அவன் பின்னாலேயே செல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள் மஹதி.

அவளுடைய அந்த பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து அவளவனிடமிருந்துதான். இதய வடிவிலான லாக்கெட் வைத்த தங்கச் சங்கிலி பரிசாக கொடுத்திருந்தான். லாக்கெட்டை திறக்க உள்ளே அவனது உருவம் பதிக்கப் பட்டிருந்தது.

“எப்பவும் உன் மனசை உரசிக்கிட்டே இருக்க ஆசை எனக்கு, பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

“இன்னும் மூணு வாரம் இருக்கா கல்யாணத்துக்கு?” ஏக்கமாக கேட்டாள்.

“இருபத்தோரு நாள்!” ஜனாவும் காதலுருக பேசிக் கொண்டிருந்தான்.

தங்கைக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென உறங்காமல் காத்துக் கொண்டிருந்த ஸ்ரீ கைப்பேசியை எடுத்தாள். அவளை தடுத்த ஜெய், “நல்ல நாள்லேயே மிட் நைட் வரை அவன் ஃபோன் பிஸில இருக்கும். இன்னிக்கு சொல்லவே வேணாம். தியேட்டர்லேயே கடுப்பாகிட்டான், இப்பவும் டிஸ்டர்ப் பண்ணாம படு, காலைல பேசலாம்” என்றான்.

“ஹையோ அவ்ளோ நல்லவரா நீங்க!” அவனை ரசனையாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“சொன்னா எங்க நம்புற? வா” என்றவன் அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

******

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சியாமளன் வீட்டில் இருப்பான் என்பதை நினைவு படுத்திய ஸ்ரீ, “சியாம் அம்மா லஞ்சுக்கு வர்ற மாதிரி நம்மள வர சொல்லியிருந்தாங்க, இன்னிக்கே போயிட்டு வந்திடலாம்” என்றாள்.

எரிச்சலாக பார்த்தவன், “என்னை கேட்காம நீயே கமிட் பண்ணிக்கிவியா? உன் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் நீ தனியா போய் இன்விடேஷன் கொடுத்தா போதாதா?” எனக் கேட்டான்.

பதில் சொல்லாமல் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு அவனை பார்த்தாள். பதிலுக்கு அவனும் பார்த்தவன் அரை நிமிடத்துக்கு பின் இறங்கி வந்தான்.

“சரி சரி போலாம்” சலித்துக் கொண்டே சொன்னான்.

அவனது கன்னங்களை கிள்ளி கொஞ்சியவள், “அவன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட், உங்களுக்கு அவனை பிடிக்கலைனா சும்மா இருக்கணும்,  ஏதாவது அவன்கிட்ட மிஸ்பிஹேவ் செய்தீங்க…” என இழுத்தாள்.

“என்ன… என்னடி செய்வ?” எகிறினான்.

கொஞ்சிக் கொண்டிருந்த கன்னங்களை வலிக்க கிள்ளினாள்.

முதலில் வலியை பொறுத்துக் கொண்டவன் பின் ஆ என அலறி அவளது கையை உதறி விட்டு கன்னங்களை தடவி விட்டுக் கொண்டான்.

“பேருதான் பெத்த பேரு…  குறுகின மனசு!” என திட்டினாள்.

“ஆமாம் எனக்கு சின்ன மனசுதான் அதுல நீ மட்டும்தான். எவனுக்காகவோ என்கிட்ட வாதாடிட்டு நிக்குற பாரு, நீதான் என்னை காண்டாக்குற. என்னை அவாய்ட் பண்ணிட்டு அவன் கூட பேசி சிரிச்சு பழகினா பத்திகிட்டு எரியத்தான் செய்யும். அதுக்காக எப்பவும் அப்படியே இருப்பேங்கிற மாதிரி பேசி நீதான் என்னை தூண்டி விடுற” என்றான்.

ஸ்ரீ ஏதோ சொல்லப் போக கை காட்டி அவளை பேச விடாமல் செய்தவன், “உன் பிரண்ட்ட்…டுகிட்ட எப்படி நடக்கிறேன்னு பார்த்திட்டு பேசு” என சொல்லி வெளியேறி விட்டான்.

சியாமளனின் வீடு வந்ததும் ஸ்ரீயை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே காரிலிருந்து இறங்கினான் ஜெய். வரவேற்ற சியாமளனின் கையை பிடித்து மிகையாகவே குலுக்கிய ஜெய் அவனை கட்டியணைத்து விலக, லேசான பயத்தோடு பார்த்தான் சியாம்.

