“ஓஹ்… என்ன ரூல் போடப் போறீங்கக்கா?”, என்று ஸ்ரீ கேட்க, “ ஹா ஹா… இனிதான் யோசிக்கணும். அவர் ரூல்ஸ்ல எது என்னை ரொம்ப படுத்துதுன்னு பார்த்துட்டு செய்யணும்.”, என்றாள் மைதிலி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜென்னிஃபர், “ ஏன் ஸ்ரீ, எனக்கும் ஒரு கவுன்சலிங் குடேன். சின்ன விஷயம்தான். ஆனாலும் என்னை கடுப்படிக்குது. என் மாமியார் புள்ளை மேல பாசம்னு அவருக்கு கிரிஸ்மஸ் , புது வருஷத்துக்கு ஒரு சட்டை எடுத்து குடுப்பாங்க. ஆனா பார், அவங்களுக்குப் புடிச்ச மாதிரி அடிக்கற கலர்ல இருக்கும் சட்டை. இவரும் எங்கம்மா வாங்கி குடுக்கறாங்க ஆசையான்னு அதை போட வேற செய்வாரு. இன்னிக்கு கூட போட்டுகிட்டு போயிருக்கார். கல்யாணமான நாலு வருஷத்துல இப்படி நாலு சட்டை இருக்கு.” , என்று தன் குறையை வைத்தாள்.

“ஜென்னிக்கா… இதுக்கு எங்கம்மா செய்யறதுதான் பெஸ்ட். சைக்காலஜியெல்லாம் உதவாது.”, என்றாள் ஸ்ரீ.

“உங்கம்மா என்ன பண்ணுவாங்க?”

“எங்கப்பாக்கு ஒரு ஃப்ரெண்டு. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்க வந்த கணேஷ் அங்கிள், அப்பாக்கு ஆசையா ஒரு சட்டை கிஃப்ட் பண்ணார்.  ஆனா பாருங்க, அது டார்க் ப்ளு கல்ர்ல பெரிய சிகப்பு கட்டம் போட்ட சட்டை. பார்க்க கொடூரமா இருந்துச்சு. மனுஷன் டிஸ்கவுண்ட்ல சீப்பா வித்துப்போகாம இருந்துச்சுன்னு வாங்கிட்டு வந்துட்டாரோ என்னவோ. ஆனா எங்கப்பாவும் உங்க ஹஸ்பண்ட் மாதிரிதான், என் ஃப்ரெண்டு குடுத்தது, நான் போடுவேன்னு போட்டுட்டு போனார் ஒரு நாளைக்கு. அந்த ஒரு வாட்டிதான் போட்டார்.”, என்று நிறுத்தினாள்.

“ஏன்… சட்டைக்கு என்னாச்சு ?”, மைதிலி கேட்க,

“சட்டை தோய்க்க வந்துச்சு. அதுக்கப்பறம்…”, என்று சிரித்தாள் ஸ்ரீ, அந்த நிகழ்வின் ஞாபகத்தில்.

“போன வாரம் தோய்க்க போட்டேன் என் ஃப்ரெண்டு குடுத்த சட்டை. எங்க ரோஜா அது?”, என்று பாண்டியன் ஆஃபீஸ் கிளம்பும் அவசரத்தில் கேட்டார்.

“அது … அயர்ன் பண்ண போட்டேங்க.  அவன் கரி தீந்து போச்சும்மான்னு ஒரு இரண்டு துணி அப்பறம் தரேன்னான். உங்க சட்டையும் அதுல ஒன்னு.”, ரோஜா சொல்லவும், அதை நம்பிய பாண்டியன் வேறு சட்டை அணிந்து சென்றார்.

மறு நாள் காலையில் சட்டையை தேய்த்து அலமாரியில் இருப்பதைப் பார்த்து, எடுத்துப் போட்டவர்,

“ரோஜா… என்ன இது, சட்டையில இந்த பட்டன் லூசா தொங்குது பாரு.”, என்று வந்து நின்றார்.

“ஹூம்… போய் உங்க ஃப்ரெண்டைக் கேளுங்க. சட்டைக்கு பதில நாலு மாதுளை வாங்கிட்டு வந்திருக்கலாம். வச்சிட்டு போங்க. தைக்கறேன்.”, என்று ரோஜா முகத்தை திருப்பினார்.

