தந்தை அருகில் இல்லாமல் எதிரில் இருந்ததில் கேட்கவும் முடியவில்லை. ஸ்ரீ திரும்பிச் சென்று முல்லை அருகில் அமர்ந்து கொண்டாள். அவனுக்கு பக்கவாட்டில் தெரிந்தாள்.
நவீனின் பெரியப்பாவே பெரியவராக பேச்சை தொடங்கினார். “ஆக பெண் வீட்டுக்கும் பிள்ளை வீட்டுக்கும் இந்த கல்யாண ஏற்பாட்டுல சம்மதம் தானுங்களே ? மேற் கொண்டு பேச்சை தொடங்கலாமா?”
பெரியவர்கள் கல்யாணம் எங்கே வைப்பது, எப்போது என்று பேச ஆரம்பிக்க, நவீன் அவளிடம் எப்படி பேசுவது என்று வழி தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
பாண்டியன் ஆவணி முதல் முகூர்த்தம் வசதியாக இருக்கும் என்று விருப்பப்பட, லண்டனுக்கு ஸ்ரீயுடன் செல்லும் நவீனின் கனவு கரைந்து சென்றது.  ‘விடுடா…ஆஸ்ட்ரேலியா செப்டம்பர்ல கூட்டிட்டு போவோம். சிறப்பா விளையாடி செலக்ட் ஆகிடணும்.’, என்று தேற்றிக்கொண்டான்.
கல்யாணம் சென்னையில், ரிசெப்ஷன் கோயம்புதூரில் என்று முடிவு செய்யப்பட்டது. கோகிலாவிற்கு பெண்ணிற்கு என்ன சீர் செய்வார்கள் என்று கேட்க கொள்ளை ஆசை. யாரும் சீர் பற்றியும் கடத்தல் பற்றியும் வாயை திறக்கவே கூடாது என்று சக்ரவர்த்தி அவர்கள் அனைவருக்குமே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் அமைதியாக இருந்தார்.
“மாப்பிள்ளைக்கு எதுவும் ஸ்பெஷலா சீர் செய்யணுமாங்க? உங்க வழக்கம் எதுவும் இருந்தா சொல்லுங்க.”, பேசி வைத்தபடி பாண்டியனின் தம்பி கேட்க,
“ப்ளீஸ்…அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உங்க ஆசைக்கு நீங்க செய்யறீங்க. எங்க ஆசைக்கு நாங்க செய்யறோம். “, என்றார் சக்கரவர்த்தி வேறு யாரும் எதுவும் சொல்லும் முன்.
“ஆமாமாம். நவீனுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அவனை நல்லபடியா பார்த்துக்க உங்க பொண்ணு வந்தா போறும். ஒரே பிள்ளைன்னு பார்த்து பார்த்து செஞ்சு பழக்கப்படுத்திட்டேன். ஒரு மாத்து துணின்னாலும் நான் வந்து எடுத்து குடுக்கணும்.”, நவீனின் பெருமை பேசுவதாக எண்ணி அவனை டாமேஜ் செய்ய,  அவசரமாக அன்னையின் கைபிடித்து அவர் பேச்சை நிறுத்தினான் நவீன். ஓரக் கண்ணால் ஸ்ரீயைப் பார்க்க கையால் வாயை மூடி சிரிப்பை மறைத்துக்கொண்டிருந்தாள்.
‘எப்படில்லாம் ஓட்டப் போறாளோ…. ஏன்மா?’, என்று நினைத்துக்கொண்டே, அவன் தந்தையை பார்த்தான். ‘ போதும் போகலாம்’, என்பது போல.
அடுத்த பத்து நிமிடங்களில் கிளம்பியிருந்தார்கள். வாசலருகில் சென்று திரும்பிய போதும், தன் பெரியம்மாவிற்கு பின்னால் நின்றிருந்தவள் அவன் முகம் பார்க்கவே இல்லை. இனிமையான ஒரு நிகழ்வு, இப்படி ரசிக்காமல் படுத்துகிறாளே என்று கடுப்பாக இருந்தது நவீனிற்கு. அருகில் பாண்டியன் இருக்க, “அங்கிள், எனக்கு ஸ்ரீகூட பேசணும்.  இவங்களோட வீட்டுக்குப் போயிட்டு நான் ஒரு ஒன்பது மணிபோல வரேன். தூங்கிட மாட்டீங்களே?”, என்று கேட்டுவிட்டான்.
மகள் நவீனை தவிர்த்ததைப் பார்த்துக்கொண்டிருந்தவர், “அதுக்கென்னப்பா. தாராளமா வாங்க.”, என்று சம்மதித்தார்.
இரவு கிளம்பும்போதே, “இந்த நேரத்துல எங்கடா கிளம்புற”, என்று ஆரம்பித்தார் கோகிலா.
“மா… நான் ஒரு ஃப்ரெண்டை பார்த்துட்டு வரேன். நீங்க போய் தூங்குங்க. நான் வந்துடறேன்.”, பைக் சாவியை எடுத்தவன், பர்ஸ் போன் என்று சரி பார்த்துக்கொண்டிருந்தான்.
“இல்லைடா… நேரமாகிருச்சு… நாளைக்கு பகல்ல…..”, என்று மீண்டும் கோகிலா ஆரம்பிக்க,
“கோகி… அவன் இன்னும் சின்ன பிள்ளை இல்லை. சும்மா எல்லாத்துக்கும் அவனை கேள்வி கேட்காதே. “, என்றார் சக்ரவர்த்தி.
“இல்லைங்க… அது..”, என்று அப்போதும் நிறுத்தவில்லை கோகிலா.
“அவனுக்கு தெரியாதா? இந்த நேரத்துக்கு போறான்னா முக்கியமானதாத்தான இருக்கும்? பிள்ளை வளர்ந்துட்டான்னு எப்ப உன் புத்தியில உரைக்கும் ?  இப்படித்தான் பொண்ணு வீட்ல எல்லார் முன்னாடியும்  மாத்து துணி கூட நான் வந்து எடுத்து குடுக்கணும்னு சொல்ற. அறிவு வேணாம் ? அது கூட எடுத்துக்க துப்பில்லைன்னா இவன் எப்படி என் பொண்ணை பார்த்துப்பான்னு நினைக்க மாட்டாங்களா? உன் பிள்ளைக்கு எடுப்பு வேலை பார்க்கத்தானாடா என் பொண்ணை நான் வளர்த்தேன்னு அந்த அம்மா நினைக்காதா? இந்த சம்பந்தம் உன்னால நின்னுச்சு, தொலைச்சு கட்டிட்டேன்.”, சக்கரவர்த்தியின் சீறலில் கோகிலாவின் கண்கள் குளமாகிவிட்டது.
மெல்ல விசும்பலுடன், “ இல்லைங்க , அப்படி சொல்ல வரலை…அது..”
“நீ எப்படி சொல்லியிருந்தாலும் கேட்கறதுக்கு இப்படித்தான் இருந்துச்சு.  முதல் முறை அந்த பொண்ணை பார்க்கற, ‘ பரவாயில்லை அழகா இருக்கன்னுதான் சொல்லுவியா? அதென்ன பரவாயில்லை? உன் பிள்ளை பேசாம ஒரு சினிமாக்காரிய கூட்டிட்டு வந்திருக்கணும் அவனை விட அழகா இருந்திருப்பா.”, வள்ளென்று விழுந்ததில் சர்வமும் அடங்க,
“ராசா… நான் அப்படி சொல்ல வரலைப்பா…”, என்று மகனிடம் முறையிட்டார்.
எப்போதும் போல, “சரி மா… அழாதீங்க. அப்பா… திட்டாதீங்கப்பா. அவங்க வேணும்னு சொல்லமாட்டாங்க. “, என்று அன்னைக்கு ஆதரவாக பேசி அணைத்துக்கொண்டான்.
‘அதனால்தான் ஸ்ரீ அவனை கண்டு கொள்ளவில்லையா? ஆனால் இதற்காக கோவிப்பவள் கிடையாதே?’, நவீனின் கண்கள் அவன் தந்தையை நாடியது.
“டேய்… கிளம்பு. போய் நேரத்தோட திரும்பி வா. “, என்று அவனை விரட்டினார். ஓரளவு யூகித்திருப்பார் போல் தோன்றியது நவீனுக்கு.
அடுத்த இருபது நிமிடங்களில் ஸ்ரீயின் வீட்டு வாசலை அடைந்திருந்தான் நவீன். பாண்டியன் வந்து கதவைத் திறந்தார்.
“வாங்க மாப்பிள்ளை. பால் எதுவும் சாப்பிடறீங்களா?”, என்று ரோஜா உபசரிக்க,
“இல்லை அத்தை. இப்பதான் டின்னர் முடிச்சேன். “,என்று ரோஜாவிடம் சொன்னவன், “ஸ்ரீ… “, என்று பாண்டியனைப் பார்க்க,
“மேலதான் இருக்கா. நீங்க வரப்போறதா எதுவும் நான் சொல்லலை. நீங்க போய் பேசிட்டு வாங்க.  எனக்கும் கொஞ்சம் உங்களோட பேச வேண்டியது இருக்கு.”, என்றார் பாண்டியன்.
சம்மதமாய் தலையசைத்தவன், மெல்ல மாடிப் படி ஏறினான். “ லெப்ட்ல இரண்டாவது ரூம்.”, என்றார் ரோஜா.
கதவை தட்டவும், “திறந்துதான் இருக்கு.”, என்று ஸ்ரீயின் குரல் கேட்டது.
கதவைத் திறந்து வாசலில் நவீன் நிற்க, வெளிர் நீல நிற நைட்டியில் படுக்கையில் மல்லாந்து படுத்தபடி விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.
தலையை திருப்பிப் பார்த்தவள், ஒரு நொடி முழித்து, பின் “நவீன் ? இங்க , இந்த நேரத்துல ? “, என்று சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளையே ஊடுருவும் ஒரு பார்வை பார்த்தவன், “ உங்க அப்பாகிட்ட பேசிட்டுதான் வரேன்.”, என்றான் சுருக்கமாக.
“அவர்கிட்டயே பேசிக்க வேண்டியதுதான? எதுக்கு இங்க வந்தீங்க?”, என்றாள் முகம் திருப்பி.
“ஸ்ரீ… நான் அப்ப வந்தபோதும் நீ என்னை பார்க்கவே இல்லை. இப்பவும் முகத்தை திருப்பற… என்னாச்சு ?”, அவள் அருகில் வரவும், படுக்கையை விட்டு எழுந்தவள், மறுபுறம் அதன் தலைமாட்டில் நின்றாள்.
“என்னாச்சு? ஒன்னும் ஆகலையே? பொண்ணா லட்சணமா நடந்துக்கணும்னு எங்கம்மா பாடம் எடுத்தாங்க. இல்லைன்னா, ஆணழகன், அற்புதமான வரன், எனக்கு வாழ்க்கை பிச்சை போட வந்திருக்க தேவ தூதனுக்கும் அவன் வீட்டு ஆளுங்களுக்கும் என்னை பிடிக்காம போயிடுமாம்.”, கோபமும் இளக்காரமும் கலந்து ஒலித்தது ஸ்ரீயின் குரலிலும், முகத்திலும். இப்போது அவனைப் பார்க்கவில்லை, தரையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஸ்ரீ… என்ன பேச்சு இது ? “, அவள் தாடை பற்றி நிமிர்த்தி அவள் கண்களை சந்தித்தான்.  வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தாள்.
“எனக்குத்தான் பெரிய குறை இருக்கே… அதோட ஒரு நைட் கடத்தி வேற வெச்சிருந்தாங்க.  உங்களை விட்டா என்னை யாரு கல்யாணம் பண்ணிப்பா?  அந்த எண்ணம் உங்களுக்கும் இருக்கவேதான, என் விருப்பம் கூட கேட்காம நேர எங்க அப்பாகிட்ட பேசி, சம்பந்தம் ஃபிக்ஸ் பண்ணீங்க?  உங்களைப் போய் ஒருத்தி வேணாம்னு சொல்லிடுவாளான்ற அகங்காரம்தான ?”, ஸ்ரீ கோபத்தில் கண் மண் தெரியாமல் பேசிக்கொண்டு போக,
ஆத்திரத்தில் அவள் அதரங்களை தன் இதழ்களால் மூடியிருந்தான். ஸ்ரீ திகைத்து கண்கள் விரிய, அவன் தோள் பற்ற, முதல் ஸ்பரிசம் தந்த உணர்வில் லயித்த நவீன் இன்னும் சற்று சுவைக்க, ஸ்ரீயின் கண்கள் தாமாக மூடியது. தாடையை பற்றியிருந்த அவனின் கை விரல்கள் அழுத்தம் குறைந்து கன்னம், காது மடல் என்று வருட, சட்டென்று சுதாரித்து, அவன் தோளில் அழுத்தம் கொடுத்து தள்ளிவிட்டு தானும் பின் வாங்கினாள்.
இருவருக்குமே மூச்சு வாங்க, அவளின் திகைத்த பார்வை மையல் கொண்ட  நவீனின் முகத்தில் படர்ந்தது.
“ஏய்…. என்ன பண்ற ? அப்பா அம்மா கீழ…” , ஸ்ரீ திக்கித் தடுமாற…
“சாரி… சாரி…. நீ பேசிட்டே போகவும், எனக்கு இருந்த கோவத்துல என்ன பண்ணேன்னு தெரியலை…”, நவீன் சமாளித்தான்.
“என்ன… பண்ணேன்னு … உனக்கு தெரியலை ?”, ஜக்கம்மா மீண்டும் மலை ஏறத் துவங்கினாள்.
“ஷ்… கத்தாதே… தெரியும்… செம்ம ஃபீல்.. ஆனா வேணும்னு செய்யலை. அது ஹீட் ஆஃப் தெ மொமென்ட்…”, அவன் சிரிப்பில் மயங்கிய மனதை மீட்டெடுத்தவள், முறைத்தாள். கையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, அவனை விட்டு இரண்டு அடி தள்ளிச் சென்று நின்றாள்.
அங்கிருந்த சேரில் சென்று அமர்ந்தவன், “ஓகே. நீயும் உட்கார். பேசலாம்.”, என்று படுக்கையைக் காட்டினான். அவள் ஒரு ஓரமாக தள்ளி உட்கார்ந்ததும்,
“ சாரி ஸ்ரீ. உங்கிட்டதான் நான் முதல்ல கேட்டிருக்கணும். அன்னிக்கு டின்னர் போன போது உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணனும்னு ட்ரை பண்ணேன். அது… தைரியம் வரலை. அப்பறமும் நேர்ல பார்க்கும் போது சொல்லணும்னு நினைச்சிருந்தேன்… உன்ன அடுத்து நான் பார்த்தது கன் பாயின்ட்ல.”, நவீன் பேசப் பேச, சற்றே வாய் திறந்திருப்பது கூடத் தெரியாமல்  அவனையே பார்த்திருந்தாள் ஸ்ரீ.
“அந்த கலாட்டா எல்லாம் முடியட்டும், அப்பறமா பேசலாம்னு நினைச்சப்போ, நீதான் உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கறாங்கன்னு சொன்ன. அது எனக்கு ரொம்ப டென்ஷனாகிடுச்சு. கல்யாணம் பத்தி நான் யோசிக்கவே இல்லை. அம்மாகிட்ட போய் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாலே போச்சு, அவங்க ஜென்ம எதிரி ஆயிருவ. எனக்கு பொண்ணு அவங்கதான் செலக்ட் பண்ணனுங்கறது அவங்களோட கனவு.”, இதைக் கேட்டவள் நிமிர்ந்து அமர்ந்து அவனை உறுத்துப் பார்க்க, அமைதி என்பதாக ஒரு கையை உயர்த்தியவன்,
“அப்பாகிட்ட சொன்னேன். அவரும் அதேதான் ஃபீல் பண்ணார்.”, என்று தந்தை சொன்ன திட்டத்தையும் அதன் பின் கோகிலா சம்மதத்தையும் கூறினான்.
