“ஷப்பா…. இந்த சைக்காலஜி படிச்சவங்களே இப்படித்தானா? எது சொன்னாலும் பிரிச்சு மேயணுமா?”, என்று நவீன் அவளை கலாய்த்தான்.
“ஹல்லோ…. என்ன நீங்க சொன்னதை நான் அனலைஸ் பண்ணிட்டேன்? நேத்து விஷயம் தவிர ?”, சண்டைக்கு வந்தாள் ஸ்ரீ.
“ஹா ஹா… கூல் கூல்… இன்னிக்கும் சண்டை வேணாம். காலையில் எங்கிட்ட பேசினதுல ஒன்னும் பிரச்சனை இல்லைதானே? கஷ்டமா போச்சு எனக்கு.”
“ம்ம்… அது கொஞ்சம் பாட்டு வாங்கினேன். இட்ஸ் ஓகே… அந்த மனுஷன் கொஞ்சம் முசுடு டைப்.”, என்றாள் ஸ்ரீ ஒரு தோள் குலுக்கலுடன்.
“என்ன சைக்காலஜி ப்ரொஃபைலிங் பண்றீங்களா மேடம்?”, நவீன் அவளை வம்பிழுக்கவே கேட்டான்.
“யாய்… எதுக்கெடுத்தாலும் சைக்காலஜி இழுக்காதீங்கப்பா… கூட வேலை பார்த்தவங்க சொன்னதுதான்.”
“சரி… இனி இந்த டைமே ஃபிக்ஸ் பண்ணிக்குவோம். இரண்டு பேருமே மாட்டிக்காம ஃப்ரீயா பேசலாம்.”, நவீன் கூறவும் அவளும் ஏற்றுக்கொண்டாள்.
கதையடித்து முடித்து படுக்கப் போகும் போதுதான் நவீனுக்கு உறைத்தது. ‘எதுக்கு தினமும் பேசணும் ? ஃப்ரெண்டுதான ? எல்லா ஃப்ரெண்டுகிட்டயும் அப்படியா இருக்க ? பேசறதைவிட மெசேஜ்தான போடுவ எல்லாருக்கும் ? நீ சொல்லவும், அவளும் சரின்னு சொல்லிட்டா? எதுக்கு தினமும் பேசணும்னு கேட்கலை? என்னடா நடக்குதிங்க? என்று அறிவு விழித்துக் கொள்ள, ஒரு நிமிடம் திகைத்தவன்,
மறு நாள் பஞ்சாபுடன் நடந்த போட்டியில் ஸ்ரீயின் வாக்கு பலித்தது. சும்மாயில்லை வெகு சிறப்பாகப் பலித்தது. முதல் முறையாக, ஒரே ஓவரில் சில பந்துகள் இடது கையாலும் சிலது வலது கையாலும் போட்டு கலக்கியிருந்தான் நவீன்.
அப்போதுதான் பலபேருக்குத் அப்படி ஒரு விதி இருப்பதே தெரிய வந்தது. அம்பையரிடம் முன் கூட்டியே இந்தக் கையால் போடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, அவரும் பேட்ஸ்மேனிடம் சொல்லிவிட்டால, கை மாற்றிப் போடலாம் . ஆனால் அது போல போட்டு பெரிய மாட்ச்களில் யாரும் இந்தியாவில் பார்க்கவில்லை.
இதுவரையிலும் நவீனும் இடது கை பந்துவீச்சாளராகத்தான் போட்டுக்கொண்டு இருந்தான். இடது கை பேட்ஸ்மென் ஷிக்கர் தவான் ஒரு பக்கம் நங்கூரமாக நின்று ஆடிக்கொண்டிருக்க, மறுபக்கம் பேர்ஸ்டோ வலது கை ஆட்டக்காரர். இருவரையும் அசைக்க முடியவில்லை. பவர் ப்ளே முடியவும், நவீனிடம் பந்து வந்தது.
