அத்தியாயம் – 7

இரவு தூங்கவே வெகு நேரமானதால், காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள் ஸ்ரீ.  அலுவலகத்திற்கு இரண்டாம் நாளே நேரம் கழித்துச் சென்றால் நன்றாக இருக்காதே என்று அரக்க பரக்கக் கிளம்பினாள்.

ஒருவழியாக சரியான நேரத்திற்கு வந்து அவளது இருக்கையை அடைந்த பின் தான் நிம்மதியானது. வந்த அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதே, அலுவலக தொலைபேசி அழைத்தது.

“சர் உங்களை வந்து பார்க்கச் சொன்னார் ஸ்ரீ நிதி. உடனே வாங்க.”, என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினாள் சித்தார்த்தின் காரியதரிசி.

‘ம்ம்… வேவு பார்க்கறாங்களா. வந்ததுமே போன் வருது?’, என்று ஒரு சுற்று பார்வையை சுழட்டியவள், சித்தார்த்தைத் தேடிச் சென்றாள்.

“வா ஸ்ரீ. உட்கார். என்னாச்சு ? நேத்து நவீன் ஹாட் ரிக் அடிப்பார்னு பார்த்தா கோட்டை விட்டுட்டார் ? நீ உண்மையாத்தான் சொன்னியா ?”, என்றான் எடுத்ததுமே.

“சர்…  எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். அது நடக்கலைன்னா நான் என்ன செய்ய முடியும் ? என்னமோ ஆளாளுக்கு என் தப்புங்கற மாதிரி பேசறீங்க ? ஐ.பி.ல் முடியறதுக்குள்ளன்னுதான் சொன்னேன். அடுத்த மேட்ச்லன்னு சொன்னேனா? இல்லை இது பலிக்கலைன்னாலும் என்னால ஒன்னும் பண்ண முடியாது.  நான் சொல்றது நடக்கும்னு நீங்கதான் நம்பினீங்க.”, நவீனின் மீதிருந்த கடுப்பையும் சேர்த்து, சித்தார்த்திடம் காட்டினாள் ஸ்ரீ.

“ஆளாளுக்குன்னா ? வேற யாருக்கெல்லாம் தெரியும் ? “, அந்த ஒரு வார்த்தைதான் அவனது கவனத்திற்கு சென்றது.

“ம்ம்.. ராகுல் அப்பறம் நவீன். அவ்வளவுதான்.”

“ஓஹ்… இரண்டு பேரும் உன்னைக் கேட்டாங்களா? எங்கிட்ட இப்ப பேசின மாதிரிதான் அவங்ககிட்டயும் பேசினயா?”, ஆராய்ச்சிப் பார்வையுடன் அவளைக் கேட்டான்.

தோளைக் குலுக்கியவள், “ம்ம்…”, என்றாள் அசிரத்தையாக.

‘ம்ம்.. இவ்வளவு கோபம் வருதுன்னா அப்ப இவளா பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தா என்னை நம்ப வைக்கறமாதிரிதான் பேசியிருப்பா. ‘, என்ற யோசனையில் இருந்தவன், விட்டுப்பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன்,

“ஹே… ஈசி.  வேற எதுவும் பார்த்தியா? போன மாட்ச்லயே நான் எதுவும் பெட் கட்டலை. நீ சொல்லுவன்னுதான் வெய்ட் பண்றேன்.”, என்றான் இலகுவாக.

“நானே கடுப்புல இருக்கேன் சர். இந்த நேரத்துல என்ன தோணும்?”, என்றவள், “நான் போகட்டுமா சர் ? “, என்று கேட்டாள்.

“சரி…போ.” , என்று அனுப்பினான். படிகள் வழியாக இறங்கி வரும்போதுதான் கையில் இருந்த போனில் வாட்சப்பை திறந்தாள்.

அதில்,  நவீனிடமிருந்து நாலு சாரி மெசேஜ் இருந்தது கடந்த ஒரு மணி நேரத்தில். அழைக்கலாமா என்று வேறு கேட்டிருந்தான் அரை மணிக்கு முன்னர்.

யோசிக்காமல் உடனே அவனை அழைத்தாள் ஸ்ரீ. ஒரே ரிங்கில் எடுத்தவன்,

“ஸ்ரீ…. சாரி … ரொம்ப, ரொம்ப சாரி…. உன் மேல ஒரு தப்பும் இல்லை.. நான் தான் ..”

“ஷ்… நவீன். ரிலாக்ஸ். “, அவனை இடைமறித்தாள் ஸ்ரீ.

