அத்தியாயம் 10
கடைசி பரீட்சையை முடித்துவிட்டு, வகுப்பு தோழமைகளிடம் பிரியாவிடையும் பெற்று, கல்லூரியை விட்டு வெளியே வந்த மலர்விழியின் உள்ளம் உற்சாகத்தின் பிடியில் இருந்தது.
அதற்கு, நாளை மாலை சென்னைக்கு கிளம்புவதாக ராகவன் சொன்னது ஒரு காரணம் என்றால், இன்றுகாலை கல்லூரிக்கு வந்ததும் கல்லூரி முதல்வர் அவளை அழைத்து, “பி எட் அல்லது போஸ்ட் க்ராஜூவேஷன், எதுவாக இருந்தாலும் நமது கல்லூரியிலேயே படிக்க வேண்டும். அதற்கும் அவளுக்கு சலுகைகள் உண்டு” என்று சொல்லியது இன்னொரு காரணம்.
மலர்விழி பல்கலைகழக அளவில் முதல்ரேங்க் எடுப்பாள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாணவி. அப்படியிருக்கும் போது, எந்த நிர்வாகத்திற்கு தான் அவளை விட்டுத்தர மனது வரும்.
‘இந்த விஷயத்தை ராகவனுக்கு ஃபோனில் சொல்லலாமா? இல்லை, நேரில் சொல்லலாமா?’ என்ற சிந்தனையோடு நடந்தாள் மலர்விழி.
‘ராகவன் நாளை மாலை கிளம்பினால், மறுநாள் காலை தான் சென்னைக்கு வந்துசேர முடியும். அதன்பிறகு சித்தப்பா வீட்டுக்கு போய்விட்டு இங்கே வர எப்படியும் மதியத்திற்கு மேல் ஆகிவிடும். அது வரைக்கும் நம்மால் சொல்லாமல் முடியாது’ என்று யோசனை சென்றது.
ராகவன் அவளை பார்க்க வரும் நேரத்தை தோராயமாக அவள் கணக்கிட்ட வேகத்தில், ‘விட்டால், இரயில் நிலையத்திலிருந்து நேரே இங்கே வர வேண்டும் என்று சொல்லுவாய் போலவே’ என்று, அவள் மனமே அவளைக் கிண்டலடித்தது.
அந்த உச்சி வெயிலில் பிச்சியைப் போலவே சிரித்தபடி நடைபோட்டவளின் மனது, ‘என்னைப் பார்ப்பதற்காக, என்னிடம் பேசுவதற்காகவே வருகிறாராமே? அப்படி என்ன பேசுவார்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.
காதல் சொல்லுவதற்கான அறிகுறிகள் தான் அவனிடம் அதிகமாக தென்படுகிறது எனத் தெரிந்துமே, மறுபடியும் மறுபடியும் அதே கேள்வியில் போய் நிற்பதில் ஒரு போதை இருக்க, உல்லாசமாக நடைபோட்டவளுக்கு, உலகமே வண்ணமயமாக ஆனது போல இருந்தது.
முதல் சந்திப்பிலேயே தன்னுடைய அனுசரணையான நடவடிக்கைகளால் மலர்விழியின் இளம்மனதில் தடம் பதித்தவன் ராகவன்.
தன்வாழ்வில், இனியொரு முறை அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படவே போவதில்லை என்று மலர்விழி நினைத்திருக்க, காலம் அவள் கண்முன்னே கொண்டுவந்து அவனை நிறுத்தியதோடல்லாமல், அவன் மூலமாகவே அவள் வாழ்க்கைப் பாதையை திசை திருப்பியும் விட்டது.
இப்போதோ, அவள் உணர்ந்த அன்பை அவனும் உணர்ந்து, ஒருவருக்கொருவர் அதை பகிர்ந்து கொள்ளவும் விழைகிறார்கள்.
என்னவோ எல்லாமே எளிதாக நடப்பது போல ஒரு எண்ணம் மலர்விழியின் மனதில் தோன்ற, “இல்லை” என்று கண்களை உருட்டினார் ராகவனின் அம்மா தெய்வானை.
