ஒரு வழியாக பாண்டியன், வனரோஜாவை சாப்பிட வைத்து, இவனும் உண்டு, அவர்கள் வீட்டை விட்டு தன் பைக்கில் கிளம்பிய ராகுலின் கைப் பேசி அழைக்க, வண்டியை ஓட்டியபடியே ப்ளூ டூத்தில் ஆன் செய்தான்.
“ஹலோ… ராகுல் ? நான் நவீன் பேசறேன்.”
“ஓஹ்… சொல்லுங்க நவீன். என்ன….?”, என்றாலும் ஒரு மாதிரி அனுமானிதிருந்தான்.
நாளை வெளியில் செல்லலாம் என்று சொல்லியிருந்ததால், நவீன் கண்டிப்பாக ஸ்ரீக்கு பேசுவான், அவள் போன் ஸ்விட்ச் ஆஃப் என்றால் தனக்கு அழைப்பான் என்று எதிர்பார்த்திருந்தான். அதை மெய்பிப்பதுபோலவே நவீனும்,
“ஷிட்…. அப்ப நிஜம்தானா நீ சொல்றது ? அவளை ஏண்டா கடத்தணும்…..? ரிடிக்குலஸ். சரி… நான் எக்மோர் வரேன். வாசல்ல வெய்ட் பண்ணு. வந்திடறேன்.”, குரலில் பதட்டம் தொற்ற, நவீன் கைபேசியை அணைத்திருந்தான்.
ராகுல் சென்ற ஐந்து நிமிடத்திற்கெல்லாம் நவீன் வந்து சேரவும், இருவருமாக கைலாஷின் பெயர் சொல்லி, அவர் அழைத்திருப்பதாக சொல்ல, அவனது அலுவகத்திற்கு பேசி, பின் அனுமதி கிடைத்தது. அதற்குள் ராகுலிடம் ஸ்ரீ எப்படி கடத்தப்பட்டாள், இவர்களுக்கு எப்படி தெரிந்தது என்ற கதையை வாங்கியிருந்தான் நவீன்.
கைலாஷ் போனில் பேசிக்கொண்டிருந்தவன், முடித்துவிட்டு நவீனைப் பார்த்து புருவம் சுருக்க, “சார், எங்க ஃப்ரெண்டு சொல்லியிருக்கேனே? கிரிக்கெட் ப்ளேயர் நவீன். ஸ்ரீ எங்கன்னு கேட்கவும், சொன்னேன். அதான் என் கூட இருக்க வந்திருக்கார். சர் மிஸ்டர். கைலாஷ்.”, என்று அறிமுகப் படுத்தினான். கைலாஷ் நவீனின் நீட்டிய கையை குலுக்கிய படியே,
“ஹலோ நவீன்.” எனறவன், “ம்ம்.. ராகுல், வேற யாரும் போன் பண்ணி ஸ்ரீ எங்கன்னு கேட்டா உண்மையை சொல்லாதீங்க.”, என்று எச்சரித்தவன், நவீன் புறம் திரும்பி, “உட்காருங்க நவீன். உங்க கிட்ட பேசலாம்னு நினைச்சிருந்தேன். குட். நீங்களே வந்துட்டீங்க.”, என்று சொல்லிவிட்டு. ஸ்ரீ எப்படி அறிமுகம், எத்தனை நாள் பழக்கம் என்பதாக சற்று கேட்டான்.
“நவீன், நீங்க ஐ.பி.எல் செலக்ட் ஆனதும், புக்கீஸ் யாரும் நூல் விட்டாங்களா ? புது ஆளுங்களை வழக்கமா டார்கெட் பண்ணுவாங்களே?”, என்று கேட்டான்.
