இன்னும் சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைந்துவிடுவோம் என்ற நிலையில், கார்த்திக்கின் கோபம் பிருந்தாவின் இயலாமையை அதிகரித்தது. எதிர் எதிர் துருவங்களாய் நிற்கும் இருவரில் யாரின் பக்கம் நிற்பது எனப் புரியாமல் திகைத்தவள், அது ஏற்படுத்திய எரிச்சலோடு, “அண்ணாவுக்கும்  என்னோட ஸ்பேஸ் ட்ராவல் லேப் எக்ஸ் பீரியன்ஸ் ஷேர் செய்யணும்னு சொன்னாங்க கார்த்திக். அவரை மறுபடி எப்ப நேர்ல பார்ப்பேன்னு தெரியாது. அதனால நான் இன்னைக்கு அண்ணா கூட எங்க வீட்டுக்கு போறேன். நாம நாளைக்கு பார்க்கலாம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க கார்த்திக். புரிஞ்சிக்கோங்க. ப்ளீஸ்…’’ என்றாள். 

எரிச்சலில் தொடங்கிய அவள் குரல் கெஞ்சலில் முடியவும், ஒரு கணம் கண்ணை மூடித் திறந்தவன், “ஓகே. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதையே செய்யுங்க.’’ என்றவன் தன் வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினான். 

கார்த்திக் அலைபேசியை வைத்ததும், தனக்குள் வாடியவள், பேருந்து நிறுத்தத்தில் தன் அண்ணனின் மலர்ந்த முகத்தை கண்டதும் தன்னை மீட்டுக் கொண்டாள். ‘வாழ்க்கை எங்கு ஓடி விடப் போகிறது. நாளை காலை அவனை சமாதனப்படுத்திக் கொள்ளலாம்.’ என்று எண்ணியவள் முகத்தில் பூத்த முறுவலோடு தன் அண்ணனை நோக்கி நடந்தாள். 

‘இன்றைக்கு இரவில் கார்த்திக் குறித்தும் பேசி விட வேண்டும்’ என்று  எண்ணியவளிள் திருவை நெருங்கினாள். தங்கையின் கையில் இருந்த பயணப் பொதியை வாங்கிக் கொண்ட திரு, “எப்படி இருக்க குட்டி?’’ என நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, திருவின் அலைபேசி சிணுங்கியது. 

அழைப்பது தாய் என அறிந்ததும் அழைப்பை ஏற்று அவன் காதில் வைக்க, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா?’’ என்ற தாயின் குரல் தான் அவனை வரவேற்றது. முதலில் அதை இலகுவாக ஏற்றவன், “அதை உன் பையனுக்கு ஜில்லா கலெக்டர் போஸ்டிங் கொடுத்தவங்ககிட்ட தான் போய் கேக்கணும்.’’ என்றான் விளையாட்டாக. 

“இந்த கேலி கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. உன் தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. உனக்கு அது நியாபகம் இருக்கா. ஏதோ பால் வாடி பிள்ளையை கைல பிடிச்சிட்டு அலையிற மாதிரி இப்போ என்னத்துக்கு அவளை நீ கையோட கூட்டிட்டு சுத்துற. மது அண்ணி போன் போட்டு அவ்ளோ விசனமா பேசுறாங்க. முதல்ல நீ பிருந்தாவை கையோட கூட்டிட்டு போய் பால்கி மாமா வீட்ல விட்டுட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு வா.’’ என்றார் கட்டளையாய். 

“மா. குட்டிமா எப்பவாச்சும் தான் ஊருக்கே வரா. இன்னைக்கு ஒரு நாள் நைட் நம்ம வீட்ல இருக்கட்டும். நாளைக்கு தானே நிச்சயம்.’’ என்றான் திரு சற்றே கடினப்பட்ட குரலில். 

“முளைப்பாரி போட தானியம் வாங்க, குல தெய்வ கோவிலுக்கு சேலை வாங்க இப்படி எல்லாத்துக்கும் வீட்டு மருமகளா பிருந்தா தான் முன்னாடி நிக்கணும். நீ பாட்டுக்கு அவளை இங்க கூட்டிட்டு வறேன்னு சொல்லிட்டு இருக்க. முதல்ல போய் மாமா வீட்டுல விட்டுட்டு வா. ஒழுங்கா கார்த்திக் தம்பி வந்தப்ப அவர் கூடவே இவ அவங்க வீட்டுக்கு போயிருக்கலாம். ஊர்ல உலகத்துல இல்லாத அதிசய அண்ணன் தங்கச்சிங்க. உங்ககிட்ட மாட்டிகிட்டு பாவம் அவங்க ரெண்டு பேரும். போ… போய் படக்னு விட்டுட்டு வா.’’ என்றவர் அலைபேசியை துண்டிக்க, திரு இறுகிப் போன முகத்துடன் பிருந்தாவை பார்த்தான். 

