‘ராக்கெட் சயின்ஸ் இவ்ளோ சிம்பிளா’ என்று வியந்தபடி மித்து அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து கைகளை தட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தாள். வித விதமான செயல்முறை பயிற்சிகள் முடிந்ததும், செயல்முறை வகுப்புக்கு தானாக முன் வந்த சில மாணவர்களை பாராட்டி சிறப்பு பரிசாக எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் நன்றி உரை நவில விழா சிறப்பாக முடிந்தது. அதன் பிறகு அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் இவர்களுக்கான மதிய உணவினை தயாரித்து வைத்திருக்க, திருசகஜமாய் அவர்களோடு பாயில் அமர்ந்து பசியாறினான்.
மித்து மற்ற குழுவினர்களோடு இணைந்து பந்தி பரிமாற உதவினாள். அனைவரும் உண்ட பின் பரிமாறியவர்கள் பபே முறையில் தங்களுக்கான உணவினை தாங்களே பரிமாறிக் கொண்டு பசியாறினர்.
அங்கிருந்த இளைய தலைமுறையிடம் இருந்த உற்சாக மின்னல் கொஞ்சம் கொஞ்சமாய் மித்துவிற்குள்ளும் இறங்கி இருந்தது. உணவு உண்ட பின் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை மினிவேனில் ஏற்றி முடித்து அவர்களும் அந்த வேனில் பயணிக்க, அவர்களோடு கழித்த ஐந்து மணி நேரத்திலேயே நட்பொன்று அரும்பியதை உணர்ந்தாள் மித்ரா.
அவர்கள் முன்னே கிளம்பி செல்ல, அதன் பிறகு இருவரின் பயணமும் இருசக்கர வாகனத்தில் தொடங்கியது. வரும் போது இருந்த ரசிக்கும் மனநிலை சற்றே பின் வாங்கி இருக்க, அத்தனை நேரம் தன் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை திருவை நோக்கி வீசினாள் மித்து.
“உங்களுக்கு ஆஸ்ட்ரோ சயின்ஸ் இவ்ளோ பிடிக்கும்னா உங்க கேரியரா நீங்க ஏன் அதை சூஸ் செய்யல?’’ சற்று நேரம் அவளின் கேள்விக்கு திரு எந்த மறுமொழியும் கூறவில்லை. இனி அவன் வாய் திறக்கப் போவதில்லை என மித்து நினைத்த கணமொன்றில் அவன் தன் எண்ணங்களை பகிர தொடங்கினான்.
“நினைச்சதை எல்லாம் தேர்ந்தெடுக்குற வாய்ப்பை கடவுள் எல்லாருக்கும் கொடுக்குறது இல்ல மித்து. அப்படி அவர் அள்ளி அள்ளி கொடுக்குற ஆளுங்க தனக்கு என்ன வேணும்னே தேடுறது இல்ல.’’ என்றான்.
அவனின் குரலில் இருந்த ஏதோவொன்று அவளை உசுப்ப, “எதுக்கு அப்படி சொல்றீங்க…? எங்க அண்ணாவுக்கு கிரிக்கெட் பிடிக்கும். இப்போ அதான் அவன் ப்ரோபசன்.’’ என்றாள் வேகமாய்.
வண்டியை அருகிருந்த மர நிழலில் நிறுத்தியவன், திரும்பி அவளை கூர்ந்து பார்த்தான். தன்னை ஏன் இப்படி ஆழ்ந்து பார்க்கிறான் என புரியாத மித்து, அவன் பார்வையை தாங்கி நிற்க, கொஞ்சமும் தன் பார்வையின் வீச்சை குறைக்காமல், “சரி உங்க அண்ணனுக்கு பிடிச்ச விஷயம் கிரிக்கெட். உனக்கு உன் வாழ்க்கையில பிடிச்ச விஷயம் எது மித்ரா?’’ என்றான்.
இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று மனதிற்குள் எண்ணியவள், “எனக்கு பீபிள்ஸ்க்கு சர்வ் பண்றது தான் ரொம்ப பிடிக்கும். அதோட டாக்டர் ஆகி தான் அதை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. அதனால தான் அடுத்த ஆப்சன்ல இருந்த பிசியோதெரபிய சூஸ் செஞ்சேன். நான் எம்.பி.பி.எஸ் படிக்கலைன்னு குத்தி காட்றீங்களா அத்தான்.’’ என்றாள் மித்து வேகமாய்.
அவளை பார்த்து மறுப்பாய் தலை அசைத்தவன், “உனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் பிசியோதெரபி இல்ல. உன்னவிட எனக்கு அது நல்லா தெரியும். அந்த விசயத்தை செய்யும் போது, நேரம் போறது உனக்கு தெரிய கூடாது. உன்னை மறந்து நீ அந்த விசயத்துல மூழ்கி போகணும். எவ்ளோ நேரம் தொடர்ந்து அந்த வேலையை செஞ்சாலும் நீ சோர்வாவே உணர கூடாது. இதெல்லாம் நீ வார்ட் டூட்டில இருக்கும் போது பீல் செஞ்சி இருக்கியா..?’’ என்றான்.
