அந்த நொடி முதல் மித்து இப்படித்தான் முகத்தை மூன்றடிக்கு தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். தன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளை, “ஏய்… நீ என் கூட இருந்தது வெறும் ஆறு மாசம் தான் மித்து. ஆனா உங்க அப்பா அம்மா கூட 24 வருசமா இருக்க. அப்போ அவங்களை விட்டுட்டு என் கூடவே இருக்க உனக்கு சம்மதமா’’ என அவளை சீண்டினான்.
“அதெல்லாம் முடியாது. அவங்களும் தான் வேணும்.’’ என்றாள் மித்து முகத்தை நிமிர்த்தாமல். “அப்போ என்னை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்றியா?’’ என்றான். “உங்களை யாரு வீட்டோட மாப்பிள்ளையா வர சொன்னது. நான் வேணும்னா என் குடும்பத்தோட மருமகளா உங்க வீட்டுக்கு வந்திடுறேன்.’’ என்றாள்.
திருவின் உடல் மொழியில் அவன் சிரிக்கிறான் என்பதை உணர்ந்த மித்து நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள். “சரிங்க மேடம். எழுந்து முகத்தை துடச்சிட்டு உங்க பேகிங் வேலையை தொடருங்க. மாமா நாளைக்கு சாயங்காலம் வந்திடுவாங்க.’’ என்றபடி எழுந்து நின்றான்.
அவனை விடாது முறைத்தவள், “உங்களுக்கு என் மேல பாசமே இல்லை அத்தான்.’’ என்று முணகியபடி மீண்டும் தன் பணியினை தொடர்ந்தாள். அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளின் வலது கன்னத்தை வலுவாய் கடித்து வைத்தவன், அங்கிருந்து விலகிட, “அத்தான்” என அலறியவள் அவன் தலை மறைந்ததும் தனக்குள் மௌனமாய் சிரித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் மாலை பால்கியோடு, மதுராவும் தங்கள் வாகனத்தில் வந்து இறங்கிய போது, மனதில் இருந்த புழுக்கங்கள் நீங்கி மித்து தன்னுடைய பெற்றவர்களை அணைத்துக் கொண்டாள். திரு அந்த காட்சியை வாயில் அடக்கிய புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
மதுரா மகளை கண்டதும், தான் வழமையாய் பாடும், “என்ன நீ இவ்ளோ இளைச்சிட்ட. ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? இதுக்கு தான் உன்னை விநாயகா மிஷன் யுனிவர்சிட்டில ஜாயின் செய்ய சொன்னேன். ஒழுங்கா வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எங்க கூடவே இருந்து இருக்கலாம்.’’ என்ற பல்லவியை பாட தொடங்கினார்.
இது வழமையாய் தாய் பாடும் புராணம் என்பதால், “அம்மா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? நானே என்னோட பேசிக் வெயிட்ல இருந்து மூணு கிலோ ஏறிட்டேன்னு கவலையில இருக்கேன். உங்களுக்கு கிண்டலா இருக்கா? முதல்ல உங்க கண்ணை கொண்டு போய் ஒரு நல்ல கண் டாக்டர்கிட்ட காட்டணும்.” என்றாள் கடுப்பாய்.
மகளும், அன்னையும் அடித்துக் கொள்வது எப்போதும் வழமை என்பதால், பால்கி இவர்களின் செல்ல சண்டையை ஒரு புன்னகையோடு பார்த்திருந்தார். “பெத்தவ கண்ணை விட பெரிய எடை மிசின் எதுவும் இல்லைடி. பாரு இந்த சுடி கை கூட எவ்ளோ லூசா இருக்குன்னு.’’ என்று மதுரா விடாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என தன் வாதத்தில் நின்றார்.
