அத்தியாயம் – 22
அவள் அடுக்கின வாதங்கள் எல்லாம் நியாயமாகத்தான் பட்டது. ஆனாலும் நவீன் மனசு ஒத்துக்கொள்ளவில்லை.
“ஸ்ரீ ? நிஜமா சொல்லு ? உனக்கு இஷடமில்லையா ? பட் … ராகுல் . அன்னிக்கு நைட் …. உனக்கும்… என் மேல விருப்பம்னு….”, நவீன் யோசித்தபடியே இழுத்தான். ‘ ராகுல் ஸ்ரீ லவ் பண்ணுகிறாள் என்று உடைத்து சொல்லவில்லைதான், ஆனால்….”, சற்று வியர்த்தது நவீனுக்கு.
“ஸ்ரீ… உனக்கு என்னை பிடிக்காதுன்னு சொல்லாதே.. நம்ப மாட்டேன்.”, என்றான் குரலில் அதிர்வு நீங்காமல்.
“பிடிக்கும். ஃப்ரெண்டா. அதுக்குன்னு கல்யாணம்னு வந்தா…? ராக்கி சொன்னான், எதிர் வீட்டு நாய்குட்டி சொல்லுச்சுன்னு அதை வெச்சு முடிவு பண்ணுவீங்களா ?“, முகத்தில் முறைப்பை தக்க வைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள். அவனின் அதிர்ச்சியும் குழப்பமும் பார்த்து மனது இளகிக்கொண்டிருந்தது.
ஒரு நொடி கண் மூடி தன்னை நிலை படுத்தியவன், “ ஸ்ரீ… நீ சொன்னதெல்லாம் உண்மைதான். பாதி நாள் நான் வேற ஊர்லதான் இருப்பேன். அந்த அளவு நான் பிசியான ப்ளேயரா இருக்கணும்ங்கறதுதான் என் கனவு. ஆனா மிச்ச நேரம் உன் கூட இருக்கணும்ங்கறதும் என் ஆசைதான். நீ எந்த சினிமாக்காரிக்கும் பயப்பட வேணாம் ஸ்ரீ. அப்படி எதாவதுன்னா அம்மாவும் நீயும் சேர்ந்து உப்பு கண்டம் போடுவீங்க என்னைன்னு நல்லா தெரியும்.  தப்புதண்டாக்கெல்லாம் தைரியம் கிடையாதும்மா…. “, அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “அப்பறம்….அம்மா… கொஞ்சம் சென்சிடிவ். கெட்டவங்க எல்லாம் கிடையாது. ஆனா நான் ஒரே பிள்ளைன்னவே ஒவர் பொசசிவ். அவங்களை சப்போர்ட் பண்ணாம நான் அப்பா பக்கம் பேசினா கூட தாங்கமாட்டாங்க. நீ வந்தப்பறம் எப்படி சமாளிப்பேன் அவங்களைன்னு எனக்கு பயம் இருக்கு. ஆனாலும் உன்னை ரொம்ப விரும்பறேன் ஸ்ரீ. அன்னிக்கு டின்னர்ல உனக்கும் விருப்பம் இருக்கற மாதிரி தான் தோணுச்சு…. உண்மையை சொல்லு ஸ்ரீ…”, ஒரு எட்டில் அவள் முன் மண்டியிட்டவன், “ என்னை லவ் பண்றியா ? கல்யாணம் பண்ணிக்கறியா ?”, முகத்தில் ஆயிரம் எதிர்பார்ப்புகளும், குரலில் அத்தனை டென்ஷனுமாய் நவீன் கேட்க,
குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள், “ம்ம்.. சரி”, என்றாள் சுருக்கமாக.
‘ம்ம்மா? ‘தான் கேட்டது சரிதானா என்று புரியும் முன்னர், நெற்றியில் பதிந்த அவளின் இதழ்கள் செய்தியை அவனுக்கு செவ்வனே கடத்த,
அவளை இழுத்து தன் மடியில் சாய்த்தபடியே தரையில் அமர்ந்தவன், “பாவி. பக்கம் பக்கமா நான் பேசினா, ஒரே  வார்த்தையில் சரின்னு சொல்லிட்டா போதுமா ?”, கொஞ்சம் ஏமாற்றமாகக் கேட்டான் நவீன்.