சற்று நேரம் சிந்தித்து பார்த்தவள், “ஜாப்னு வந்துட்டா நான் ரொம்ப டெடிகேடிவ் பர்சன். ஆனா நீங்க சொல்ற மாதிரி நேரம், காலம் மறந்து எல்லாம் வேலை செஞ்சது இல்ல. ஏன்னா நான் ஒரு மனுசப் பிறவி. எனக்கு பசி, தூக்கம், சோர்வு இதெல்லாம் வரும்.’’ என்றாள்.
அவளை பார்த்து மென்மையாய் சிரித்தவன் , “உங்க காலேஜ் கல்சுரல்ஸ்க்கு நாலு மணி நேரம் இடைவிடாம உக்காந்த இடத்துல நீ ஒரு ஸ்கிரிப்ட் எழுதின நியாபகம் இருக்கா? அப்போ தண்ணி குடிக்க கூட நீ எழுந்துக்கல.’’ என்றான்.
முகத்தில் தோன்றிய குழப்ப குறியோடு அவனைப் பார்த்தவள், “எழுத எனக்கு பிடிக்கும் அத்தான். ஆனா அது எப்படி என்னோட ப்ரோபசன் ஆக முடியும். என்னோட ஹாபியும், ஜாபும் என்னால குழப்பிக்க முடியாது. ரைட்.’’ என்றாள் குரலில் தோன்றிய இறுக்கத்துடன்.
“சரி தான். ஹாபியும் ஜாபும் ஒண்ணா ஆக முடியாது. ஆனா இது ரெண்டையும் ஒரு மையப் புள்ளியில இணைக்கிறவங்க வாழ்கையில சக்சஸ் புல் பீபிளா இருப்பாங்க. ஜப்பான் மொழியில இக்கிகய்னு ஒரு வார்த்தை இருக்கு. அதுக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா..?’’ என்றான்.
அவள் மறுப்பாய் தலை அசைக்க, “தினம் தினம் நாம வாழப் போற வாழ்க்கையோட அர்த்தம் தான் இக்கிகய். அவங்க சின்னதா ஒரு வேலை செஞ்சா கூட ஆத்மார்த்தமா, முழு அற்பணிப்போட அந்த வேலையை செய்வாங்க. அதுல தான் அவங்க வெற்றியே இருக்கு.’’ என்றான்.
“நீங்க ஏதோ சொல்ல வறீங்கன்னு புரியுது. ஆனா முழுசா புரியல. எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா ப்ளீஸ்.’’ என்றாள்.
மறுபடி அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பின் தொலை தூர மலை முகட்டில் பார்வையை பதித்தவன், “நீ முன்னாடி சொன்ன மாதிரி என்னோட இக்கிகய் ஒரு ஆஸ்ட்ரோ சயின்டிஸ்ட் ஆகுறது இல்ல மித்து. ஆயிரக்கணக்கானவங்களை ஆஸ்ட்ரோ சயின்டிஸ்ட் ஆக்குறது.’’ என்றான்.
அவன் பதிலில் ஆச்சர்யமடைந்த மித்து அவனை விழி அகலாது பார்க்க, “நான் கூட முதல்ல அதை உணரலை மித்து. எங்க குடும்பம் இருந்த சூழல்ல, எப்பவும் எங்களை கீழ பார்கிறவங்க முன்னாடி, அதிகார பலத்தோட வந்து நிக்கணும்னு தான் நான் சிவில் சர்வீஸ் சூஸ் பண்ணேன். ஆனா எனக்குள்ள இருந்த ஆஸ்ட்ரோ கனவை நான் என் தங்கச்சி கண்ல விதைச்சேன். அந்த கனவு நிஜமான அந்த நிமிசத்துல அதுவரைக்கும் நான் அடைஞ்ச எந்த சந்தோசமும் அதுக்கு நிகர் இல்லைங்கிறதை போல, இதயத்தை முழுக்க அடைச்ச மாதிரி ஒரு சந்தோச உணர்வு. நான் சிவில் சர்வீஸ்ல செலக்ட் ஆனப்போ கூட அவ்ளோ சந்தோசத்தை உணரலை. அப்போ எல்லாம் இக்கிகய் அப்படிங்கிற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் கூட தெரியாது.’’ கனவில் உரையடுபவன் போல கண்கள் மிளிர பேசிக் கொண்டிருந்தவனை வியந்து உள் வாங்கிக் கொண்டிருந்தாள் மித்து.
“அதுக்கு அப்புறம் என்னோட சிவில் சர்வீஸ் ட்ரைனிங் அப்போ எங்க கோச் ஒருத்தர் அந்த புக்கை எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம்தான், என் வாழ்நாளோட நோக்கம் எனக்கு புரிஞ்சது. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசத்தையும், சமூகத்துக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் கொடுக்க போறது என்னோட ஆஸ்ட்ரோ சயின்ஸ் இன்ட்ரஸ்ட்.” என்றவன் இடறிய தன் குரலை செருமி நிலைபடுத்திக் கொண்டான்.
