அத்தியாயம் -3(2)
ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டாள்.
தங்கையை சமாளித்து பேச்சை மாற்றி படிக்க அனுப்பி வைத்தாள் ஸ்ரீ.
ஜெய்யிடம் வேலைக்கு செல்வது பற்றி ஸ்ரீக்கு மிகுந்த யோசனை, தான் செய்யாத தவறுக்காக தினம் தினம் இப்படி அவ சொற்களை தன்னால் கேட்க முடியாது என்பதை விட, அடுத்த முறை கண்டிப்பாக திருப்பித் தந்து விடுவாள், பின் அவனே வேலையை விட்டு போ என துரத்தி விடுவான், எதற்கு சிக்கலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என யோசித்துக் கொண்டே இரவு சமையலை முடித்து விட்டாள்.
மகளுக்கு வேலை கிடைத்து விட்டதற்காக ஸ்வீட் வாங்கிக் கொண்டு வந்திருந்தார் ஜோதி. அம்மாவிடம் ஜெய் பற்றி எதையும் பகிர்ந்து கொள்ளாமல் அன்றைய இரவை நல்ல விதமாகவே கடத்தினாள் ஸ்ரீ.
மறுநாள் அம்மா, தங்கையெல்லாம் புறப்பட்ட பின்னர் ஜம்புலிங்கம் வீட்டிற்கு சென்றாள். அவரின் மனைவி வரவேற்று பேசிக் கொண்டிருக்க, வெளியில் சென்றிருந்த ஜம்புவும் வந்து விட்டார்.
ஜெய் குடும்பம் மற்றும் தன்னுடைய குடும்பம் பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டாள். தனக்கு இத்தனை வருடங்கள் இது தெரியாமல் இருந்ததே என ஜம்பு ஆச்சர்யபட்டுப் போனார்.
ஜெய்யின் தற்போதைய நடத்தையை எடுத்து சொல்லி இந்த வேலை வேண்டாம் எனவும் கூறினாள். ஜம்பு யோசிக்க, அவரின் மனைவியும் ஸ்ரீயின் கூற்றுக்கு ஒத்து பேசினார்.
“நீ ஆம்பள புள்ளையா இருந்தா இன்னும் ரெண்டு இடம் எனக்கு தெரிஞ்சது இருக்கு, அங்க வேலைக்கு சொல்லி விடுவேன்மா, உன் பாதுகாப்பு முக்கியம் இல்லயா? அதனாலதான் ஜெய்கிட்ட சேர்த்து விட நினைச்சேன்” என்றார் ஜம்பு.
இங்கு கிளம்புவதற்கு முன் இவளின் நண்பர்கள், சீனியர்கள் என பேசியிருந்தாள். அவர்களும் சென்னை, பெங்களூர் என வெளியூர்களுக்கு வர சொல்லித்தான் சொன்னார்கள். அவளுக்கோ குறைந்தது தங்கையின் படிப்பு முடியும் வரையாவது இங்கேயே ஓட்டி ஆக வேண்டிய நிலை.
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கம்ப்யூட்டரில் பில் போடும் பணி இருப்பதாக தயக்கத்தோடு சொன்னார் ஜம்புவின் மனைவி. ஸ்ரீக்கு நெஞ்சத்தில் அதிர்வு உண்டானது.
“சும்மா இருடி, அதுல வேலை பார்த்திட்டு அடுத்தடுத்து அந்த பொண்ணு முன்னேற வேணாமா?” மனைவியை கடிந்து கொண்டார் ஜம்பு.
“தப்பா நினைக்காதம்மா, எனக்கு தெரிஞ்ச தீர்வை சொன்னேன்” என ஜம்புவின் மனைவி சொல்லவும், பரவாயில்லை என்றாள் ஸ்ரீ.