‘ஆமாம், இவர்களை எப்படி நான் மறந்து போனேன்?! அன்று, மருத்துவமனைக்கு என்னோடு மகன் வந்ததையே விரும்பாதவர், வாழ்க்கை முழுவதுமே மகனோடு கைகோர்த்தபடி நான் வருவதற்கு சம்மதிப்பாரா?’
ஆளில்லா சாலையில் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருந்த காதல் வாகனம், தெய்வானை என்ற முதல் வேகத்தடையில் லேசாக ஆட்டம் கண்டது.
என்றாலும் கைவந்திருந்த கல்வி நிமிர்வைத் தர, பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு நடந்தவள் விடுதிக்கு வந்திருந்தாள். உண்டு முடித்து சற்று நேரம் ஓய்வாக இருந்தவள், கீழே ராஜத்தின் வீடு வரைக்கும் சென்று வரலாம் என்று கிளம்பினாள்.
எப்படியும் தேர்வு முடிவுகள் வந்து, அடுத்து கல்லூரி தொடங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அறையிலேயே அடைந்து கிடைப்பதற்கு பதில் வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
எதேட்சையாக அதைப்பற்றி ராஜத்திடம் சொல்ல, அவரும் தங்களுடைய கம்பெனியிலேயே ஆள் தேவை இருக்கிறது, கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என்றிருந்தார். அதைப்பற்றி கேட்டுவிட்டு வரலாம் என்று கிளம்பினாள் மலர்விழி.
ராஜத்தின் வீட்டு கதவில் மலர் கை வைக்கவும், திறந்து கொண்டது. ‘என்னடா இது?’ என்ற எண்ணத்தில் உள்ளே பார்வையை வீசியவள், கண்ட காட்சியில் தன்னை மறந்து, “அக்கா…” என்று கத்தியபடியே உள்ளே ஓடினாள்.
ஆமாம்… அங்கே ஹாலில், கைகளையும், கால்களையும் பரப்பியபடி ராஜம் கவிழ்ந்தடித்து தரையில் விழுந்து கிடந்தார். உச்சபட்ச அதிர்ச்சியில் ஓடிவந்த மலர்விழி, மண்டியிட்டு அமர்ந்து ராஜத்தின் தலையை தூக்கி மூக்கில் கை வைத்து பார்த்தாள். சுவாசம் வந்து கொண்டிருந்தது. விழுந்ததில் நெற்றி எதிலோ இடித்து இரத்தமும் வந்து கொண்டிருந்தது.
விரைவாக மருத்துவமனை கொண்டுசெல்ல வேண்டும் என்பது புரிந்து, “தீபக்… இங்க வா” என்று கத்தினாள். அதன்பிறகு தான் பிள்ளைகள் இருவரும் தீக்ஷிதாவின் வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு செல்லப் போவதாக ஏற்கனவே தன்னிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.
அதற்கிடையில் அவள் சத்தம் கேட்டு ஓடிவந்திருந்த விடுதி பாதுகாவலர், “என்னம்மா ஆச்சு?” என்று பதட்டத்தோடு கேட்க,
“தெரியல… நான் வரும்போது கீழ விழுந்து கிடந்தாங்க. தூக்குங்க, ஹாஸ்பிடல் கொண்டு போயிடலாம்” என்றாள்.
“எதுக்கும் முதல்ல ஓனர்கிட்ட சொல்லிடலாம்” என்று, அவர் கைபேசியிலேயே முதலாளியை அழைத்து விஷயத்தை சொன்னவர், பேசியை மலர்விழியிடமும் நீட்ட, அவளும் சொன்னாள்.
“மலர், மொதல்ல பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டுட்டு போங்க ப்ளீஸ்… நான் வெளியூர்ல இருக்கேன். இதோ, இப்பவே கிளம்பிடுறேன்” என்றார் தீனதயாளன் பதட்டத்தோடு.
அடுத்த இருபது நிமிடங்களில் அருகேயிருந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் ராஜம்.
“ப்ரஷர் அதிகமானதால மயங்கி விழுந்துருக்காங்க. லேசா பக்கவாதத்துக்கான அறிகுறி தெரியுது. நல்ல காலம் சீக்கிரம் கொண்டு வந்துட்டீங்க, இல்லைன்னா ரொம்ப சிக்கலாகிப் போயிருக்கும்” என்ற மருத்துவர்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுவிட்டார்கள்.
விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்துவிட்ட தீக்ஷிதாவும் தீபக்கும் அழுது கரைந்தார்கள். அவர்களை ஆறுதல்படுத்தினாள் மலர்விழி.
சற்றுநேரத்தில் ராஜம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட, அவரை ஓரளவு தெளிவாக பார்த்த பிறகு தான் அனைவருக்கும் நிம்மதி.
இனி, தான் பார்த்துக் கொள்ளுவதாக சொல்லி, விடுதி செக்யூரிட்டியை அனுப்பி வைத்தாள் மலர்விழி. இரவு நெருங்கவும் பிள்ளைகளையும் வீட்டுக்கு செல்ல பணித்தவள்,
“அக்கா, உங்க சொந்தக்காரங்க யாரும் இங்க பக்கத்துல இருந்தா பிள்ளைங்க கூட வீட்டுல வந்து தங்க சொல்லலாமா?” என்று ராஜத்திடம் கேட்டாள்.
“எங்களுக்கு அப்படி யாருமே கிடையாது. உங்களுக்கு தெரியாதா க்கா?” என்றான் தீபக்.
மலர்விழி பார்க்க, சொந்தம் என்று யாருமே ராஜத்தின் வீட்டுக்கு வந்து போனதில்லை தான். ராஜத்தின் முகத்தை மலர்விழி யோசனையாகப் பார்க்க, அவரோ கசப்பாக புன்னகைத்தார்.
எல்லோரும் மருத்துவமனையில் தங்க முடியாது என்பதால் பிள்ளைகளை, ஆயிரம் பத்திரம் சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டு ராஜத்திடம் வந்து அமர்ந்தாள் மலர்விழி.
“எங்க ரெண்டு பேருக்குமே, அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சின்னு எல்லா உறவும் இருக்கு.” அங்கே நிலவிய அமைதியை கிழித்துக் கொண்டு மெல்லியக் குரலில் பேசினார் ராஜம்.
சற்றுமுன் தீபக் சொன்ன வார்த்தைக்கும், இப்போது அவன் அம்மா சொல்லுவதற்கும் முரண்பாடுகள் இருக்க, யோசனையாக நெற்றி சுருக்கினாள் மலர்விழி.
“லவ் மேரேஜ் பண்ணிகிட்டோம், அதுவும் கலப்புத் திருமணம்.”
ராஜம் ரத்தினசுருக்கமாக சொன்ன வார்த்தைகளே, அவர்களுக்கு உறவின்றி போனதற்கான காரணத்தைப் பளிச்சென்று சொன்னாலும், “என்ன க்கா சொல்லுறீங்க?” என்று அதிர்ச்சியாக கேள்வியை உதிர்த்திருந்தது மலர்விழியின் உதடுகள்.
“ம்ம்… அப்போ நான் காலேஜ் முடிக்கிற நேரம். இவங்க இன்ஜினியரிங் முடிச்சு வேலைக்கு போய்ட்டு இருந்தாங்க. ஒரே ஊர் தான். இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. அது, எங்க இரண்டு பேர் வீட்டுக்கும் பிடிக்கல. எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க, நாங்க கேக்கல. இரண்டு பேர் குடும்பமுமே சமமான வசதி வாய்ப்பு உள்ளது தான். அது, நீயா நானான்னு ஒரு ஈகோவை ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல உண்டு பண்ணிச்சி” சொல்லிவிட்டு சோர்வாக கண்களை மூடினார் ராஜம்.
கலப்பு திருமணம் என்ற ஒற்றை வார்த்தையிலேயே கலங்கிப் போயிருந்த மலர்விழி, ராஜத்தின் சோர்வைப் பார்த்து, “கஷ்டப்படுத்திக்காதீங்க க்கா, பிறகு பேசலாம்” என்றாள்.
பல வருடங்களுக்குப் பிறகு அந்த பேச்சை எடுத்ததாலோ என்னவோ, பேசி முடித்துவிட வேண்டும் என்பது போல மறுபடியும் பேசத் தொடங்கினார் ராஜம்.