‘மச்சி….எதாவது செஞ்சு தவான் விக்கெட் எடுடா’, என்பதுதான் காப்டன் சஞ்சுவின் கட்டளை. கேரளத்து காப்டனுக்கு தமிழும் நன்றாக வரும் !
ஆறு ஓவர்களாக தவானின் ஆட்டத்தையும் பிட்சின் தன்மையையும் பார்த்த நவீன் தன் எண்ணத்தைக் கூற, சஞ்சுவின் ஒப்புதல் கிடைத்தது.
முதல் பந்து இடது கையால் போட்டவன், அடுத்ததை வலது கையால் போடப் போவதாக அம்பையரிடம் சொல்ல, அவரும் தவானிடம் சொல்லிவிட்டார். அற்புதமான பந்து, தவான் எதிர்பார்க்காத வேகத்தில் வர, மட்டையில் பட்டு எளிதாக காட்ச் பிடிக்கப்பட்டது.
ஒருவழியாக தொடக்க ஆட்டக்காரர்களை உடைத்தாகிவிட்டது என்று நிம்மதியும் மகிழ்ச்சியுமாக ஆர்.ஆர் வீரர்கள் நவீனைக் கொண்டாடினார்கள். வர்ணனையாளர்கள் அவனது யுக்தியை பாராட்டிக்கொண்டிருந்தார்கள். நேயர்களுக்கு விதியை விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து பஞ்சாப் காப்டன் மயங்க் அகர்வால் வர, நவீன் இடது கையால் பந்து வீசினான். லெக் ஸ்டம்ப் எகிறியது. மீண்டும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பு. அவனது பந்து வீச்சை புகழ்ந்துகொண்டிருந்தார்கள்.
வீட்டில் திரையில் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு டென்ஷன் ஏறியது. ‘ஜக்கி… திரும்ப ஏமாத்திடாதே.’, என்று உள்ளூர புலம்பிக்கொண்டிருந்தாள்.
‘என்னடி நகத்தை கடிக்கற? கையெடு.’, என்று ரோஜா அதட்டவும்தான் நகத்தை கடித்துக் கொண்டிருப்பதையே உணர்ந்தாள் ஸ்ரீ.
‘ம்ம்… இந்த முறையாவது ஹாட் ரிக் வருமா இல்ல ஃபுல் டாஸ் போடுவானா?”, என்று பாண்டியன் கேட்க,
“ப்பா… போன வாட்டி பண்ண மிஸ்டேக் திரும்ப பண்ணுவாரா? மறு நாள் போன் பண்ணும்போது ரொம்ப ஃபீல் பண்ணார், நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்னு.”, தந்தையிடம் சண்டைக்குப் போனாள்.
விளம்பரம் முடிந்து மூன்றாவது பந்து, லியம் லிவிங்க்ஸ்டன் வர, நவீனிடமிருந்து நல்ல வேகத்தில் ஒரு யார்க்கர். எல்,பி.டபிள்யூவிற்கு அப்பீல் சென்றது. அம்பையர் இல்லை என்று மறுக்க, காப்டனைப் பார்த்தான். விகெட் கீப்பரும் நவீனை ஒட்டியே சொல்ல, ரிவ்யூ போனது.
திக் திக் நிமிடங்கள், நவீனின் முகத்தை காமெரா ஒரு நொடி காட்டியது. உறுதியாக பேசிக்கொண்டிருந்தான் மற்றவர்களிடம். ரிவ்யூ காட்ட, முடிவில் அவுட் கொடுக்கப்பட்டது. ஐ.பி.எல் ஹாட் ரிக் விக்கெட் வரலாற்றில் நவீன் சந்திரசேகர் பெயரும் இணைந்தது.
என்னவோ தானே எடுத்தது போல சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. அதே நேரம் ராகுல் போன் செய்ய, மகிழ்ச்சிக் கூப்பாடு அவனிடமும் தொடர்ந்தது.