“நான் சொல்றத நல்ல விதமா எடுத்துக்கமா. ஜெய் குடும்ப விஷயம்தான் எனக்கு தெரியலையே தவிர அவன் குணம் பத்தி நல்லாவே தெரியும். அவன் இயல்பே அப்படித்தான், நானே சிரிக்கவே தெரியாதாடான்னு நிறைய தடவ கிண்டல் பண்ணிருக்கேன். அவனோட அப்பா டெத் அவனை ரொம்ப பாதிச்சுடுச்சு, மனசுக்குள்ள அப்படியே இறுகி போயிட்டான்மா. உன்னை பத்தி தெரிஞ்சும் நான் சொல்லிட்டேன்னு வேலை கொடுத்திருக்கான்தானே? அவன்கிட்டேயே போம்மா. அவன் சொல்ற வேலைய சரியா செய், பெர்சனல் விஷயம் பேசினா எனக்காக பார்க்காத, ‘இப்படி பேசாத’ன்னு நேரா சொல்லிடு. அங்க இருக்க முடியாதுன்னு தோணிடுச்சுன்னா அப்ப வேலைய விட்டு நின்னுக்க” என்றார் ஜம்பு.
ஜம்புவின் மனைவியும் இதுதான் சரி என கூறினார். காலை வரை இருந்த பெரிய அளவிலான தயக்கம் குறைந்து சின்ன தயக்கத்தோடு அவர்கள் சொன்னதுக்கு சம்மதம் கூறி விட்டு புறப்பட்டாள் ஸ்ரீ.
ஸ்ரீ பணியில் சேரும் நாளும் வந்தது.
ஜெய் அலுவலகம் வர அவனுக்கு முன் வந்து காத்திருந்தாள் தன்யஸ்ரீ. அன்று சுடிதாரில் இருந்தவள் இன்று குர்தா ஜீன்ஸ் பேண்ட் என இருந்தாள். சைட்டுக்கு செல்லும் நிலை வந்தாள் சௌகரியமாக இருக்கும் என கருதியே அந்த உடை.
சாதாரணமாக இருக்கும் போதே கண்களுக்கு அழகியாக தென்பட்டால் அவளின் குற்றமென்ன? என்னவோ அவனை கவர்ந்து விட ஜோடித்துக் கொண்டு வந்திருப்பதாக எண்ணிக் கொண்டவன் ஏளனமாக நகைத்தான்.
அவள் மரியாதையாக எழுந்து காலை வணக்கம் சொல்ல, வேண்டா வெறுப்பாக தலையாட்டி விட்டு அறைக்குள் சென்றான்.
அவளது வரவால் பாலைவனத்தின் திடீர் புயலில் எழுந்து பறக்கும் மணல் போல பழைய நினைவுகள் அவனை அலைக்கழிக்க ஆரம்பித்து விட்டன.
அப்பா மட்டும் இருந்திருந்தால்… என்ற ஏக்கமும் துரை மீதான கோவமும் தன்யஸ்ரீயின் மீது வெறுப்பையே வளர்க்க செய்தன.
முடிந்த வரை அவளை காணாமல் தள்ளியே இருக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். சசியை அழைத்தவன் அவனை கொண்டே ஸ்ரீயை கையாள சொல்லி விட்டான். முதல் நாள் ஆகிற்றே சம்பிரதாயமாக வாழ்த்து சொல்லக்கூட அவளை அழைக்கவில்லை அவன்.
அவனுடைய வாழ்த்தை அவளுமே எதிர்பார்க்கவில்லை. அவனிடம் போய் நிற்காமல் இருப்பதே அவளுக்கு பெரிய நிம்மதியை தந்தது.
ஸ்ரீக்கு ஏற்கனவே ஆறு மாதங்கள் சென்னையில் பணி புரிந்த அனுபவம் இருந்ததால் அடிப்படை விஷயங்களை எல்லாம் கற்றுத்தர வேண்டிய அவசியமிருக்கவில்லை. தன்னோடு சைட் ஒன்றுக்கு அழைத்து சென்று விட்டான் சசி.
தான் ஏதோ கேட்டதற்கு அவள் சாதாரணமாக சொன்ன பதிலில் பெரிய ஹாஷ்யம் கேட்டது போல அதிகப்படியாக சிரித்துக் கொண்டே பைக்கை எடுத்தான் சசி.
ஜன்னல் வழியே அவர்களை பார்த்திருந்த ஜெய்யின் முகம் காணக் கூடாததை கண்டது போல சுளித்துக் கொண்டது.
அவனுடைய இயல்புக்கு மாறாக சம்பந்தமே இல்லாமல் ‘ஆள் மயக்கி’ என வேறு அவளுக்கு பட்டப் பெயர் கொடுத்தான்.