“போதுமா, கிஸ் ஏதும் கொடுக்கணுமா?” ஸ்ரீயிடம் தீவிர தொனியில் கேட்டான் ஜெய்.

அதிர்ந்த சியாம் ஓரடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டான். சிரிப்பை அடக்கிக் கொண்ட ஸ்ரீ, “போதும் போதும்” என்றாள்.

சியாமளனை பார்த்து இரு கண்களையும் சிமிட்டி  சிநேக பாவத்தில் லேசாக  சிரிக்கவும் செய்தான் ஜெய். நடப்பது கனவில்லையே என தன் உள்ளங்கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டான் சியாம்.

சியாமளனின் பெற்றோர் வந்து வரவேற்க அவர்களுடன் பேசிக் கொண்டே ஜெய் நடந்து விட்டான். ஸ்ரீயும் சியாமும் ரகசியமாக பேசிக் கொண்டனர். தன்னருகில் மனைவியை காணாமல் நின்று திரும்பிப் பார்த்தான் ஜெய். கவனித்து விட்ட சியாம் சட்டென ஸ்ரீயை விட்டு இரண்டடிகள் தள்ளிப் போய் நிற்க புன்னகைத்த ஜெய் உள்ளே சென்று விட்டான்.

“முன்னாடி எம்மேல உள்ள கோவத்துல உங்கிட்ட அப்போ அப்படிலாம் நடந்துகிட்டார், நீ நார்மலா இரு” என்றாள் ஸ்ரீ.

“சரியான பாரநார்மல் ஆக்டிவிட்டி (அமானுஷ்ய செயல்பாடு) உள்ள ஆள கட்டிகிட்டு என்னை நார்மலா இருக்க சொல்ற” என்றான்.

அவனது தோளில் அடி கொடுத்து, “அவரை நான் மட்டும்தான் திட்டலாம் புரிஞ்சுதா? பிச்சிடுவேன் உன்னை!” என செல்லமாக மிரட்டி விட்டு வீட்டுக்குள் சென்றாள் ஸ்ரீ.

திருமணத்துக்கு அழைப்பு விடுத்து விட்டு அங்கேயே விருந்து சாப்பிட்டனர் ஜெய் தம்பதிகள். பேச்சு வாக்கில் சியாமளனின் அம்மா சுரேகா பற்றி விசாரித்தார். அவரை சியாம் தடுத்து நிறுத்த பார்த்தும் விடவில்லை. மனதில் உள்ளதை கேட்டு விட்டார். ஆமாம், தன் மகனுக்கு சுரேகாவை பெண் கேட்டிருந்தார்.

ஜெய் ஸ்ரீயின் முகத்தை பார்த்தான், அவள் தனக்கு எதுவும் தெரியாது என பார்வையால் கணவனிடம் சொல்லி விட்டு நண்பனை பார்த்தாள். இதற்கு மேலும் விஷயத்தை சொல்லாமல் இருக்க கூடாது என கருதி பேசினான் சியாமளன்.

“அம்மா எனக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க, ஜனாவோட எங்கேஜ்மெண்ட்ல சுரேகாவை பார்த்திருப்பாங்க போல, அவங்களுக்கு பிடிச்சிருக்கு. எனக்கும் பேசிப் பார்க்கலாம்னு ஒரு தாட், ஆனா இன்னிக்கு வச்சு அம்மா கேட்பாங்கன்னு எதிர்பார்க்கல” என்றான்.

ஜெய் என்ன சொல்வதென தெரியாமல் பார்த்தான். அவனது மனவோட்டம் புரிந்தது போல, “சுரேகா பத்தின விவரம் எல்லாம் சியாம் சொல்லிட்டான். உங்களுக்கு தெரியுமா… நானும் இவளும் ஏற்கனவே மேரேஜ் ஆகி டிவோர்ஸ் ஆனவங்க. எங்களுக்கு செகண்ட் மேரேஜ் இது” என கூறி அர்த்தமாக சிரித்தார் சியாமளனின் தந்தை.

ஸ்ரீக்கே இதுவரை தெரியாது.

“எங்கள பத்தின விஷயத்தை இதுவரை யார்கிட்டேயும் சொன்னது இல்லை. சியாமுக்கே பதினஞ்சு வயசு வந்தப்புறம்தான் சொன்னோம். ஒரு முறை வாழ்க்கை தப்பா போனா திரும்ப இன்னொரு வாழ்க்கைக்கு போக கூடாதுன்னு நினைக்கிறவங்க இல்லை நாங்க. அதுக்காக சுரேகாவுக்கு லைஃப் கொடுக்கிறோம்னு எல்லாம் சொல்லிக்கல. எங்களுக்கு அவளை பிடிச்சிருக்கு, மத்தவங்க கண்ணுக்கு குறையா தெரியுற அவ விஷயம் எங்களுக்கு பெருசு இல்லை, சொல்லப் போனா ஒரு பொருட்டே இல்லை. அந்த பொண்ணுக்கும் இவனை பிடிச்சா சொல்லுங்க, மேற்கொண்டு பேசுவோம்” என்றார் சியாமளனின் அம்மா.

