திங்கள் காலை பத்து மணிக்கு ராக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியின் வரவேற்பில் நின்றிருந்தாள் ஸ்ரீ. மனித வளத் துறை தலைவர் ராமலிங்கத்தைப் பார்க்க  கடந்த பத்து நிமிடமாகக் காத்திருந்தாள்.

அழைப்பு ஒரு வழியாக வரவும், மூன்றாவது மாடியில் இருந்த ஹெச். ஆர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே சென்றதும், அமைதியாக இருந்தது அலுவலகம். எட்டு பத்து பேர்  தடுப்புகளிடையே அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

கையில் ஃபைலோடு நின்றவள், கண்ணை சுழற்ற, அங்கே கண்ணாடித் தடுப்பு வழியே நடுத்தர வயதுள்ள மனிதர், கைகாட்டி வரும்படி சைகை செய்தார்.

அந்த கண்ணாடி கேபின் வாசலில், துறைத் தலைவர் என்று ராமலிங்கம் பேர் இருக்கவும், கதவு திறந்திருக்க, உள்ளே நுழைந்தாள்.

“குட் மார்னிங் சர். நான் ஸ்ரீநிதி பாண்டியன்.”, என்றாள் அவரைப் பார்த்து.

முதலாளி, தனக்குத் தெரிந்த பெண் வருகிறாள், இந்தத் துறையில் வேலை போட்டுக் கொடுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்க, ஏதோ பணக்கார வீட்டுப் பெண் பொழுது போக வரப் போகிறது என்று அலட்சியமாக நினைத்திருந்தார்.

வெளிர் நீலமும், வெள்ளையும் கலந்த சுரிதாரில்,  நெற்றியில் சின்ன பொட்டு, அதற்கு மேல் சிறு கீற்றாக விபூதி, தலை முடியை வாரி கிளிப் செய்து, லட்சணமான முகத்தைப் பார்த்தவர், ‘அப்படி ஒன்னும் பணக்காரத்தனம் தெரியலையே ?’,என்று யோசித்தவராக,

“ம்ம்…வாம்மா. உட்கார்.”, என்றார். தன் மார்போடு அணைத்திருந்த ஃபைலை அவரிடம் தந்துவிட்டு, நன்றி சொல்லி  அமர்ந்தாள் ஸ்ரீ.

“பாஸ் அவருக்குத் தெரிஞ்ச பொண்ணு வேலைக்கு வரதா சொல்லியிருந்தார். அவர் உனக்கு சொந்தமாம்மா?”, என்று கேள்வியை அவளிடம் வீசி, பார்வையை அவளது பயோ டேட்டாவில் வீசினார்.

“இல்லை… சொந்தம் இல்லை. சித்தார்த் சாரை தெரியும். இங்க முன்னாடி அப்ளை பண்ணிருந்தேன்னு சொல்லவும், அதுக்கென்ன, திங்கள் கிழமை வந்து பார்னு உங்க பேரை சொன்னார்.”, ஸ்ரீ சொல்வதை தலையாட்டிக் கேட்டுக் கொண்டவர்,

“சைக்காலஜி படிச்சிட்டு ஹச். ஆர்ல என்ன வேலைமா செய்வ? ஆஸ்பத்திரிலதான  வேலை பார்க்கணும் ?”, என்றார் ராமலிங்கம் அடுத்து.

“இல்லை சர். இப்ப கார்ப்ரேட் கம்பனிகள்ல சைக்காலஜி படிச்சவங்க வெச்சுதான் இன்டெர்வ்யூல வரவங்க கம்பனிக்கு செட் ஆவாங்களா, வேலை கத்துகிட்டு முன்னுக்கு வரணும்னு வேகம் இருக்கறவங்களான்னு பார்த்து வடிகட்டறாங்க. வெறும் படிப்புத் தகுதி மட்டும் பார்க்காம, இதெல்லாமும் பார்த்து ஆள் எடுக்கறாங்க.  அதே மாதிரி, இருக்க எம்ப்ளாயீஸ் நலன், அவங்க ஸ்ட்ரெஸ் போக்கறதுக்கான சில எவென்ட்ஸ்னு அதுக்கெல்லாமும் எடுக்கறாங்க. கூடவே…”, ஸ்ரீ ஆர்வமாக பேச,