அடுத்த நாள் சட்டை எங்கே என்று கேட்க, “ம்ப்ச்… பட்டனை தைச்சிட்டு டேபிள்ல வெச்சிருந்தேன். அதுல ரசம் கொஞ்சம் சிந்திடுச்சு. உடனே கறைபடாம கழுவிட்டேன்… ஆனாலும் தோய்க்க போட்டுட்டேன், இல்லைனா ரச வாசனை வரும்.”, ரோஜா சொல்லும் காரணத்தைக் கேட்டு கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்தாலும், ஒன்றும் சொல்லவில்லை பாண்டியன்.

ஒரு வாரம் கழித்து. மீண்டும் அந்த சட்டை ஞாபகத்துக்கு வந்தவராக, “ரோஜா என் ஃப்ரெண்டு வாங்கிக் குடுத்த சட்டை எங்க?”, என்று வந்து நின்றார்.

“அது.. தோச்சி காய போட்டிருந்தேங்க கொடியில, காக்கா எச்சம் பட்டிருச்சு. நான் சொன்னா நம்ப மாட்டீங்கன்னு அப்படியே வெச்சிருக்கேன் பாருங்க.”, என்று எடுத்து வந்து காட்டினார்.

“அதெப்படி எல்லா துணியையும் விட்டுட்டு  என் சட்டை மேல மட்டும் இப்படி பண்ணி வைக்கும்?”, இப்போது மனைவி மீது சந்தேகம் வலுத்தாலும், குற்றம் சாட்ட முடியாது, பொதுவாகக் கேட்டார்.

“என்னைக் கேட்டா? காக்கா கண்ணுக்குக் கூட இது பளிச்சுன்னு தெரியுது போல, கலர் புடிக்காம இப்படி பண்ணியிருக்கும்.”, நக்கலடித்தபடியே  சட்டையை வாங்கிக்கொண்டார்.

“தோச்சு வை, கண்டிப்பா அடுத்த வாரமாச்சம் நான் போடணும்.”, என்று எச்சரிக்கும் தொனியில் கூறிச் சென்றார் பாண்டியன்.

அடுத்த வாரம் சட்டை அலமாரியில் அயர்ன் செய்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர், எடுத்து போட, ஒரு கை அக்குளில் தையல் விட்டிருந்தது.

“ரோஜா…. என்னதிது? சட்டை கிழிஞ்சிருக்கு?”

“இத்துப் போன துணியில சட்டை தைச்சிருந்தா தையல் விட்டுத்தான் போகும். அதுக்கு நான் என்ன செய்யட்டும் ?”, தோளைக் குலுக்கினார் ரோஜா.

பல்லைக் கடித்த பாண்டியன், “ சரி… இப்பவே தைச்சிக் குடு.”, என்று நின்றார்.

அவரை ஒரு பார்வை பார்த்த ரோஜா, மட மடவென்று சென்று தைத்துக் கொண்டுவந்தார்.

போட்டுக்கொண்ட பாண்டியன் கையை தூக்கினால், அது தைக்கப்பட்டிருக்கிறது என்று வெள்ளை நூலும், அந்த தையல் முறையும் காட்டிக்கொடுத்தது.

“என்ன இப்படி தைச்சிருக்க? அசிங்கமா தெரியுது பாரு.”

“வீட்ல இந்த  நீல கலர்ல நூல் கிடையாது. கடையிலகூட தேடணும். இந்த தையல்தான் வரும் எனக்கு. நீங்க டெய்லர் கிட்ட குடுத்து ஓரம் அடிக்கணும். எதுக்கும் முழு சட்டைக்கும்  தையல் போடுங்க. அடுத்து எது எங்க பிச்சிக்குமோ.”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ரோஜா.

“அன்னிலர்ந்து அப்பா அந்த சட்டையை பீரோல வெச்சிருக்காரே தவிர போடறது இல்லை. “, என்று ஸ்ரீ சொல்லி முடித்தாள்.

“அப்ப… எல்லாமே உங்க அம்மா வேணும்னு செஞ்சதா?”, சிரிப்பினூடே ஜென்னிஃபர் கேட்கவும், ஆமாமென்று தலையாட்டினாள் ஸ்ரீ.

“இதுக்கும் மேல அம்மா எதாவது செஞ்சா சட்டை தாங்காதுன்னு, அப்பா அதை போடாம அப்படியே வெச்சிட்டார். நீங்களும் இதை ஃபாலோ பண்ணிப் பாருங்கக்கா.”, என்றாள் ஸ்ரீ.

