அனைவர் கவனமும் அவன் மேல் இருப்பதை உறுதி செய்தவன், “சித்தார்த் தொழில் சம்மந்தமா முன் விரோதம். அதுக்கு அவரை மிரட்ட அவரோட ஸ்டாஃப் தூக்கியிருக்காங்க. சின்ன வயசு பொண்ணுன்னா பிரஷர் அதிகமா இருக்கும்னு ப்ளான் பண்ணி கடத்தியிருக்காங்க. அவர் அதை உயர் அதிகாரிங்களுக்கு நேரடியா கொண்டு வரவும், உடனே போலீஸ் ஆக்ஷன் எடுத்து மீட்டோம். அப்ப போலீஸ்க்கு ஸ்ரீ பத்தின தகவல்களை சொல்ல, ஸ்ரீயோட சின்ன வயசுலர்ந்து கூடவே இருக்க ஃப்ரெண்டு ராகுலும், அவங்களோட அத்தை பையன் கிரிக்கெட் ப்ளேயர் நவீனும் இருந்தாங்க.
சம்பவ இடத்துல துப்பாக்கி முனையில் ஸ்ரீயை பார்த்ததும் நவீன் யாரும் எதிர்பார்க்காத முறையில் ரியாக்ட் பண்ணார். முடிவு சுபம்ங்கற மாதிரி உண்மையும் பொய்யும் கலந்து ஒரு கதை சொல்லுவோம். ஆனா அதுக்கு சித்தார்த் ஒத்துக்கணும்.”
“அவனாலதான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை. மாட்டேன்னு சொல்லித்தான் பார்க்கட்டுமே.”, என்று ரோஜா கொதித்தார்.
“அந்த அளவுக்கு போகாதுன்னு நினைக்கறேன்.”, கைலாஷ் சொல்லும்போதே,
“இல்லைன்னா அவர் அப்பாகிட்ட பேசலாம் சர். சித்தார்த் சர்க்கு அவங்க அப்பாகிட்ட பயம். வெங்கட்ராமன் சர்க்கு என்னைத் தெரியும். நான் நடத்தின ஒரு எவென்ட்க்கு வந்திருந்தார். அவரோட மத்த கம்பனிக்கும் நடத்தி தர சொன்னார். மறந்திருக்க மாட்டார். “, ஸ்ரீ இப்போதுதான் வாயை திறந்து பேசினாள்.
அவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்த கைலாஷ், “குட், அந்த ஒரு ட்ரம்ப் கார்ட் வெச்சுக்கலாம். ஆனால் பணக்கார வர்க்கம், தப்பே பண்ணாலும் அவங்க பிள்ளைங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க ஸ்ரீ. சோ, அவர் அப்பாகிட்ட பேசுவோம்னு லேசா மிரட்ட வேணா செய்யலாம், யூஸ் பண்ண வேண்டாம்.”, என்றான்.
“சர்… நீங்க பேசறீங்களா? இல்லை நான் பேசட்டுமா சித்தார்த் கிட்ட ?”, கைலாஷ் கேட்க, “நீங்களே பேசுங்க சர். அழுத்தம் குடுக்கணும்னா, நானும் சேர்ந்துக்கறேன்.”, என்றார் பாண்டியன்.
கைலாஷ் சித்தார்த் நம்பரை அழைக்கவும், உடனே எடுத்தான். “ என்ன கைலாஷ்? எல்லாம் ஓகேவா முடிஞ்சுதுனு சொன்னீங்க. இப்ப திரும்ப கூப்பிட்டிருக்கீங்க?”, என்றான் சித்தார்த் எடுத்த உடனேயே.
“ஹாஸ்டேஜ் ரெஸ்க்யூ வீடியோ எடுத்து யூடியூப்ல போட்டுட்டுடாங்க சித்தார்த். இப்ப ப்ரெஸ், மீடியா எல்லாம் ஆஃபீசுக்கும் நவீன் வீட்டுக்கும் போன் பண்ணி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.”, என்றவன், தொடர்ந்து தான் யோசித்து வைத்திருந்த கதையை விளக்கினான்.
ஸ்பிக்கர் மோடில் இருந்த போனையே அனைவரும் பார்த்திருந்தனர். “என் பேர் வராம எதுவும் செய்ய முடியாதா கைலாஷ் ?”, என்றான் யோசனையான குரலில்.