“எங்க வீட்டுல எனக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்தாங்க. அவங்க வீட்டுலயோ, என்னைக் கொல்லவேப் பாத்தாங்க. அது தெரிஞ்சதும் இதுக்கு மேலயும் பொறுக்க முடியாதுன்னு, அவரோட என்னைக் கூப்பிட்டார் தீபக்கோட அப்பா. எனக்குமே அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய முடியாதுன்னு தோணவும், அவர் கையைப் பிடிச்சிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். அன்னைலயிருந்து இன்னைக்கு வரைக்கும் பிடிச்ச என் கைக்கு, இவங்க நியாயம் பண்ணுறாங்க. ஆனா, நாங்க செய்தது அநியாயம்னு சொல்லிட்டு ரெண்டு பக்க உறவுகளும் எங்களை வேண்டாம்னு தள்ளி வச்சிட்டாங்க.”
“அதப்பத்தி எங்களுக்கு கவலையில்லை, அவங்கவங்க நியாயம் அவங்கவங்களுக்குன்னு ஜம்பமா சொன்னாலும், ஏதோ ஒரு பலவீனமான நேரத்துல, நாம பிறந்தது, வளர்ந்தது நம்ம பெத்தவங்களோட, கூடப் பிறந்தவங்களோட பாசம்னு எல்லாமே மனசோட அடிஆழத்துலயிருந்து எட்டிப்பாக்குறது என்னவோ நிஜம்.”
நம்ம கல்யாணம், இரண்டு குடும்பத்து சம்மதத்தோட நடந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்ல ன்னு நினைச்சு பாக்குறது நிஜம். அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்னு பெருமூச்சு விடுறது நிஜம்” என்று பெருமூச்சு விட்டார் ராஜம்.
அவ்வளவு தான்… ஆட்டம் கண்டு விட்டாள் மலர்விழி.
‘அப்படியானால் சுற்றம் சூழ வாழும் ராகவனை, என் காதல் அவர்களிடமிருந்து ஒதுக்கி விடுமா?’ மின்னல் வேகத்தில் கேள்வி எழும்பி, விஸ்வரூபம் எடுத்து நின்றது.
‘எனக்குத் தான் குடும்பமாக வாழ குடுப்பினை இல்லை என்றால், என்னோடு சேர்ந்த பாவத்திற்கு அவர் ஏன் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்?’ குழப்பம்… குழப்பம்… மனமெங்கும் குழப்பம் சூழ, என்ன செய்வது என்று தெரியாமல் மலர்விழி தவித்து நின்ற நேரம், ராகவனிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை ஏற்றவள், சுரத்தே இல்லாமல், “ஹலோ” என்றாள்.
“மலர், சாரி டா. நாளைக்கு என்னால சென்னைக்கு கிளம்ப முடியாது. நம்ம கதிர் ஒரு வருஷமா பெங்களூர்ல வேலை பாத்துட்டு இருக்கான்னு உனக்கு தெரியும் தானே. இப்போ அதைவிட நல்ல கம்பெனியில் வேலை கிடைச்சு டெல்லிக்கு போறான். ஃப்ரெண்ட்ஸ் கூட போயிருவேன்னு பந்தாவா சொன்னவன், கடைசி நேரத்துல, வாடா அண்ணான்னு நிக்குறான். அவன் கூடப் போய் ரூம் எல்லாம் பாத்து அரேன்ஜ் பண்ணிட்டு, திரும்பி வரும்போது சென்னைக்கு வரேன் டா.” மனதில் பதியும்படி மென்மையாக கூறினான் ராகவன்.
அப்போது இருந்த மனநிலையில், ராகவன் நாளை சென்னை கிளம்பவில்லை என்று சொன்ன தகவலில் சிறு நிம்மதி தான் ஏற்பட்டது மலர்விழிக்கு.
‘யாரென்றே தெரியாத எனக்காகவே அவ்வளவு பார்த்தவன், தம்பியை தனியே விட்டுவிடுவானா? இந்த பாசமும் நேசமும் அவர்களுக்குள் வாழ்க்கை முழுவதும் நிலைக்க வேண்டும் என்றால், நான் ராகவனின் வாழ்க்கையில் நுழையக் கூடாது…’ என்ற சிந்தனை வழியே சென்றவள், பதில் சொல்ல மறந்து ஊமையாகிப் போனாள்.
