பால் வீதி – 17

கார்த்திக்கின் வாகனம் பிருந்தாவின் குடியிருப்பின் அருகே வந்து நின்றது. பிருந்தா பகிர்ந்த செய்தியின் தாக்கத்தில் வரும் வழியெல்லாம் கார்த்திக் மௌனியாக பயணித்து வந்தான். அவர்களின் காலணியில் நின்று பார்ப்பது (‘ஸ்டாண்ட் ஆன் தேர் ஷூஸ்’) எத்தனை கடினமான விஷயம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

பிருந்தாவின் மனநிலை காலையில் இருந்ததற்கு தற்சமயம் மொத்தமாய் மாறியிருந்தது. கார்த்திக்கின் மற்றொரு பரிணாமத்தை கண்டவள் அவன் அருகாமையை மனதிற்குள் ஆகர்ஷிக்க தொடங்கியிருந்தாள்.

வாகனம் நிற்க, அதிலிருந்து இறங்கியவள், “பாய் கார்த்திக்.’’ என்று விடை பெற, மௌனமாய் தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டவன், அவளை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் பகிர்ந்த விஷயங்கள் அவனை பாதித்து இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டவள், “நான் அந்த சம்பவங்கள் எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு கார்த்திக். டோன்ட் பீல் பார் த பாஸ்ட். இட்ஸ் கில்ஸ் யுவர் பிரசன்ட்” (நேற்று குறித்து கவலை கொண்டால் அது உங்களின் இன்றை அழித்துவிடும்.) என்றாள்.

சம்மதமாய் தலை அசைத்தவன், அங்கிருந்து கிளம்ப அவன் வாகனம் திருப்பத்தில் மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள் பிருந்தா. வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவன், மனம் முழுக்க பிருந்தா பகிர்ந்து கொண்ட சம்பவங்களில் நிலைத்திருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நடந்த சம்பவங்கள் காணோளியாய் மனத்திரையில் விரிந்தது.

“உங்க தங்கச்சி பஸ்ட் ஏஜ் அட்டென் செஞ்சப்ப அவங்க யார்கிட்ட அந்த விசயத்தை சொன்னாங்க கார்த்திக்.’’ என கேட்டாள் பிருந்தா. அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், “எங்க அம்மாகிட்ட தான்.’’ என்றான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “எனக்கு சின்ன வயசுல இருந்து என்னோட எல்லா விசயத்தையும் எங்க அண்ணாகிட்ட ஷேர் செஞ்சி தான் பழக்கம். அந்தப் பழக்கம் முதல்ல எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னா… அப்போ நான் எய்த் படிச்சிட்டு இருந்தேன். எங்க கிளாஸ்லயே நான் தான் பஸ்ட்.’’ கடந்த காலம் கண்களில் மின்ன பேசிக் கொண்டிருந்த பிருந்தாவை ரசித்து,’ஹும்..’ கொட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“எல்லா மிஸ்ஸுக்கும என்ன ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் எங்க கிளாஸ் இருந்த ஒரு பையன் மேத்ஸ்ல முட்டை மார்க் வாங்கிட்டான். அந்த டைம் நான் சென்டம் வாங்கிட்டேன். எங்க சார் என்னையும் அவனையும் கம்பேர் செஞ்சி… நீ எல்லாம் ஏன் படிக்க வர பேசாம கழுதை மேய்க்கப் போ… அப்படி இப்படின்னு திட்டிட்டார்.’’ என்றவள் நெடு மூச்சை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தாள்.

“அப்படி அவரு பேசினது அவன் ஈகோவை மோசமா தூண்டிவிட்டு இருக்கும் போல. அன்னைக்கு நைட் நான் எங்க வீட்டு திண்ணையில உக்காந்து படிச்சிட்டு இருந்தேன். திடீர்னு நாலு அஞ்சி பசங்க எங்க வீட்டு முன்னாடி வந்து நின்னாங்க. நான் ரியாக்ட் பண்றதுக்கு முன்னாடி அவங்க கொண்டு வந்த அரிவாளால என்னை வெட்ட ஆரம்பிச்சாங்க…’’ அவள் அந்த வார்த்தைகளை உச்சரிக்கவும், கார்த்திக் அதிர்ந்து, “பிருந்தா…’’ என அவளின் அருகே வந்திருந்தான்.

