அத்தியாயம் -11

சீனிவாசன், சிவகுமாரி தம்பதிகளின் மூத்த மகன் பிரகதீரன். இளையவன் அஸ்வின் மூன்றாவது மகள் பிரக்யா. இவர்கள் சொந்த ஊர் மதுரை.

பிரகதீரன் மதுரையிலேயே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி துவங்கி வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறான். அஸ்வின் மெடிசின் முடித்துவிட்டு மதுரையின் சிறந்த மருத்துவனாக இருக்கிறான்.தங்கை பிரக்யா பேசன் டெக்னாலஜி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். அவளுக்குதான் இப்போது திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது.

நந்தனும் சீனிவாசனும் பால்ய வயது நண்பர்கள். கார் பெரிய பங்களா போன்ற வீட்டின் முன்னால் நின்றது.

பிரகதீரன் காரைவிட்டு இறங்கி நந்தன் கீழே இறங்க உதவி செய்ய வர, அவனை தடுத்த ஸ்ரீ “நான் பார்த்துக்கறேன்” என்று எங்கோ பார்த்து கொண்டு சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காதவன் “ஒன்னும் பிரச்சனை இல்லையே மாமா உடம்பு பரவால்லையா. இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணுனது எதுவும் பண்ணுதா” என்று கேட்க,

அவரோ “இல்லைங்க மாப்பிள்ளை நான் ஓகேதான்”என்றார்.

“சரி வாங்க உள்ள போகலாம்”

“நான் சொல்லிட்டே இருக்கேன்……” என்று மேலும் ஸ்ரீ என்ன பேசியிருப்பாளோ அதற்குள் தீரனின் தந்தை அங்கு வந்துவிட, அமைதியானாள்.

“அடடே நண்பா வந்துட்டியா….”

சீனிவாசன் வந்த ஸ்ரீ. அவரிடம் “நல்லா இருக்கீங்களா அங்கிள்” என்று கேட்க,

“என்னமா இன்னும் அங்கிள் மாமான்னு கூப்பிடு. வாங்க எல்லாரும் உள்ள வாங்க” என்று சொன்னவர் அப்போதுதான் மீனாவை கவனித்தார்.

“இது……”

“இவ என் பிரண்டு மீனாட்சி. ஹஸ்பண்ட் பாரின் போய்ட்டாரு. தனியா இருக்க கஷ்டமா இருக்கும்னு என்கூட தங்க வச்சுக்கிட்டேன்”

“அப்படியா…. ரொம்ப நல்லது. என் ஆத்தா மீனாட்சியே வீட்டுக்கு வந்தா போல இருக்கு. உள்ள வாம்மா” என்று அழைத்து சென்றார்.

பிரகதீரனின் தாயார் சிவகுமாரி அனைவரையும் மகிழ்வுடன் வர வேற்றவர். அனைவருக்கும் காபி எடுத்து வந்து கொடுக்க, அதை எடுத்து குடித்து கொண்டே பெரியவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

ஸ்ரீக்கு அங்கு அமர்ந்திருப்பது ஒவ்வாத தன்மையை ஏற்படுத்த, எப்போதடா எழுந்து செல்லலாம் என்று இருந்தது .

மீனாவை ஸ்ரீ திரும்பி பார்க்க அவளோ சாதாரணமாக அமர்ந்திருந்தாள். எழுந்து அப்படியே ஓடி விடலாமா என்ற எண்ணம் தோன்ற, கைகளை இறுக கோர்த்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்து தீரன் என்ன நினைத்தானோ “அப்பா அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல. போய் ரெஸ்ட் எடுக்கட்டும் விடுங்க. அப்புறம் மத்தது எல்லாம் பேசிகோங்க”

சீனிவாசன், “அட ஆமா. சரி நந்து நீ போய் ரெஸ்ட் எடு. பிரக்யா….”