அடுத்த ஐந்து நிமிடங்கள் முன்னும் பின்னுமாக கைலாஷின் யோசனை அலசப்பட்டது.
கிடைத்த ஒரு இடைவெளியில், “சர்… நான் ஸ்ரீ. நான் இந்த நிலைமையில நிக்கறதுக்கு யார் காரணம்னு கொஞ்சம் யோசிங்க சர். நீங்கதான் என்னை கன்வின்ஸ் பண்ணி, இது சாதாரண ஒரு திறமை. இதுக்காக உனக்கு வேலை கொடுக்கறேன்னு சொன்னீங்க. ஒரு வாய்ப்பாதான் நான் சம்மதிச்சேன். வாங்கின சம்பளத்துக்கு முடிஞ்ச அளவு சிறப்பாதான் வேலை பார்த்தேன். என் விஷன் மூலம் கோடிக் கணக்குல லாபம் பார்த்தீங்க. உங்க அப்பா , ஃப்ரெண்ட்ஸ், மனைவின்னு எல்லாரும் உங்களை பெருமையா பேசினாங்க. நீங்களேதான் என்னை மாட்டிவிட்டீங்க. கைலாஷ் சர் ஏற்பாடு பண்ணி காப்பாத்தியும் விட்டீங்க. இப்ப இதால இன்னொரு பிரச்சனை வந்தா அதுக்கும் நீங்கதான் சர் சொல்யூஷன் சொல்லணும். ஏன்னா, எல்லா பலனும் உங்களுக்கு இருக்க, எல்லா இழப்பும் எனக்கும் என்ன சார்ந்தவங்களுக்கும் இருக்கு. நியாயமா நடந்துப்பீங்கன்னு நம்பறேன் சர்.”, என்றாள் அமைதியான அதே சமயம் உறுதியான குரலில்.
எதிர்முனையில் நிசப்தம் மட்டுமே. “கைலாஷ்… ஸ்ரீபெரும்புதூர் கிட்ட புதுசா ஒரு ஃபாக்ட்ரி கட்ட நிலம் வாங்கப்போறேன். அங்க காசு கேட்டு ஒரு கட்டப்பஞ்சாயத்து. ஒரு ஃப்ரெண்ட்ங்கற முறையில ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருந்தேன். நீங்க அவங்களை கூப்பிட்டு மிரட்ட, அந்த ஆத்திரத்துல என் ஸ்டாஃபை தூக்கி வைச்சு என்னை ப்ளாக்மெயில் பண்ண பார்த்தாங்க. இது தான் ஸ்டோரி. நான் என் லாயரை அனுப்பறேன். எனக்கு பதிலா அவர் ப்ரெஸ் மீட்ல பேசுவார். ஸ்ரீ முழுக்க முழுக்க தெரியாம சிக்கின அப்பிராணி. எங்க கம்பனி எப்பவும் அவங்க கிட்ட வேலை செய்யறவங்களை கைவிடாது. “, என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.
“கரெக்டா உன் பாஸை ப்ராக்கெட் போட்ட ஸ்ரீ. சிறப்பா நச்சுன்னு சொல்ல வேண்டியதை சொல்லி, அவருக்கு இருக்க பொறுப்பை ஞாபகப்படுத்திட்ட. ஸ்மார்ட் மூவ் யங் லேடி !”, கைலாஷ் மெச்சினான்.
அவன் பாராட்டில் நவீனும் ராகுலும் புன்னகைத்தாலும், ஸ்ரீயிடம் ஒரு சோர்ந்த புன்முறுவல் மட்டுமே தெரிந்தது. ஸ்ரீயின் பெற்றொரிடம் அதுவும் இல்லை.
அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, கைலாஷ் ஆஃபீஸின் ப்ரெஸ் ரூமில் மீடியாக்கள் கூடியிருந்தார்கள்.
கைலாஷ் முதலில் தன்னை அறிமுகப் படுத்தி அவர்கள் தயாரித்திருந்த கதையின் பின்புலத்தைக் கூறினான். அடுத்து அவர்கள் பார்த்த வீடியோ உண்மை என்றும், நடந்தது என்ன என்று சுருக்கமாக விளக்கினான். எப்படியும் கேட்பார்கள் என்று, அடிபட்டவன் மண்டையில் ஃப்ராக்சர் ஆகியிருப்பதால் மயக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவலையும் முன் கூட்டியே சொல்லிவிட்டான்.
