அவளோ “இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்” என்று சொன்னாள்.
“வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா”, என்று சொல்லிவிட்டு வைக்க போக,
“இங்க பாரு உன் புருஷன் கூட எல்லாம் வர முடியாது”, என்று சொன்னாள்.
“ஏமா நீ என் புருஷன் கூட வா, இல்ல உன் டீம் லீட் கூட வா, ஆனா ஒழுங்கா வந்து சேரு”, என்று சொன்னாள்.
“திமிரு எல்லாம் திமிரு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
பின்பு அவள் அறியாமல் மனதிற்குள் ஒரு பதட்டம் வந்தது,
‘பெரியவங்க எல்லாம் சேர்ந்து எதுவும் ப்ளான் இருக்குமோ’ என்ற பயம் வந்தவுடன் பரிதிக்கு போன் செய்து “எல்லாரும் வந்துருக்காங்க இப்படி பேசுறாங்க, கொஞ்சம் பயமா இருக்கு, நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வருவீங்களா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அது எல்லாம் ஒன்னும் இருக்காது, பயப்படாத, எதுவும் சொன்னா போன் பண்ணு”, என்று சொன்னவன், ” பார்க்கலாம் விடு” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதே நேரம் கதிரவன் வீட்டில், கதிரவனின் நண்பர்களோடு சாரா வந்து சேர்ந்திருந்தாள்.
அதற்கு ஒரு நாள் முன்னால் தான் கதிரவனின் அக்கா தன் பிள்ளைகளோடு வந்திருக்க, நண்பர்களை பார்த்ததும் கதிரவனின் அம்மா எப்போதும் போல வரவேற்று உபசரித்தார்.
சாராவை பார்த்ததும் “யாருப்பா இது” என்றார்.
அவர்களோ “எங்களோடு கல்லூரியில் படித்தவள்”, என்று மட்டும் சொன்னார்கள்.
கதிரவனின் அம்மா ‘ஒருவேளை இந்த பெண்ணை தான் கதிர் விரும்புகிறானோ’ என்று ஒரு நிமிடம் தவறாக கணித்தார்.
அதே நேரம் சாராவும் “கதிரவனை பார்க்க வேண்டும்” என்று ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
கதிரவனின் அம்மா தான் அவன் அப்பாவிடம் சொல்லி “அவனை ஃபோன் பண்ணி வர சொல்லுங்க” என்று ஜாடையாக அந்த பெண்ணை காட்ட,
கதிரவனின் அப்பாவும் ‘இந்த பொண்ணா’ என்று யோசித்தார்.
ஏனெனில் அவள் உடை அவளுடைய பேச்சு எல்லாம் வெளிநாட்டில் வசிப்பவர்கள் போலவே அவள் மெயின்டைன் செய்து கொண்டிருந்தாள்.
கதிரவனின் அக்காவோ ‘ஐயோ இந்த பொண்ணா, இது எப்படி ஒத்துவரும்’ என்று நினைத்தாள்.
அவளுடைய அம்மாவோ “கதிரை எப்ப இருந்துமா தெரியும்” என்று கேட்டார்.
“அவங்க காலேஜ் படிக்கும் போதே தெரியுமே, நான் அவங்க ஜூனியர்” என்று சொன்னாள்.
கதிரவனின் அம்மா அப்பா அக்கா அனைவருமே ‘ஒருவேளை கதிரவன் சொன்ன பெண் இவள் தானோ’ என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
அதே நேரம் கதிருக்கு போன் செய்து அவன் அப்பா சொன்னார்.
“வீட்டிற்கு இப்படி உன் நண்பர்களோடு ஒரு பெண் வந்திருக்கிறாள்” என்று சொல்லவும்.
ஏற்கனவே அவள் வீட்டில் ஆட்கள் வந்திருக்கிறார்கள், பயந்து போய் சொன்னாள், இவர்களும் ஏதோ சொல்ல, வேலையில் இருந்தவனுக்கு ஏக கடுப்பாகி போனது, “வரேன் வைங்க” என்று சொன்னவன்,
தன் நண்பனிடம் அழைத்து, “வந்திருக்கிறது யாரு” என்று கேட்டான்.
அவன் சொல்லவும் “அறிவு இருக்கா, யார கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த”, என்றான்.
