திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின்பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா…! திரு அத்தான் வந்து இருக்கார் பாரு. மாமாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க மாட்டியா…?’’ என்றார் கடின குரலில்.
அவரை முறைத்து பார்த்து விட்டு, “மாமாவுக்கு இப்ப எப்படி இருக்கு.’’ என்றாள் மித்து திருவை நோக்கி. “ம்…! இப்போ பரவாயில்ல.வறேன் மதுமா. யார் மேலையும் எதையும் திணிக்க முயற்சி செய்யாதீங்க. அது வெறுப்பை தான் அதிகப்படுத்தும்.’’ என்றவன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து விருட்டென்று கிளம்பினான்.
“ஒரு மரியாதைக்கு கேக்க சொன்னீங்க. அவன் உங்களுக்கே அட்வைஸ் செஞ்சிட்டு போறான். தேவையா இதெல்லாம் உங்களுக்கு…?’’ என்ற கார்த்திக், “நீ வா குட்டிமா. இவங்களுக்கு மத்தியில நம்மளை வச்சி உருட்டுறதே வேலையா போச்சு.’’ என்றவன் தங்கையோடு வீட்டிற்குள் நுழைந்தான்.
மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டிருந்த திருவின் மனதில், மித்ராவின் அலட்சிய முகபாவமே மீண்டும் மீண்டும் தோன்றி அவனை வருத்தத்தில் அமிழ்த்திக் கொண்டிருந்தது. கார்த்திக்கின் அத்தனை அலட்சிய பாவங்களையும், “போடா..’’ என தட்டி செல்பவனால் மித்ராவை அப்படி கடக்க முடிந்ததில்லை.
சிறு வயதில் இருந்தே அவளை அவனுக்கு மிக பிடிக்கும். தனக்கு மிகவும் பிடித்த, பால்கி அப்பா, மற்றும் மதுமாவின் குட்டி பிரதிபளிப்பாக தான் அவள் பிறந்ததிலிருந்து அவளை கண்டு வந்திருக்கிறான்.
தன் அண்ணன்கள் கார்த்திக்கை வெறுத்த போது சிறு வயதில் காரணமே புரியாமல் அவனும் ஒதுங்கிப் போயிருக்கிறான். ஆனால் உண்மை காரணம் உணர்ந்து கொண்ட போது அந்த உறவு சீர் செய்யும் நிலையை எல்லாம் தாண்டி சென்று இருந்தது.
தன் வயது பையன்கள் ஊர் திருவிழாவில் முறை பெண்களை கேலி பேசி சுற்றும் போது, அவனுக்கு கூட அவளின் நீள பின்னலை பிடித்திழுத்து வம்பு பேச ஆவல் வரும். ஊர்ப் பக்கம் தூரத்து உறவு கொண்ட அத்தை பெண்கள் எல்லாம், அத்தான் என அழைக்கும் போது, அப்படி அழைக்க வேண்டிய முழு உரிமை கொண்ட ஒருத்தி, அந்த வார்த்தையை ஒரு நாள் கூட தன்னை நோக்கி உச்சரித்ததில்லை என்ற நினைவில் ஏக்கம் எழும்.
சிறு வயதில் எப்போதும் அவள் அண்ணனின் கைபிடியில் தான் இருப்பாள். அவன் இல்லாது தனித்து வரும் பொழுதும், தந்தை மடியே தஞ்சம் என இருப்பாள். அவள் அவனோடு பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மித்ரா அவனோடு இயல்பாக பேசிப் பழகி இருந்தால், மற்ற உறவுப் பெண்களைப் போல கடந்திருப்பனோ என்னவோ. அவள் பேசாமலேயே ஒதுங்கி இருந்தது, அவள் மீதான அவன் ஆர்வத்தை சிறுவயது முதலே மண் புதையும் வேர் போல, உள்ளத்தின் அடியாழத்தில் செழித்து வளர செய்திருந்தது.
மித்ரா பூப்பெய்திய போது, திரு அரசின் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாய் இருந்தான். குடும்ப சூழ்நிலையை உள்வாங்கி இருந்த அவன் அப்போதே துரித உணவகம் ஒன்றில் பகுதி நேரம் பணியாற்றி தனக்கான செலவை பார்த்துக் கொண்டதோடு சிறு சிறு குடும்ப செலவுகளுக்கும் கை கொடுத்துக் கொண்டிருந்தான்.
மித்ராவிற்கு தன் வருமானத்தில் எதையேனும் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஆவலில், உணவக முதலாளியிடம் முன் பணம் வாங்கி, அழகான வெள்ளி கொலுசை தேர்வு செய்து, அவர்கள் சீர் செய்யும் தட்டில் வைத்து யார் கவனத்தையும் கவராது அவளுக்கு பரிசளிக்க முயன்றான்.