“சொல்லுங்கப்பா……” என்று துள்ளலுடன் ஓடி வந்தாள் மகள்.

“அண்ணிய அண்ணன் ரூமுக்கு கூட்டிட்டு போ. அப்புறம் மீனாட்சி தங்க ஒரு ரூமைகாட்டு”என்று சொல்ல,

ஸ்ரீ அதிர்ந்து போனாள். எதே அவனுடன் தங்க வேண்டுமா என்று.

“வாங்க அண்ணி”என்றவள் மீனாட்சியை பார்த்து சினேகமாக சிரிக்க அவளும் தன் வலி மறந்து மென்மையாக சிரித்தாள்.

“அண்ணி நீங்க உள்ள போங்க. நான் போய் மீனாட்சிஅக்காக்கு அறைய காமிச்சுட்டு வரேன்” என்று சொல்லி செல்ல,

ஸ்ரீ தீரன் அறை வாயிலின் முன் அப்படியே நின்றிருந்தாள். அவளுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, கண்களை இறுக மூடி திறந்தவளுக்கு அந்த அறைக்குள் செல்ல துளியும் விருப்பம் இல்லை. இருந்தாலும் பெரு மூச்சுடன் உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த சோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

மீனாட்சியை தன் அறைக்கு பக்கத்து அறையில் தங்க வைத்த பிரக்யா “அக்கா நீங்க இங்கயே தங்கிக்கோங்க. எதுவும் வேணும்னா உடனே என்னை கூப்பிடுங்க ஓடி வந்துடறேன்” என்று சொல்ல,

மீனாவும் சம்மதமாக தலையசைத்தாள். பிரக்யா சென்றவுடன் சோர்ந்து போய் அங்கிருந்த பெட்டில் அமர்ந்தவள் முன் ஆளுயர கண்ணாடி இருக்க, அதை பார்த்தவளுக்கு அப்போதுதான் மனதில் பதிந்தது அவளது புடவை.

ஆம், அது சத்யா அவளுக்கு முதல் முறை வாங்கி கொடுத்த புடவை.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் மாமனார் மாமியாருடன் வழக்கம் போல் வாக்கிங் செல்ல கிளம்பி வந்த மீனா. ஹாலில் அமர்ந்திருந்த கணவனை கண்டு ஆச்சர்யம் அடைந்தாள்.

எப்போதும் தாமதமாக வருபவன் அன்று சீக்கிரம் வந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தவள் “நீங்க எப்போ வந்தீங்க. கிளம்பி இருக்கீங்க. மறுபடியும் வெளிய போகணுமா?”

“ஆமா. போகணும் வா போலாம். அதுக்கு முன்னாடி இந்த சேரிய மாத்திட்டுவா” என்க,
“ம்கூம்…. நானும்தான் புள்ள பெத்து வளர்த்தேன். இது வரைக்கும் எனக்கொரு சீல எடுத்து குடுத்துருக்கானா. இப்போ பொண்டாட்டி வந்தவுடனே அவளுக்கு மட்டும்……” என்று லதா மூக்கை சீந்த,

ஜெகனும், சத்யாவும் தாயையே பார்த்து கொண்டு இருந்தனர்.

“என்னடா என் மூஞ்சில என்ன இருக்கு. எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பாக்குறீங்க”

“இல்ல அழற மாதிரி பேசுறீங்க ஆனா கண்ணுல தண்ணி வரல. அதான் எப்படினு பார்த்துட்டு இருக்கோம்”

“ஓஹோ….. இப்போ நான் சொன்ன விஷயம் உங்களுக்கு பெருசா தெரியல, என் கண்ணுல தண்ணி வராததுதான் தெரியுது”என்று மீண்டும் வராத கண்ணீரை துடைக்க,