“புரியுது. இதெல்லாம் இங்க கிடையாது. அதான் பாஸ் உன்னை சேர்த்துக்க சொன்னார் போல.  நாளையிலர்ந்து நீ வரலாம். முதல்ல இருக்கற வேலையை கொஞ்சம் கத்துக்கிட்டு, அப்பறம் வெட்டி கேம் எல்லாம் நடத்தலாம். ஆனா எது புதுசா செய்தாலும், முதலாளியை ஒரு வார்த்தை கேட்டுகிட்டுதான் செய்வேன். அது மாதிரி நீயும் எங்கிட்டயும் பெர்மிஷன் வாங்கிட்டு செய்யணும். மாசம் இருபதாயிரம் சம்பளம், அப்பறம் பெனிஃபிட்ஸ் இருக்கு. மூணு மாசம் ப்ரோபேஷன். அப்பறம் பெர்மனென்ட் பண்ணுவோம். அப்ப இருவத்தியஞ்சாயிரம் சம்பளம்.”, ராமலிங்க பேசப் பேச,

“அப்ப, வேலை எனக்குத்தானா? முடிவே செய்துட்டாங்களா? நம்ப முடியாமல் பார்த்தாள் ஸ்ரீ. ஒரு வருடம் கிட்டே அவளும் முயற்சி செய்து, முட்டி மோதிக் கொண்டிருந்தது, சட்டென்று கிடைத்துவிட்டதா?”, என்று அதிர்வாய் பார்த்திருந்தாள்.

“என்னமா? திகைச்சுபோய் பார்க்கற?”, என்றார் ராமலிங்கம்.

“இல்லை சர். இன்டெர்வ்யூன்னு நினைச்சேன். நீங்க வேலை கன்ஃபர்ம் பண்ற மாதிரி சொல்லவும், கொஞ்சம் ஷாக். “, லேசாக புன்னகைத்தாள்.

“ம்ம்… நீ அஞ்சாவது மாடில போய் முதலாளியைப் பார்த்து பேசிடு. அப்பறம்தான் ஆர்டர் தர முடியும். அங்க ஒரு ரிசெப்ஷன் இருக்கும். நான் அனுப்பிவிட்டதா சொல்லு. சர் பார்த்து பேசிட்டு இங்க வா.”, என்று அனுப்பி வைத்தார்.

மலைப்பு நீங்காமல் அவர் சொன்னபடியே செய்தவள், இதோ இப்போது சித்தார்த் முன் அமர்ந்திருந்தாள். கோட் சூட்டில், அன்று பார்த்ததைவிட கம்பீரமாக இருந்தான். அந்த அறையே கொஞ்சம் அப்படித்தான் இருந்தது.

இயல்பாக அவளைப் பற்றிய விவரங்களை அவள் கொடுத்த ஃபைலில் பார்த்துக் கொண்டிருந்தவன், “சோ, நீ எதிர்பார்த்த மாதிரி கார்ப்பரேட்ல எம்ப்ளாயீ வெல் பீய்ங் (அலுவலகத்தில் வேலை செய்வோரின் நலன்) இங்க ஆரம்பிக்கறோம். உன் ஐடியாஸ் சொல்லு, ராமலிங்கம் சாரும் நானும் பேசிட்டு ஓகே சொல்றதை நீ செய்யலாம்.  வேலைக்கு சேர சம்மதமா?”, என்று புன்னகையுடன் கேட்டான் சித்தார்த்.

மகிழ்ச்சியாக, “ கண்டிப்பா சர்.   நான் எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப தாங்க்ஸ் சர். “ என்று முகம் மலர்ந்து சொன்னாள் ஸ்ரீ.

“ரைட். ஆனா வேலையில சேர ஒரு கண்டிஷன் இருக்கு ஸ்ரீ. “, சித்தார்த் மெல்ல விஷயத்திற்கு வந்தான்.