“இந்த பொண்ணு எப்பத்திலர்ந்து இப்படி கிரிக்கெட் பைத்தியமானா? இந்த மகிழ்ச்சி கிரிக்கெட்டிற்கா, இல்லை நவீனுக்கா? “, என்று சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் வனரோஜா.
நண்பர்கள் சூழ மாட்ச்சை ஈ.சி.ஆர் ரிசார்ட்டில் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த் அதீத மகிழ்ச்சியில் இருந்தான். சும்மாவா, போட்ட ஐந்து லட்சம் இருபத்தி ஐந்து லட்சமாக திரும்ப வரப்போகிறதே.
‘டேய் போன மாட்ச்ல மிஸ் ஆனதும் கட்டினியா? எப்படிடா? சூப்பர் மச்சி. “, என்று பலவாறாக நண்பர்கள் கேள்வி கேட்க… தோளைக் குலுக்கியவன், “சும்மா தோணுச்சு… நல்ல ஃபார்ம்ல இருக்கவும் கட்டினேன்.”, என்று என்னவோ தான் பெரிய நிபுணன் போல பெருமையடித்துக்கொண்டான்.
நவீன் எற்படுத்திக்கொடுத்த இந்த திருப்புமுனையை சரியாக உபயோகித்து, பஞ்சாபை நூற்றி முப்பதுக்குள் சுருட்டி, அந்த இலக்கையும் எளிதாக எட்டினார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்.
மொத்தம் நான்கு விக்கெட் வீழ்த்தி, முப்பத்தியெட்டு ரன்களும் எடுத்து நவீன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டான்.
அன்றிரவு எப்படியும் பேச முடியாது என்பது தெரிந்து, வாழ்த்துகளை மட்டும் தெரிவித்திருந்தாள் ஸ்ரீ.
காலையில் எழுந்ததும் பார்த்தால் நள்ளிரவு தாண்டி ஒரு பெரிய சிரிக்கும் பொம்மை ஸ்மைலியுடன் நன்றியும், எங்கே ட்ரீட் வேண்டும் என்று முடிவு செய்யச் சொல்லியும் மெசேஜ் போட்டிருந்தான் நவீன்.
‘சே… தூங்கி தொலைச்சிட்டோமே.’, என்று நினைத்த படியே… அவனுக்கு யோசிக்கும் ஒரு எமோஜியை தட்டிவிட்டு, அப்பறம் பேசுவோம் என்று பதில் போட்டு அலுவலகம் கிளம்ப ஆயத்தமானாள்.
காலையில் வந்ததும் சித்தார்த் அழைப்பதாக போன் வர, மேலே சென்றாள். அவன் அறையை அடைந்ததும், “வா ஸ்ரீ நிதி. உன் வாக்கு அப்படியே பலிச்சது தாங்க்ஸ். ஆனா நவீன் மான் அஃப் தெ மாட்ச் வாங்குவார்னு சொல்லையே நீ?”, இருபத்தியைந்து லட்சம் வந்தாலும், அதற்கும் பந்தயம் கட்டியிருந்தால் இன்னும் சில லகரங்கள் வந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு அவனுக்கு.
அவனை லேசாக முறைத்தவள், “சர்… எனக்கு என்ன தெரியுதோ அவ்வளவுதான். நான் பார்த்தது, அவர் ஹாட் ரிக் அடிச்சதுக்கு பரிசு வாங்கறதும், இந்தப் போட்டியில ஒரே ஹாட் ரிக்ன்றது டீ.வில ஓடற மாதிரி ஒரு காட்சி. அதை சொன்னேன்.”, இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும் ? நான் சொல்றதை நீங்க எப்படி யூஸ் பண்ணிக்கறீங்கன்றது உங்க சாமர்த்தியம்.”, என்றாள்.
அதைக் கேட்டு ஒப்புதலாக தலையசைத்தவன், “ஹ்ம்ம்… கரக்ட்தான். சரி வேற எதுவும் தெரிஞ்சா சொல்லு. அப்பறம் நீ கேட்டது போல இன்னிக்கு சர்குலர் போகும்.”, என்றான்.