“அது… நீ கோச்சிக்கிட்டியோன்னு… காலையிலர்ந்து நீ என் மெசேஜும் பார்க்கலை, நீ ஆஃபிஸ் கிளம்பும் போது கூப்பிடலாமான்னும் தெரியலை. அதுதான்…  நீ பேசினதும் சாரி கேட்கணும்னு….”,

“நவீன்… பரவாயில்லைன்னு சொல்ல மாட்டேன். நேத்து என்னாலயும் அப்பறம் தூங்க முடியலை. நான் பாசிடிவ்வா ஒன்னு சொன்னா, அது உங்களை மோடிவேட் பண்ணும்னு நினைச்சா, நீங்க அது அப்படியே நடந்துடும்னு எப்படி நினைக்கலாம்? அப்படி நடக்கலைன்னு எப்படி என்னை திட்டலாம்னு எனக்கும் கோவம்தான்.”, என்று சற்று நிறுத்தினாள்.

“நியாயம்தான். என்னோட தப்பை ஏத்துக்காம உன் மேல பழிபோட்டது என்னோட முட்டாள்தனம்தான். அது… அப்பறமாதான் புரிஞ்சுது, பட் அப்ப ரொம்ப  நேரமாகியிருந்தது. அதான் காலையில உன்னை பிடிக்கலாம்னு பார்த்தேன்…”, சற்று வருத்தமான குரலில் பேசவும் ஸ்ரீக்கு பாவமாக இருந்தது.

“இல்லை நவீன். எனக்குமே தேவையில்லாம எதையோ சொல்லி உங்களை அது பாதிக்குதேன்னு  ரொம்ப குற்ற உணர்ச்சியாகிருச்சு. அதே நேரம் கிடைக்காத ஒரு விஷயத்தை நினைச்சு, கிடைச்சதை நீங்க அனுபவிக்கலையேன்னு கஷ்டமாவும் போச்சு.  தூங்க ரொம்ப லேட்டானதுல, காலையில எழுந்துக்கவும் லேட்… அந்த அவசரத்துல போனைப் பார்க்கவேயில்லை. அதுதான் பதில் போடலை. அப்படியெல்லாம் நான் இழுத்தடிக்கற டைப் கிடையாது.”

“சாரிமா.  நானும் அப்படியெல்லாம் பொங்கற டைப் கிடையாது. என்னாச்சுன்னே தெரியலை.  அது என்ன கிடைச்சதை அனுபவிக்கலை?”, என்றான்.

“ம்ம்…. சில்வர் மெடல் சின்ட்ரோம்னு சொல்லுவோம் சைக்காலஜில.  வெண்கல பதக்கம் வாங்கினவன், அப்பாடி இதாவது தேறுச்சேன்னு சந்தோஷப்படுவான். முதல்ல வந்து தங்கம் வாங்கனவனுக்கும் செம்ம சந்தோஷம். இந்த இரண்டாவதா வரவங்க சில்வர் மெடல் கிடைச்சுதேன்னு சந்தோஷப்படாம, ‘சே இவ்வளவு தூரம் வந்து தங்கத்தை கோட்டை விட்டுட்டோமே’,ன்னு வருத்தப் படுவாங்க.  அந்த மாதிரிதான் நீங்க நேத்து இருந்தீங்க. முக்கியமான இரண்டு விக்கெட் எடுத்து, உங்க டீம்ல இரண்டாவது பெரிய ஸ்கோர் எடுத்ததெல்லாம் பின்னாடி போயிருச்சு. வராத அந்த ஒரு விக்கெட்தான் முக்கியமா போச்சு. அது வந்தா மட்டும், நீங்க ஜெயிச்சிருக்க முடியுமா? இல்லைதானே? அப்பறம் என்ன?”, ஸ்ரீ சொல்லச் சொல்ல, நேற்றைய அவன் மன நிலையை அப்படியே விவரித்தது போல் இருந்தது நவீனிற்கு.

“ம்ம்.. நல்ல வேளை என் எரிச்சலுக்கு ஒரு பேரை சொல்லி, ஒரு விளக்கத்த கொடுத்து நியாயப்படுத்திட்ட. நீ சைக்காலஜி படிச்சது வீண் போகலை ஸ்ரீ. மார்க் வரலைன்னாலும், விஷயம் இறங்கியிருக்கு உனக்குள்ள. தாங்க்ஸ்.”, என்றான் உணர்ந்து.

“ம்ம்… அப்படி இருக்கும்போது அதை எப்படி தடுக்கறதுன்னு போய் கூகிள் ஆண்டவரைக் கேளுங்க.  இல்லை, உங்க டீம்லயே சைக்காலஜிஸ்ட்ஸ் இருப்பாங்களே, அவங்க கூட பேசுங்க.”, என்றாள் ஸ்ரீ.  அவனது பாராட்டில் உள்ளம் களித்தது.