“ம்ம்… ஒரு பூ இல்லை, சாக்லேட் இல்லை, மோதிரம் இல்லை… இந்த ப்ரபோசலுக்கு இவ்வளவுதான்…போனாபோகுது இந்தா,”, என்று எக்கி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.
“உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு, உன் பெட்ரூமுக்கே வந்து ப்ரப்போஸ் பண்றேன்… நீ இப்படி சொல்லிட்ட”, தலையில் முட்டினான் அவளை.
“எங்க அப்பாகிட்ட சொல்லிட்டு வந்த சரி, உண்மையை சொல்லு உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?”, வாகாக அவன் கை வளைவில் சாய்ந்தவள் இடக்காகக் கேட்க,
“ஹி …ஹி… அப்படில்லாம் சொல்லிட்டு நான் எங்க வரது? எதுக்கு இந்த நேரத்துல ஃப்ரெண்டை பார்க்க போறன்னு , நான் சொன்ன காரணத்துக்கே பிரச்சனை பண்ணாங்க. “, நவீன் அசடு வழிந்தான்.
அதானே பார்த்தேன் என்பதாக ஒரு பார்வை பார்த்தாள்.
“ஸ்ரீ… அம்மாக்காக நான் சாரி கேட்டுக்கறேன். உன்னை எதோவது தப்பா சொல்லியிருந்தா சாரி.”, என்றான் சக்கரவர்த்தி சொல்லியதை மனதில் வைத்து.
அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள், “ அப்படின்னா நீ தினமும் சாரி கேட்க வேண்டியிருக்கும்.  ஃப்ரீயா விடு. நான் பார்த்துக்கறேன். ரொம்ப கடுப்படிச்சா அப்ப உன்னை வெச்சு செய்வேன். உன் ஆசை அம்மாக்காக பொறுத்துக்கோ.”, என்றாள் இடக்காக.
‘அச்சோ முருகா… என் பொழப்பு என்னாகப் போகுதோ.’, என்று உள்ளுக்குள் பதபதைத்தாலும்,
“ஸ்ரீ…. ப்ளீஸ்… நம்ம தனியா இருக்கும்போது என்ன வேணாலும் செய். அம்மா இருக்கும்போது, அவங்களுக்குத்தான் நான் இம்பார்ட்டன்ஸ் குடுக்கணும். அவங்க பக்கம்தான் பேசணும். அவங்க சொல்றதைத்தான் கேட்கணும்னு நினைப்பாங்க. ரொம்ப படுத்தினா, அப்பா ஹெல்ப் பண்ணுவார். இன்னிக்கு கூட உங்கிட்ட பேசினதுக்கு அம்மாவை திட்டினார். பட் நீ எல்லாத்துக்கும் அவங்க கூட போட்டி போடதே ப்ளீஸ். அவங்க குழந்தை மாதிரி. ரொம்ப சென்சிடிவ்.”, நவீன் இப்போதே அவளுக்கு தெளிவாய் சொல்லி புரிய வைத்துவிட வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தான்.
பதிலாக ஸ்ரீ ஒரு கொட்டாவியை விட்டாள். “நவீன் … நான் ஒன்னு சொல்லட்டுமா? நம்ம தனியா இருக்க கிடைக்கற டைம் ரொம்ப கொஞ்சமாத்தான் இருக்கும். அதிலேயும் எங்க அம்மா இப்படி , அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தா உனக்குத்தான் நஷ்டம். மடியில இருந்த அஞ்சு நிமிஷம் எதாவது ரொமான்ஸ் பண்ணியிருக்கலாம். ம்ப்ச்… நீ அம்மா கதை பேசி வேஸ்ட் பண்ணிட்ட…”, அவன் மடியிலிருந்து எழுந்து கொண்டாள்.
வட போச்சே என்று பார்த்திருந்தான் நவீன். ‘அடச் சே… தத்திடா நீ’, என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.
“சாரி பேபி… நீ வந்து உட்கார், நாம ரொமான்ஸ் பண்ணலாம்.”, என்று ஆர்வமாய் அழைக்க,
“ம்ம்….பண்ணுவ பண்ணுவ… விட்டாத்தானே?…. வந்து ரொம்ப நேரம் ஆச்சு… கீழ போலாம்.”, என்று  கதவைத் திறக்கச் சென்றாள்.