“எஸ் கார்த்திக். ஒரு கீழ தெருக்காரி, பறை அடிக்கிறவன் மக என் தம்பியை விட எப்படிடி நல்லா படிக்கலாம்னு கேட்டு கேட்டு வெட்டினாங்க. நான் தப்பிச்சி ஓடினேன். என் கால்ல பெரிய வெட்டா விழுந்துச்சு. தோள் பட்டையில பெரிய கீறல். அந்த நேரத்துல தொழுவத்துல மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு இருந்த எங்க அண்ணன் தான்  சத்தம் கேட்டு வந்து என்னை காப்பாத்தீனாங்க. அதுல அவங்களுக்கும் மோசமா காயம் ஆச்சு.’’ என்றவள் அந்த நாட்களின் நினைவில் சற்றே தேங்கி நின்றாள்.

‘இப்படியெல்லாம் கூட நடக்குமா…?’ என்ற ரீதியில் திகைத்து போய் நின்றிருந்தான் கார்த்திக். அவன் பார்வையில் அவன் மனம் படித்தவள், “நடக்கும் கார்த்திக். அதான் ஒரு சாட்சியா நான் உங்க முன்னாடி இருக்கேனே. இதை விட மோசமா கூட நடக்கும்.’’ என்றாள்.

கார்த்திக் என்ன மறுமொழி சொல்லி அவளை தேற்றுவது எனப் புரியாமல் திகைத்து நிற்க, பிருந்தா தன் கதையை தொடர்ந்தாள். “அப்புறம் அண்ணன் சத்தம் போட்டு அக்கம் பக்கத்துல இருந்த ஆளுங்களை எல்லாம் வரவச்சு அன்னைக்கு எப்படியோ என் உயிர் தப்பிச்சது. அதுக்கு அப்புறம் ஆறு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன். கணுக்கால் எலும்பு நொறுங்கி போச்சு. ரெண்டு ஆப்ரேசன் செஞ்சதுக்கு அப்புறம் தான் நடக்க முடிஞ்சது.’’ என்றவள் தனது வலது கணுக்காலை சற்றே உயர்த்தி அவனிடம் காண்பித்தாள்.

கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் திரள துவங்கியது. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். “அந்த நேரம் உடைஞ்சது வெறும் எலும்பு மட்டுமில்ல கார்த்திக். என் மனசும் தான். அந்த சம்பவத்துக்கு அப்புறம் எனக்கு ஸ்கூல் போக பிடிக்கல. எங்க அம்மா அப்பாவுக்கும் என்னை ஸ்கூலுக்கு அனுப்ப பிடிக்கல. யாரைப் பார்த்தாலும் பயம். போஸ்ட் ட்ரோமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர்ல பாதிக்கப்பட்டேன். கண்ணை மூடினாலே அருவாளோட யாரோ என்னை வெட்ட வர மாதிரி பயங்கர கனவா வரும்.’’ என்றவளின் கண்களில் ஒரு துளி நீர் கசிய, கார்த்திக் அவள் கண்ணீர் துடைத்தான்.

பெரிய மூச்சுக்கள் எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “உடஞ்ச உடம்பையும், மனசையும் ஒட்ட வச்சது திரு அண்ணா தான். அப்போ அவங்க காலேஜ் பஸ்ட் இயர். பாதி நாள் காலேஜ் லீவ் போட்டுட்டு என் பக்கத்துல உக்காந்து இருப்பாங்க. அதுக்கு முன்னாடி பெருசா அவங்களோட எனக்கு அட்டாச்மென்ட் இருந்தது கிடையாது. ஆனா நான் பெட்ல இருந்தப்ப, என்னோட இன்னொரு அம்மாவ எல்லா தேவைகளையும் கவனிச்சிகிட்டது திரு அண்ணா தான்.’’ என்றாள் குரலில் பெருமை பொங்க.

“தினம் தினம் லைப்ரரில இருந்து மோடிவேசனல் புக்ஸ் எடுத்துட்டு வந்து வாசிச்சு காட்டுவாங்க. என்னோட புக்ஸ் எடுத்துட்டு வந்து எனக்கு கிளாஸ் எடுப்பாங்க. நான் மறுபடி ஸ்கூல் போக மாட்டேன்னு சொல்லி அழும் போதெல்லாம்… ஹாஸ்பிடல்ல இருந்த மொட்டை மாடிக்கு என்னை தூக்கிட்டு போயி அங்க இருக்க நட்சத்திரத்தை காட்டுவாங்க… ‘நீ பெரிய பொண்ணா ஆனதும்… அந்த நட்சத்திரத்துக்கே போற பெரிய சயின்டிஸ் ஆவ பிந்து… அப்போ இந்த பூமியில சாதி பாத்துட்டு இருக்க அழுக்கு மனுசங்க எல்லாம் உன்னை அண்ணாந்து பார்ப்பாங்க…’ அப்படின்னு சொல்லுவார். அந்த வார்த்தை தான் எனக்குள்ள விழுந்த முதல் விதை.” என்றவளின் இதழ்களில் புன்னகை.

“அண்ணாவுக்கு ஸ்பேஸ் சயின்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட். ஆனா நாங்க ஒரு சமத்துவ வாழ்க்கை வாழ வெறும் படிப்பு போதாதுங்கிகிறது எங்க அண்ணாவோட எண்ணம். அதனால பெருசா இன்ட்ரஸ்ட் இல்லாட்டியும் தனக்கு அதிகாரத்தை கொடுக்கிற சிவில் சர்வீஸ் எடுத்து படிக்க முடிவு செஞ்சி இருந்தாரு.  தினம் ஹாஸ்பிட்டல்ல அட்வான்ஸ் பைனாகுலர் கொண்டு வந்து வானத்துல இருக்க நட்சத்திரங்களை பத்தி என்கிட்ட பேசிட்டே இருப்பாரு. அதுக்கு அப்புறம் எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா ஸ்பேஸ் மேல இன்ட்ரஸ்ட் வந்தது. அதை புரிஞ்சிகிட்டு என் வயசுக்கு தகுந்த மாதிரி ஆஸ்ட்ரோ புக்ஸ் கொண்டு வந்து கொடுப்பாரு. தினம் சைக்காட்ரிஸ்ட் கவுன்சிலிங் கூட்டிட்டு போனாரு.” என்றவள் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தாள்.

கார்த்திக் அவளை கேள்வியாய் பார்க்க, ஒன்றுமில்லை என தலை அசைத்தவள், “எலும்பு கூடி நான் நல்லா நடக்க ஆரம்பிச்சதும் என்னை மார்சல் ஆர்ட் கிளாஸ்ல சேர்த்து விட்டாரு. அதெல்லாம் எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு பிடிக்காதுன்னு அவங்ககிட்ட எதுவும் சொல்லாம எனக்கு எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் கத்து கொடுத்தார். மறுபடி ஸ்கூல் போகவே பயந்த நான்… என்னை வெட்டின பையன் வீதி வழியாவே தினம் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தேன்.” என்ற போது அவளின் முகம் வீரத்தின் கர்வத்தில் ஒளிர்ந்தது.

“அதுக்கு அப்புறம் எனக்கும் எங்க அண்ணாவுக்கு நடுவுல இருந்த பான்ட் அதிகமாச்சு. நான் ஸ்பேஸ் பத்தி தேடி தேடி படிப்பேன். அதுக்கு புல் கயிடன்ஸ் எங்க அண்ணா தான். நான் டென்த் படிக்கும் போது… சரியா ஆனிவல் எக்ஸாமுக்கு முதல் நாள் ஏஜ் அட்டன் செஞ்சேன். அதை பத்தி கொஞ்சம் தெரியும் இருந்தாலும் முதல் முறை பீரியட்ஸ் பார்த்து அப்படி ஒரு பயம். வீட்ல இருந்த போன் மூலமா அண்ணாவுக்கு போன் செஞ்சேன். அப்போ அண்ணா காலேஜ் தேர்ட் இயர். அண்ணா சொன்ன முதல் வார்த்தையே வீட்ல யார்கிட்டையும் சொல்லாதன்னு சொன்னது தான்.’’ என்றவள் சிரிக்க, கார்த்திக் தானும் புன்னகைத்தான்.