‘இப்போது என்ன ஆனதோ’ என பிருந்தா தமையனின் முகம் பார்க்க, “கார்த்திக் உன்னை கூட்டிட்டு போக இங்க வந்து இருந்தானா?’’ என அழுத்தமாய் கேட்டான். அந்த குரல் உள்ளுக்குள் பீதியை கிளப்ப, ‘ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் பிருந்தா. 

“இரிடேடிங் இடியட். அவன் கூப்பிட்டு நீ வரலைன்னு சொன்னதும் அம்மாவை தூது பிடிச்சு இருக்கான். இந்த அம்மாவுக்கும் மூளையே இல்ல. நிச்சயம் முடிஞ்சதும் பால்கிப்பாகிட்ட  இதை பத்தி பேச போறேன். இவன் செய்ற அலப்பறைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.’’ என்றவன்  பிருந்தாவோடு கார்த்திக்கின் வீட்டிற்கு கிளம்பினான். 

அத்தனை தூரம் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லியும் தன் அன்னையின் மூலம் நினைத்ததை சாதித்துக் கொண்ட கார்த்திக்கை எண்ணி கோபம் கொண்டாள் பிருந்தா. ‘நேர்ல உனக்கு இருக்குடா மச்சான்’ என கருவிக் கொண்டவள் திருவின் முன் முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டாள். 

உண்மையில் வெண்ணிலாவின் அழைப்பிற்கும் கார்த்திக்கிற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. பிருந்தாவின் வரவை கார்த்திக் மூலம் அறிந்திருந்த மது, மருமகளும், மகனும் சேர்த்து வரும் நொடிக்காய் காத்திருக்க, அரைமணிக்கு ஒரு தரம் மகனுக்கு அழைத்து ‘கிளம்பியாயிற்றா?’ என கேட்டுக் கொண்டே இருந்தார். 

உற்சாகமாய் அதுவரை பதில் கொடுத்துக் கொண்டிருந்தவன், பத்து நிமிடங்களுக்கு முன், பிருந்தாவை அழைத்து செல்ல திரு வந்திருப்பதையும், நாளை அவர்கள் நேரடியாக நிகழ்விற்கு வருவதையும் சொல்லி முடித்தவன், தான் மட்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதையும் அறிவித்தான்.

மகனுக்கும் பிருந்தாவிற்கும் உள்ள நெருக்கத்தை அவன் வார்த்தைகளிலேயே உணர்ந்திருந்தவர், அதுவரை உற்சாக ஊற்றாய் பொங்கி கொண்டிருந்த மகன், நீரற்ற நிலமாய் வாடி பேசியதில் உடனடியாக தன் நாத்திக்கு அழைத்திருந்தார். 

வெண்ணிலாவும் தன் அண்ணியின் மனநிலையை புரிந்து கொண்டு, “இந்த திரு பயலுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை அண்ணி. இருங்க, அவனையே கொண்டு வந்து பிருந்தாவை உங்க வீட்ல விட சொல்றேன். இதுக்கு ஏன் நீங்க இவ்ளோ விசனப்படுறீங்க.’’ என்று நொடியில் மதுவின் கவலை அகற்றினார். 

கார்த்திக் வீட்டிற்குள் நுழையவும், மித்ரா வேகமாய் ஓடி வந்து தமையனை கட்டிக் கொள்ள, பால்கியும் நீரில் பளபளத்த விழிகளோடு மகனை வரவேற்றார். மறுநாள் மாலை நிச்சயம் என்பதால் நெருங்கிய சொந்தங்கள் காலையில் வருவதாக ஏற்பாடாகி இருந்தது. 

ஒரு கரத்தால் மித்ராவை அணைத்திருந்தவன், மறு கரத்தால் பால்கியின் தொப்பையில் லேசாக குத்தி, “வாக்கிங்கு டிமிக்கி கொடுத்துட்டு அம்மாவுக்கு தெரியாம முக்கு கடையில மெதுவடையை முக்குறீங்க போல. தொப்பை நாலு இன்ச் அதிகம் ஆகி இருக்கு.’’ என்றான் ஒரு குறுஞ் சிரிப்புடன். 

மதுரா பால்கியை முறைத்தவாரு, “நல்லா கேளுடா தம்பி. வீட்லயும் பொரிச்சது வறுத்தது மட்டும் அளவில்லாம உள்ள போகுது.’’ என்று குற்றம் சாட்டினார். ‘அடேய் மகனே…! வந்ததுமாடா’ என்று பால்கி கார்த்திக்கை பரிதாபமாய் பார்க்க, அவருக்கு பழிப்பு காட்டினான். 