அவனும் “இல்லடா நாங்க எவ்வளவோ சொன்னோம், அவ தான் வந்தே ஆகணும், பார்த்தே ஆகணும்னு சொன்னா”, என்று போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சொன்னான்.
“இரு, இப்ப வந்து உங்க எல்லாரையும் கவனிச்சிக்கிறேன்” என்று சொல்லி கோபமாகவே போனை வைத்தான்.
அதே நேரம் ராதாவோடு சேர்ந்து பெரியவர்கள் எல்லாம் யாழினி வீட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர்.
ராதாவின் அம்மாவோ, “வீட்டை நீட்டா வைச்சிருக்கா யாழினி”, என்று சொன்னார்.
யாழினி அம்மாவோ “அதை மட்டும் தான் செய்வா, மத்த ஒன்னும் செய்ய மாட்டா, சமைப்பா சாப்பிடுவா, வீடு நீட் பண்ணுவா, எனக்கும் என்ன செய்ய ன்னு புரியல”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்,
“இன்னும் விளையாட்டு தனமா இருக்கா, சரியாயிருவா”, என்று பெரியம்மா சொன்னார்.
“இன்னைக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து தான் பேசுறீங்க, இப்ப பார்த்திருக்க ஜாதகத்தையாவது இவ ஓகே பண்ணனும், நீங்க தான் பொறுப்பு, என்ன பண்ணுவீங்களோ தெரியாது, பேசி முடிக்கிறீங்க”, என்று சொன்னார்.
“அதான் உங்க பையன் கிட்ட சொல்லிட்டீங்க இல்ல, எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க”, என்று சொன்னாள்.
“அவன் கூட தானே வாரா, இப்பவும் கோவிச்சுட்டு வரமாட்டேன் சொல்ல மாட்டாளே”, என்று கேட்டார்.
“அதெல்லாம் மிரட்டி கூட்டிட்டு வந்துருவார் கவலைப்படாதீங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அதுபோலவே அவனும் மிரட்டி ஆபீசில் அவளை காரில் ஏற வைத்து கொண்டிருந்தான்.
நந்தனோடு யாழினி வீடு வந்து சேர்வதற்கு சற்று முன்பு தான் கதிரவனும் வேகமாக வீட்டிற்கு வந்திருந்தான்.
உள்ளே வந்தவன் யாரையும் பார்க்காமல் ஸ்சுவை கழட்டி விட்டு “வாங்கடா என்ன திடீர்னு வீட்டுக்கு” என்று கேட்டான்.
அவன் அம்மாவோ ‘என்ன இந்த பையன், இந்த பொண்ண லவ் பண்றான் னா வந்த உடனே அந்த பொண்ண தானே ஆர்வமா பார்த்திருக்கணும், இது என்ன இப்படி இருக்கான்’, என்று யோசித்துக் கொண்டு கதிரவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கதிரவனும் நண்பர்கள் அருகில் அமர்ந்தபடி, “என்ன விஷயம்” என்று கேட்டான்.
“ஏன்டா நாங்க எல்லாம் உன் வீட்டுக்கு வரக்கூடாதா” என்று இன்னொரு நண்பன் கேட்டான்.
“வரக்கூடாதுன்னு சொல்லல, ஆனா போன் பண்ணிட்டு வந்து இருக்கலாம், நான் வேலையில் இருப்பேன் ன்னு தெரியும், என்னோட வேலை பற்றியும் தெரியும், திடீர்னு வந்துட்டு போன் பண்ணா, நான் என்ன நினைக்கிறது” என்று அதட்டலாகவே கேட்டான்.
இவனுடைய சத்தம் பக்கத்து வீட்டு வரை கேட்டது.
வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தாலும் இவனுடைய ஓங்கிய சத்தத்தில், எதிர் வீட்டு ஆண்டி எட்டிப் பார்த்தார், அதே நேரம் அந்த வீட்டு தாத்தாவும் எட்டிப் பார்க்க,
ராதா தான், “ஏதோ அந்த அண்ணன் சத்தம் போடறாங்க, என்ன விஷயம் தெரியல” என்று சொல்லிக் கொண்டே க்ரீலை திறந்து வைத்தாள்.
அப்போது தான் சாரா பேச தொடங்கினாள்.
“சீனியர் எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளுங்க, எதுக்கு உங்க பிரண்ட்ஸ் கிட்ட கோப படுறீங்க, நான் தான் உங்க ப்ரண்ட்ஸ கட்டாயப்படுத்தி இங்க கூட்டிட்டு வந்தேன், நான் தான் உங்களை பார்க்க வந்திருக்கேன், இத்தனை வருஷமா ஜெர்மன்ல இருந்தேனே, நான் எப்படி இருக்கேன்னு கூட, நீங்க விசாரித்ததில்லை தெரியுமா”, என்று சொன்னாள்.
இவனோ “எனக்கு யாரையும் விசாரிப்பதற்கு எல்லாம் டைம் இல்ல, நான் எதுக்கு உன்ன பத்தி விசாரிக்கணும்” என்று அதட்டலாகவே கேட்டான்.
ஏதோ சண்டை போல என்று எதிர் வீட்டு பாட்டி, தாத்தாவும் அங்கிள் ஆன்ட்டி என வெளியே வர, இவனுடைய சத்தம் ஓங்கியே ஒலித்தது.
அவளோ “அப்போ என்னோட காத்திருப்புக்கு என்ன பலன்” என்று கத்தி கேட்டாள்.
“உன்னை யார் காத்திருக்க சொன்னா, நான் சொல்லவே இல்லையே”, என்றான்.
“நான் உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணினேன்” என்று அவள் கத்தினாள்.
ராதாவும் அவள் வீட்டில் உள்ளவர்களும் வெளியே வர, அனைவரும் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன்,
அக்கா தான், “டேய் மெதுவா பேசு நாலு வீடு இருக்கு, நீங்க கத்துற சத்தத்தில் மற்ற மூன்று வீட்டு ஆட்களும் வெளியே வந்துட்டாங்க”, என்று சொன்னாள்.
“தெரியட்டுமே எல்லாருக்கும் தெரியட்டுமே” என்றவன், கோபமாகவே அவளிடம் “உன்கிட்ட என்ன சொன்னேன், அதை மட்டும் சொல்லு” என்றவன் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு டேபிளிலிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்து தன் தொண்டைக்குள் சரித்து கொண்டவன்,
“இப்ப சொல்லு” என்றான். அவளோ அமைதியாக இருக்க, “நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண அப்ப, நான் என்ன சொன்னேன்”, என்றான்.
“நீங்க வேற யாரோ ஒரு பொண்ண விரும்புறதா சொன்னீங்க”, என்றாள்.
“சரி விரும்பறதா சொன்னேன், சொல்லிட்டு என்ன சொன்னேன்”, என்று கேட்கும் போது,
அவள் தயங்கி நிற்க, “உனக்கு மறந்து போயிருந்தா, நான் சொல்றேன், எத்தனை வருஷம் ஆனாலும் சரி, எத்தனை ஜென்மம் ஆனாலும் சரி, அவளுக்காக காத்திருப்பேன், அவளைத் தவிர வேற யாரும் எனக்கு கிடையாது ன்னு சொன்னேனா, இல்லையா, என் பின்னாடி வாராதே ன்னு உன்னை எத்தனை நாள் திட்டி இருக்கேன், எத்தனை நாள் சொல்லி இருக்கேன், அப்ப லூசு மாதிரி பண்ணது மட்டும் இல்லாம, இப்பவும் வீட்டு வரைக்கும் வந்து நிக்கிற, ஏன் என்னை கேவலப்படுத்தவா”, என்று கத்திக் கொண்டிருந்தான்.
நண்பர்களோ அதிர்ச்சிக்குள்ளாகி “யாரை சொல்ற” என்று கேட்டனர்.
“இசையை தான் சொல்றேன், வேற யாரையும் சொல்லல”, என்று சொன்னான்.
அவன் நண்பர்கள், “அந்த பொண்ணு எங்க இருக்குன்னு தெரியாதே டா, ஆனா நீ அவளை நினைச்சிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு இருக்க”, என்று கேட்டார்கள்.
“அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும், எனக்கு தெரிஞ்சா போதும்”, என்று சொன்னான்.
நண்பர்கள் அவனை ஆச்சரியமாக பார்த்ததோடு, சாராவை பரிதாபமாக பார்த்தனர், நண்பர்களின் பரிதாப பார்வை பிடிக்காத காரணத்தால் சாரா கோபப்பட தொடங்கியிருந்தாள்.