சியாமளன் நல்லவன் என்பதில் ஜெய்க்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்போது சுரேகாவை எவ்வித தடையும் இன்றி அவன் மணக்க நினைத்தது அவனை இன்னுமே உயர்த்திக் காட்டியது. அவனது பெற்றோரின் மீதும் மதிப்பும் மரியாதையும் பெருகியது.

ஜெய்க்கு இதில் மனப் பூர்வ சம்மதம்தான், சுரேகாவிடம் பேசி அவளையும் இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். தனிமையில் ஸ்ரீயிடம் அபிப்ராயம் கேட்டான்.

“இது மட்டும் நடந்தா திருச்சியிலேயே தி ஹேப்பியஸ்ட் கேர்ள் சுரேகாவாதான் இருப்பா” என இரு கைகளையும் விரித்து சொன்னவளை முறைத்தான்.

அவனருகில் வந்து, “நீங்க முறைச்சாலும் இதான் உண்மை!” என சொல்லி வெறுப்பேற்றினாள்.

“போடி! தி ஹேப்பியஸ்ட் மேன் ஆன் எர்த் நான்தான். உன் பிரண்டு இல்லை” என சொல்லி சியாமளனின் பெற்றோரிடம் சென்றான்.

தானே பேசி இந்த திருமணத்தை நடத்தி வைப்பதாக உறுதி சொல்லி விட்டுத்தான் மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டான்.

சாதாரண ஒரு சந்திப்பு இத்தனை நிறைவை தரும் என ஜெய், ஸ்ரீ இருவருமே எதிர்பார்திருக்கவில்லை.

மாலையில் கணவனை தங்கையின் பொட்டிக் அழைத்து சென்றாள் ஸ்ரீ. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் இன்னுமே கடைக்கு வந்து கொண்டிருக்கிறாள் மஹதி. வந்தவர்களை வரவேற்றவள் ஸ்ரீக்கு அளவெடுக்க ஆரம்பித்தாள்.

தீபா ஜெய்க்கு அளவெடுக்கத் தொடங்க, “ஏம்மா எனக்கு சிலை வைக்க போறியா?” எனக் கேட்டு தள்ளி நின்று கொண்டான்.

“வைக்கலாம் மாமா, எங்கக்கா கூட குடும்பம் நடத்துற தியாகியாச்சே, தாராளமா உங்களுக்கு சிலை வைக்கலாம். இது வேற, உங்களுக்கு ஸ்பெஷல் ஷெர்வானி டிசைன் பண்ண போறேன், ப்ளீஸ் அவளுக்கு கோஆபரேட் பண்ணுங்க” என்றாள் மஹதி.

“ஆமாம் ரொம்ப பெரிய தியாகிதான் உன் மாமா” என்ற ஸ்ரீ கணவனை இழுத்து தீபாவின் முன் நிறுத்தினாள்.

ஜெய் மறுப்பாக பார்க்க ஸ்ரீயின் கெஞ்சல் பார்வையில் அலுத்துக் கொண்டே நின்றான்.

 ஆனால் தீபா அளவெடுக்கும் போதெல்லாம் கூச்சத்தில் நெளிந்தான். அவனது சட்டைக் காலரை எல்லாம் தொட்டு சரி செய்து அளவெடுத்தாள் தீபா. அவனது கையை பிடித்து மணிக்கட்டை அளவு எடுக்க ஸ்ரீயின் முகம் கறுத்து போனது.

“இன் பண்ணிருக்க ஷர்ட்டை எடுத்து விடுங்க” என்றாள் தீபா.

“ஷெர்வானிக்கு எதுக்கு ஷர்ட் ஹைட்?” எனக் கேட்டான்.

“அக்காவோட வீட்டுக்காரரை அளவில்லாம கவனிக்க போறோம். நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. சீக்கிரம் ஸார்” என்றாள் தீபா.

கடுப்பாக ஸ்ரீயை பார்த்தவன் அவளது வதங்கியிருந்த முகத்தை கண்டு விட்டு என்னவென கேட்டான். ஒன்றுமில்லை என்பதாக தலையாட்டினாள்.