ஸ்ரீ ‘ சொல்லுடா… மொத்தமா சொல்லி முடி’ என்பதாக அவனை எடை போடும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். குறுக்கே எதுவும் பேசவில்லை.
“மீட்டிங் உள்ளே போக வேண்டியிருந்தது. இருந்த இரண்டு நிமிஷத்துல உங்க அப்பாக்கு போன் செஞ்சு சொல்றதுதான் முக்கியமா பட்டுச்சு ஸ்ரீ. அவர் வேற எதுவும் பேசி  சொதப்பலாயிடக் கூடாதுன்னு அவருக்கு பேசினேன். நான் மீட்டிங் முடிச்சு, சர் கூடவே லன்ச் முடிச்சு வர வேளைக்கு டீம் செலக்ஷன் ந்யூஸ் வந்துச்சு. நைட் உங்கிட்ட பேசலாம்னு இருந்தேன், நீ போன் பண்ணி உங்க அப்பாவோட விஷ் பண்ணிட்டு, ரிப்பேர்னு சொல்லிட்ட. அதான் உங்கிட்ட பேச முடியலை ஸ்ரீ.”, தன்னிலை விளக்கம் முடித்தான் நவீன்.
“உனக்கு பிடிச்சிட்டா, நேரா கல்யாணத்துக்கு அரேஞ்ச் பண்ணிடுவியா? அப்படி என்ன தலை போற அவசரம்? நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. முடியாதுன்னேன். அம்மா என்னை அடிச்சு சரின்னு சொல்ல வெச்சாங்க. உங்களை விட்டா வேற மாப்பிள்ளையே கிடையாது. அதான் தினமும் பேசினீங்கதான, பிடிச்சிருக்கும்னு அவங்களே டிசைட் பண்ணி, உங்க வீட்டுக்கு போன் பண்ணி சம்மதம்னு சொல்லிட்டாங்க. நான் எதாவது பிரச்சனை பண்ணப் போறேன்னு போனை பிடிங்கி வெச்சிகிட்டாங்க.”, ஸ்ரீ முறைப்பாய் சொல்ல, இந்த முறை அதிர்ந்தது நவீன்.
“அடிச்சாங்களா ? ஸ்ரீ ? உனக்கு என்னை கல்யாணம் பண்ண இஷ்டமில்லையா ?”
“ஆமா… இவரு பெரிய மன்மதரு…. சொன்னதும் நாங்க இஷ்டப்பட.  நீ கிரிக்கெட் ப்ளேயர். பாதி நாள் ப்ராக்டீஸ், மாட்ச்னு போயிடுவ.  நான் தனியா இருக்கணும். பத்தாததுக்கு அழகா வேற இருக்க. இந்தியா டீம்ல எடுத்திருகாங்க. அப்ப இன்னும் சினிமாக்காரிங்க, மாடல்னு வந்து விழுவாளுங்க. நான் எவ வந்து கொத்திகிட்டு போவாளோன்னு பயந்துகிட்டு இருக்கணும். இதெல்லாம் பத்தாதுன்னு அம்மா பிள்ளை. உங்க அம்மா வேற வித்தியாசமான பீஸ். இன்னும் உனக்கு மாத்து துணி எடுத்து குடுக்கணுமாம்… இல்லாட்டா ? கட்டின ஈரத் துண்டோட ஓடிப் போய் பவுலிங் போடுவியா ? இதுல எனக்கு இஷ்டமில்லையான்னு கேள்வி வேற ? ஹும்ஃப்”, படபடவென்று பொரிந்தவள், கடைசியில் நொடித்தாள்.
அவள் பேச்சில் வாயடைத்துப்போனான் நவீன். ‘நாமாகத்தான் அவளும் விரும்புகிறாள் என்று தவறாக புரிந்து கொண்டோமா ? ஆனால் ராகுல் அன்று சொன்னது?’ என்று மனம் குழம்பியது. அது முகத்திலும் தெரிந்தது.