அதே நேரம் கதிரவனிடமிருந்து அழைப்பு வர எடுத்தவள்,

      “எப்ப வீட்டுக்கு வந்தீங்க, சாப்டீங்களா”, என்று கேட்டாள்.

     “அதெல்லாம் சாப்பிட்டாச்சு, நீ ஏதோ போன் பண்ணி என்கிட்ட கேளுங்க, அப்படின்னு எல்லாம் சொன்ன இல்ல, என்னது”, என்று கேட்டன்.

இவளும் சிரித்துக்கொண்டே “இல்ல, இன்னைக்கு நீங்க என்ன நம்பி வந்திருக்கியே, நான் உன்ன ஸ்வாஹா பண்ணிட்டா என்ன பண்ணுவன்னு கேட்டீங்க இல்ல”, என்றாள்.

“ஆமா கேட்டேன்” என்றான்.

    “எந்த தைரியத்துல வந்தேனா, ப்ராமிஸ் வாங்குவதற்கு முன்னாடியே என் கூட அத்தனை மணி நேரமா,  இரண்டு நாள் இருந்தீங்க, அப்பவே ஸ்வாகா பண்ணாத நீங்களா, ப்ராமிஸ் பண்ணதுக்கு அப்புறம் ஸ்வாகா பண்ணுவீங்க,  அந்த தைரியத்துல தான் வந்தேன்”, என்று சொன்னாள்.

      அவனும் “ஓஹோ”, என்று சொல்லி சிரித்தவன்,

   “இரு, நான் அடுத்து எப்ப மீட் பண்றேனோ, அன்னைக்கு இருக்கு”, என்று சொல்ல,

    “வாய்ப்பே இல்ல ராஜா, வாய்ப்பே இல்லை, இன்னும் அந்த ப்ராமிஸ் அப்படியே தான் இருக்கு”,  என்று சொல்லி “போய் தூங்குங்க”, என்று சொன்னாள்.

“அடிப்பாவி” என்று இவன் சொல்ல,

     “எப்படி இருந்த என்னை, இப்படி எல்லாம் பேச வச்சுட்டீங்களே”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே “குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்”, என்று சொல்லி அவனுக்கு முன்பே போனை கட் செய்தாள்.

    மறுநாள் விடுமுறை நாள் என்பதால் காலையிலேயே அவனிடம் போனில் பேசிவிட்டு உணவுக்கு தேவையானவற்றை வாங்கி வர  காரை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்.

    அதே நேரம் அவனும் அலுவலகத்திற்கு கிளம்ப, லிப்ட்டில் வைத்து “எங்க போற” என்றான்.

    “காய்கறி வாங்க, மொத்த திங்ஸ் எல்லாம் வாங்க”, என்று சொன்னாள்.

    “தனியா போற” என்றான்.

    ” நீங்க கூட வாங்க போலாம்”, என்றாள்.

“கொழுப்பு தானே யூனிபார்மில் இருக்கும் போது கூட வான்னு சொல்ற, நார்மல் ட்ரெஸ்ல இருக்கும் போது கூடவா ன்னு சொல்லி இருந்தேனா, கூடவே வந்திருப்பேன்”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே லிப்ட் கீழ்த்தளத்திற்கு வர,

     இவள் மெதுவாக பை சொல்லி விட்டு காரில்  ஏறி அமர்ந்தாள்.

    இவனும் அவளைப் பார்த்துக் கொண்டே, அவன் அலுவலக வண்டியில் ஏறி கிளம்பி சென்றான்.

     எப்போதும் வாங்கும் கடைக்கு சென்றவள், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் முட்டை என வாங்கிக் கொண்டாள்.  காரில் வைத்து விட்டு அன்று சமையலுக்கு தேவையான அசைவத்தையும் வாங்கிக் கொண்டே வீடு திரும்பி வந்தாள்.

அதன் பிறகு அன்றைய நாள் அவளை முழுதாக உள்வாங்கிக் கொண்டது.

அவளாக போன் செய்ய மாட்டாள், அவன் வேலை பற்றி தெரியும் என்பதால் மெஸேஜ் செய்வதோடு நிறுத்திக் கொள்வாள்.

அவன் ஃப்ரீயாக இருந்தால் மட்டுமே அழைப்பான். சிறிது நேரம் கிடைத்தாலும் அவளிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட வேண்டும், இது அவனுடைய பழக்கம்

அவ்வப்போது அவனுக்கு மெஸேஜ் போட்டுக் கொண்டிருந்தாலும், ராதாவிடமும் “என்ன சமைச்ச, சாப்பாடு எதுவும் வேணுமா, கொடுத்து விடவா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

   அவளோ “நானே ஈவினிங் வருவேன், செஞ்சதுல எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து வை, ஈவினிங் வந்து சாப்பிடுகிறேன்” என்று சொல்லி இருந்தாள்.

   “வா வா” என்று சொல்லி இருந்தாள், மாலை ராதாவோடு  அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது தான், வளைகாப்பு பற்றி ராதா சொன்னாள்.

    “இங்க வச்சே வளைகாப்பு போடுறாங்க” என்று சொல்லும் போதே ராதாவின் அம்மா அப்பா ஊரில் இருந்து வருவதாக சொல்லிக் கொண்டிருந்தான் நந்தன்.

    அவர்கள் வந்து இரண்டு நாளில் அவனுடைய அம்மா அப்பாவும்,  இவளுடைய அம்மா அப்பாவும் வருவதாக இருந்தது, அதன் பிறகு வளைகாப்புக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குவதாகவும் இருந்தது. அதன்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

   ராதா இன்னும்  இரண்டு நாளில் விடுப்பில் செல்ல இருக்கிறாள், என்ற சூழ்நிலையில் அன்று அலுவலகத்தில் ராதாவை அழைத்துக் கொண்டு கேண்டின் க்கு சென்றாள் யாழினி.

   அங்கு சென்றதும் ஒரு ஜூசை ஆர்டர் செய்து ராதாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸையும் வாங்கிக் கொடுத்து விட்டு, தனக்கு ஒரு ஜூசை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தவள், ராதாவிடம் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னாள்.

   “என்கிட்ட என்ன பேசணும், பீடிக்கை பலமா இருக்கு”, என்று சொல்லி தனக்கு பிடித்த ஸ்னாக்ஸை சாப்பிட தொடங்கினாள்.

“ராதா நான் ஒருத்தரை லவ் பண்றேன், அவர தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்”, என்று சொன்னாள்.

    அவளும் அவளையே பார்த்துக் கொண்டு, “நான் இதை டவுட் பண்ணேன், சரி சொல்லு என்ன விஷயம்”, என்றாள்.

     “நீ தான் வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கணும்”, என்றாள்.

     “சரி உங்க அண்ணன் கிட்ட சொல்றேன்”, என்று சொன்னவள், “யாரு” என்றாள்.

   ” யாருங்கிறத நீ பெர்மிஷன் வாங்கியதற்கு அப்புறம் நான் சொல்றேன்”, என்று சொன்னாள்.

    அவளோ அவளை பார்த்தபடி, “எப்ப இருந்து பழக்கம்”, என்றாள்.

    “நான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது, கிட்டத்தட்ட ஆறு வருஷம் லவ்”, என்று சொன்னாள்.

    “காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போதுனா,  நந்தனுக்கு தெரியுமா”, என்று கேட்டாள்.

   “யாருக்கும் தெரியாது” என்று சொன்னாள்.

“அப்படியா சரி” என்றவள், யோசனை யோடு ஜூஸையும் குடித்துவிட்டு கிளம்ப போகும் போது யாழினி தான் “வீட்டில் பர்மிஷன் வாங்கிருவ இல்ல” என்று கேட்டாள்.

  “முதல்ல உங்க அண்ணன் கிட்ட பேசுறேன், அப்புறம் உங்க அண்ணன வச்சு உங்க அம்மாகிட்டயும் உங்க பெரியம்மா கிட்டயும் பேச சொல்லலாம் சரியா”, என்றாள்.

இவளும் சரி என தலையாட்டினாள்.

   நேராக சென்றவள் அவள் இருக்கையில் அமரவும்,  ராதாவோ நந்தனை தேடி சென்றாள்.

நந்தனிடம் கேண்டினில் வைத்து அவள் சொன்னதை சொல்ல,  நந்தனோ திரும்பி யாழினியை பார்த்தான்.

   அவளோ கம்ப்யூட்டரில் மும்மரமாக வேலையில் மூழ்கிப் போய் இருக்க.,

   ராதாவிடம் “காலேஜ் செகண்ட் இயர்னா எனக்கு தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை,  காலேஜ்ல எப்படியும் பேச்சு வார்த்த வந்து இருக்கும், சொல்லி இருப்பாங்க,  ஏன்னா அவ படிச்சிட்டு இருக்கும் போது நானும் அங்க தான் பிஜி படிச்சிட்டு இருந்தேன்,  வாய்ப்பே இல்லை”, என்று சொன்னான்.

     அவளோ “இல்லையே அவ சொல்றாளே, ஆறு வருஷ லவ் அப்படின்னு சொல்றாளே, அவர தான் கல்யாணம் பண்ணுவேன் ன்னு ஸ்ட்ராங்கா வேற பேசுறா”, என்று சொன்னாள்.

“அவ உன்னை ப்ராங் பண்ண சொல்லியிருப்பா” என்றான்.

“அப்படியும் இருக்குமோ”, என்று கேட்டாள்.

   “அப்படித்தான் இருக்கும், நீ எப்ப பார்த்தாலும் போன்ல என்ன பேசுற, யார்கிட்ட பேசுறேன்னு கேட்டுக்கிட்டே இருக்கியா, அதுக்காக இப்படி ஒரு கதை சொல்லி இருப்பா”, என்று சொன்னான்.

    ராதாவும் “இருக்கட்டும் உங்க தங்கச்சிக்கு சேட்டை கூடிட்டே போகுது” என்று சொன்னவள்,  நேராக யாழினி  இடத்திற்கு வந்தவள் “அடியே என்னை ஏமாத்தறதுக்கு பொய் சொன்னியா, உங்க அண்ணன் கிட்ட கேட்டா காலேஜ்ல  எனக்கு தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை,  அப்படின்னு சொல்றாரு,  அப்ப நீ பொய் தானே சொல்லி இருக்க”, என்றாள்.

இவளோ “நிஜமா சீரியஸா சொல்றேன்”,  என்று சொன்னாள்.