எதற்கு சம்மந்தமில்லாமல் இந்த கேள்வி என்று புருவம் சுருக்கினாலும், “ ஐ.பி.எல் ஏலம் எடுத்ததுமே, எங்க மானேஜ்மென்ட் இது பத்தி பேசினாங்க. பெட்டிங் ஆளுங்க பேச முயற்சிப்பாங்க. எதுவும் பண்ண வேணாம், இந்தா வெச்சிக்கங்கன்னு காஸ்ட்லி கிஃப்ட்ஸ் வரும். வாங்காதீங்க. சந்தேகமா இருந்தா எங்ககிட்ட சொல்லுங்கன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இதுவரை எதுலையும் சிக்கலை. எதுக்கு சர் திடீர்னு இது பத்தி கேட்கறீங்க?”, நவீன் விளக்கம் கொடுத்ததோடு தன் சந்தேகத்தையும் கேட்டான்.
“இது பெட்டிங் சம்மந்தப்பட்ட ஆளுங்களால நடத்தப்பட்டிருக்கலாம்னு ஒரு டவுட். “, என்று கைலாஷ் சொன்னதும் நவீன் முகத்தில் குழப்பமே மிஞ்சியது.
“ஸ்ரீயோட விஷன் பத்தி என்ன நினைக்கறீங்க? உங்க பத்தி எதுவும் சொல்லியிருக்காங்களா?”, கைலாஷ் அடுத்து கேட்டதில், ராகுலைப் புரியாமல் பார்த்தவன்,
“நீங்க என்ன கேட்கறீங்கன்னு எனக்கு புரியலை சர். ஸ்ரீ யாரோ கடத்திருக்காங்க. ஏன் எதுக்குன்னு நீங்க விசாரிக்கறதா சொன்னான் ராகுல். நீங்க சம்மந்தமேயில்லாம கேள்வி கேட்கறீங்க. என்ன விஷன்? எனக்கு புரியலை ? எதுவானாலும் உடைச்சு கேளுங்க சர். “, என்றான் நவீன் சற்று எரிச்சலான குரலில்.
“சர்… அது, நவீனுக்கு ஸ்ரீயோட விஷன் பத்தி தெரியாது. அவளோட ஃப்ரெண்ட்ஸ், நெருங்கின சொந்ததுக்குக் கூட தெரியாது. நவீன் ஹாட்ரிக் அடிக்கப் போறதை பத்தி அவருகிட்ட சொல்லியிருக்கா, ஆனா ஒரு விஷ் மாதிரிதான். அதுக்கு முன்னாடி அஷ்வின் அஞ்சு விக்கெட் எடுப்பார்னு சொன்னா, அதுவும் வாழ்த்து மாதிரிதான். “, ராகுல் சொல்ல இப்போது நவீன் முழித்தான்.
“என்னடா விஷன் விஷன் பேசறீங்க ? விஷன்னா ?”
ராகுல் ஒரு மாதிரி அவனுக்கு தெரிந்த அளவில் நவீனுக்கு விளக்கினான். “நிஜமாவா ? நான் ஹாட்ரிக் எடுக்கற மாதிரி ஸ்ரீ முன்னாடியே பார்த்தாளா ? “, நவீனுக்கு ஆச்சரியம்.
“ஸ்ரீ நினைச்ச நேரம் விஷன் வருமா ராகுல் ? அவங்க எதைப் பத்தி நினைக்கறாங்களோ, அதைப்பத்தி வருமா ?”, கைலாஷ் கேட்க, “இல்லை சர்… அப்படியெல்லாம் இல்லை. அதுவா வரும். யாரைப் பத்தி வேணாலும் வரும். அப்படித்தான்… “, என்று இராமலிங்கம் மனைவி பாத்ரூமில் விழுந்திருந்தைக் கண்டவள், அவரைக் காப்பாற்ற சென்ற கதையைக் கூறினான்.
“ரிமார்க்கபிள்…. ப்ரீ-காக்னிஷன் பத்தி படிச்சிருக்கேன். ஆனா அப்படி சக்தி இருக்கவங்களை பார்த்ததில்லை. “, கைலாஷ் கூறவும்,
“அதுனாலதான் இப்ப ஸ்ரீ சிக்கியிருக்காளா சர்? எதுவும் அவளைப் பத்தி தெரிஞ்சுதா? அவ அம்மா அப்பா ரொம்ப பயந்திருக்காங்க சர்…. “, ராகுல் வந்த உடன் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டான்.