மித்துவின் காதுகள் தன் சொற்களில் கவனமாயிருப்பதை உணர்ந்து, “இதை முடிஞ்ச அளவு சின்ன சின்ன கிராமத்துல இருக்க குழந்தைகள்கிட்ட கூட கொண்டு போய் சேர்க்கணும்னு நினச்சேன். நம்ம குழந்தைகள் ஜாமென்ட்ரி பாக்ஸ்ல ராக்கெட் கனவுகளை சுமக்க வைக்கனும்னு நினச்சேன். என்னைப் போல இன்ட்ரஸ்ட் இருக்க டீமை பேஸ் புக்ல தேடினேன். அவங்க தான் இன்னைக்கு நீ மீட் செஞ்ச என் டீம். கடந்த ஒரு வருசமா பத்து ஸ்கூல்ல இதுவரை வொர்க்ஷாப் கண்டக்ட் செஞ்சி இருக்கோம். நாம நல்ல விசயங்களை முன்னெடுக்கும் போது இயற்கை வழிகாட்டும்னு சொல்லுவாங்க. இந்த வொர்க் ஷாப் ஆரம்பிக்கணும்னு நினச்ச முதல் நிமிசத்துல இருந்து நான் அதை உணர்ந்துட்டு இருக்கேன்.’’ நீண்ட சொற்பொழிவை ஆற்றி முடித்த ஆன்மீகவாதி போல திரு மெளனமாக இருக்க, மித்து மெல்ல நெருங்கி அவன் தோளை தொட்டாள்.
இத்தனை நேரம் மூழ்கி இருந்த கனவுலகில் இருந்து விழித்து கொள்வதை போல திரு மெல்ல பார்வையை மித்துவை நோக்கி திருப்பினான். “உங்க நோக்கம் எல்லாம் சரி தான். ஆனா ஏன் கவர்மென்ட் ஸ்கூல்ஸ் மட்டும்?’’ என்றாள்.
“இப்போ தானே எங்க ட்ராவல் ஸ்டார்ட் ஆகி இருக்கு. எங்க எல்லாம் ஆஸ்ட்ரோ சயின்ஸ் பத்தி கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாம இருக்கோ… அங்க தான் எங்க விண்மீன்கள் ஒளிரும்.’’ என்றான்.
ஆம் அவர்கள் குழுவின் பெயர் கூட ‘ஸ்டார் மேக்கர்ஸ்’ என்று இருந்ததை, குழுவின் பதாகையில் கண்டிருந்தாள். அவன் தோளில் தட்டியவள், “உங்களை நினச்சு ரொம்ப பெருமையா இருக்கு அத்தான்.’’ என்றாள்.
தட்டிய அவள் கைகளை பற்றிக் கொண்டவன், “நீ என்னை பெருமையா பார்க்கணும்னு நான் இதை சொல்லலை மித்து. நான் உணர்ந்த அதே சந்தோசத்தை நீ உணரனும். அதுக்கு நீ உன்னோட இக்கிகையை தேடணும்.” என்றான்.
புதை மணலிலும் முட் கூடுகளாக…!’’ என்ற அவளின் கவிதையை ரசித்து கூற, மித்துவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்து கொண்டே போனது.
“அத்தான்…’’ என்று அவள் தன் மகிழ்வின் பிரதிபலிப்பை கண்களில் காட்ட, “சகின்னு சுத்தினா இந்த சாக்கு மூட்டையை என்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியாதா..?’’ என திரு கிண்டலாய் மொழிந்தான்.
அத்தனை நேரம் இருந்த இறுக்க சூழல் இளகி போக, “அத்தான்.. உங்களை… எவ்ளோ தைரியம் இருந்தா என்னை சாக்கு மூட்டைன்னு சொல்லுவீங்க. இருங்க மூட்டை என்ன செய்யும்னு காட்றேன்…’’ என்று கத்தியவள், அவன் எதிர்பார்க்காத நேரம் அவன் முதுகில் குட்டி குரங்கை போல தாவி ஏறினாள்.
“நீ உப்பு மூட்டையா இருந்தா கூட பரவாயில்லை. சரியான புளி மூட்டை.” என்று மேலும் அவன் கேலியில் இறங்க, அதெல்லாம் முடியாது நீங்க இப்படியே என்னை தூக்கிட்டு உங்க பைக்கை நாலு ரவுண்ட் சுத்தி வாங்க. அப்போ தான் இறங்குவேன்.’’ என்று பேரம் பேசினாள்.
சுகமான சுமையாக அவளை முதுகில் சுமந்தவன், வெளியே சலித்தபடி தன் வண்டியை சுற்றி வந்தான். காதலை அணுவின் மெய் அதிர்வுகளால் மெல்ல மெல்ல தன் சுற்றுப் புறத்தில் உள்வாங்கிக் கொண்டிருந்தது இயற்கை.