“பேசணும். ஒரு மணி நேரம் கழிச்சு.  ஹேய்… இவ்ளோ நேரம் என் கூட பேசிகிட்டு இருக்க ? வேலை இல்லையா?”, என்று நவீன் கேட்கவும்தான் இருவது நிமிடமாக அதே மாடிப்படிகளில் நின்றிருப்பது உரைத்தது ஸ்ரீ நிதிக்கு.

“ஐயோ… மறந்தே போயிட்டேன். ராம்ஸ் கத்துமே…அப்பறம் பேசறேன் நவீன். பை.”, என்றவள் தடதடவென்று இறங்கி ஓடினாள்.

ராமலிங்கம் அவள் இருக்கையின் அருகேதான் நின்று கொண்டிருந்தார். பக்கத்து கேபினில் இருந்த ராதாவை விசாரித்துக் கொண்டிருந்தார்.

“சர். குட் மார்னிங்.”, என்று முகமன் கூறி அவள் இருக்கைக்கு அருகில் சென்றாள்.

“ம்ம்… மார்னிங். எங்கம்மா, காலையில் வந்ததுமே காணோம் ?”, ராமலிங்கத்திடமிருந்து விசாரணை ஆரம்பித்தது.

“சர், பாஸ் கூப்பிட்டிருந்தார். மேலே போயிருந்தேன். வெயிட் பண்ணி பார்த்துட்டு வரேன்.”, என்றாள் அப்பாவியாக.

“ஓஹ்… என்ன விஷயமா கூப்பிட்டார்?”, அடுத்த கேள்வி.

“ஒன்னுமில்லை சர். வேலை பிடிச்சிருக்கா, கம்ஃபர்டபிளா இருக்கான்னு கேட்டார்.”, என்று மழுப்பினாள்.

“ம்ம்… பிடிக்கலைன்னா வேற டிபார்ட்மெண்ட்டுக்கு மாத்திக்கோமா. எனக்கும் தலைவலி விட்டுது. “, என்று சொல்ல ஸ்ரீ முகம் வாடியது.

“ரெகமெண்டேஷன்ல வந்து நம்ம உயிரை எடுக்க வேண்டியது….”, என்று அவள் காதுபடவே கரித்துக் கொண்டு போனார்.

ஸ்ரீ, ராதாவை பார்க்க, அவர் சென்றுவிட்டாரா என்று பார்த்துவிட்டு, “அந்த மனுஷன் ஒரு முசுடு. நீ கண்டுக்காத. அவர்கிட்ட பாட்டு வாங்கதவங்க யாரும் இருக்க முடியாது. நீ பாட்டு உன் வேலையை செய்.” , என்று ஆறுதல் சொன்னாள்.

அடுத்து ஒரு மணி நேரமும் ஐ.டி. யில் கேட்டிருந்த ஒரு வேலைக்கான விண்ணப்பங்களை பார்த்து, அதிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஐ.டி பற்றிய போதுமான பின்னணி ஸ்ரீயிடம் இல்லை. அந்தத் துறையிலிருந்து இந்த மொழி தெரிந்திருக்கவேண்டும், இதில் வேலை செய்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட தொழில்முறை வார்த்தைகளை வைத்து தேடிக்கொண்டிருந்தாள்.

சலிப்படைந்து நேராக ராமலிங்கத்திடமே சென்றாள். “ சர்… ஐ.டில சிஸ்டம் அனலிஸ்ட் போஸ்ட்க்கு ஆள் கேட்டிருந்தாங்க. ஆனா எனக்கு ஐ.டி பத்தி அவ்வளவா ஐடியா இல்லை சர். அவங்க டிபார்ட்மென்ட்ல யாராவது ஜூனியர் கூப்பிட்டு ஹெல்ப் கேட்கவா சர்?”

“ம்க்கும்… உன்னை வேலை பார்க்க சொன்னா,  நீ துணைக்கு ஆள் தேடுறயா? அதான் என்னன்ன க்வாலிஃபிகேஷன் இருக்கணும்னு சொல்லியிருக்காங்களே. அந்த வார்த்தை இருக்கற அப்ளிகேஷனை எடுத்து அவங்களுக்கு அனுப்புமா. இதுக்கு இரண்டு ஆள் வேலை பார்க்கணுமா?”, என்றார் இளக்காரமாக.

“சர்… இன்டர்வ்யூ வராதான்னு இவங்க ஒவ்வொருத்தரும்  எதிர்பார்ப்போட இருப்பாங்க சர். சுத்தமா சம்மந்தேமே இல்லாத சிலதை எடுத்துட்டேன். ஆனாலும் ஒரு இருவதுகிட்ட, இது பத்தி தெரிஞ்சவங்க பார்த்தா தேறுமோன்னு ஒரு ட்வுட். எனக்கு இது பத்தின அறிவில்லைங்கறதுக்காக அவங்க அப்ளிகேஷனை தூக்கி போட்டுடக்கூடாதுன்னுதான் சர் பார்க்கறேன்.”, பொறுமையாக விளக்கினாள்.