மகன் தன் இயல்பிற்கு திரும்ப மதுரா வாஞ்சையாய் அவனை பார்த்திருந்தார். அதே நேரம் திரு, பிருந்தாவை அழைத்து கொண்டு அங்கு வந்தான். இவர்களை அங்கே எதிர்பார்க்காத கார்த்திக்கின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. 

“வா திரு. வாம்மா பிருந்தா.’’ என பால்கியும், மதுராவும் இருவரையும் வரவேற்க, மித்ரா, “வாங்க அண்ணி…! வாங்க அத்தான்.’’ என தன் சார்பில் இருவரையும் வரவேற்றாள். கார்த்திக் தன்னிடம் வர மறுத்தவள் தற்சமயம் இங்கே வந்தது எப்படி என்ற திகைப்போடு, விழி அகற்றாது அவளையே பார்த்திருந்தான். 

மதுராவை நேருக்கு நேர் பார்த்த திரு, “பிருந்தாவுக்கு வேலை இருக்குன்னு நேரா இங்க கூப்பிட்டு இருந்தீங்களாம். அம்மா சொன்னங்க.’’ என்றவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றி, “நீங்க நினைக்கிற மாதிரி அவங்க ரிலேசன்ஷிப் நார்மல் கிடையாது மதுமா. பிருந்தாவுக்கு கார்த்திக் மேல பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. இனியும் அது வருமான்னு தெரியல. அதனால இந்த மாதிரி விசயங்களுக்கு அவளை யாரும் கட்டாயப்படுத்தாம இருக்கிறது தான் நல்லது.’’ என்றதும் பிருந்தா விழுக்கென்று நிமிர்ந்தாள். 

“அண்ணா…’’ என்று அவள் மேலே பேசும் முன், “இங்க யாருக்கும் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை  மிஸ்டர் திரு. உங்க தங்கச்சிக்கு பிடிக்காட்டி எப்ப வேணா அவங்க என் வாழ்கையில இருந்து விலகிக்கலாம். அந்த உரிமை அவங்களுக்கு எப்பவும் உண்டு.’’ என்றான் காட்டமாய். 

பிருந்தா திகைத்து போய் அவன் விழிகளை பார்த்தாள். அதை சந்திக்காதவன், “உங்க தங்கச்சிய இங்க தங்க வைக்க உங்களுக்கு பயமா இருந்தா பக்கத்துல நல்ல ஹோட்டல்ல ரூம் போட்டு தறேன். கூட்டிட்டு போங்க. ஏன்னா நான் தான் உங்க எண்ணப்படி பொம்பளை பொறுக்கி ஆச்சே. சான்ஸ் கிடைச்சா உங்க தங்கச்சிகிட்ட மிஸ் பிகேவ் செஞ்சிடுவேன் இல்ல.’’ என்றான். 

அவன் அப்படி சொன்னதும், “கார்த்திக்.” என்ற குரல்கள் நாளா புறங்களில் இருந்தும் ஒருங்கே எழுந்தன. பால்கி சற்றே கடினமாய், “நீ உன்னை அசிங்கப்படுத்தல. உன்னை வளர்த்த எங்க வளர்ப்பை அசிங்கப்படுத்துற கார்த்திக்.’’ என்றார் கண்டிப்பான தொனியில். 

தான் விட்ட வார்த்தைகள் அதிகம் என்று தெரிந்தும் உள்ளே பொங்கும் கோபத்தை அடக்க வழியின்றி இறுகிப் போன முகத்துடன் நின்று கொண்டிருந்தான் கார்த்திக். எத்தனை எத்தனை அழகிய கற்பனைகளோடு தொடங்கிய பயணம். அத்தனையும் நொடியில் கசந்து போனதை எண்ணி அவன் இதயம் வலித்தது. 

இனி தான் பேசாமல் இருந்தால் பிரச்சனைகள் பெரிதாகும் என்பதை உணர்ந்த பிருந்தா, “அண்ணா. ப்ளீஸ்.எனக்கு கார்த்திகை பிடிக்கும். சரியான நேரம் வரும் போது உங்ககிட்ட சொல்லணும்னு நினச்சிட்டு இருந்தேன். உங்ககிட்ட லேட்டா சொன்னதுக்கு சாரி அண்ணா.’’ என்றவள் திருவின் திகைப்பை பொருட்படுத்தாது கார்த்திக்கின் புறம் திரும்பினாள். 

