Advertisement

பந்தம் – 3

மல்லி சமயலறையில் நின்று பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள். கூடத்தில் சுந்தரேசன் இரு மகள்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அவன் விரிவுரையாளன் பணியில் இருந்தான்.

என்ன தான் விரிவுரையாளன் என்றாலும் அவனுக்கு மல்லி வாங்கும் அரசு ஊதியத்தில் பாதிக்கும் கீழான ஊதியமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மல்லி காலையில் தான் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பி இருந்தாள்.

கலந்துரையாடல் செல்வதற்கு ஒரு நாள் மட்டுமே அவளுக்கு விடுப்பு கிடைத்திருந்தது. ஆக அவசர அவசரமாய் தான் பணிபுரியும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தயாராகி சென்றாள். பணி முடிந்து திரும்பி வரும் போதே, அசதி உடலை அழுத்த, மகன் பரிபூரணனுக்கு தாய்ப்பால் கொடுக்க முனைந்தவள் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

பரிபூரணனுக்கு தற்சமயம் ஒன்றேகால் வயதாகிறது. அவள் அத்தை பாரிஜாதம், “நீயே அலுத்து களைச்சி வருவ. அதான் ஒரு வயசு முடிஞ்சி போச்சு இல்ல. தாய்ப்பாலை நிப்பாட்டிடலாம்.’’ என்று சொல்லும் போதெல்லாம், “நீ மட்டும் உம் பையனுக்கு மூணு வயசு வரைக்கும் பால் கொடுத்தன்னு அப்பச்சி சொல்லுச்சு. அதான் மாமாவுக்கு உடம்பெல்லாம் மூளைன்னு ஊரே பேச்சா இருக்கு. என் மகனும் பெரிய மூளைக்காரனா வரணும் இல்ல.’’ என்று தன் அத்தையின் வாயை மூடிவிடுவாள்.

ஒரு செவிலியாக இருந்து கொண்டு, தான் பெற்ற முதல் இரு குழந்தைகளுக்கும் அவளால் ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயிருந்தது. அப்போது மல்லி ஒப்பந்த செவிலியாய் பணியாற்றிக் கொண்டிருந்தாள்.

சுந்தரேசன் தனியார் பள்ளியொன்றில் மிக சொற்ப வருமானத்தில் ஆசிரியப் பணியில் இருந்தான். இவளுக்கும் ஊதியம் குறைவு. விவசாயத்தை நம்பி வாழும் வாழ்க்கை அவர்களுடையது. ஆக அன்றாட செலவுகளுக்கு இருவரின் வருமானமும் இன்றி அமையாததாக இருந்தது.

எனவே மூன்று மாத விடுப்போடு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில் பணிபுரிந்த அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பனிரெண்டு மணி நேர வேலை. இருபத்தி நான்கு மணி நேர வேலை என்று ஆள் பற்றாக் குறையால் வேலை நேரம் மிகுதியாய் இருக்கும்.

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பாலை புகட்ட முடியாமல், மார்பில் கட்டிய பாலை கழிவறையில் வெளியேற்றிவிட்டு, மற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை போதித்த வலி இன்னும் பசுமையாய் அவள் நினைவடுக்கில் இருக்கிறது.

மல்லி தன் முதல் பிரசவத்திலேயே இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயானாள். ஜான்சிராணி, மற்றும் முத்துலட்சுமி என்று வரலாற்றில் பெண்களுக்கான இடத்தை அழுத்தமாய் பதித்த பெண்களின் பெயரை சுந்தரேசன் தன் மகள்களுக்கு சூட்டி மகிழ்ந்தான்.

கணவன், மனைவி முதல் மாமியார் வரை அந்த இரண்டு குழந்தைகளே நாட்டுக்கும், வீட்டிற்கும் போதும் என்று தான் முடிவு செய்திருந்தனர்.

ஆனால்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கொடையன்று பங்காளிகள் ஒன்றாய் கோவில் மதில் சுவரின் அருகே மது அருந்த, சுந்தரேசன் அதை தட்டிக் கேட்க, அது பெரிய பங்காளி சண்டையாய் வெடித்தது.