அடுத்து, லாயர், நவீன் மற்றும் ஸ்ரீ அழைக்கப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டனர். காமெராவின் ஃப்ளாஷ் மழையில் ஸ்ரீயின் கண்கள் கூசியது.
“நிமிர்ந்து காமெராவை பார்க்காதே. லேசா கீழ பார், கண்ணு கூசாது.”, முன் அனுபவம் பெற்றிருந்த நவீன் குனித்து ஸ்ரீக்கு சொல்லிக் கொடுத்தான்.
கேள்விகள் வரத் தொடங்கின. கடத்தல் பற்றி பெரிதாக லாயர் மற்றும் ஸ்ரீயின் பதில்களில் சுவாரஸ்யம் இல்லை என்றவுடன் அதை விடுத்து, ஸ்ரீ யை நோக்கி,
“அதென்ன கன் பாயிண்ட்ல நிக்கும் போது உங்க நண்பர் என்ன சாப்பிட்டன்னு கேட்கவும், நீங்களும் சாப்பிட்டதை சொல்றீங்க, திரும்ப அவரையும் குசலம் விசாரிக்கறீங்க ?” ,என்று சிரித்துக் கொண்டே ஒரு மத்திம வயது ரிப்போர்ட்டர் கேட்டார்.
இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த ஸ்ரீ, தோளை குலுக்கி, “ராகுல் கேட்டதுக்கு பதில் சொன்னேன். ரொம்பல்லாம் நான் யோசிக்கலை சர். அவ்வளவு கிட்டத்துல துப்பாக்கிய பார்த்த அதிர்ச்சியில இருந்தேன்.”, என்றாள்.
“எதாவது பேசி டைவர்ட் பண்ண சொல்லியிருந்தேன் ராகுல் கிட்ட. அவன் அதை சரியா செய்யவும், அவளை நோக்கி இருந்த துப்பாக்கியை நகர்த்தினான் அந்த ஆள்.”, என்றான் நவீன்.
அடுத்து வந்த கேள்விகள் எல்லாம் அவன் வீசிய பந்தைப் பற்றியதாக இருந்தது.
அவன் செய்தது சரியா என்ற கேள்வியே பலவிதமாக வர, “ தெரியலை சர். எனக்கு தெரிஞ்சு ஒரு பதினாறு வருஷமா தினமும் பவுலிங், ஃபீல்டிங் ப்ராக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கேன். கையில பந்து இல்லாம இருந்ததே இல்லை. அன்னிக்கும் என் ஷோல்டர் பையில் இரண்டு பந்து வெச்சிருந்தேன். அத்தனை வருஷ அனுபவம் எனக்கு தைரியம் குடுத்துச்சு. மனுஷ தலையைவிட ஸ்டம்ப் ஏரியா சின்னது, அதுவும் சைட்லர்ந்து அடிக்கும் போது. அந்த ஸ்டம்ப்பையே அடிக்கும் போது இது மிஸ் ஆக வாய்ப்பு ரொம்ப கம்மின்னு தோணுச்சு. அப்படியே ஆனாலும் ஸ்ரீ உயரம் அவனை விட அரை அடி கம்மி, சோ அவ மேல படாது. அவ்வளவுதான் யோசிச்சேன். பந்தோட ஆங்கிள், ஸ்பீட் எல்லாமே நொடி நேர கணக்குதான்.“, என்றான்.
அதுதான் அன்றைய மீடியாக்களின் ந்யூஸ் பைட்டாக மாறிப்போனது. அவன் வீசியதும், பேசியதும் மீண்டும் மீண்டும் போடப்பட்டது. வல்லுனர்கள் அவன் மணிக் கட்டை சுழற்றியது, பந்தின் வேகம், அவன் இருந்த ப்ரஷர், சரியாக இலக்கை அடைந்த பந்து என்று இந்தியா முழுதும் வைரலாகிவிட்டது.
இப்படி ஒரு ஃபீல்டர்தான் டீமுக்கு அவசியம். ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்து, இன்னும் ஒரு வீரர். தென் ஆப்பரிக்க ஜான்ட்டி ரோட்ஸ் போல இவர் திசைக்கு பந்து சென்றாலே எதிரணியினர் ஓடுவதற்கு அஞ்சுவர் என்று ஆங்கில சானல்களும் பேச ஆரம்பித்தது. இது எல்லாவற்றுடன், பெண்ணை அதுவும் அத்தை பெண்ணை காப்பாற்ற வீசிய பந்து என்பது மேலும் சுவாரசியமாக பேசப்பட்டது.