“ஹ்ம்ம்…. அந்த வண்டி ஈ.சி.ஆர் ரோட்ல பாண்டிச்சேரி பக்கம் போற ரூட்ல எட்டரை மணி போல காமெரால மாட்டியிருக்கு. அதுக்கு அடுத்து வந்திருக்க வேண்டிய காமெரால வரலை. அதை இன்னொரு வாட்டி செக் பண்ண சொல்லியிருக்கேன். அது உறுதியானா ஒரு ஏரியா தெரிய வாய்ப்பிருக்கு. ஆனா அந்த சைட் நிறைய கெஸ்ட் ஹவுஸ், தனி வீடுங்க. அங்க எங்க வேணா வெச்சிருக்கலாம். “, கைலாஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, போன் வர அவன் எழுந்து போனான்.
“ராகுல். நிஜமா என்ன நடந்துச்சு ? அப்படியே ஸ்ரீ எதோ விஷன் பார்த்தாலும், உங்கிட்டயும் என் கிட்டயும் சொன்னதுக்கும் அவளை கடத்தறதுக்கும் என்ன லிங்க் ?”, நவீன் தான் கேட்டவற்றை கிரகித்துக் கொள்ள முடியாமல் ராகுலை கேட்டான்.
ராகுல் ஒரு பெருமூச்சுடன், ஸ்ரீ எப்படி சித்தார்த்திடம் வேலை வாங்கினாள் என்ற கதையை சொல்லி, “அதனால சந்தேகப் படறாங்க போலருக்கு. கூட சித்தார்த்தும் கைலாஷ் கிட்ட தனியா எதுவோ சொன்னார். அதை கைலாஷ் எங்ககிட்ட சொல்லலை. அந்த மனுஷன் பெட் கட்டி நல்லா பணம் பார்திருக்கார், கடைசீல ஸ்ரீ சிக்கியிருக்கா.”, என்று முடித்தான்.
“ஷிட்… நீங்க அந்த பெங்களூரு மாட்சுக்கு வராம இருந்திருந்தா, அந்த சித்தார்த்தை பார்த்தே இருந்திருக்க மாட்டீங்க. சே…”, என்று நவீன் வருந்தினான்.
கைலாஷ் வரவும், “சர்… அந்த சித்தார்த் என்ன சொன்னான் உங்ககிட்ட? அதுனாலதான் ஸ்ரீயை புக்கீஸ் கடத்திருப்பாங்கன்னு நினைக்கறீங்களா?”, நவீன் நேரடியாக கேட்டுவிட்டான்.
“ஹ்ம்ம்.. வேற எதுவும் மோட்டிவ் தெரியலை. எந்த டிமாண்டும் வரலை, சோ பணத்துக்காக இல்லை. ஸ்ரீ வீட்டுல யாரையும் சந்தேகப்படலை. அப்படி எதுவும் லவ் இருக்க மாதிரியும் இல்லைன்னு சொல்றாங்க. ஸ்ரீயோட சோஷியல் மீடியாவைப் பார்த்தேன். எதுவும் சந்தேகப்படற மாதிரி இல்லை. போன் ரிகார்ட்ஸ் பார்த்தேன். அதுலதான் நீங்க கிட்டதட்ட தினமும் நைட் பேசறீங்கன்னு தெரிஞ்சுது. அதான் விசாரிக்கலாம்னு நினைச்சேன்.”, கைலாஷ் சித்தார்த் என்ன சொன்னான் என்ற கேள்வியை லாவகமாக தவிர்த்து, தான் கேட்க நினைத்ததை கேட்டான்.
“அது… ஆமாம்… இப்பதான் பழக்கம்னாலும் நல்ல ஃப்ரெண்டு… “
“தினமும் என்ன பேசுவீங்க நவீன்?”, கைலாஷ் கேட்க, தோளைக் குலுக்கினான் நவீன்.
“அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னுதான். அவ ஆஃபீஸ், என் நாள் எப்படி போச்சு… பொதுவான விஷயங்கள் இப்படித்தான்.”