ஆள் மாற்றி ஆள் ஒன்று பேசி, இறுதியில், “அது தான் வம்ச வாரிசு இல்லாத வெறும் பயலா நம்ம குலசாமி உன்னை நிப்பாட்டி வச்சி இருக்கு.’’ என்று உறவு முறையில் ஒரு பெண் பழித்து பேச, “பொட்ட பிள்ளைகளை பெத்து வச்சி இருக்கும் போதே இவனுக்கு எல்லாம் இவ்வளவு அதுப்பு.’’ என்று முது கிழவி ஒருத்தி வாய் திறக்க, பாரிஜாதம் நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுதுவிட்டார்.

மல்லிக்கு எப்போதும் அவள் அத்தையை அவ்வளவு பிடிக்கும். சொல்லப் போனால் ஒரு வகையில் தன்  பாசத்திற்குரிய அத்தையோடு வாழ் நாள் எல்லாம் இருந்துவிடலாம் என்பதற்காகவே அவள் சுந்தரேசனை மணந்தவள்.

என்னதான் கணவன் மனைவி இருவரும் படித்து வெளி உலகம் அறிந்தவர்களாய் இருந்தாலும், சமூக தளை பூட்டும், ‘ஆண் வாரிசு’ என்ற அகங்காரம் மிகுந்திருக்கும் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்தனர்.

அன்றைக்கே மல்லி முடிவெடுத்துவிட்டாள். தன் மாமனுக்கு ஒரு ஆண் வாரிசை சுமந்து பெற்றெடுப்பது என. இத்தனைக்கும் அவள் வீட்டிலும், அவளின் புகுந்த வீட்டிலும் அது போன்ற  ‘ஆண் வாரிசு’ வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

மல்லி அவன் வீட்டில் ஒற்றை பெண். அதுவும் மூத்தவள். அவளுக்கு கீழ் இரு ஆண்கள். அவள் வீட்டில் மூவரையும் ஒன்றே போல தான் நடத்துவார்கள். சொல்லப் போனால் ஒற்றை பெண் என்று மல்லிக்கு அதிக செல்லம் கூட கிடைக்கும் சில நேரங்களில்.

சுந்தரேசன் வீட்டில் அவன் ஒற்றை ஆண் மகன். பாரிஜாதம் இளம் வயதில் கணவனை இழந்து ஒற்றை பெண்மணியாய் மகனை வளர்ந்து ஆளாக்கியவர். ஆக வீட்டிற்கு வந்த மருமகள் ஒற்றை பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்று தந்த போது கூட, “வீட்டுக்கு மகாலட்சுமிங்க வந்துட்டாங்க.’’ என்று அவர்களின் வரவை ஆரவாரமாய் கொண்டாட தான் செய்திருந்தார்.

மல்லியின் வீட்டில் கூட, அவளின் இளவரசிகள் வரவு குதூகலமாய் கொண்டாடப்பட்டது. அந்த கோவில் கொடை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மல்லிக்கு பணி நிரந்தமாகியிருந்தது. அவள் ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பணி நியமன ஆணை கிடைத்திருந்தது.

மல்லி தன் எண்ணத்தை அப்போதே சுந்தரேசனிடம் தெரிவித்திருந்தாள் கூட அடுத்தடுத்து நடந்த பல பிரச்சனை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மல்லி தானே சுயமாக முடிவெடுத்து, தான் பொருத்திக் கொண்டிருந்த கருத்தடை சாதனத்தை அன்றைக்கே, தான் பணிபுரிந்த மருத்துவமனையிலிருந்த மகப்பேறு மருத்துவரின் மூலம் நீக்கிக் கொண்டாள்.