“ஓஹ்… ரொம்ப தாங்க்ஸ் சர்.”, என்று எழுந்து கொண்டாள்.
“அது… அக்கவுண்ட்ஸ்ல என் பாங்க் அக்கவுண்ட் டீடெய்ல்ல குடுத்துட்டு வந்தேன் சர்.”, என்றாள். மீண்டும் சித்தார்த் அழைத்தான் என்றால் இராமலிங்கம் சிடுசிடுக்கக்கூடுமோ என்று மாற்றி சொன்னாள்.
“ம்க்கும்… வேலை செய்யறமோ இல்லையோ, சம்பளத்துக்கான ஏற்பாடை முதல்ல கவனிக்கணும். ஏன் அதை லஞ்ச் டைம்கிட்ட போய் குடுத்தா ஆகாதா? கம்பனி வேலையை கொஞ்சம் பாருமா.”, என்று பிடுங்கிவிட்டுப் போனார்.
ஊஃப் என்று ஊதி, வந்த எரிச்சலை அடக்கியவள், பக்கத்து காபின் ராதாவைப் பார்த்து, “ஏங்க்கா இவர் இப்படி இருக்கார் ?”, என்று கேட்க,
“நான் இரண்டு வருஷமா இருக்கேன். மனுஷன் இப்படித்தான். ஏனோ வாழ்க்கைமேல அவருக்கு கோவம் போல. பாவம் அவர் பொண்டாட்டி.”, என்று முணுமுணுத்தாள் ராதா.
ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அவர் காபினுக்கு வர சொல்லி போன் அடித்தார் இராமலிங்கம். ஸ்ரீ சென்றதும், “வாம்மா… இது உன் வேலையா ?”, என்று ஒரு காகிதத்தை அவள் முன் போட்டார்.
அது, சித்தார்த் அவள் கேட்டிருந்த படி வேலை விண்ணப்பங்களின் முதல் நிலை தேர்வில் அந்த அந்த துறையிலிருந்து ஒருவர் பங்கேற்க வேண்டும். மேலும் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வானவர்கள் உளவியல் பரீட்சைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்ற விவரம் தாங்கியிருந்தது.
அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்த்தவள், “சர்…அது… வேலை எப்படி போகுதுன்னு கேட்ட போது, எனக்கு பட்டதை சொன்னேன் சர். வேற எதுவும் சொல்லலை. இது அவரா செஞ்சிருக்கார்.”, என்று ஜகா வாங்கினாள்.
“எது ? நீ சொல்லாம திடீர்னு அவர் உளவியல் பரீட்சை வெக்கணும்னு சொல்றாரா? நீ சைக்காலஜி படிச்சதுனால உன் வேலையை காப்பாத்திக்க, வந்த ஒரு வாரத்திலயே காய் நகர்த்திட்ட? யமகாதகப் பயலுகளா இருக்கீங்க இந்த காலத்து பசங்க. அடுத்து என்ன, என் வேலைக்கு டார்கெட் பண்ணப் போறியா?”, கடுகடுத்தார்.
“சர்…. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோவம் சர் ? கம்பனிக்கு நல்ல, திறமையான ஆளுங்க வரணும்னுதான சர் நீங்களும் ஆசைபடறீங்க? எதோ என்னை மாதிரி ரெகமெண்டெஷன்ல ஒன்னு இரண்டு வந்துட்டாலும் மிச்சம் இருக்கவங்க உங்களை மாதிரி கம்பனிக்கு உண்மையா உழைக்கறவங்களா, அடுத்து அடுத்துன்னு காசுக்கு கம்பனி தாவாம வளர்ச்சிக்கு பாடுபடறவங்களா செலக்ட் பண்ணணும் இல்லையா சர் ? அதுக்குத்தான் இந்த உளவியல் தேர்வு.”, என்று ஒரு கட்டிஐஸ் வைத்தாள் அவர் தலையில்.