ஓரே பாய்ச்சலில் எழுந்தவன், கதவோடு அவளை சிறைபிடித்து, “விடமாட்டியா?  ஹ்ம்? எப்படி எப்படி…. மாத்து துணி தரலன்னா துண்டோட பவுல்ங் போடுவேனான்னா கேட்கற?  போட்டு காட்டறேன்…உனக்கு மட்டும்.”, என்று கண்ணடித்து, இதழ் பதிக்க குனிய, ஸ்ரீ அவனுக்கு அகப்படாமல் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்தாள்.
“ஷ்… இப்படியெல்லாம் பேசக்கூடாது. நான் கீழ அதே விரைப்பா முறைப்பா போகணும். இல்லாட்டா அம்மா நாம பண்ண சேட்டையைக் கண்டுபிடிச்சிடுவாங்க. “, அவன் இடையை கட்டிக்கொண்டு பேசினாள்.
அதைக் கேட்டு சிரித்தவன், “நீ என்ன முறைப்பா போனாலும், என் முகம் பார்த்தே தெரிஞ்சிப்பாங்க. அதனால நீ வேஸ்டா சீன் போடாதே.”, அவள் தலையில் லேசாய் குட்டியவன், கைபிடித்து, “வா போலாம். நான் சமாதானம் பண்ணிட்டேன்னு சொல்றேன். மேல எதுவும் கேட்க மாட்டாங்க.”, என்று அழைத்துக்கொண்டு போனான்.
கீழே ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை அலற விட்டிருந்தவர்கள், இவர்கள் வருவது கண்டு அதை அணைத்தனர்.
“என்ன மாப்பிள்ளை? இருவது நிமிஷம் தான் ஆச்சு, அதுக்குள்ள என் பொண்ணை சமாதானம் பண்ணிட்டீங்க போல ?”, ரோஜா பாராட்டினாலும், நானும் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இலகுவாய் சிரித்தவன், “ஆன்ட்டி… அத்தை… ஸ்ரீ கோவம் நியாயம்தான். அவகிட்டதான் நான் முதல்ல பேசி சம்மதம் கேட்டிருக்கணும்.  அவளுக்கு நீங்க வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கறீங்கன்னு அவ சொன்னதுமே நான் டென்ஷனாகிட்டேன். அதான் அப்பாகிட்ட உடனே பேசினேன். இப்படி அஷ்டமி, நவமின்னு சொல்லி அம்மாவும் உடனே உங்ககிட்ட பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலை. நானும் இப்படி பிசி ஆகிருவேன்னு நினைக்கலை. எனிவே… ஸ்ரீகிட்ட சாரி கேட்டேன். “, நவீன் சொல்லவும்,
‘ஓ… அப்ப விருப்பப்பட்டுதான் கேட்டிருக்கிறான். அதை சொல்லாமல் எதற்கு என்னன்னவோ கதை சொன்னார்கள்’, என்று பாண்டியனும் ரோஜாவும் யோசிக்க,
“அப்பாக்கு மட்டும்தான் நான் ஸ்ரீ விரும்பறது தெரியும். அம்மாகிட்ட நான் அப்படி சொன்னா, ஸ்ரீயை அவங்களுக்கு பிடிக்காம போயிடலாம். அதுக்கு பயந்துதான், அப்பா என்னாலதான் ஸ்ரீக்கு ப்ராப்ளம் அது இதுன்னு சொல்லி, ஸ்ரீயை கல்யாணம் செய்யறதுதான் நியாயம்ங்கறா மாதிரி நம்ப வெச்சிட்டார்.  சோ, அம்மாவைப் பொறுத்த வரை இது அரெஞ்ச்ட் மாரேஜ் அத்தை.”, என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
அதற்குள் அவனுக்கு பிரிஜ்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தாள் ஸ்ரீ.
“ம்ப்ச்… டம்ப்ளர்ல குடு ஸ்ரீ. அப்படியே பாட்டிலை நீட்டுவியா?”, ரோஜா கடியவும்,
“மா… பக்கம் பக்கமா எங்கிட்ட பேசி, இப்ப உங்ககிட்டயும் விளக்கிட்டு இருக்கார். டம்பளர் எல்லாம் பத்தாது.”, என்று ஸ்ரீ சிரித்தாள்.
முதன் முதலாக அவனுக்கு இப்படித்தான் பாட்டிலில் தண்ணீர் கொடுத்தாள். அதை நினைவு கூர்ந்தவன், “அப்ப தெரியாது, வாழக்கை பூரா இவகிட்ட தண்ணி வாங்கிக் குடிக்கப்போறேன்னு.”, என்று முடித்தான்.
“எனக்கு தெரியுமே…”, என்றாள் ஸ்ரீ.
புரியாமல் நெற்றி சுருக்கிய நவீனிடம், தான் பார்த்த காட்சியை விவரித்து எப்போது பார்த்தாள் என்று சொல்லவும் அவனுக்கு ஆச்சரியம்.
பாண்டியனும் ரோஜாவும், நவீன் எப்படி எடுத்துக் கொள்கிறான் இந்த விஷயத்தை என்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்,
“சொல்லியிருக்கலாம் எங்கிட்ட. எங்க நம்ம கல்யாணம் நடக்காதோன்னு அம்மா கூப்பிடற வரை ரொம்ப டென்ஷன். இப்பவும் அவங்க எதாவது பேசி, இல்லை பிடிக்காம போய் பிரச்சனை ஆகிருமோன்னு அப்பாவும் நானும் அலர்ட்டாவே இருந்துட்டு இருக்கோம். இப்ப கொஞ்சம் நிம்மதி.”, அவன் தன் போக்கில் இலகுவாக ஸ்ரீயிடம் பேச , இப்படி தன்னைப் பற்றியே அவள் அதுவரை காட்சி கண்டதில்லை என்று சொல்ல, பார்த்திருந்த பெற்றவர்களுக்கு பாரம் நீங்கியது போல் இருந்தது.
“நவீன்.  ஸ்ரீயோட விஷன் பத்தி உங்களுக்கு பிரச்சனை  எதுவும்….”, பாண்டியன் இழுக்க,
“மாமா… நான் இதை வித்தியாசமா பார்க்கலை. இரண்டு கையாலும் இந்த லெவல்ல , துல்லியமா என்னைப் போல பவுலிங் போடறவங்க உலகத்துலயே விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்குன்னு நான் வினோத பிறவி இல்லை.  ஸ்ரீக்கு இருக்கறது இன்னும் ஸ்பெஷல். ஆனா ஆபத்தானதும் கூட. அது இப்ப எங்க இரண்டு பேருக்குமே புரிஞ்சிருக்கு. ஒன்னு அவளோட இந்த திறமையை முழுசா ஆராய்ச்சி செஞ்சு, இன்னும் மெருகேத்திக்கலாம். அதுல ரிஸ்க் அதிகம். கூட அது அவளை ஒரு சாதாரண வாழ்க்கை வாழவிடாம பண்ணிடும்.  முக்கியமா அதை ஆராயணும்னு அவளுக்கே இன்ட்ரெஸ்ட் இல்லை. விஷன் வரும்போது வரட்டும். எதுவும் கெட்டது தெரிஞ்சா முடிஞ்ச வரை உதவி பண்ணலாம்.  ஆனா இப்ப வரை அதை எப்படி வெளிய காட்டிக்கலையோ அப்படியே இருக்கட்டும். அதுக்குத்தான் எங்க அப்பா அம்மாக்கு கூட தெரிய வேண்டாம்னு சொன்னேன்.  பின்னாடி ஒரு வேளை எப்படியாச்சம் தெரிய வந்தா, அப்பதான் வந்துச்சு, அதுக்கு முன்ன எதுவும் அப்படி வரலைன்னு சொல்லிக்கலாம். “, நவீனின் நீண்ட விளக்கம் பாண்டியனுக்கும் ரோஜாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச கவலையையும் நீக்கிச் சென்றது.
கண்ணீர் துளிர்க்க, ரோஜா, “இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குப்பா. இதை புரிஞ்சு அப்படியே ஸ்ரீயை ஏத்துக்கற மாப்பிள்ளை அமையணும்னு வேண்டாத நாளில்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.”, கை கூப்பவும்,
“அத்தை… “
“ம்மா….”
ஒரே குரலில் இருவரும் கண்டித்தனர்.