ஆனால் மதுராவின் பெரியப்பா மகன் சக்கரலிங்கம் நாற்பத்தி இரண்டு தட்டுகள் அடுக்கி, ஊரே வாய் பிளக்க சீர் செய்ததில் இவர்களின் குட்டி தட்டி ஒரு ஓரமாய் முடங்கியது. அதுவும் சக்கரலிங்கம் தன் தங்கை மகளுக்கு தங்க கொலுசுகளை அவள் பாதம் பற்றி அணிவித்த போது, திரு தான் வாங்கி வந்திருந்த வெள்ளி கொலுசுகளை எண்ணி விரக்கதியாய் மனதிற்குள் நகைத்துக் கொண்டான்.
எதிரே அதி வேகத்தில் கடந்த பேருந்து திருவின் நினைவுகளை நடப்பிற்கு திருப்பியது. தலையை உலுக்கிக் கொண்டவன், மருத்துவமனை வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பாட்டு கூடையோடு தன் அன்னை காத்திருக்கும் முதல் தளம் நோக்கி நடந்தான்.
மாரியை அறுவை அரங்கில் இருந்து, தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி இருந்தார்கள். தந்தையை கண்ணாடி தடுப்பின் வழி கண்டு வந்தவன், தாயை உணவுண்ண வைத்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஏனோ அவனுக்கு பசிக்கவே இல்லை. சற்று நேரம் அங்கிருந்த காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அவனின் அலைபேசி ஒலிக்கவும், தவறுதலாக கால்சாராயின் மற்றொரு பக்கத்தில் இருந்த மித்ராவின் அலைபேசியை வெளியே எடுத்திருந்தான்.
ஒரு உச் கொட்டி அதை மற்றொரு கரத்திற்கு மாற்றியவன், தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவன் தங்கை தான் அழைத்திருந்தாள், வீட்டில் இருந்த மற்றொரு சாதாரண அலைபேசியின் மூலம்.
தந்தையின் நலம் குறித்து சுருக்கமாய் தெரிவித்து விட்டு, இன்னும் சற்று நேரத்தில் தாய் வீட்டிற்கு வந்துவிடுவார்கள் என்பதையும் உரைத்துவிட்டு அவன் அலைபேசியை அணைத்த போது பத்து நிமிடங்கள் கடந்திருந்தது.
கையில் இருந்த மித்ராவின் அலைபேசியை ஒரு முறை பார்த்தவன், தன் நண்பனுக்கு அழைத்து, புது அலைபேசி திடீரென இயங்க மறுப்பதாக தெரிவிக்க, அவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு கடைக்கு வர சொன்னான்.
திரு மித்ராவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு கடைக்கு கிளம்பினான். புது ரக அலைபேசிகளுக்கு பெயர் போன அந்த கடையில் இரவு எட்டு மணி தாண்டியும் கூட்டம் அள்ளியது.
வாடிக்கையாளரை கவனித்து கொண்டிருந்த நண்பன், திருவை கண்டதும், “ஒரு நிமிஷம்டா..’’ என சைகை காட்டிவிட்டு, அவருக்கு தேவையான தகவல்களை எல்லாம் கொடுத்துவிட்டு, மற்றொரு விற்பனை பிரதிநிதியிடம் அவரை ஒப்புவித்து விட்டு திருவை நோக்கி வந்தான்.
“என்னடா மச்சான். எப்படி இருக்க.’’ என்று நண்பனின் தோளில் தட்டியவன், “வா.. பின்னாடி ஸ்டாப் ரூம் போகலாம்.’’ என திருவை அழைத்து சென்றான். இருவரும் தங்களுக்குரிய பொதுவான விசயங்களை பேசியபடி அந்த குறுகிய பாதைக்குள் நடந்தனர்.
அங்கிருந்த இருக்கை ஒன்றில் திருவை அமர சொன்னவன், அவனிடமிருந்த அலைபேசியை வாங்கி ஆராய்ந்தான். “புது மாடல் தானே. கீழ எதுவும் விழுந்ததா…?’’ என்றான். “ஆமா… மாமா அப்படித்தான் சொன்னார்.’’ என்றான்.
“சரி…! ஏதாச்சும் சென்சார் லூஸ் கனக்ட் ஆகி இருக்கும். இரு பாக்குறேன்.’’ என்றவன், சில சிறிய கூர்மையான கருவிகள் கொண்டு அந்த அலைபேசியின் பாகங்களை பிரித்தெடுத்தான். நண்பன் வேலையில் கவனமாக, திரு தன் அலைபேசியில் அன்றைய செய்திகளை கவனமுடன் வாசித்துக் கொண்டிருந்தான்.
“சென்சார் இஸ்யூ தான். பாஸ்வோர்ட் இல்லாம உள்ள செட்டிங் மாத்த முடியாது. மொத்தமா ரீசெட் கொடுக்குறேன். போட்டோ வாட்ஸ் அப் எல்லாம் ரெகவர் செஞ்சிக்கலாம். வேற ஏதாச்சும் இம்பார்டன்ட் பைல் இருக்கா போன்ல.’’ என்றான்.
“அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. ஏதாச்சும் இருந்தாலும் ரெகவர் செஞ்சிக்கலாம்.’’ என்றான் திரு. அலைபேசியை சீர் செய்யும் வேலையையும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சம் கற்று வைத்திருந்தான்.