“என்னாச்சு மலர்… பேசமாட்டேங்கிற? வர்றேன்னு ஹோப் குடுத்து ஏமாத்திட்டேன்னு வருத்தமா இருக்கா? கண்டிப்பா ஒரு வாரத்துக்குள்ள வந்துடுவேன் டா.”
‘நாளை கிளம்புவதாகச் சொல்லிவிட்டு, வரவில்லை என்று திடீரென்று சொல்லவும் ஏமாற்றமாகிப் போனாள் போல’ என்ற எண்ணத்தில் அவளை சமாதானப்படுத்தினான் ராகவன்.
அவன் வார்த்தைகளில் வெளிப்படையாக தெரிந்த உரிமையில் தவித்துப் போன மலர்விழி, “இல்ல… நான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன். ராஜம் அக்காவுக்கு…” என்று தொடங்கி, நடந்தவைகளை சொல்ல, கேட்டுக் கொண்டவன் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டே அழைப்பைத் துண்டித்தான்.
அன்றிரவு பதினோரு மணிக்கு போல ராஜத்தின் கணவர் தீனதயாளன் வந்து சேர்ந்தார். வந்ததும் பாய்ந்து சென்று மனைவியின் கைகளைப் பற்றி, “ராஜி… என்னடா ஆச்சு?” என்றவரின் குரல் தன்னைமீறி தழுதழுத்தது.
“தயா ப்பா… வந்துட்டீங்களா?” என்று கண் கலங்கினார் ராஜம்.
இருவர் குரலிலும் இருந்த அன்பு மலர்விழியையும் கலங்கடிக்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து அறைக்கு வெளியே கிடந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
‘என்ன ஆனாலும் பரவாயில்லை, இப்படியொரு காதல் வாழ்க்கையை ராகவனோடு வாழ்ந்துவிட வேண்டும்’ என்று மனது முணுமுணுத்தது.
அடுத்த நிமிடமே, ‘எப்போதிருந்து நீ இவ்வளவு சுயநலமாக மாறிப்போனாய்?’ என்று அதே மனது சண்டைக்கு வந்தது.
ஆக, ராகவனின் காதல் வேண்டும் என்று சொல்லவும் முடியாமல், வேண்டாம் என்று தள்ளவும் முடியாமல் தள்ளாடிப்போய் நின்றாள் மலர்விழி.
ஒரு வாரம் ஓடியே போயிருந்தது. இத்தனை நாட்களில், ராகவனின் வாழ்க்கையில் தான் வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள் மலர்விழி. ஆனால், எடுத்த முடிவை ராகவன் முகம் பார்த்து சொல்லும் தைரியம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்ற பதில் தான் இப்போதும்.
அன்று மதியம் ஃபோன் செய்த ராகவன், “மலர், சென்னைக்கு வந்துட்டேன். மூனு மணிக்கு போல கிளம்பி இரு, நான் வர்றேன்” என்றான் உற்சாகமாக.
அவன் சொன்னது போலச் செய்தவள், மூன்று மணிக்கு விடுதிக்கு வெளியே வந்து நின்றபடி ராகவன் அழைக்கவும், சென்றாள்.
தரையில் ஒரு காலை ஊன்றி பைக்கில் அமர்ந்தபடி மலர்விழி வருவதையே சுவாரஸ்யமாக பார்த்தபடி நின்றிருந்தான் ராகவன்.
சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டு, மலர்விழியைப் பார்க்க வரும்போதெல்லாம் அவருடைய கார் அல்லது வாடகை ஆட்டோ, இப்படி ஏதாவது ஒன்றில் வரும் ராகவன் இன்று பைக்கில் வந்திருக்க, மலருக்கு தான் திண்டாட்டமாகிப் போனது.
எப்போதும் தன்னைக் கண்டதும் பளிச்சிடும் அந்த ‘மலர்’ கண்கள் இன்று ஏதோ குழப்பத்தை சுமந்து கொண்டிருப்பதை பார்த்ததுமே கண்டுகொண்ட ராகவன்,
“என்னாச்சு மலர்? முகம் டல்லா இருக்குது?” என்றான் யோசனையாக.
“அ…அது, ரொம்ப வெயிலா இருக்குல்ல, அதான்…” தடுமாறினாள் மலர்விழி.
“ஓஹ்… இன்னும் கொஞ்ச நேரத்துல கூலாகிடலாம், உக்காரு.” லேசாக தலையைத் திருப்பி பைக்கின் பின்சீட்டை கண்களால் காட்டிச் சொன்னான்.
தான் எடுத்திருக்கும் முடிவு, பைக்கில் அவன் அருகே அமர்ந்து செல்ல மலர்விழிக்கு தயக்கத்தைக் கொடுக்க, “எங்க போறோம்?” எப்போதும் இல்லாமல் புதிதாக வந்தது கேள்வி.
பார்வை மட்டுமல்ல, பாவையுமே குழம்பி நிற்பது இப்போது புரிந்தது ராகவனுக்கு. அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஏன்? சொன்னாத்தான் வருவியா மலர்?” என்றான் கேலியாக.
“அப்பிடி எல்லாம் இல்ல” என்றவள் அவசரமாக பைக்கில் அமர முயல, “இரண்டு பக்கமும் கால் போட்டு உக்காரு மலர். அது தான் சேஃப்” என்றான் ராகவன்.
அந்த ‘ஹோண்டா யூனிகார்ன்’ பைக்கில், அவன் தோளைப் பிடிக்காமல் ஏறி அமர்வது மலருக்கு சாத்தியம் இல்லாததால் தடுமாறியவள், “எப்பிடி ஏற?” என்றாள் அவனிடமே.
“ம்ம்… ஏணி கொண்டுவரச் சொல்லுவமா?” ராகவன் சொன்ன தினுஷில் சட்டென்று ஒற்றைக் கையால் அவன் தோளைப்பற்றி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் மலர்விழி.
அவள் மனமோ, ‘அவர் காதல் சொல்லி, நான் மறுக்கும் சூழ்நிலைக்கு என்னைத் தள்ளி விடாதே இறைவா. அவர் காதல் சொல்லவே கூடாது. சாதாரணமாக பேசிவிட்டு கிளம்பிவிட வேண்டும்’ என்று ப்ரார்த்தனை செய்தது.
உன் ப்ரார்த்தனையை அந்த தெய்வத்தின் சன்னதியிலேயே வைத்துக்கொள், என்பது போல பெசன்ட் நகர் பீச்சுக்கு அருகில் இருந்த அஷ்டலட்சுமி கோயிலில் கொண்டு தான் வண்டியை நிறுத்தினான் ராகவன். அதற்கு இடைப்பட்ட பயண நேரத்தில் இருவருக்குமிடையே துளி பேச்சில்லை.
“மொதல்ல சாமி கும்பிட்டுட்டு பீச்சுக்கு போலாமா?” என்ற ராகவன் கோவிலுக்குள் நுழைய, அவன் பின்னோடு சென்றாள் மலர்விழி.
அவன் சென்னைக்கு வருகிறேன் என்று சொன்னது, தன்னிடம் காதல் சொல்லத்தான் என்று எண்ணி எண்ணி போதை கொண்டவள், இப்போது ஒவ்வொரு சன்னிதானத்திலும் ராகவன் தன்னிடம் காதல் சொல்லிவிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டு நின்றாள்.
அவனோ, தீவிரமாக வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தவளை, தீவிரமாக பார்வையிட்டபடியே இருந்தான்.
சாமி கும்பிட்டு முடிக்கவும் மலர்விழியோடு அருகில் இருந்த பீச்சில் இறங்கினான் ராகவன். வெயில் தாழ்ந்து, மாலை வேளைக்கு முன்னுரை எழுதும் முயற்சியில் இயற்கை இருக்க, அதைக் கொண்டாடுவது போல கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகத் தெரிந்தது.
கடற்கரை ஓரமாக மாக்காசோளம் சுட்டு விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்த ராகவன், “வேணுமா மலர்?” என்று கேட்டான். “வேண்டாம்” என்று தலையசைத்தாள்.
தோள்களைக் குலுக்கியவன், “இன்னைக்கு நீ சரியில்லை மலர். எதைக் கேட்டாலும் நெகட்டிவ் பதிலே சொல்லுற” என்றவன் கடலை நோக்கி நடந்தான்.
“எனக்கு அங்க வரவேண்டாம்… கால் நனைஞ்சா மண்ணு ஒட்டிக்கும்” என்றாள் மலர்விழி.
“நான் தான் சொன்னேனே” என்பது போல, நின்று அவளைப் பார்த்தவன், “பீச்சுக்கு வந்துட்டு மண்ணு ஒட்டக்கூடாதுன்னு சொல்லுற மொத ஆள் நீயா தான் இருப்ப.”
கேலி செய்தபடியே அலை, காலை நனைக்கும் தூரத்தில் இறங்கி கடற்கரையோரம் நடக்க ஆரம்பித்தான் ராகவன். மௌனமாக உடன் இறங்கி நடந்தாள் மலர்விழி.
சிறிது தூரம் நடந்து, ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் ராகவன் உட்கார, சற்று தள்ளி அவனருகே அமர்ந்தாள் மலர்விழி. இருவருக்குமிடையே நாகரீகமான இடைவெளி இருந்தது. அதை சற்றே கடந்தான் ராகவன். பதறிப்போய் விலக முயன்றவள், ராகவனின் பார்வையில் என்ன உணர்ந்தாளோ அப்படியே அமர்ந்திருந்தாள். பார்வையோ கடலையே வெறித்தபடி இருந்தது.
இது, ராகவன் அறிந்த மலர்விழி இல்லை. ஓடும் நதி நீர் போல சலசலவென்று தன்னிடம் பேசும் மலர்விழியைத் தான் அவனுக்கு தெரியும். இப்படி தொட்டாற் சிணிங்கியாக பேசுவதற்கே யோசிக்கும் மலர்விழி அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.
சற்று நேரம் அவனுமே அமைதியாக இருந்துவிட்டு, “கவுண்ட் பண்ணி முடிச்சிட்டியா மலர்?” என்றான் மெதுவாக.
“ஹாங்…” புரியாமல் விழித்தாள் மலர்விழி.
“இல்ல… உக்காந்த நேரத்தில இருந்து கடலையே பாத்துட்டு இருக்குறியா, அதான், அலையை எண்ணுறியோன்னு நினைச்சேன்.”
மலர்விழியை இலகுவாக்க நினைத்து ராகவன் கேலியாகக் கேட்டான். அதற்கும் மில்லிமீட்டர் அளவில் தன் புன்னகையை மலர் சிந்த,
“உனக்கு என்ன தான் பிரச்சனை மலர்? மொதல்ல அதைச் சொல்லு.” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டான் ராகவன்.
ராகவன் தன்னைக் கண்டு கொண்டதில் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை மலர்விழி. ஃபோன் பேசும் போது, குரலிலேயே மனதை அறிந்து கொள்ளுபவன், இத்தனை அருகில் இருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தால் தான் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
‘சொல்லு என்று விட்டான், ஆனால் எப்படிச் சொல்வது?’ மறுபடியும் மௌனத்திற்குள் ஒளிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
“எங்கிட்ட கூட சொல்லமுடியாத பிரச்சனையா?” இப்போது, அவனுக்குமே மலர்விழியின் அமைதி பயத்தைக் கொடுத்தது. அவள் வலதுகையை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்தபடியே கேட்டான்.
ராகவனின் கேள்வியிலும் அதில் இருந்த அக்கறையிலும் மலர்விழியின் கண்களிரண்டும் கண்ணீரால் நிரம்பியது. அது கரைதாண்டி விடாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவள் விழிநீரில் பரிதாபமாக மிதக்கும் கருவிழிகளைக் கண்ட ராகவனோ, மெதுவாக தன்பிடியில் இருந்த அவள் கரத்தை விடுவித்து,
“இந்த கண்ணீரை நான் எப்படி எடுத்துக்குறது மலர்? உங்கிட்ட நான் பேச நினைக்கிற விஷயம், உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும். உனக்கு அதுல விருப்பமில்லையா? ஐ மீன், உனக்கு என்னை பிடிக்கலையா? அதான் இந்த அழுகையா?” குரல் என்னவோ போலாகிவிட கேட்டான்.