ஸ்ரீ வீட்டில் போன் ஓயாமல் அடித்தது. யார் அது அத்தைப் பையன், எங்களுக்குத் தெரியாமல் ? என்ற தன் அக்கா, தங்கையிடம் என்ன சொல்வது என்று முழித்தார். அதுவும் மல்லியோ, “நவீன் ப்ரெண்டுன்னுதானடி உன் பொண்ணு விருந்துக்கு அழைச்சிகிட்டு வந்தா. இப்ப எப்படி உறவாச்சு?”, என்று கிடுக்கிப் பிடி போட,
“அது.. அப்படிதான் நானும் நினைச்சேன். ஸ்ரீ அப்பா நவீன் கிட்ட பேசும்போதுதான் யார் எவருன்னு விசாரிச்சதுல அவர் பக்கம் தூரத்து சொந்தம்னு தெரிஞ்சுது. ரொம்ப வருஷமா டச்லயே இல்லை. சரி நீ வை. நான் அப்பறம் கூப்பிடறேன்.”, என்று துண்டித்தார்.
ஒரு வகையில் விஷயம் திசை திரும்பியிருந்தாலும், கேட்பவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை.
அங்கே கோயம்புதூரிலும் நிலைமை கிட்டதட்ட இதேதான். அவன் அம்மா செய்த ஆர்பாட்டத்தில் அன்று மாலையே விமானம் மூலம் அவன் வீட்டிற்கு திரும்பியிருந்தான் நவீன்.
யார் இந்தப் பெண்?… அது எப்படி அத்தை பெண் ஆனாள் என்று பிலு பிலு வென்று பிடித்துக்கொண்டார் கோகிலா, நவீனின் அன்னை.
“மா… அந்த யூடூயுப்காரன் யார்கிட்ட விசாரிச்சானோ? இல்லை அவனா கற்பனை பண்ணி சொன்னானோ… இப்படி சொல்லிட்டான். இப்ப போய்..இல்லை உறவெல்லாம் இல்லைன்னு சொல்லிகிட்டு இருந்தா இன்னும் ப்ரெஸ்ல கேள்வியா கேட்பாங்க. அதான், அப்படியே விட்டுட்டோம்.”, என்று எற்கனவே யோசித்து வைத்ததை அலட்டிக்கொள்ளாமல் அவிழ்த்துவிட்டான். உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள என்ன, புரிந்து கொள்ளும் பக்குவம் கூட இப்போது அவன் அன்னைக்கு இல்லை என்பதை நன்கு அறிவான் நவீன்.
“அப்ப கேட்கறவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்ல முடியும்? நீ சொன்னதையே சொன்னாலும், அப்ப ஏன் இவன் அங்க போனான்? ஏன் காப்பாத்தினான்னு கேட்கறாங்களே…”, என்றார் கோகிலா.
மகன் என்ன சொல்லப் போகிறான் என்று சக்கரவர்த்தியும் அவனையே பார்த்தார்.
“அது… ராகுலும், ஸ்ரீயும் என் ஃப்ரெண்ட்ஸ் மா. அன்னிக்கு சென்னையிலர்ந்து உனக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தேனே? அன்னிக்கு ஸ்ரீ வீட்லதான் எனக்கு லன்ச். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சுன்னு சொன்னதும், உடனே கூட்டிட்டு போனா. நல்ல பொண்ணுமா… அவங்க அம்மாவும் ரொம்ப நல்ல டைப். இன்னும் சாப்பிடு..ஓடி ஆடற பிள்ளைன்னு உன்ன மாதிரியே நிறைய சாப்பிட வெச்சிட்டாங்க.”, என்று அம்மாவுக்கு ஐஸ் வைத்தான்.
“சரிடா… அதுக்கு ?”, ஆனாலும் அசரவில்லை கோகிலா.
“மா… ராகுல் இந்த மாதிரின்னு சொல்லி துணைக்கு வர முடியுமான்னு கேட்டா, எப்படிமா வரமாட்டேன்னு சொல்றது. இப்படி பந்தை எடுத்து வீசுவேன்னு எனக்கு எப்படி தெரியும். ஃப்ரெண்டுக்கு ஒரு உதவிக்கு போனேன்.”, தோழனுக்கு உதவி என்ற கதையை கம்பி கட்டினான் நவீன்.