“ஹ்ம்ம்… நீ சொல்றது சரிதான். ஆனா அந்த ஐ.டி ஹெட் சுகுமாரிகிட்ட என்னால பேச முடியாது. சண்டைதான் வரும். அவங்க ஆளுங்களை தேவையில்லாம நாம கூப்பிட்டா, என்னவோ அவ சொத்தை கொள்ளையடிக்கற மாதிரி பேசுவா. சில நேரம் நல்லது செய்ய நினைச்சாலும் முடியாது. போக போக கத்துக்குவ. இப்ப சொன்ன வேலை மட்டும் செய்.”, இந்த முறை சற்று சாந்தமாகக் கூறினார். அவளது முயற்சி தெரிய வந்ததாலும், அவள் முக வாட்டத்தைப் பார்த்தும் கொஞ்சம் இரக்கம் போல.

திரும்பி வரும் ஸ்ரீயைப் பார்த்த மைதிலி, அவளது இருக்கையிலிருந்து எழுந்து வந்தாள். ‘ஹே… காலையிலேயே உங்கிட்ட பேசணும்னு நினைச்சேன். அப்பறம் சர்கிட்ட நீ பாட்டு வாங்கிட்டு மும்மரமா வேலை பார்க்கவும்  கிட்ட வரலை. என்னாச்சு ? எதுவும் ஹெல்ப் வேணுமா?”, என்று அவள் கணியைப் பார்த்து எதுவோ கேட்பது போல நின்று பேசினாள்.

ஸ்ரீ முழிப்பதைப் பார்த்து, “சும்மா பேசினா ராம்ஸ் சீறும். அதான் இந்த போஸ். நீ கம்ப்யூட்டர்ல எதைவாது காட்டிகிட்டே பேசு.”, என்று அவளுக்கும் கற்றுக் கொடுத்தாள்.

“என்னக்கா, எங்க காலேஜ் மேம் ஏமாத்த நாங்க பண்ற டகால்ட்டி வேலையெல்லாம் இங்கையும் பண்ணணுமா?”, என்று புன்னகைத்து,  மைதிலி சொன்னபடியே விளக்கம் கேட்பது போல செய்கையுடன் தான் ராம்சிடம் பேசியதையும் அவர் கூறியதையும் சொன்னாள்.

“அவ்ளதானே…  ஐ.டில ஒரு பொண்ணை தெரியும் எனக்கு. நம்மளோட சாப்பிட வர சொல்றேன். லன்ச் முடிச்சிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்து குடுக்க சொல்லிடலாம். நீ ஜாப் ஸ்பெக், ரெஸ்யூம் எல்லாம் கொண்டுவா.”, எளிதாக முடித்தாள் மைதிலி.

“ஹோ… ரொம்ப தாங்க்ஸ்கா. “, கொஞ்சம் மலர்ச்சியாக ஸ்ரீ சொல்லவும், “நான் தான் ஸ்ரீ உனக்கு தாங்க்ஸ் சொல்லணும். நீ குடுத்த பேஸ்ட் ஐடியா சூப்பரா வொர்க் ஆச்சு. லன்ச்ல சொல்றேன். பை.”, என்று தோள் தட்டிவிட்டு சென்றாள் மைதிலி.

ஒரு மணிக்கு கான்டீனில் அமர்ந்திருந்தார்கள் ஸ்ரீ, மைதிலி மற்றும் அவள் ஐ.டி. தோழி ஜென்னிஃபர். டூத் பேஸ்ட் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள் மைதிலி.

“நான் நீ சொன்ன மாதிரி சொல்லிட்டு என் பேஸ்டை வைக்கவும், ஒரு மாதிரி யோசனையா பார்த்தார் ஸ்ரீ. அப்பறம் சிரிச்சிட்டு, ‘சரி… இது உன்னோட ரூல். நான் ஒத்துக்கறேன்.’, சிம்பிளா சொல்லிட்டார். நாந்தான் பகபகன்னு முழிச்சிகிட்டு நின்னேன்.

அப்பறம் ஒரு மாதிரி சுதாரிச்சிகிட்டு, அப்ப நான் வேற ரூல் போட்டாலும் ஒத்துக்குவீங்களான்னு கேட்டா? என்னோட கொள்கைக்கு மாறா இல்லைன்னா கண்டிப்பா நானும் உன் ரூல் ஃபாலோ பண்ணுவேன் மைத்து. நான் சொல்றதை நீ கேட்கணும்னு எதிர்பார்க்கறப்போ, நீ சொல்றதும் நான் கேட்கணும்தானே?’ னு அடுத்து  நெஞ்சை நக்கிட்டார்! சமத்து சக்கரகட்டி ஸ்ரீ நீ. “, மகிழ்ச்சியில் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள் மைதிலி.