அதோடு மித்துவின் சுடிதார் கைப் பகுதியில் தன் ஒற்றை விரலை நுழைத்து காட்ட, மித்துவிற்கு திருவின் முன் அவரின் இந்த செய்கையில் முகம் சிவந்து போனது. “மா… போதும். ஆமா நான் ஒல்லி தான் ஆயிட்டேன். வீட்டுக்கு போனது அண்டா அண்டாவா வடிச்சி போடுங்க. மாயாபஜார் படத்துல வர கடோத்கஜன் மாதிரி எல்லாத்தையும் பாத்திரத்தோட முழுங்கிடுறேன். சரியா?’’ என்றாள் கடுப்புடன்.
மகளின் வாதத்தில் சற்றே மலர்ந்து சிரித்த மதுரா, “உங்க பாட்டி கூட உன்னை பழைய படம் பாக்க விட்டது ரொம்ப தப்பா போச்சு. நல்லா எடுக்குற எக்ஸாம்பில்ஸ்.’’ என்றவர் திரும்பி திருவிடம் தன் பேச்சை தொடர்ந்தார்.
இப்போதெல்லாம் மதுரா அதிகமாய் திருவிடம் பேசுவதில்லை. பால்கி திருவிடம் மித்துவை மணந்து கொள்ள சொல்லி கேட்டு அவன் மறுத்துவிட்டான் என தெரிந்ததில் இருந்து அவனிடம் பழையபடி உரிமையாய் பேச மனம் ஒப்பவில்லை.
மகளை கூட திருவின் இருப்பிடத்தில் தங்க வைக்க தயக்கம் இருந்தது. பால்கி தான் அவளை எப்போதும் கவனித்து கொண்டே இருக்க ஒரு நம்பிக்கையான ஆள் அவசியம் என்று சொல்லி மதுராவை சமாதானம் செய்தார்.
எப்போதும் போல ‘வேலை எப்படி செல்கிறது. வீட்டில் அனைவரும் சௌக்கியமா?’ என்பதை போன்ற பொதுப்படையான பேச்சை முடித்துவிட்டு, மதுரா இரவு நேர சமையலை கவனிக்க சென்றார்.
பால்கி திருவின் அருகில் அமர்ந்து சாமானிய மக்களின் பிரச்சனை முதல் அரசியல் வரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். பிருந்தாவும், கார்த்திக்கும் கூட அவர்களின் கலந்துரையாடலில் வந்து சென்றனர்.
பணியாளர்கள் உதவ, மதுரா, மித்ராவிற்கு மிகப் பிடித்த, பன்னீர் பட்டர் மசாலாவும் சப்பாத்தியும் இரவு உணவாக சமைத்து முடித்தார். இரவு உணவு அமைதியாக கழிய, மித்து தன் உணவினை அள்ளி எடுத்து உண்ணும் திருவின் கரங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையின் பொருள் புரிந்தாலும், அந்தப் பக்கம் திரும்பாமல் கடமையே கண்ணாக திரு தன் சப்பாத்திகளை உண்டு கொண்டிருந்தான். அவன் தன் பக்கம் பார்வையை திருப்ப போவதில்லை என்று உணர்ந்த மித்து சிறு உதட்டு சுழிப்புடன் தன் உணவை கொறிக்க தொடங்கினாள்.
எப்போது தங்கள் வீட்டில் இதை சமைத்தாலும், கார்த்திக்கிற்கும் அவளுக்கும் யார் அதிக பன்னீரை எடுத்து உண்பது என்பதில் பெரிய போட்டியே நடக்கும். பால்கி தன் தட்டில் இருக்கும் பன்னீரையும் மகளுக்கு தாரை வார்த்து அவளை போட்டியில் வெல்ல வைப்பார்.
அந்த அளவு அவளுக்கு பிடித்த உணவு வாயில் சுவையற்ற அவலாக அரைபட்டு கொண்டிருந்தது. இரவு உணவு முடிந்ததும், வரேவேற்பறையில் இருந்த சொகுசு நாற்காலியில் நால்வரும் அமர்ந்தனர்.
மதுரா, திருவைப் பார்த்து, “என்னடா… எப்போ கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கே. உனக்கு வயசு ஏறிட்டே போகுது இல்ல. ஒரு வாரம் முன்ன கோவில்ல உங்க அம்மாவை பார்த்தப்ப கூட புலம்பிட்டு இருந்தாங்க. உனக்கு என்ன பிரச்சனை. உங்க அம்மா பாக்குற பொண்ணை எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கியாம்.’’ என்றார்.