மீனாவோ ‘என்னடா இது வம்பா போச்சு. சீலைய கைல குடுத்துட்டு அவங்கபாட்டுக்கு பேசிட்டு இருக்காங்க. இப்போ நாம என்ன பண்றது. இவங்க சண்டை போடறாங்களா சாதாரணமா பேசுறாங்களா. ஒன்னும் புரியல. நட்டு கழண்ட குடும்பத்துல வந்து சிக்கிட்டமோ’ என்று தீவிர யோசனையில் இருக்க,

“சரி…சரி…அதான் தண்ணி வரலையே அப்புறம் ஏன் கண்ண போட்டு இந்த தேய் தேக்குறீங்க. வாங்க உங்களுக்கு பிரியாணி வாங்கி தரேன்” என்று சொல்லி முடிக்கும் முன் வாசலில் போய் நின்றவர் “என்னடா மச மசன்னு நின்னுட்டு இருக்க வா போகலாம்” என்று நிற்க,

“உங்க வேகத்தை கண்டு வியக்கேன்…” என்று சொன்னவன் “மீனுக்குட்டி நீ போய் சீக்கிரம் சேரி மாத்திட்டு வா. இல்லைனா அம்மா நம்மள விட்டுட்டு போயிடுவாங்க” என்று கூற,

வேகமாக உள்ளே ஓடியவள் ரெண்டு நிமிடத்தில் புடவை கட்டி கொண்டு வர,

குடும்பமாக நால்வரும் முதலில் கோவிலுக்கு சென்று, மனதார இறைவனை வணங்கிவிட்டு அடுத்ததாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்தனர்.

அன்று மகிழ்ச்சியாக இருந்த நினைவுகள் இன்று முல்லாக குற்ற, கண் கலங்கியவள் தன் வயிற்றில் கை வைத்து “நான் என்னபாவம் பண்ணுன்னேன்னு எனக்கே தெரியலடா தங்கம். எல்லாமே என்கிட்டே இருக்கு. ஆனா இல்ல.

நல்ல கணவன், என்னை மகளா பார்க்கிற மாமனார், மாமியார், பணம், எல்லாம் இருக்கு. இல்லாத ஒரே விஷயம் தைரியம். அது இல்லாம. முதுகெலும்பு இல்லாத கோழையா ஓடி வந்து இப்போ இங்க வந்து நிக்கறேன்.

இந்த விதி என்னை இப்படி ஒரு பெண் ஜென்மமா படச்சிருக்க வேண்டாம். அழகான காதலை தந்திருக்க வேண்டாம்” என்று அழ, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

யார் என்று புரியாமல் விழித்தவள் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, சென்று கதவை திறக்க, ஸ்ரீதான் அங்கு நின்று கொண்டு இருந்தாள்.

“என்னாச்சுக்கா?”

“அ…அது…. வந்து நான் இந்த ரூம்ல உன்னோட இருந்துக்கவா மீனு”

“அ…. என்னக்கா சொல்லறீங்க. நானா உங்க புருஷன். அந்த அண்ணாதானே உங்க புருஷன் போய் அவர் ரூம்ல இருங்க. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு”

“வாரே…. வா…. அப்படி சொல்லும்மா. கரெக்ட்டா சொன்ன” என்றவாறு வந்து நின்றான் ஒருவன். ஸ்ரீ உடனே வந்தவனை முறைக்க,

“ஹலோ என்ன லுக்கு பலமா இருக்கு. உண்மையதானே சொன்னோம்”

“என்ன உண்மை ஊரு உலகத்துல இல்லாத உண்மை. நானே செம்ம கடுப்புல இருக்கேன். நீ வேற கூட கொஞ்சம் வெறுப்பேத்தாத சொல்லிட்டேன்”

“ஆமா இவங்க பெரிய மகாராணி இவங்களை வெறுப்பேத்தறதுதான் என்னோட முழு நேர வேலையா முடிவெடுத்து. இப்போ அந்த வேலைய செய்ய ஓடி வந்துருக்கேன். ஆள பாரு”

“டேய் நீ அடங்கவே மாட்டியா. ஒரு பொறுப்பான டாக்டர் மாதிரியா பேசுற”

“ஏன் டாக்டர்னா பொறுப்பாதான் இருக்கணும்னு எதுவும் சட்டம் இருக்கா. அது மட்டும் இல்லாம. இது வீடும்மா. இங்க நான் இஷ்டபட்டபடிதான் இருப்பேன். உனக்கென்ன வந்தது”.