எதாவது டெபாசிட் கேட்பானாயிருக்கும்  என்று நினைத்தவள், அவனைப் பார்க்க, “ இந்த வேலையே உனக்கு எதுக்கு குடுத்தேன் தெரியுமா?”

லேசாக தலையை தெரியாது என்பதாக ஆட்டினாள் ஸ்ரீ. அதுதான் அவளுக்கும் இன்னும் புரியவில்லை.

“அன்னிக்கு மேட்ச்ல . எல்லாரும் அந்த ஒவர்-த்ரோ போட்டதுக்கு படிக்கலை திட்டனப்போ, அவன் தான் மேன் ஆஃப் தெ மேட்ச் வாங்குவானு நீ ராகுல் கிட்ட சொன்னியே? அதைக் கேட்டு நான் பெட் கட்டினேனா. அது அப்படியே பலிச்சது, எனக்கும் பல மடங்கா ரிடர்ன் வந்துச்சு.”, சித்தார்த் கண்ணாடியை ஏற்றிவிட்டு சொல்ல, ‘என்னடா இது?’, என்பதாக முழித்தாள் ஸ்ரீ.

“அது… நான் சும்மா சொன்னது சர். “, தோளைக் குலுக்கினாள் ஸ்ரீ.

“அஹான்… ஆனா அப்பறம் அஷ்வின் உங்க கூட பேசிகிட்டு இருக்கும்போது, அவர்கிட்ட  நீ சொன்ன மாதிரி அஞ்சு விக்கெட் எடுத்ததுக்கான பரிசாத்தான் உங்களுக்கு பாஸ் அரேஞ்ச் பண்ணதா சொன்னாரே?”, கேள்வியோடு ஒரு புருவமும் உயர்ந்தது.

இப்போது சற்று வேர்த்தாள் ஸ்ரீ. “அது உங்களுக்கு எப்படி சர் தெரியும் ?”

“நீங்க என்ன ரகசியமாவா பேசிகிட்டு இருந்தீங்க. பக்கத்துலதானமா நானும் இருந்தேன் ? எனக்கு அப்பப்ப  மேட்ச்ல பெட் கட்ட இந்த மாதிரி சொல்லு. அவ்ளதான்.

“சர்… நான் சொன்னதெல்லாம் பலிச்சதில்லை.  நீங்க எதுவோ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க.”

“ம்ம்… நானும் அப்படித்தான் நினைச்சேன் ஸ்ரீ. ஆனா பாரு. அன்னிக்கு நீ சொன்னபடி படிக்கல் ஜெயிச்சதுக்கு உங்கிட்ட ஒரு ரியாக்ஷனுமே இல்லை. கண்டிப்பா நீ சொன்னதுதான் நடக்கப்போகுதுங்கற மாதிரி நீ இருந்த. உன் ஃப்ரெண்டு ராகுலும் அப்படித்தான் இருந்தான். அவன் கூட எதோ ‘ஜக்கி ஒவர் டைம் பார்க்குது, எப்படி பெட் வெக்கறதுன்னு தெரிஞ்சா காசாவது தேத்தலாம்னு சொல்லிகிட்டு இருந்தான். நீயும் அதுக்கு ஒன்னும் சொல்லலை. எல்லாமா யோசிச்சா, உங்கிட்ட எதோ ஒரு பவர் இருக்கா ? இந்த குறி சொல்றவங்க மாதிரி ? “

இப்போது கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், ‘அடக் கடவுளே…எல்லாத்தையும் ஒட்டு கேட்டு கண்டு பிடிச்சிடுவான் போலருக்கே’, என்று உள்ளுக்குள் உதற, “சர்… நீங்க எதுவோ கற்பனை பண்ணிருக்கீங்க.  அப்படியெல்லாம் இல்லை.”, என்றாள்.