அவரை பார்த்து மையமாய் புன்னகைத்து வைத்தவன், “செய்யணும் மதும்மா.’’ என்றான் ஒரே பதிலாய். “சீக்கிரம் சட்டு புட்டுன்னு ஒரு முடிவை எடுப்பா. உங்க அம்மா ரொம்ப பாவம். இப்போ நீ அதிகமா பேசுறது இல்லைன்னு வேற வருத்தப்பட்டுட்டே இருக்காங்க. புகழ் பிரச்சனை இப்போ தான் கொஞ்சம் ஓஞ்சி இருக்கு. நீயாவது உங்க அம்மா, அப்பா பாக்குற பொண்ணை கல்யாணம் செஞ்சி அவங்க மனசை குளிர வை.’’ என்று மதுரா பேசிக் கொண்டிருக்க, மித்ரா புரையேறி இரும்ப தொடங்கினாள்.
அருகிருந்த பால்கி தலையை தட்டும் முன் அவர்கள் இருவரையும் கடந்து, அவளின் தலையை மென்மையாய் தட்டிக் கொண்டிருந்தான் திரு. அருகிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அதை அவள் குடித்து முடிக்கும் வரை மற்ற இருவரும் அவன் கண்களுக்கு தெரியவே இல்லை.
அவளின் இருமல் மட்டுப்படவும் தான் பால்கியும், மதுராவும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், “யாரோ நினைக்கிறாங்க போல…’’ என்ற மழுப்பி விட்டு, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. காலைல பார்க்கலாம் மதுமா. பாய் பால்கிப்பா.’’ என்றவன் தன் அறைக்குள் அடைந்து கதவடைத்துக் கொண்டான்.
மதுராவும், பால்கியும் பொருள் பொதிந்த பார்வையை பகிர்ந்து கொண்டனர். மூடிய அவன் கதவுகளை பார்த்துக் கொண்டிருந்த மித்து, பின் மெதுவாய், “எனக்கும் தூக்கம் வருதும்மா. படுகிறேன்.’’ என்று தன் அறைக்குள் சென்று கதவடைத்தாள்.
அவர்கள் இருவரும் உறங்கிய பின்பும், பால்கியும், மதுராவும் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டே, உறங்க சென்றனர். அடுத்த நாள் காலை வழமையாய் புலர்ந்தது. தன் அறையில் இருந்து வெளியே வந்த மித்து, “அத்தான் டீ…’’ என்றபடி சமையலறை நுழைய அங்கிருந்த தாயை கண்டு கனவு கலைந்தவள் போல விழித்தாள்.
“உன் டீ கூட நீ போட்டுகிறது இல்லையா?’’ என மதுரா மகளை கண்டிப்பாய் பார்க்க, “அதுவந்தும்மா… அது…’’ மித்து பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும் போதே, “மார்னிங் எப்பவும் எல்லாருக்கும் நானே டீ போட்டு ப்ளாஸ்க்ல எடுத்து வச்சிடுவேன் மதுமா. எனக்கு அடுத்தவங்க போடுற டீ அவ்ளோ சேடிஸ்பேக்சனா இருக்காது.’’ என்றபடி ஜாகிங் உடையில் அவர்களுக்கு பின் வந்து நின்ற திரு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
மகளையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தவர், “சரிதான்… நான் போடுற டீ இன்னைக்கு குடிப்பியா இல்ல நீயே போட்டுக்க போறியா?’’ என்றார் மதுரா.
“இன்னைக்கு ஒரு நாள் தானே. நீங்களே போட்டு வையுங்க. குளிச்சிட்டு வந்திடுறேன்.’’ என தன் அறை நோக்கி சென்றான் திரு. தேள் கொட்டிய திருடன் போல அதே இடத்தில் நின்றிருந்தாள் மித்து.