“பொதுவாதான் பேசுவோம். ஸ்ரீக்கு கிரிக்கெட் பத்தி பெருசா எதுவும் தெரியாது. அதனால் அவகிட்ட அதுபத்தி பேச்சு இருக்காது. அதைத்தான் நாள் பூரா டீமுக்குள்ள பேசறோமே.”
“நீங்க பேசினதுல ஸ்ரீ யாரும் அவங்களை அப்ரோச் பண்ண மாதிரி எதுவும் சொன்னாங்களா ? கொஞ்சம் யோசிச்சு பார்த்து சொல்லுங்க.”
சம்மதமாக தலை அசைத்தவன், “ தனக்கு இப்படி ஒரு விஷன் வரும்முன்னோ, இல்லை இப்படித்தான் வேலை கிடைச்சதுன்னோ சொல்லலை. நாந்தான் எல்லாம் ஷேர் பண்ணிருக்கேன் போல. ஸ்ரீ எங்கிட்ட ஃபில்டர் பண்ணித்தான் பேசியிருக்கா சர். இருந்தாலும் யோசிக்கறேன்.”,
“இருங்க வரேன். “, என்று கைலாஷ் வெளியில் செல்ல, ராகுல், “நவீன் அவ எப்படி வேலைக்கு சேர்ந்தான்னு அவ அப்பா அம்மாக்கோ, இல்லை எனக்கோ கூட சொல்லலை. அண்ட் அவ விஷன் பத்தியும் ரொம்ப சில பேருக்குத்தான் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க. “, என்று சொல்ல,
“ஓ… நண்பியை விட்டு குடுக்க மாட்ட ? நல்ல ஃப்ரெண்டுடா நீ.”, என்று நவீன் சொன்னாலும் குரலில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது.
“கிட்டத்தட்ட அஞ்சு மணி நேரமாகிருச்சு. என்னடா பண்றாங்க. “, என்று புலம்பினான் நவீன்.
“இந்த மனுஷன் போன் பேசியே காலத்தை ஓட்டறார். எனக்குமே சந்தேகமாயிருக்கு நவீன். பார்த்தீங்களா, சித்தார்த் என்ன சொன்னான்னு நம்ம கிட்ட சொல்லவே இல்லை.”, ராகுல் கேட்க,
“ம்ம்… எனக்கும் தெரிஞ்சுது. அவங்க மூலம் வரவும், சித்தார்த்தை ப்ரொடெக்ட் பண்றாங்க. அப்ப கண்டிப்பா அந்த மனுஷந்தான் எதுவோ பண்ணியிருக்கணும்டா. சித்தார்த் ஸ்ரீகிட்ட போட்ட டீல் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு. அவரா அதை கெடுத்திருக்க மாட்டார். ஸ்ரீ ஒரு வேளை அவர் பண்ற பணத்துல பங்கு கேட்டிருப்பாளா? ஆனா அவர் கடத்தியிருந்தா, எதுக்கு இப்படி ஸ்பெஷலா தேட ஏற்பாடு செய்யணும் ?”, நவீன் கோணங்களை ஆராய,
“ஸ்ரீயை பார்த்தா பணம் கேட்டு டீல் பேசறா மாதிரியா தெரியுது நவீன் உங்களுக்கு ?”, ராகுல் விறைப்பாய்க் கேட்டான்.
“இல்லைடா… பாசிபிளிட்டீஸ் சொன்னேன். “, என்ற நவீன், “ நான் உன்னை டா போட்டு பேசறேன்… நீ இன்னும் வாங்க போங்கன்னு பேசற? அதை விட்றா.”, என்றான் ராகுலைப் பார்த்து.
“அது.. ஸ்ரீ சொல்லியிருக்கா. உங்களை மரியாதையாத்தான் கூப்பிடணும்னு. அதான்.”, ராகுல் சொல்லும்போதே, அவர்கள் கல்யாண விஷனை சொல்லுவோமா என்று நினைத்தவன், ‘வேணாம். அது ஸ்ரீக்கும் நவீனுக்குமானது’, என்று அதோடு நிறுத்திக் கொண்டான்.