“ஆமா…. ஆமா…. உன்ன மாதிரி வானரத்துகிட்ட பொறுப்ப எதிர்பார்த்தது என்னோட தப்புதான்.”

“தன்னோட பொறுப்பு என்னன்னு புரிஞ்சுக்காம, ஸ்கூல் போற புள்ளைங்க அம்மாட்ட போறேன்னு சொல்லி அழற மாதிரி அழுதிட்டு இருக்கவங்க எல்லாம் பொறுப்பபத்தி பேச வந்துட்டாங்க பாருங்க மக்களே”

“டேய்….. உன்னை….”

“ஒரு ஆணியும் புடுங்க முடியாது” என்றவன் மீனாவை பார்த்து “ஹேய் பியூட்டி உன் பேர் என்ன”.

“என் பேர் மீனாட்சி அண்ணா”

“எதே….. அண்ணாவா…பிஞ்சு நெஞ்சுல புல் டவுசர விட்டு ஏத்திட்டியேம்மா. சட்ட கிழிஞ்சுருந்தா….”

“டேய் தம்பி அடங்குறியா. இவ புருஷன் கோவகாரர். சும்மா இவளை பார்த்து சிரிச்சதுக்கே அவன் பல்லை தட்டி கைல குடுத்துட்டாராம் பார்த்துக்கோ”.

“எதே…. கோவகாரரா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே. என் புருஷன் எப்போவும் சிரிச்சுக்கிட்டே துறு துருனு இருப்பாரு” என்று கண்கள் மின்ன சொல்ல,
“பாத்தல்ல மேடத்துக்கு அவங்க ஆளு மேல இருக்க லவ்ஸ சோ அடக்கி வாசி…”

“நீ பேசாம இருடி….”

“இருக்க முடியாது. நான் ஏன் பேசாம இருக்கணும். நீ பேசாம இருடா”

“முடியாது……”

“நிறுத்துங்க…. ஹப்பா…ரெண்டு பேரும் டாக்டர்ங்கறதை மறந்துட்டு சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போடறீங்க. அக்கா ப்ளீஸ் இவராவது யாருனு சொல்லுங்களேன்”.

“இவன் என் பிரண்டு அஸ்வின். சரியான குரங்கு. எப்படிதான் பேமஸ் டாக்டர் ஆனானோ தெரியல”.

“ஹலோ…. ஹலோ…. நீயெல்லாம் டாக்டர் ஆகும்போது நாங்க ஆக மாட்டோமா. குரங்கோட பிரண்டும் குரங்குதான். அதை நியாபகம் வச்சுக்கோ”

“யாரடா குரங்கு சொன்ன” என்று மல்லுக்கு நின்றவளின் நீள ஜடையை பிடித்து ஒரு இழு இழுத்தவன் “இப்போ என்ன பண்ணுவ…. இப்போ என்ன பண்ணுவ” என்றுவிட்டு ஓட,

ஸ்ரீ கடுப்பாகி அவனை அடிக்க துரத்தி கொண்டு போக, மீனாவோ இவர்களின் சண்டையில் மன கவலை மறந்து சிரிக்க துவங்கினாள்.