காலை உணவிற்கு பின், மித்து தன் பொருட்கள் அடங்கிய பைகளை எல்லாம் வரவேற்பறையில் கொண்டு வந்து அடுக்கி கொண்டிருந்தாள். பால்கி அதை தங்கள் வாகனத்திற்கு இடம் பெயர்த்து கொண்டிருந்தார்.
அலுவலகத்திற்கு கிளம்பி நின்றிருந்த திரு, “இன்னும் ரெண்டு நாள் இங்க தங்கி இருந்துட்டு போகலாமே.’’ என பொதுப்படையாய் இருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தான். “வீட்ல நிறைய வேலை இருக்குப்பா.’’ என மரியாதையாய் மறுத்துக் கொண்டிருந்தார் மதுரா.
“சிதம்பரம் தில்லை நடராஜரை பார்த்துட்டு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம். உனக்கு டைம் இருந்தா நீயும் வறியா?’’ என கேட்டார் மதுரா. தன் கைகடிகாரத்தை ஒருமுறை திருப்பி பார்த்தவன், “கண்டிப்பா வறேன் மதுமா.’’ என்றிருந்தான்.
காலை நேர தரிசனத்தில் பெரிதாய் கூட்டமில்லை. நடராஜரை தரிசித்து முடித்து வெளியே இருந்த கல் மண்டபத்தில் அமர்ந்த போது பால்கி பேச்சை துவங்கினார். “மித்துவுக்கு ஒரு வரன் தகஞ்சு வந்து இருக்கு திரு. பையன் குறை சொல்ல முடியாத தங்கம். வர வெள்ளிக் கிழமை ஒப்பு தாம்பூலம் நம்ம குல தெய்வ கோவில்ல வச்சி மாத்திடலாம்னு இருக்கோம்.’’ என்றவர் மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, அவன் காதில் எதுவும் ஏறவில்லை.
மித்ரா அதிர்ந்து போய் அமர்ந்திருக்க, “பாப்பாகிட்ட சம்மதம் கேக்காம… இவ்ளோ அவசரமா…’’ என்று திரு தடுமாற, “அவகிட்ட கேட்டு செய்ற சூழலை அவ எங்களுக்கு எங்க கொடுத்தா. எது சொன்னாலும் வேண்டாம் வேண்டாம்னு பிடிவாதம். இந்தப் பையனை பிடிக்காதுன்னு சொல்லவே மாட்டா. ஏன்னா பையன் அவங்க அப்பா செலக்சன்.’’ என்றார் மதுரா பெருமிதமாய்.
மித்ரா நீர் நிறைந்த விழிகளோடு, பால்கியையும், திருவையும் மாறி மாறிப் பார்த்தாள். திருவிற்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. அதற்குள் பால்கி, “சரி நாங்க கிளம்புறோம். முடிஞ்சா லீவ் போட்டுட்டு வாடா. கார்த்திக் இப்போ டெஸ்ட் சீரிஸ்ல இருக்கான். வர முடியாது. வீட்டுக்கு அடுத்த பொறுப்பான பையனா நீ தான் எல்லாத்தையும் முன்ன இருந்து நடத்தணும்.’’ என பேசிக் கொண்டே செல்ல திரு தலை அசைக்க கூட மறந்து நின்றிருந்தான்.
காதலிப்பதை விட, காதலை பிறர் முன் ஒத்துக் கொண்டு அதற்காய் போராடுவது மிகப் பெரிய கடினமான விஷயம் என்பதை திரு உணர்ந்த தருணம் அது. அவள் அதிர்வில் இருந்து வெளி வரும் முன்னே, மித்துவை கரம் கொடுத்து எழும்பிய பால்கி, “மறக்காம வந்துடு திரு.’’ என்றபடி மகளை கரம் பிடித்து தன்னோடு நடத்தி சென்றார்.
கண்ணீர் உறைந்த விழிகளில் ஏக்கத்தோடு தன்னை திரும்பி திரும்பி பார்த்து செல்லும் மித்துவின் பிம்பம் மெல்ல மெல்ல அவன் கண் தேங்கிய கண்ணீரால் கலங்கி பின் முழுதாய் மறைய தொடங்கியது.