் மாதவனின் அம்மா.
“இதால உங்க பிள்ளையோட வாழ்க்கையும் தானே பாதிக்கும்?” உள்ளுக்குள் கோபம் கனன்றாலும், பிடித்து வைத்த அமைதியோடு பேசினான் ராகவன்.
“ஹஹஹ… எம்புள்ள ஆம்பிள்ள சிங்கம். நான் இப்பிடி சொடுக்கடிச்சா, அவனுக்கு பொண்ணு குடுக்க ஆயிரம் பேர் வரிசையில காத்திருப்பாங்க. அதுல ஏதாவது பொண்ணப் பாத்து அவனுக்கு ஜாம் ஜாம்னு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு போறேன்.” ஆணவமாக பேசினார் அந்த அம்மா.
அவ்வளவு தான்… சட்டென்று இருக்கையிலிருந்து எழும்பிய ராகவன், “எங்க, சொடுக்கடிச்சி தான் பாருங்களேன்… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும். ஏதோ அக்காவுக்காக அமைதியா உக்காந்திருந்தா, ரொம்ப தான் பேசுறீங்க. உங்க பிள்ளையை சந்தோஷமா வாழ விடுறதும், விடாததும் உங்க இஷ்டம். அதுக்காக என் அக்காவைத் தவிர இன்னொரு பொண்ணை உங்க பிள்ளை வாழ்க்கைல கொண்டு வந்துடலாம்னு மட்டும், கனவுல கூட நினைச்சிடாதீங்க. அது, இந்த ராகவன் உயிரோட இருக்குற வரைக்கும் நடக்காது” என்றவன், பெற்றவர்களைப் பார்த்து,
“இன்னும் எதுக்கு இவங்ககிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க? வீட்டுக்கு கிளம்புங்க. இவங்க என்ன தான் செய்யுறாங்கன்னு நாமளும் பாத்துடலாம்” என்றான்.
“ஐயா, சாமி, நீ எம்புள்ளையை வாழ வச்ச வரைக்கும் போதும். என்ன செய்யணும்னு எனக்கு தெரியும், நீ மரியாதையா இங்கயிருந்து போ.” ராகவனிடம் முறைத்துக் கொண்டு நின்றார் குமாரசாமி.
தெய்வானையோ மாதவனின் பெற்றவர்களை சமரசம் செய்வதில் இறங்க, கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவனின் மனமெங்கும், ‘எப்படி இந்த பிரச்சினையை தீர்க்கப் போகிறேன்?’ என்ற சிந்தனையே.
இப்போதும் அதே எண்ணம் தான். ‘என் மனைவியை காயப்படுத்தி விடாமல், எப்படி என் அக்காவின் வாழ்க்கையை சரிசெய்யப் போகிறேன்?’
ஆமாம்… இன்னொரு முறை, யாரும் மலர்விழியை நோகடித்து விடக்கூடாது என்பதில் ராகவன் கவனமாக இருந்தான். அதனால் தான் மாதவனின் வீட்டுக்கு சென்றதையோ, அங்கே நடந்ததையோ மலர்விழியிடம் சொல்லவில்லை.
சிந்தனை அதன் போக்கில் இருந்தாலும் பக்குவமாக இஞ்சி, ஏலக்காய் தட்டிப்போட்டு டீயைப் போட்டவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அங்கே வந்த மனைவிக்கு பக்குவமாக ஆற்றி கையில் கொடுத்தான்.
“ம்ம்… வாசம் செமையா இருக்கு.” மூக்குக்கு நேராக டீ கப்பை கொண்டு சென்று வாசம்பிடித்தபடி மலர்விழி சொல்ல,
“வீட்டுக்கு போய் ஏதோ சொல்லுறேன்னு சொன்னியே” என்று மனைவிக்கு நினைவூட்டினான் ராகவன்.
“ஓ… அதுவா?” என்றவள், ரமேஷ் தன்னிடம் நடந்து கொண்டதைச் சொல்ல, அவனோட ஊர் எதுன்னு சொன்ன?” என்று கேட்டான் ராகவன்.
“தல, நீங்க ஹீரோ தான் தல… அவனை ஏற்கனவே நான் விளாசிட்டேன் தல. திரும்பவும் நீங்க அவனைப் போய் அடிச்சித்தான் ஹீரோ ன்னு ப்ரூஃப் பண்ணனும்னு இல்ல தல…” என்றாள் மலர்விழி சிரித்தபடி.
மனைவி தன்னைக் கண்டு கொண்டதில் சிரித்த ராகவன், “எப்பவும் இப்பிடியே தைரியமா இருக்கணும் கண்ணம்மா” என்றான் காதலாக.
ராகவனின் நிம்மதி, அவன் சந்தோஷம் என்று வந்துவிட்டால், மலர்விழியின் தைரியத்தின் அளவு காணாமல் போய்விடும் என்பது அவனுக்கு தெரியவில்லை.
அந்நேரம் ராகவனின் அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தான், கதிரேசன்.
அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்த ராகவனின் முகம், தம்பி சொன்ன விஷயத்தில், தன் களையை இழந்து போனது…