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தும், கார்த்திக் அவள் கண்களை சந்திக்காதிருக்க, “நான் அண்ணா கூட போறேன்னு சொன்னப்ப போன்னு சொல்லிட்டு பின்னாடியே எங்க அம்மாவை வச்சி என்னை இங்க வர வச்சா இப்படித் தான் நடக்கும். அதனால அண்ணா பேசினதுக்கு உங்ககிட்ட நான் சாரி கேக்க போறது கிடையாது. ஏன்னா ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பின பிருந்தாவுக்கு உங்க கூட வாழப் போற எண்ணம் இருந்தது இல்ல. உங்க கூட வாழப் போற விசயத்தை எங்க அண்ணாகிட்ட ஷேர் செய்ய நீங்க எனக்கு டைம் தரல. அதனால இதெல்லாம் உங்க தப்பு தான்.’’ என்றாள்.  

அப்போதும் கார்த்திக் நிமிரவே இல்லை. திருவின் வார்த்தைகளில் இருந்த அலட்சியம் அவனை மிகக் கடுமையாக பாதித்திருந்தது. பிருந்தாவின் உனக்கு என்னை பிடிக்கும் என்ற மொழிகள் கூட அதை ஆற்றுப்படுத்தவில்லை. 

அவன் தற்சமயம் மலை இறங்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவள், மதுராவையும் பால்கியையும் நோக்கி, “சாரி அத்தை. சாரி மாமா…! அண்ணாகிட்ட முன்னாடியே எங்களை பத்தி சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்தே இருக்காது. சாரி.’’ என்றாள் உளமாற. 

மருமகளின் வருத்தத்தில் தன்னிலை மீண்ட மதுரா, “அவனுங்க கிடக்குறாங்க லூசு பசங்க. நீ வாம்மா. நான் தான் உங்க அம்மாகிட்ட பேசி நிச்சய வேலை கவனிக்க உன்ன இங்க கொண்டு வந்து விட சொன்னேன். பங்கசன் வேலை தலைக்கு மேல கிடக்கு. சாப்பிட்டு மண்டபத்துக்கு எடுத்துட்டு போக வேண்டிய லிஸ்டை ரெடி பண்ணுவோம்.’’ என்றபடி பிருந்தாவை கையோடு அழைத்து சென்றார். 

‘போகிற போக்கில் நீ இங்கு வர காரணம் நான் என் மகனல்ல’ என்ற செய்தியை அவர் காற்று வாக்கில் வீசி விட்டு செல்ல, பிருந்தா கார்த்திக்கின் மேல் பழி சுமத்திய தன் மடத்தனத்தை நினைத்து நொந்து போனாள். 

எதிரும் புதிருமாய் நின்ற தமையனையும், தன்னவனையும் என்ன செய்வது எனப் புரியாது மித்ரா பார்த்திருக்க, ‘நீ உள்ளே வா’ என மகளை கண் ஜாடை காட்டி அழைத்தவர் தானும் அவளோடு சமையலறைக்குள் நுழைந்தார். 

திரு கார்த்திக்கை முறைத்து பார்க்க, கார்த்திக்கும் திருவின் பார்வையை தாங்கி நின்றான். அவனை நெருங்கிய திரு, “நீ என்ன செஞ்சி என் தங்கச்சி மனசுல இடம் பிடிச்சன்னு தெரியல. அவளும் அவ கனவும் எனக்கு ரொம்ப முக்கியம். ரெண்டுக்கும் ஏதாவது பிரச்சனை கொடுத்த உனக்கு முதல் எதிரி நான் தான்.’’ என்றவன் அங்கிருந்து கிளம்ப, “டேய் மச்சான்…!’’ என்ற குரலில் அவனை நிறுத்தினான்.

திரு திரும்பி பார்க்க, “உனக்கு கல்யாணம் முடிஞ்சாலும் என்னை மாதிரியே ஆறு மாசம் பஸ்ட் நைட் கிடையாது. இது நான் உனக்கு விடுற சாபம். என் தங்கச்சியை சின்ன வயசுல கைலையே வச்சிட்டு சுத்தின மாதிரி என் கூட வார்ல்ட் கப் மேட்ச் பார்க்க வான்னு கூட்டிட்டு போகப் போறேன். அப்போ தான் என் கஷ்டம் உனக்கு புரியும்.” என்றவன் கைகளை முன்னால் நீட்டி சுடுவதை போல ஒரு சைகையை காண்பித்து விட்டு படியேறினான். 

‘சொல்றதை செய்வானோ’ என்று திருவின் உள்ளே ஒரு குரல் ஒலித்தாலும், ‘இவனை மாதிரி வாழ்கைன்னு ஆனதுக்கு அப்புறம் வந்த காதலா என்னுது. வாழ்க்கையே அவ தான்னு வந்தது. பார்த்துடலாம். நானா அவனான்னு.’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன், தன் வருங்காலம் கொண்டவளை தேடிப் போனான். 

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் தன் வாழ்வில் நிகழ இருந்ததை திரு அப்போது அறிந்திருக்கவில்லை. 

பால் வெளி வளரும்.