“ஹ்ம்ம்…”, உதடுகளை சுழித்தவன் முகம் ஏமாற்றத்தைக் காட்ட, “அப்போ உனக்கு இந்த வேலை இல்லை ஸ்ரீ. ஒரு வருஷமா நீயும் தேடிகிட்டு இருக்கன்னு சொல்ற. நீ எடுத்திருக்க இந்த மார்க்குக்கு நீ எதிர்பார்க்கற வேலை சான்சே இல்லை. பேசாம கல்யாணம் குழந்தைன்னு செட்டிலாகிரு.”, ஃபைலை தூக்கிப் போட்டான்.

உள்ளுக்குள் புசு புசுவென்று கோவம் வந்தது ஸ்ரீக்கு. மார்க்கை மட்டுமே வைத்து எடை போடும் உலகம் மீது எரிச்சல் மண்டியது. மீண்டும் வேலைக்கான முயற்சி என்றாலே கண்ணைக் கட்டியது. என்னதான் பெற்றவர்களிடம் சவடால் அடித்தாலும், தன்னால் ஒரு வேலையைக் கூட சுயமாகத் தேடிக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் ஸ்ரீக்கு நிறையவே இருந்தது. ‘ஒரு ஆறு மாதம் இங்கே தாக்குப் பிடித்தால் கூட போதும். இந்த எக்ஸ்பீரியன்ஸ் வைத்து வேறு இடம் மாறிக்கொள்ளலாம்.’, என்று மூளை யோசித்தது.

அவளது யோசனையைக் கண்டு அமைதியாகப் பார்த்திருந்தான் சித்தார்த்.  அவளாகவே ஒரு முடிவுக்கு வரட்டும். எந்தப்பக்கம் சாய்கிறாள் பார்க்கலாம் என்று தேர்ந்த வியாபாரியாகக் காத்திருந்தான்.

“அது…. நான் சொல்றது எப்பவும் நடக்கும்னு சொல்ல முடியாது. “, லேசாக ஒத்து வருவது போலத் தெரிந்தது. முகத்தில் எதுவும் காட்டாது அவளையே பார்த்திருந்தான்.

“நீங்க… இப்ப சட்டுனு எதுவும் சொல்ல சொன்னா முடியாது. அதுவா தோணும்போதுதான் சொல்ல முடியும்.”, யோசனையாகப் பார்த்தவன்,

“எப்ப தோணும் ? “, என்று கேட்டான்.

தோளைக் குலுக்கினாள். “ எனக்கு தெரியாது சர்.  அதுதான் சொல்றேன். சில நேரம் மாசக் கணக்கா எதுவும் தோணாது. அப்பறம் நான் ஏமாத்திட்டதா நீங்க  நினைக்கக் கூடாது. இதெல்லாம் வேண்டாமே சர். “, கொஞ்சம் கெஞ்சல் தொனி வந்தது ஸ்ரீயின் குரலில்.

“ஸ்ரீ. கம்பனில வேலைக்கு ஆள் எடுக்கறோம்னா, நமக்கு வேண்டிய எதாவது ஒரு திறமை அவங்ககிட்ட இருக்கணும். இது நமக்கு பயன்படும்னு தோணினாத்தான் அந்த போஸ்ட்க்கு தேர்ந்தெடுப்போம். இப்ப உன் மார்க் வெச்சி மட்டும் பார்த்தா, அப்படி ஒன்னும் சொல்லிக்கற மாதிரி உங்கிட்ட திறமை இல்லை. இப்ப எனக்கு தெரிஞ்சு உங்கிட்ட இந்த வை ராஜா வை படத்துல வருமே, அது மாதிரி அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு சொல்ற ஒரு திறமை இருக்குன்னு நான் நம்பறேன். அந்த நம்பிக்கையில் , உன்னை வேலைக்கு எடுக்கறேன். இதுல நீ யோசிக்க என்ன இருக்கு ? “, சித்தார்த் அவளிடம் இருப்பதை சாதாரணமான ஒரு திறமையாக பேச, பெண்ணிற்கு கொஞ்சம் தயக்கம் விலகியது.

“எனக்கு ஜாவா தெரியும்,  நிர்வாகம் தெரியும்னு சொல்றவங்க மத்தியில எனக்கு அடுத்து நடக்கப் போறது தெரியும்னு நீ சொல்ற. அவ்வளவுதான்.”, தோளை குலுக்கினான் சித்தார்த்.