“ஐயையோ… அப்படியெல்லாம் இல்ல, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, நான் உங்களுக்கு வேண்டாம்.” மலர்விழியிடமிருந்து பதறிப்போய் பதில் வந்தது.
உடம்பின் எல்லா அணுக்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவனை, பொய் என்றாலும் கூட பிடிக்கவில்லை என்று சொல்லமுடியாமல், இருக்கு ஆனால் இல்லை, என்ற ரீதியில் பதில் சொன்னாள்.
“பிடிக்கும்… ஆனா கல்யாணம் செய்யுற அளவுக்கு பிடிக்காது. அப்படித்தானே?” போட்டு வாங்கினான் ராகவன்.
‘ராகவனை தனக்கு பிடிக்காது’ என்ற அர்த்தம் தரும் வார்த்தைகளே மலர்விழிக்கு பிடிக்காதவைகளாக இருக்க, “அப்பிடி இல்ல ப்பா, நான் ஒருத்தி உங்க லைஃப்ல வர்றதால, நீங்க உங்க குடும்பத்தையே இழக்க வேண்டி வரலாம். அதான், நான் உங்க வாழ்க்கைக்கு வேண்டாம்னு சொன்னேன்.” கைவிரல்கள் கடல்மணலில் வேகவேகமாக கோடு கிழிக்க, சொல்லியே விட்டாள் மலர்விழி.
அவனோ, “ஹ்ம்ம்… அப்புறம்…” என்றான் கதை கேட்கும் பாவனையில்.
அவன் பாவனையில் திருதிருத்த மலர்விழி, “அதான்… உங்க வீட்டுல பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றவளிடமிருந்து, எத்தனை முயன்றும் அடக்கமுடியாமல் கேவல் ஒன்று வெடித்தது.
அவளின் அன்பின் அளவைச் சொல்ல, அது ஒன்றே ராகவனுக்கு போதுமானதாக இருக்க, “அடியேய்…என் அறிவுக் கொழுந்தே… கடல்னா அலை இருக்கத்தான் செய்யும், காதல்னா எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதுக்கு மேல என்னை டயலாக் பேச வைக்காத” என்றவன் சட்டென்று மலர்விழியின் இடுப்பில் கை கொடுத்து தன்னருகே இழுத்துக் கொண்டான்.
ராகவனோடு ஒட்டி உரசியபடி இருந்தாலும், விலக முயற்சிக்காமல், “நான் என்ன சொல்ல வர்றேன்னா…” என்று மறுபடியும் மலர்விழி தொடங்க,
“இதுக்கு மேல ஏதாவது உளறுன, கொன்னுடுவேன்” என்று கண்களை உருட்டியவன், “என்னவோ ஏதோன்னு மனுஷனை சுத்தல்ல விட்டுகிட்டு…” என்று சத்தமாகவே முணுமுணுத்தான்.
கிட்டத்தட்ட ஒருவாரமாக, இதையே நினைத்து, நினைத்து பைத்தியமாகவே மாறிப்போய் இருந்தவளுக்கு, ராகவனின் அதட்டல் கூட சுகமானதாக இருந்தது. அவன் புஜத்தில் தலையை சாய்த்து, லேசாக நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த கண்களில் இன்னமும் கலக்கம் மிச்சம் இருப்பதைக் கண்டு, “விடு மலர், பாத்துக்கலாம்” இலகுவாகச் சொன்ன ராகவன், “இப்போ சொல்லு, நாம ரெண்டு பேரும் ஃப்யூச்சர்ல கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் மென்மையாக.
அதற்கு மேலும் அவனை மறுக்கும் சக்தி மனதிற்கு இல்லாமல் போகவே, “சரி” என்பது போல கண்களை மூடித்திறந்தாள் மலர்விழி.
“அவ்ளோ தான்… இதுக்கு போயா ம்மா இம்மாம் பண்ணுன நீயி” என்பது போல கடல் அலைகள் உற்சாகமாக துள்ளிக் குதித்தன…