மாலையில் ஸ்ரீயை பற்றி, “பொண்ணுன்னு நானும் சாதாரணமா நினைச்சிருந்தேன் ஸார், நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. நல்ல ஒர்க்கர் ஸார்” புகழ்ந்து சொன்னான் சசி.
“ம்ம்… அப்ப தினமும் ஏதாவது ஒரு சைட்டுக்கு அனுப்பி வச்சிடு, அந்த பொண்ணு உன்கிட்டேயே ரிப்போர்ட் பண்ணட்டும். என்கிட்ட டைரெக்ட் ரிப்போர்ட் வேணாம்” என்றான் ஜெய்.
யாரையும் எளிதில் நம்பவே மாட்டான், ஒவ்வொரு விஷயத்தையும் சம்பந்த பட்டவர்களே நேரடியாகவோ கைப்பேசியிலோ அவனுக்கு விவரம் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் இப்படி சொல்லவும் சசி குழப்பமானான்.
ஏன் எதற்கு என அவனிடம் அதிகம் விசாரிக்கவும் முடியாது, அதற்கெல்லாம் இடம் தரமாட்டான் என்பதால் சரி என சொன்னான் சசி.
அந்த வாரத்தில் ஜெய்யும் ஸ்ரீயும் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. பார்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில் எதிராளிக்கு விருப்பமில்லை என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.
தானாக அமைந்ததா அல்லது இருவரில் யாரோ திட்டமிடப்பட்டா என தெரியாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர் இருவரும்.
சனிக்கிழமை இரவில் வீடு திரும்பிய மகளிடம், “துளசி அண்ணியோட பையன்கிட்டயா வேலைக்கு போற?” என அதிர்ச்சியோடு கேட்டார் ஜோதி.
பேச்சு வாக்கில் மஹதிதான் ஏதோ சொல்லியிருந்தாள். அதை வைத்து அவரே ஊகித்துக் கொண்டார்.
ஒத்துக் கொண்ட ஸ்ரீ, ஜம்புலிங்கம் சொன்னவற்றை கூறி, கொஞ்ச நாளைக்கு செல்கிறேன் என்றாள்.
ஜோதி நெருடலோடு மகளை பார்க்க, பேசி பேசியே அம்மாவை சரிகட்டி விட்டாள் ஸ்ரீ. ஜெய்யும் பழையதை மறந்து, தங்கள் மீது தவறில்லை என்பதை உணர்ந்து, தன் பெண்ணுக்கு வேலை கொடுத்திருக்கிறான் போல என நினைத்து சமாதானம் அடைந்தார் அவர்.
மஹதியின் பள்ளியில் ப்ராஜக்ட் ஏதோ செய்ய சொல்லியிருந்தனர், அதற்காக பொருட்கள் வாங்கவென அந்த ஞாயிற்றுக் கிழமையில் அக்காவும் தங்கையும் ஸ்கூட்டியில் வெளியில் சென்றனர்.
அனைத்தும் வாங்கிய பின் கடை ஒன்றில் ஸ்னாக்ஸ் சாப்பிட சென்றனர். ஸ்ரீ பணம் செலுத்தி வாங்கிக் கொண்டிருக்க, அங்கே ஜெய்யை கண்ட மஹதி வியப்பாக பார்த்தாள்.
அவளை கண்டு விட்ட ஜெய் எரிச்சலடைந்து காணாதது போல திரும்ப செல்ல பார்த்தான்.
வேகமாக அவனிடம் சென்று நின்ற மஹதி, “ஸாரி அண்ணா, அன்னிக்கு அங்கிள்னு கூப்பிட்டத்துல உங்களுக்கு கஷ்டமாகியிருக்கும், ரொம்ப ஸாரி அண்ணா” என்றாள்.
சின்ன பெண்ணிடம் கோவத்தை காட்டவும் முடியவில்லை, அவளுடன் பேசவும் பிடிக்கவில்லை.
அவர்களை கண்டு விட்ட ஸ்ரீ பதறிப் போனவளாக அவர்களின் அருகில் வந்து நின்றாள்.