“அப்போ சரி. நான் ரீசெட் போடுறேன். நீ எல்லா பைலும் ரெகவர் செஞ்சிடு.’’ என்றவன் மேலும் சில நிமிடங்கள் அந்த அலைபேசியோடு போராடி மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தான்.
அலைபேசி மீண்டும் ஒளிரவும், “தாங்க்ஸ் மச்சான்.’’ என்றான் திரு. “என்னடா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு எஸ் ஆகலாம்னு பாக்குறியா. ஒழுங்கா சேட்டா கடையில ஒரு சொமொசோ மிக்ஸ் வாங்கி கொடுத்துட்டு போ.’’ என்றான் போலியான மிரட்டலுடன்.
“சரியான அல்பம் மச்சான் நீ. சரி வா, போகலாம்.’’ என்றான் திரு. “இருடா இன்னும் ஒரு ஆபன் அவர்ல கடையை க்ளோஸ் செஞ்சிடுவோம். ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்.’’ என்றவன் மீண்டும் விற்பனை பிரிவிற்கு சென்று தன் பணியை கவனித்தான்.
திரு தான் நிறுத்திய இடத்தில் இருந்து அன்றைய செய்திகளை வாசிக்க தொடங்கினான். பணி நேரம் முடிந்ததும், இருவரும் வெளியே கிளம்பினர். நண்பன் கேட்ட சமோசாவை வாங்கி கொடுத்த, திரு தனக்கு ஒரு பால் இல்லாத தேநீர் சொல்லிக் கொண்டான்.
இருவரும் மீண்டும் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருக்க, திரு தன் தந்தையின் உடல்நிலை, மருத்துவமனை வாசம் அனைத்தையும் சுருக்கமாய் சொல்லி முடித்தான். “இடியட்… இந்த நேரத்துல உங்க மாமா வீட்டு போனை ரிப்பேர் பண்றது ரொம்ப முக்கியமா. நான் வேற உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன். வா அப்பாகிட்ட போலாம்.’’என்று திருவை திட்டி விட்டு, அவனை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
“டேய் அப்பா ஐ.சி.யூல இருக்காரு. நான் அங்க இருந்தாலும் வெளிய தான் உக்காந்து இருக்கணும்.’’ என்று திரு கத்தியதை எல்லாம் அவன் காதில் வாங்கவே இல்லை. இருவரும் மருத்துவமனையை அடைந்து, அவனின் தந்தையை கண்ணாடி தடுப்பின் வழியே கண்டு வந்த பிறகும், நீண்ட நேரம் திருவுடனே இருந்தான் அவனின் பள்ளி நண்பனான சந்துரு.
உணவு வேண்டாம் என்று மறுத்தவனை, அங்கிருந்த சிறிய உணவகத்திற்கு அழைத்து சென்று உண்ண வைத்தவன், கிளம்பும் முன் சில ஆயிரங்களை திருவின் கையில் திணித்தான். “டேய்…! ஹாஸ்பிடல் செலவு எல்லாம் மாமா பார்த்துகிறார். எனக்கு பணம் எதுவும் தேவை இல்லை. ஒழுங்கா நீயே வச்சிக்கோ.’’ என திருப்பிக் கொடுக்க முனைந்தான் திரு.
“உங்க மாமா ஹாஸ்பிடல் செலவு மட்டும் தான் செய்வார். உனக்கு செலவு யார் செய்வாங்க. ஒரு டீ குடிக்க கூட கணக்கு பார்த்துட்டு நீ பட்டினியா இங்க காவல் இருப்பியா. ஒழுங்கா காசை பிடி. அதெல்லாம் நீங்க சர்கார் சம்பளம் வாங்கினதும் திருப்பி தருவியாம்.’’ என்றதும் திரு மௌனி ஆனான்.
திருவின் பள்ளித் தோழன் ஆயிற்றே. அவன் நிலையை உள்ளங்கை கண்ணாடியாக அறிந்து வைத்திருந்தான். “சரி… நான் கிளம்புறேன். நாளைக்கு ஏதாச்சும் வேணும்னா எனக்கு கால் பண்ணு. உனக்கும் சேர்த்து நான் நாளைக்கு லன்ச் எடுத்துட்டு வந்துடுறேன். எங்க அம்மாவோட பூண்டு குழம்பு உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல. மதியம் கடைக்கு வந்துடு. சரியா…’’ என்றவன் விடைபெற்று கிளம்ப நண்பனை அனுப்பிவிட்டு வந்த திரு மித்ராவின் அலைபேசியில் ஏற்கனவே அழிந்து போன தகவல்களை மீண்டும் சேகரிக்க தொடங்கினான்.
தந்தை அலைபேசியை பழுது பார்க்க கொடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது, “அதான் சாட் எல்லாம் உடனுக்கு உடனே டெலிட் செஞ்சிட்டோமே. பார்த்துக்கலாம்.’’ என்று எண்ணிய மித்ரா நிம்மதியாய் உறக்கத்தை தழுவி இருந்தாள்.
நள்ளிரவில் அவள் அலைபேசி கடை பரப்பிய உண்மைகளை நம்ப முடியாமல், உள்ளம் கொதிக்க, தூக்கம் தொலைத்து அந்த அலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு.