அத்தியாயம் – 9

அடுத்து வந்த ஒரு வாரமும் வேலையில் மும்மரமானாள் ஸ்ரீ. போட்டியைப் பற்றிய டீசர்கள் அனுப்பி, ஒவ்வொரு துறையும் 4 பேர் குழுவாக போட்டிக்கு பதிவு செய்யக் கோரி அடுத்த கட்ட வேலைகளை துவங்கியிருந்தாள்.

இவளது போட்டிக்கான முனைப்பிற்கு இராமலிங்கம் எதுவும் உதவ முன் வரவில்லை. ஸ்ரீக்கும் அதற்கான நேரத்தை பெரிதாக  ஒதுக்க விடவில்லை. அவர் தரும் வேலைகள் எப்போதும் போல் இருந்தது. அதை செய்துவிட்டு நீ உன் வேலையைப் பார் என்ற மனப்போக்கில் இருந்தார்.

ஆனாலும் ஸ்ரீ அதற்காக அவருடன் மல்லுகட்டாமல் அவர் கொடுத்த வேலைகளையும் சேர்த்து செய்துகொண்டிருந்தாள். இதைப் பார்த்து, உடனிருந்த ரேகா, கணேஷ் போன்றவர்கள் தாமாக முன்வந்து இராமலிங்கத்திற்கு தெரியாமல் அவளுக்கு உதவினார்கள்.

வேலை பளுவில் நல்ல வேளையாக ஒரு விஷனும் வரவில்லை. வந்தாலும் வாயை திறக்கப்போவதில்லை என்று உறுதி பூண்டிருந்தாள் ஸ்ரீ. இரவில் நவீனிடம் வேலையைப் பற்றி மட்டும் பகர்ந்துகொள்வாள்.

அன்று பேசும்போது நவீனும் கொஞ்சம் டென்ஷனில்தான் இருந்தான்.

“இதுதான் லாஸ்ட் சான்ஸ் ஸ்ரீ. இதுல ஜெயிக்கறதோட எங்க  நெட் ரன் ரேட்டையும் ஏத்தணும். அப்பறம் ஆண்டவன் விட்ட வழி.”

“ஆண்டவன் இல்லை ஹைட்ராபாத் விட்ட வழி.”, என்றாள் ஸ்ரீ.

“ஹேய்… உனக்கு கிரிக்கெட் இன்ட்ரஸ்ட் இல்லைன்ன ? இவ்ளோ தெரிஞ்சு வெச்சிருக்க?”, நவீன் கேட்க,

“ம்க்கும்… எனக்கு கூட புரியற மாதிரி படம் போட்டு கிளாஸ் எடுத்தான் உங்க விசிறி ராகுல்.”, ஸ்ரீ சிரித்தாள்.

“உன் ஃப்ரெண்ட் இல்லையா, என் விசிறியா ?”

“உங்க அளவுக்கு அவனும் உங்க டீம் ப்ளே ஆஃப் வரணும்னு வேண்டிக்கறான்.”, அவர்கள் வரப்போவதில்லை என்பது தெரிந்தாலும், ராகுலிடம் கூட சொல்லவில்லை ஸ்ரீ.

“ஹ்ம்ம்… வந்தா இன்னும் கொஞ்சம் மாட்ச் ஆடி என் திறமையை காட்டலாம். ப்ளூ ஜெர்சி போட சான்ஸ் அதிகமாக்கலாம். அதுதான்.”

“ஹ ? ப்ளூ ஜெர்சின்னா ?”

“ஷ்ஷ்…. அடிக்கடி மறந்துடறேன்… உனக்கு என் கேம் பத்தி தெரியாதுன்னு. இந்தியா டீம் போடறது ப்ளூ கலர் டீ-ஷர்ட் இல்லியா, அதைத்தான் ப்ளூ ஜெர்சின்னு சொல்லுவோம்.”

“ஓஹ்… கண்டிப்பா இந்தியாக்காக நீங்களும் விளையாடுவீங்க நவீன். நம்பிக்கையோட விளையாடுங்க.”, மனதார வாழ்த்தினாள்.

“உங்க கேம் பத்தி தெரியலைங்கறது ஒரு குறையா நவீன் ?”, சற்று வருத்தமாகக் கேட்டாள்.

“ஹே… அப்படியெல்லாம் இல்லை. கிரிக்கெட் பத்தி உனக்கு தெரியாதது ஒரு வகையில நல்லதுதான். மத்தவங்க கிட்ட பேசும்போது எப்படியும் பேச்சு கிரிக்கெட் பத்தி வந்துடும். ஒன்னு பழைய மாட்ச் பத்தி பேசுவாங்க, இல்லை நாங்க எப்படி ஆடறோம்னு லெக்சர் எடுப்பாங்க. உங்கிட்டதான் மத்த டாபிக் பேச முடியுது. ஐ லைக் இட் ஸ்ரீ.”, என்றான் இலகுவாக.

அந்த லைக் இட்டிற்கே ஸ்ரீ மனது இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. ‘உங்க மனைவிக்கு தெரியணும்னு எதிர்பார்ப்பீங்களா ?’, என்ற கேள்வி வாய் வரை வந்தாலும், அதை தலையில் தட்டி உள்ளே அனுப்பினாள் ஸ்ரீ.

அவள் அம்மா சித்தி என்று குசலம் விசாரித்து, அவன் அம்மா கால் வலி பற்றி சொல்லி, போனை வைக்க மேலும் அரை மணியாகியிருந்தது.

ஸ்ரீக்கு அப்போதுதான் தோன்றியது. ‘இவனை கட்டிக்கிட்டா பாதி நாள் போன்லதான் குடும்பம் நடத்தணும் போல ? ஊர் ஊரா கேம் ஆட போயிட்டாங்கன்னா எல்லா பொறுப்பும் என் தலையில விழுமா? இது தேவைதானா?’, என்று யோசிக்கலானாள்.

மார்க்கெட் அந்த திங்கட்கிழமை அவள் சொன்னது போல விழுந்தது. அன்று சித்தார்த் அலுவலகம் வரவில்லை. ஸ்ரீக்கு அவளது வாக்கு மறந்தே போயிருந்தது. அலுவலகத்தில்  மதியம் இது பற்றி பேச்சு அடிபட்டதைக் கேட்டதும்தான் ஞாபகம் வந்தது. நல்ல வேளையாக அன்றிலிருந்து அவளுக்கும் எதுவும் விஷன் வரவில்லை.

ஜென்னி அவள் சாப்பிட்டு அமர்ந்திருந்த மேசைக்கு வந்தவள்,

“என்ன ஸ்ரீ… கம்பனி முழுக்க நீ வெக்கப் போற கேம் பத்திதான் பேச்சா இருக்கு ? அப்படி என்ன கேம் , கொஞ்சம் சொல்லேன்.”

“ஹ… அக்கா… என் வாயை கிளறக் கூடாது. அதான் நேத்து ஈமெயில்ல சொன்னேனே…பால்வாடிப் பிள்ளைகள் மானேஜர்ஸ் க்ரூப்பைவிட சிறப்பா செஞ்சாங்க. எவ்வளவு தூரம் நம்ம தவறுலர்ந்து கத்துக்கறோம்ங்கறதுதான் இந்த கேமோட நோக்கம். எல்லாம் வெள்ளிக்கிழமை தெரியத்தான போகுது.”, என்றாள் ஒரு சிரிப்புடன்.

உடனிருந்த ரேகாவும், “ எங்களுக்குக்கூட தெரியாது ஜென்னி. அதுக்கான ஏற்பாடு எல்லாம் அவதான் பார்த்துக்கறா.”, எனவும், பொதுவாக பேசிவிட்டு கிளம்பினாள் ஜென்னி.

“ம்ம்… இப்படியெல்லாம் வருவாங்க. இதே மாதிரி உஷாரா இருங்க ரேக்ஸ்.”, என்றாள் ஸ்ரீ.

“உண்மையைத்தானம்மா சொன்னேன். அடிச்சிக் கேட்டாலும் எனக்கும் என்ன கேம், என்ன ரூல்னு தெரியாதே… வா போவோம். வாட்சை பார்த்துக்கிட்டே இருப்பார் உன் பாஸ்.”, என்று கிளம்பினாள் ரேகா.

போட்டிக்கான ஏற்பாடுகள் தயாராகியிருக்கவும், உற்சாகமாகவே இருந்தாள் ஸ்ரீ.  இராமலிங்கம் வேறு துறைக்கு சென்றுவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தார். மொபைலில் நவீன் அனுப்பியிருந்த மீம் பார்த்து புன்னகைத்தபடியே அவரை நிமிர்ந்து பார்த்தவள் கண் முன் தோன்றியது ஒரு பெண்மணி பாத்ரூமில் விழுந்துகிடப்பது. பக்காவாட்டில் தெரிந்த முகம் பரிச்சயமாக இல்லை. ஆனால் , முன்புறம் தெரிந்த நரைமுடி, மூக்கில் ஒரு ஒற்றைக் கல் மூக்குத்தி, நெற்றியில் இருந்த குங்குமம், ஒரு புறம் தெரிந்த காதில் இருந்த வைரத் தோடு எல்லாம் பார்த்து மத்திம வயது பெண்மணி என்று புலப்பட்டது.

தலையை உலுக்கியவள், ‘யாராக இருக்கும்?’ என்று யோசித்தாள். அந்தப் பெண்மணி உயிரோடு இருக்கிறாரா இல்லை வெறும் மயக்கமா என்று ஸ்ரீயால் சொல்ல முடியவில்லை.

“என்னமா ஸ்ரீ? வேலை பார்க்காம பராக்கு பார்த்துகிட்டு இருக்க ? “, என்ற இராமலிங்கத்தின் கேள்வியில்,

“யோசிச்சிட்டு இருந்தேன் சர்,”, என்று ஒரு அரை புன்னகையுடன் மானிட்டரை நோக்கி பார்வையை திருப்பினாள்.

‘இவரை பார்க்கும்போதுதான் விஷன் வந்துச்சு. அப்ப இது அவர் மனைவியா இருக்குமா?’, என்று எண்ணம் தோன்ற,

“ரேக்ஸ்…”, என்றவள், “ஒரு டவுட்…”, என்று சொல்லி அவள் இருக்குமிடம் சென்றாள்.

“என்ன ?”

“ராம்ஸ்க்கு வைஃப் இருக்காங்களா? பசங்க?”, என்று கேட்டாள் ஸ்ரீ.

“என்னடி… திடீர்னு? வைஃப் இருக்காங்க. ரொம்ப சாது டைப். போன ஆண்டு விழாக்கு அழைச்சிட்டு வந்திருந்தார். ஒரே பையந்தான். அமெரிக்காவுல இருக்கான். பஞ்சாபி பொண்ணை அங்கேயே பார்த்து காதலிச்சான். கல்யாணத்தை பண்ணதோட தண்ணி தெளிச்சு அனுப்பிட்டார். அவனும் போயிட்டான். இதுவே அந்த அம்மா அதான் அவர் வைஃப் சொன்னபோதுதான் தெரியும். அவங்க பேர் கூட … ம்ம்.. சுந்தரி. எதுக்கு கேட்கற?”, ரேகா விவரம் சொல்லி விசாரிக்கவும்,

என்ன சொல்வது என்று முழித்தாள் ஸ்ரீ.

“இல்லை… இந்த மனுஷன் கடுப்பாவே சுத்தறாரே… அதான் என்னன்னு யோசிச்சேன். ஒரு வேளை வீட்டம்மா மேல இருக்க கடுப்ப நம்மகிட்ட காட்டறாரோன்னு. வேற ஒன்னும் இல்லை.”, என்றவள் தன் கணினிக்குத் திரும்பினாள்.

வேகமாக அவர்களது வலை தளத்தில் சென்ற வருட ஆண்டு விழா படங்களைத் தேடி எடுத்து அதில் சுந்தரி தென்படுகிறாரா என்று பார்த்துக்கொண்டே வந்தாள்.

இராமலிங்கமும் அவர் துறை சார்ந்தவர்களுமாக இருந்த ஒரு க்ரூப் போடோவில் அவர் அருகே ஒரு மத்திம வயது பெண்மணி தெரியவும், படத்தை பெரிது படுத்திப் பார்த்தாள். பட்டுபுடவையில் சாந்தமான முகத்தோடு இருந்தார்.

காதின் கம்மல் தெரியவில்லை ஆனால் மூக்குத்தி  இருந்தது. முன்னால் முடியும் நரைத்த மாதிரிதான் தெரிந்தது. ஆனால் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. ‘என்ன செய்யலாம்….என்ன செய்யலாம்…’ என்று ஓடிக்கொண்டிருந்தது. பார்த்ததைச் சொல்லி உதவி கேட்க சித்தார்த்தும் இல்லை.

‘சரி… சிங்கத்தையே ஒரு கை பார்க்க வேண்டியதுதான்’, என்று முடிவெடுத்தவளாக இராமலிங்கத்தின் அறைக்கு சென்றாள்..

“சர்…ஒரு ஹெல்ப்.”

“என்னமா? சீக்கிரம் போகணுமா? பெர்மிஷன் வேணுமா?”, என்றார். நாலு மணிக்கு வந்து ஹெல்ப் என்றால் அதுதானே என்று அனுபவப்பட்டிருந்தார்.

“இல்லை சர்… அடுத்த இவெண்ட்டுக்கான ஒரு ஒத்திகை சர்.”, உட்காரச் சொல்ல வில்லையே என்று கால் மாற்றி நின்றாள்.

“இன்னும் முதல் இவென்ட்டே முடியலை. அதுக்குள்ளயா?”, என்றவரின் இளக்காரம் அப்பட்டமாகவே தெரிந்தது.

“ப்ரபோசல் கொடுத்து, அது நீங்க, சித்தார்த் சர் எல்லாரும் பார்த்து, பேசி, நேரமாகுமே சர். கூட இது நல்லா வருமான்னு எனக்குமே ஒரு டவுட். அதான் உங்ககிட்ட வந்தேன்.”, என்னவோ அவர்தான் ஆபத்பாந்தவன் போலப் பேசினாள்.

அதில் சற்று குளிர்ந்தவர், “சரி… சீக்கிரம் சொல்லு. என்ன வேணும்?”, என்றார் கெத்தை விடாமல்.

“உங்க வைஃப் கிட்ட பேசணும் சர்.”, என்றாள் ஸ்ரீ.

“ஹ? என் பொண்டாட்டிகிட்ட நீ எதுக்குமா பேசணும்?”, மனிதர் வினோதமாகப் பார்த்தார் அவளை.

“அது…சும்மா ஒரு நாலு கேள்வி சர். உங்களைப்பத்தி. வீட்ல நீங்க  எப்படி? அந்த மாதிரி.  ‘உங்கள் துறை தலைவரை  தெரிந்துகொள்ளுங்கள்’, அப்படிங்கற மாதிரி ஒரு ஈமெய்ல் வாரம்   ஒரு ஹெட் பத்தி.

“அதை தெரிஞ்சு என்ன செய்யப் போறாங்க? “, அவருக்குப் புரியவில்லை.

“இதுவும் ஒரு அறிமுகத்தை கொடுக்கும் .சர் இப்ப காலையில நீங்க தியானம் பண்றீங்கன்னு வைங்க. அது பத்தி மேடம் சொன்னாங்கன்றதை படிக்கறவங்க, நாமும் ட்ரை பண்ணலாம்னு பார்க்கலாம். அவங்களுக்கு நீங்க கைட் பண்ணலாம். இல்லை அதை செய்யறவங்க, உங்க கூட அவங்க எக்ஸ்ப்பீரியன்ஸ் பகிர்ந்துக்கலாம்.”, அவள் விளக்கத்தைக் கேட்டவர் யோசிக்க,

“இது சும்மா ஒரு உதாரணம் சர். மேடம் கிட்ட பேச முடியுமான்னு கேட்டு சொல்லுங்க சர். ஒரு பத்து நிமிஷம்தான். ஃபன்னா இருக்கும் சர்.”, கைகள் இரண்டும் சேர்த்து வேண்டுதலாய்க் கேட்க,

நேரத்தைப் பார்த்தவர், “போன் போட்டு தரேன். சீக்கிரம் பேசிட்டு வை. “, என்றார்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் லேன்ட் லைன், மொபைல் என்று இரண்டிலும் மாற்றி மாற்றி அடித்தும் சுந்தரி எடுக்கவில்லை. ‘அவள் எதுவும் செய்யும் முன்னரே அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதோ’, ஸ்ரீக்கு உள்ளுக்குள் நடுக்கமாகியது.

“எங்க போயிட்டா? சொல்லாம போகமாட்டாளே…”, முணுமுணுத்தபடியே மீண்டும் அழைப்பு விடுத்தார்.