“ஆனா,  அந்த படத்துல வர மாதிரி நான் நினைச்சப்போ எனக்கு தெரியாது சர். அதுவா தெரியும்போதுதான் சொல்ல முடியும். நீங்க நம்பணும். “, ஸ்ரீ மீண்டும் வலியுறுத்த,

“சரி… நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும். எனக்கு அடுத்து என்ன பெட் வைக்கறது ஐ.பி.எல் லன்னு சொல்லு. அடுத்த நாள் வேலைல சேரு.  நீ என்னை ஏமாத்தறதா நான் நினைச்சா, உன்னை வேலையிலர்ந்து தூக்கிடுவேன். நீ சொல்றது நடந்தா, நீ தொடர்ந்து இருக்கலாம்.”, வேலையில் சேரவும், இருக்கவுமான ஷரத்துகளைக் கூறினான் சித்தார்த். எப்படியும் சம்மதிப்பாள் என்று தெரியும். அவளை வினோதமாகப் பார்க்காமல், இந்த வேலைக்கு உன்னிடம் இருக்கும் திறமை என்பதுபோல பேசவும், அவள்

 தயக்கம் சற்று நீங்கியதைப் பார்த்தவன், அதே தொனியில் பேசினான்.

“அது… ஒன்னு தோணுச்சு சர்.  இந்த ஐ.பி.எல்ல நவீன் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார். அவர் மட்டும்தான் எடுப்பார்.”

“ஓஹ்…”, சட்டென்று ஆர்வமானான் சித்தார்த். இது போன்ற அரிதான பந்தயங்களுக்கு பத்து , இருவது மடங்காக பந்தயப் பணம் வரும்.

“எந்த மாட்ச்செல்லாம் தெரியாது. எடுப்பார். அது மட்டும்தான் தெரியும்.”, அடுத்து அவன் கேட்கப்போவதை அனுமானித்து பதில் அளித்தாள்.

“அதெப்படி, நவீன் உன் ஃப்ரெண்டுன்னதால உனக்கு தோணுச்சா?”, சித்தார்த் கேட்கவும்,

“அப்படியெல்லாம் இல்லை சர். ஏன் தோணுது, எதுக்குன்னெல்லாம் நான் ஆராய்ச்சி பண்ணதில்லை. நீங்களும் அதையெல்லாம் கேட்காதீங்க.  இது நடந்தா, நான் வந்து ஜாயின் பண்றேன். நீங்க ஆர்டரை தாங்க.”, என்று எழுந்து கொண்டாள்.

“ம்ம்…. சரி, நீ நாளையிலிருந்தே ஆரம்பி. நடக்கறவரை காத்திருக்க வேணாம். நான் உன்னை நம்பறேன்.”, என்றவன், “ ராமலிங்கம் சாரைப் போய் பாரு. ஆர்டர் தருவார்.”

சம்மதமாய் தலையாட்டி, கதவை திறக்கப் போனவளை நிறுத்தி, “ ஸ்ரீ… அப்ப ராஜஸ்தான் ஃப்ளே ஆஃப் வருமா? “, என்று கேட்டான்.

“தெரியாது சர். எனக்கு என்ன தெரியுதோ, எப்ப தெரியுதோ அப்ப சொல்லுவேன்.”, எனவும், ஒரு லேசான புன்னகையை உதிர்த்தவன்,

“சரி… நீ போ.”, என்று அனுப்பினான்.

கையோடு அழைத்து, ஐந்து லட்சம் நவீனின் மேல் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பான் என்று பந்தயம் கட்டினான். அவன் செய்த முதல் தவறு அது. இரண்டு மூன்று பேர்களைக் கூறி, இவர்களில் ஒருவர் என்று சொல்லியிருந்தால் கூட தப்பியிருக்கலாம். ஆனால், ஆர்வக் கோளாறில்,  ஒருவனை மட்டும் சொன்னான் சித்தார்த்.