அக்காவின் கையிலிருந்து மசாலா பொறியை வாங்கிய மஹதி அவனிடம் நீட்டி, “சாப்பிடுங்க அண்ணா, இங்க ரொம்ப நல்லா இருக்கும்” என்றாள்.
அதை வாங்கிக் கொள்ளாத ஜெய், ஸ்ரீயை முறைத்து பார்த்தான்.
“ஆர்டர் பண்ணிட்டியா இல்லயா ண்ணா?” யாரிடமோ கைப்பேசியில் பேசி முடித்து விட்டு அண்ணனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான் ஜனா.
ஜனாவுக்கு அந்த பெண்களை பார்த்தவுடன் யாரென தெரிந்து விட்டது. மஹதி கையிலிருந்த மசாலா பொறியை வாங்கிக் கொண்டவன், “ஏய் பஞ்சுமிட்டாய் இங்க என்ன பண்ற?” எனக் கேட்டான்.
எப்போதோ பளீர் என்ற இளஞ்சிவப்பு வண்ண ஆடை அணிந்திருந்தவளை பார்க்கும் போதெல்லாம் பஞ்சுமிட்டாய் என கிண்டல் செய்வான்தான் ஜனா. சில வருடங்கள் பார்த்துக் கொள்ளாத போதும் அந்தப் பெயரை வைத்து அழைத்ததில் கடுப்பாகி முகத்தை திருப்பிக் கொண்டாள் மஹதி.
“அண்ணா… இவங்க யாருன்னு தெரியலையா?” என ஜெய்யிடம் கேட்டவன் அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
ஜெய் பற்களை கடிக்க, ஸ்ரீ அவஸ்தையில் நெளிந்தாள்.
“ஸ்ரீ அக்கா உங்கள பார்த்து எவ்ளோ நாளாச்சு? என்ன விஷேஷம்?” மசாலா பொறியை சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
தள்ளி இருந்த மேசைக்கு சென்று விட்டான் ஜெய்.
ஸ்ரீ, மஹதி இருவரோடும் அமர்ந்து விட்ட ஜனா அவர்களோடு மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான். பேச்சின் இடையில் ஜெய்யை வியப்பாக பார்த்து வைத்தான். பின் கை கொட்டி சிரித்தான், அந்த பெண்களும் சிரிப்பது போலிருந்தது.
தேநீர் குடித்துக் கொண்டிருந்த ஜெய்க்கு தம்பியை நன்றாக கொட்டி வைக்க வேண்டும் போலிருந்தது. “எரும எரும…” அவனது பற்களுக்குள் அரை பட்டான் ஜனா.
ஒரு வழியாக அந்த பெண்கள் கிளம்ப எழுந்து நின்றனர், பொறுப்பாக ஸ்ரீயிடம் கைப்பேசி எண் பெற்றுக் கொண்டான் ஜனா.
ஜெய்யை பார்த்து டாடா காட்டினாள் மஹதி. அவன் சிலை போல் அமர்ந்திருக்க ஜனா ஏதோ சமாதானமாக சொல்வது தெரிந்தது.
அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு சாவகாசமாக அண்ணனிடம் வந்தான் ஜனா.
“அர்ஜண்ட் வேலையா ஒரு இடம் போறேன், பஸ் பிடிச்சி வீட்டுக்கு போ” என சீற்றமாக சொன்ன ஜெய் புறப்பட்டு விட்டான்.
அண்ணனின் பின்னாலேயே ஓடி சென்று அவனது பைக்கில் தொற்றிக் கொண்ட ஜனா, “எனக்கு எந்த அர்ஜென்ட் வேலையும் இல்லை, எங்க போறியா என்னையும் அங்கேயே அழைச்சிட்டு போ ண்ணா” என்றான்.
“தறுதலை தறுதலை! உன்னை கொண்டு போயி ஏதாவது மடத்துல சேர்த்து விடணும்” உறுமினான் ஜெய்.
“அதை செய் முதல்ல, மூனு வேளையும் ஒழுங்கா சோறு போடுற மடத்துக்கு விடு பைக்க” என ஜனா சொல்ல, உச்சிக்கு ஏறிய கோவத்தை பைக் ஓட்டுவதில் காட்டினான் ஜெய்.