வேகமாக ஓடியவனை தொடர்ந்து ஓடியவள் அவர்கள் அறை பக்கம் வந்துவிட, அதை கூட கருத்தில் கொள்ளாது ஓடியவள் எதிரே வந்தவன் மீது மோத,

‘ஆண்டவா எவண்டா அது இங்க போய் கருங்கல் செவுர வச்சது” என்று மூக்கை சுருக்கி, நெற்றியை தேய்த்து கொண்டே நிமிர,

தீரன் அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தான்.’ம்கூம்…. இந்த சைக்கோகிட்ட சிக்கிட்டனா’ என்று ஆரம்பத்தில் பயந்தவள் பின் ‘எவன் பார்த்தா எனக்கு என்ன’ என்ற எண்ணம் தோன்ற தோள்களை அசால்ட்டாக உளுக்கி கொண்டு செல்ல போக, அவள் கையை பிடித்து அறையின் உள்ளே இழுத்து சென்றவன்.

“என்னடி சின்ன புள்ளை மாதிரி அவனோட உனக்கு என்ன விளையாட்டு. இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ. அதை நியாபகம் வச்சு கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ”

“அந்த நியாபகம் எனக்கு மட்டும் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பொண்டாட்டினு உங்களுக்கு நியாபகம் இருக்கா. அந்த நியாபகம் இருந்திருந்தா இவ்வளவு நாள் நான் என் அப்பா வீட்ல இருந்திருக்க வேண்டியது இல்லை.

இப்போவும் உங்களுக்கு ஒரு தேவை அதுக்காக கூப்பிட வந்தீங்க. பொண்டாட்டின்னு நினைப்பு வந்து ஒன்னும் கூப்பிட வரல”

“நான் பேசுனதுக்கு இது பதில் இல்லை. இனி அவனோட பேசறதை பார்த்தேன் அவ்வளவுதான் சொல்லிட்டேன்”

“ஏன்…. ஏன்…. நான் பேச கூடாது. இங்க வர்றதுக்கு முன்னாடி இருந்தே அவன் எனக்கு நண்பன். எங்க மனசுல எந்த தப்பும் இல்லை. அதே போல எங்க உறவும் எங்களுக்கு புரியும். அதை மூணாவது மனுஷன் வந்து சொல்ற மாதிரி எப்போவும் நாங்க நடந்துக்க மாட்டோம்” என்றவள் மேலும்

“நீங்கதான் சொன்னீங்க உதவியாதான் செஞ்சேன்னு அந்த உதவிக்கு கைமாறு பண்ணதான் நானும் உதவிக்கு…” உதவி என்ற வார்த்தையை அழுத்தி சொன்னவள் “பதில் உதவி செய்ய வந்தேன். அதுக்கு மேல நமக்குள்ள எதுவும் இல்லை இதை நீங்க சொன்னதாதான் எனக்கு நியாபகம்.

அப்புறம் முக்கியமான விஷயம் இனி என்னை தொட்ர வேலை எல்லாம் வச்சுக்காதீங்க”.

“தொட்ட என்னடி செய்வ?” என்று கேட்டவாறு அவளை நெருங்கியவனின் இதழுக்கும் பெண்ணவள் இதழுக்கும் நூலிழை அளவுதான் இடைவெளி இருந்தது.

ஒருவர் மூச்சை மற்றவர் சுவாசிக்கும் சிறிய இடைவெளியில் நின்றிருந்தவனை கண்டு ஸ்ரீ அதிர்ந்து விழி விரித்து பார்த்திருந்தாள்.

“ நான் பேசுனதை எனக்கே சொல்லி காட்டுறியா. நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை. அப்புறம் இன்னொரு முறை இது மாதிரி என்கிட்ட ஆட்டிடியூட் காட்டாத புரிஞ்சுதா” என்றவன் விறு விறுவென வெளியே செல்ல,

அவளோ கலங்கிய கண்களோடு செல்லும் அவன் முதுகை வெறித்து கொண்டு இருந்தாள். அவளுள் பழைய நினைவுகள் எழும்ப அப்படியே அங்கிருந்த சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்தாள்.