கருத்தரித்து மூன்று மாதங்கள் கழிந்த பிறகே வீட்டில் தான் கருவுற்று இருப்பதை தெரிவித்தாள். அவள் பெற்றோரும், அத்தையும், “ரொம்ப சந்தோசம்மா…” என்பதோடு அதை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் அன்றைக்கு இரவில் தனியறையில் அவளை எதிர் கொண்ட சுந்தரேசன் ஆடித் தீர்த்துவிட்டான். “ஏன் இப்படி செஞ்ச…?’’ என்ற அவனின் ஒற்றை கேள்விக்கு, “எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசையாய் இருந்தது மாமா…” என்று தரையை பார்த்துக் கொண்டு பொய் சொன்னாள்.

அவன் நன்றாக அறிவான் அவள் ஏன் அப்படி செய்திருப்பாள் என. “ஓ…! எத்தனை பிள்ள… எப்ப பெத்துக்கணும்னு முடிவு செய்ற எல்லா உரிமையும் உனக்கு மட்டும் தான் இருக்கு இல்ல. நான் ஒரு முட்டாள். வெறும் ஆறாயிரத்து எழுநூறு ரூபா சம்பளம் வாங்குற ஆப்டரால் ப்ரைவேட் ஸ்கூல் டீச்சர். நான் ஒரு லூசர். எப்பவும் நம்ம வீட்ல என்ன நடக்கணும்னு முடிவு பண்ற உரிமை நாற்பதாயிரத்து சொச்சம் சம்பளம் வாங்குற உனக்கு மட்டும் தான் இருக்கு இல்ல மல்லி.’’ என்று குரலில் தாழ்மையுணர்வு அழுத்த கரகரத்த குரலில் கேட்டான் சுந்தரேசன்.

அவன் சம்பளம் குறித்தெல்லாம் ஒப்பிட்டு பேசவும், கண்ணீர் துளிர்ந்த விழிகளோடு நிமிர்ந்தவள், அவன் முகத்தை வலியோடு பார்த்து, “அப்படியெல்லாம் இல்ல மாமா. நான் உங்களுக்காக தான்… அன்னைக்கு அந்த மேலதெரு முத்துமாரி ஆண் வாரிசு இல்லாதவன்னு உங்களை எப்படி எல்லாம் இறக்கி பேசிடுச்சு. அத்தை அன்னைக்கு நெஞ்சை பிடிச்சிட்டு அழுததை என்னால தாங்க முடியல மாமா. அதான்…. உங்ககிட்ட சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு…” மல்லி அவன் உறுத்து பார்த்த விதத்தில் தன் பேச்சை அத்தோடு நிறுத்தினாள்.

இத்தனை நேரம் வருத்தத்தில் வாடியிருந்த அவன் முகம் அப்படியே கோபத்தின் சாயலுக்கு தன்னை இடம் பெயர்ந்து கொண்டது. “உன்னை மாதிரி ஒரு பைத்தியக்காரியை நான் பார்த்ததே இல்ல மல்லிகேஸ்வரி. உன் அத்தை… அதானே அவங்க மட்டும் தானே உனக்கு எப்பவும் முக்கியம். நான் தான் சுயமரியாதை கொஞ்சமும் இல்லாத முட்டாள். உங்கிட்ட கடைசியா ஒரு வார்த்தை சொல்ல ஆசைப்படுறேன் மல்லிகேஸ்வரி. தினம் தினம் நம்மளை சுத்தி இருக்க உலகம் ஆயிரம் விதமா பேசத்தான் செய்யும். அவங்க வார்த்தைக்கு எல்லாம் வடிவம் கொடுக்க நினச்சா நாம வாழப் போற வாழ்க்கை நம்மோடதா இருக்காது.’’ என்றவன் திருமணமாகி அத்தனை ஆண்டுகள் செய்யாத ஒரு காரியத்தை செய்தான்.

ஆம் மல்லியை அந்த அறையில் தனியாய் விட்டு விட்டு, கூடத்தில் சென்று படுத்துக் கொண்டான். இருவர் மட்டுமே படுக்கும் அளவு வசதி கொண்ட பச்சை நிற இரும்புக் கட்டிலில் குழந்தைகள் வந்த பின்பு எப்போதும் அவர்கள் மட்டுமே படுத்து உறங்குவர்.

Advertisement