“எல்லாம் ஓகே. அந்த காக்கா எச்சம் எப்படி ஸ்ரீ?”, மைதிலி சந்தேகம் கேட்க,

“எங்கம்மா காக்காக்கு காலைல டிஃபன், மதியம் சாப்பாடு போட்டு வளக்கறாங்கக்கா.  அதிகாரம் பண்ணி கேட்டு வாங்கி சாப்பிடும். அப்படியே பக்கத்து சுவர்லதான் எச்சம்போடும். அதுல கொஞ்சத்தை சட்டையில தொட்டிருக்காங்க.”, ஸ்ரீ சொல்லவும்,ஆவென்று பார்த்திருந்தனர் ஜென்னியும். மைதிலியும்.

“வெற லெவல்மா உங்கம்மா… “, ஜென்னி சிலாகித்தாள்.

“மா… பாவமில்லையா அப்பான்னு கேட்டேன்.  ‘போடாதீங்கன்னு நல்ல மாதிரியா சொன்னா கேட்டா பரவாயில்லை. கண்ணு அவிஞ்சு போற கலர்ல ஒரு சட்டை.இதெல்லாம் இப்படி செஞ்சாத்தான் தானே புரிஞ்சு போடாம வைப்பார்’,னு கூலா சொல்றாங்க.”

“ஆனாலும் ஒவ்வொரு வாட்டியும் அப்பா கேட்கும்போது என்னமா அப்பாவியா முகத்தை வெச்சிகிட்டு சொல்வாங்க தெரியுமா?ஜென்னிக்கா நீங்க சிரிச்சு மாட்டிக்கக் கூடாது பார்த்துக்கோங்க. சந்தேகப் படலாமா வேணாமான்னு ஒரு டவுட்லயே ஆளை வெச்சிருக்கணும்.”, என்று டிப்ஸ் வேறு கொடுத்தாள் சிரிப்பினூடே.

கேன்டீனிலிருந்த டீ.வியை திரும்பிப் பார்த்தவள் நவீனின் நேற்றைய ஆட்டம் மறு ஒலிபரப்பில் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள்.  ‘ ம்ம்… பெரிய ஸ்க்ரீன்ல மாஸா இருக்கான்யா’, என்று ரசித்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு காட்சி தெரிந்தது.

“ஹே… என்ன கிரிக்கெட் அவ்வளோ புடிக்குமா, முழுசா திரும்பி உட்கார்ந்து பாரேன், எதுக்கு வளைச்சிகிட்டு பார்க்கற?”, என்று மைதிலி தோள் தட்டவும் லேசாக தலையை உலுக்கி  அவர்கள் புறம் திரும்பினாள்.

லஞ்ச் முடிந்து, அவள் கொண்டு வந்த அப்ளிக்கேசஷனில் சிலதை தேர்ந்தெடுத்தாள் ஜென்னிஃபர்.  “அது தெரியணும், இது தெரியணும்னு நிறைய விஷயம் கேட்பாங்க. ஆனா இப்ப வேலைக்கு முக்கியமா தேவைபடுறது, இவங்க கிட்ட இருக்கு. “, என்று முக்கியமாக பார்க்க வேண்டியதை ஸ்ரீக்கு சொல்லிக் கொடுத்து, அவளது சந்தேகப்பட்டியலில் இருந்த சிலரை தேர்ந்தெடுத்தும் கொடுத்தாள் ஜென்னி.

 திரும்பி மைதிலியுடன் செல்லாமல், “ நான் ஒரு போன் பேசிட்டு வரேங்க்கா. நீங்க போங்க.”, என்றவள் சித்தார்த்தின் அறை வாசலில் நின்றாள்.

ரிசெப்ஷனிஸ்ட்டிடம், “சர் மதியம் வரசொல்லியிருந்தார். அவர் கேட்ட இன்ஃபர்மேஷன் வந்துடுச்சு. பேச முடியுமான்னு கேட்டு சொல்லுங்க.”, என்றாள்.

உடனே அனுமதி கிடைக்க, சித்தார்த்தின் அறையை அடைந்தாள்.

“என்ன ஸ்ரீ ? என்ன இன்ஃப்ர்மேஷன் ?”, என்றான் சித்தார்த்.

“நான் சொல்லுவேன்… ஆனா அதுக்கு முன்னாடி உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணும்.”, என்றவள், மட மடவென்று காலையில் அப்ளிகேஷன் பார்ப்பதில் தனக்கிருந்த பிரச்சனையையும்,  ராமலிங்கத்தின் பதிலையும் கூறி ஜென்னிஃபர் பத்து நிமிடத்தில் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொடுத்ததையும் கூறினாள்.