சென்னப்பன் மகளை தேடி சத்யா வீட்டிற்கு சென்று பிரச்சனை பண்ண, இறுகி போய் வெளியில் வந்தவன் “இப்போ உங்களுக்கு என்ன வேணும். எதுக்கு வந்து கத்திட்டு இருக்கீங்க” என்றான்.

“எங்கடா அந்த கிறுக்கி அவளை எங்க கூட அனுப்பி விடு. இல்ல எல்லாரையும் வெட்டி போட்டு இழுத்து போய்டுவேன்”.

“எவளை அனுப்பனும். இங்க யாரும் இல்லை” என்று சத்யா அழுத்தமாக சொல்ல,

“இப்படி சொன்னா நீ கேட்க மாட்ட, தள்ளு நானே போய் அவளை இழுத்துட்டு வரேன்”.

“வீட்டுக்குள்ள வர்ற வேலை வச்சுக்காதீங்க, கண்டவங்களை வீட்டுக்குள்ள விடறது எங்களுக்கு பழக்கம் இல்லை. இங்க எங்க குடும்பத்தை தவிர வேற யாரும் இல்லை. தேவையில்லாம கத்தி பிரச்சனை பண்ணுனீங்க போலீஸ்கிட்ட போக வேண்டி இருக்கும்”.

“என்னடா போலீஸ்னா பயந்துடுவோமா”

வந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன் போனை எடுத்து போலீஸ்க்கு அழைக்க,

“ஐயா போலீஸ் எல்லாம் வந்தா பெரிய பிரச்சனை ஆகும்ங்க. இவுக பேசறதை பார்த்தா நம்ம பாப்பா இங்க இல்லைனு தோணுதுங்க” என்று கூட்டத்தில் வந்த ஒருவன் கூற,

அவனை ஓங்கி அறைந்த சென்னப்பன் “போலீஸ்ன உடனே பயந்துட்டிங்களாடா பொட்ட பசங்களா போங்கடா. நானே அந்த ஓடுகாலிய இழுத்துட்டு வரேன்” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு போலீஸ் வந்துவிட்டனர்.

லதா மகனிடம் “போலீஸ் எல்லாம் எதுக்குப்பா. நாமளே பேசிக்கலாமே”.

“ பேசிக்கற அளவுக்கு வந்தவங்க நமக்கு தெரிஞ்சவங்க இல்லம்மா. இன்ஸ்பெக்டர் இவரு யாருன்னே தெரில. வீட்டு முன்னாடி நின்னு கத்திட்டு இருக்காரு. என்னன்னு பாருங்க” என்க,

சென்னப்பானோ வந்தவரிடமும் எகிறி கொண்டு நிற்க, போலீஸ் தன் பாணியில் இழுத்து செல்ல,அடிபட்ட நாகமாக சீறியவர் கொண்டு செல்பவரை பார்த்து கொண்டு இருந்தவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஜெகன், “என்னப்பா. அவரு பொண்ண காணலைன்னுதானே வந்தாரு. நாம பேசி……”

“ஊருல யாரு காணாமல் போனாலும் இங்க வந்துதான் தேடுவாங்களா. இது வீடா…வேற ஏதோ இடமா . போங்க போய் வேலைய பாருங்க. நான் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.

அப்புறம் மாமா போன் பண்ணுனாரு. இங்க ஈவினிங் வரதா சொன்னாரு” என்று தகவல் போல் சொன்னவன் காரில் ஏறி கிளம்பிவிட்டான்.

இறுகிய தோற்றத்துடன் செல்லும் மகனை கண்டு கண் கலங்கிய லதா “நம்ம பையன்தானாங்க இது. இப்படி கடுமையா மாறிட்டான்” என்க,

ஜெகனிடம் இருந்து பெரு மூச்சே வெளிப்பட்டது.

சத்யா மீனாவை வெறுத்து ஒதுக்கிவிட்டானா. இனி இவர்கள் இருவரின் நிலை என்ன?

ஸ்ரீ, தீரன் இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்.

மறப்பாள்…..