“ஹ்ம்ம்… இதுல நான் என்ன செய்யணும் ?”

“உத்தரவு உங்ககிட்டருந்து வரட்டும். ஹெ.ஆர்க்கு சும்மா ஸ்பெக் மட்டும் குடுத்தா பத்தாது. இன்டெர்வ்யூக்கு செலக்ட் பண்றதுலையும் பங்கெடுக்கணும்னு சொல்லுங்க. அதுக்கு பதிலா, அவங்க ஷார்ட்லிஸ்ட் பண்ணி இரண்டாவது ரவுண்ட் யாரை கூப்பிடுறாங்களோ, அவங்களை சைக்கலாஜிகல் இன்டெர்வ்யூ நாங்க ஒரு பத்து நிமிஷம் எடுத்து, கமெண்ட்ஸ் போட்டு தரோம். அப்பறம் அவங்க முடிவெடுக்கட்டும்.”, தன் எண்ணத்தை விளக்கினாள் ஸ்ரீ.

அவளது ஆர்வம் பார்த்து லேசாய் முறுவலித்தவன், “சரி…இப்ப ஒரு மூணு பேரை எடுக்கறோம்ல ?  நீ சொல்ற மாதிரி செஞ்சு பார்க்கலாம். உன் சைக்கலாஜிகல் இன்டெர்வ்யூ கேள்விகள் அண்ட் உன் கமெண்ட்ஸ் நான் பார்க்கணும்.”, என்று கூறினான்.

ஒரு பெரிய புன்னகையுடன், “டன் சர்.”, என்றவள், “ இந்த முறை ஐ.பி.ல் கப் கே.கே.ஆர்க்கு.”, என்றாள்.

ஆச்சரியமாக பார்த்த சித்தார்த், “ ரியலி ? உன் விஷனா? எப்ப பார்த்த ?”

“ம்ம்…. லன்ச் முடிச்சிட்டு, அங்க டீ.வில மாட்ச் போயிட்டு இருந்துச்சு. அப்ப “

மேசை மீதிருந்த போன் அடித்தது, எடுத்தவன், “ சரி… அவங்களை கான்ஃப்ரன்ஸ் ஹால் கூட்டிட்டு போய் உட்கார வை. நான் வரேன்.”, என்று சொல்லி வைத்தவன்,

“இப்ப நான் மீட்டிங் போகணும் ஸ்ரீ.”, என்று எழுந்தான்.

கூடவே எழுந்தவள், “ இன்னொரு விஷயமும் இருக்கு. உங்களுக்கு யூஸ் ஆகுமா பாருங்க. அப்படியிருந்தா, எனக்கு வேணும் போது இன்னொரு ஹெல்ப் கேட்டு வருவேன். “, வியாபாரியிடமே வியாபாரம் பேசினாள்.

“ஹா…ஹா…. எனகிட்டயே டீல் பேசற ? சரி சொல்லு. “, சாதாரணமாகத் தான் கேட்டான். இதற்கு மேல் ஆருடம் சொல்ல மாட்டாள் என்று நினைத்திருந்தான்.

“ ஃபைனல்ஸ்ல கே.கே.ஆர் சூப்பர் ஓவர்லதான் ஜெயிப்பாங்க.”, என்று ஸ்ரீ சொல்ல, “ ஹே… நிஜமாவா சொல்ற ?”, இன்னும் ப்ளே ஆஃப் கூட வராத இன்னேரத்தில் இப்படி ஒரு பெட் கட்டி ஜெயித்தால் பல மடங்கு திரும்ப வரும். மனம் பரபரத்தது.

“சூப்பர் ஸ்ரீ. நீ கேட்கற ஹெல்ப் நான் செஞ்சு குடுக்கறேன்.“, என்று வாக்களித்தான்.

அன்று மாலையே கே.கே.ஆர், சூப்பர் ஓவர் ஆடி, அதில்தான் ஜெயித்து கப் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டினான். சில வாரங்கள் பொறுத்து கட்டியிருந்தால் கூட பரவாயில்லை. ப்ளே ஆஃப் சுற்றுக்கு வரும் முன்னே கட்டினான். ஜெயிப்பார்கள் என்று மட்டுமாவது சொல்லியிருந்தால் கூட பெரிதாக இருந்திருக்காது. சூப்பர் ஓவர் சென்று வெல்வார்கள் என்று துல்லியமாக பந்தயம் கட்டி இரண்டாவது தவறை இழைத்தான் சித்தார்த்.