ஸ்ரீ அழவும் பதறி போன மீனா “என்னக்கா என்ன ஆச்சு” என்று கேட்க,
அழுது கொண்டு இருந்தவள் டக்கென்று விலகி எழுந்து கொண்டு “ஒ…ஒ…. ஒன்னும் இல்லடா….” நான் ரூமுக்கு போறேன். நீ காலைல இருந்த ரூம்ல படுத்துக்கோ” என்றுவிட்டு சென்றுவிட,
மீனா செல்லும் ஸ்ரீயை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
அடுத்த நாள் காலை சோர்வாக எழுந்து வந்த ஸ்ரீ முன் மீனா காபியை நீட்ட, தூக்கம் இல்லாமல் சிவந்த கண்களுடன் இருந்தவள் அதை வாங்கி அமைதியாக குடித்தாள்.
“அக்கா கொஞ்சம் காய் வாங்கணும்”
“ம்ம்….. போறேன்டா. நான் போய் கிளம்பிட்டு வரேன். அதுக்குள்ள நீ என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் எழுதி வை”
“இல்லக்கா நானும் வரேன். எங்க வாங்கணும்னு காமிங்க. இனி நானே போய் வாங்கிட்டு வந்தடறேன்”
“இல்ல…. உன்னை ரொம்ப சிரமப்படுத்தறேனா மீனா”.
“என்னக்கா. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஏன் நீங்க ஒரு மாதிரியாவே இருக்கீங்க. நேத்து நல்லாதானே ஹாஸ்பிடல் போனீங்க. அப்புறம் என்ன ஆச்சு” என்க,
மீனா கண்களில் இருந்து கண்ணீர் வழிய துவங்கியது. அதை கண்டு பதறி போன ஸ்ரீ.
“ஹேய் மீனுக்குட்டி என்ன ஆச்சு அழாத. நான் சொல்றேன்”
“இல்லக்கா. நான் அதுக்கு அழல. அவருக்கூட என்னை மீனுக்குட்டின்னுதான் கூப்பிடுவாரு. இப்போ நீங்க அப்படி கூப்பிடவும் அவரு நியாபகம் வந்துருச்சு. அவரு ரொம்ப நல்லவருக்கா. நான்தான் தேவையில்லாம அவர் வாழ்க்கைகுள்ள போய் சீரழிச்சிட்டேன்.
நான் ஒரு ராசி இல்லாதவக்கா. அதான் நான் போன உடனே அவருக்கு எல்லாம் தப்பு தப்பா நடந்தது. ஆனா…. எங்க வீட்ல இருக்கவங்க அதை புரிஞ்சுக்காம,
பெத்த புள்ளையான என் மனசை புரிஞ்சுக்காம, அவங்க கவுரவத்துக்கும், மரியாதைக்கும் என்னையும் எங்க அழகான வாழ்க்கையையும் பலியாக்கிட்டாங்கக்கா”என்று அழ,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை என்று நினைத்த ஸ்ரீ எழுந்து அவளிடம் சென்று “சரி அழாத மீனா. உன்னை நீயே தாழ்த்திக்காத. நீ நினைக்கற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. முதல்ல உன்னாலதான் எல்லாம் ஆச்சுனு நினைக்கறதை நிப்பாட்டு.
அப்படி நான் நினைச்சிருந்தா. எப்பவோ இல்லாம போயிருப்பேன். உன்னோட வயசு அப்படி. என்ன பண்ணனும், என்ன பண்ண கூடாதுனு புரியாத டீன் ஏஜ்ல இருக்க. அதான் கண்டபடி யோசிக்கற. சரி முடிஞ்சத நம்மால மாத்த முடியாது. இனி நடக்கறதை நமக்கு புடிச்ச மாதிரி மாத்தலாமே?”. நான் சொல்றது உனக்கு புரியுதா?”
“இல்லக்கா. இனி நான் அவர்கிட்ட போக மாட்டேன். போகறதுக்கான தகுதியும் எனக்கு இல்ல. ஒரு பொண்டாட்டியோட முக்கியமான கடமையே புருஷனுக்கு முடியாதப்ப அவன் பக்கத்துல இருந்து பார்த்துக்கறதுதான். அதுவே நான் பண்ணல. இன்னும் சொல்ல போனா இந்த பூவும் பொட்டும் வச்சுக்கற தகுதி இன்னும் எனக்கு இருக்கானே தெரியலக்கா”
“என்ன….. சொல்ற மீனா?…..” என்று ஸ்ரீ அதிர்ந்து போய் கேட்க,
மன அழுத்தம் தாங்க முடியாதவள் நடந்த அனைத்தையும் கூற, ஸ்ரீ அப்படியே திகைத்து போய் அமர்ந்துவிட்டாள்.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அமர்ந்திருந்தவளிடம் “அக்கா அவரு எப்படி இருக்காருன்னாவது எனக்கு தெரியணும் அக்கா. அ…. அ…. அன்னைக்கு கடைசியா அவர்கிட்ட கையெழுத்து வாங்க போன அப்போ ரொம்ப நம்பிக்கையா பேசுனாரு.
நான் பதில் பேச ஆரம்பிச்ச உடனே ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு. கண்ணுல உயிரே இல்லாம என்னை பார்த்து கடைசியா கேட்டாரு “கையெழுத்து போடட்டுமாம்மான்னு” எனக்கு இதயமே ஆடி போச்சு.
நான் வேண்டாம்னு சொன்னா. அவரு கையெழுத்து போட்டிருக்க மாட்டாருதான். ஆனா…. அதுக்கபுறம் அப்பா வச்சிருக்க ஆளுங்க அவரை எதுவும் பண்ணிடுவாங்கங்கற பயத்துல, போட சொல்லிட்டேன்” என்றவள் கதறி கதறி அழ,
ஸ்ரீயோ “தப்பு பண்ணிட்ட மீனும்மா. உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அவரு உன் அப்பாகிட்ட அப்படி சொல்லியிருப்பாரு. அந்த நம்பிக்கையை நீ உடைச்சுட்ட”.
“எனக்கு புரியுதுக்கா. ஆனா அவரு உயிருக்காகதான்……”
“நீ உண்மைய சொல்லி, அவர்கூடவே நின்னுருக்கணும் அப்படி இருந்திருந்தா அவர் சந்தோசபட்டிருப்பார். உன் அப்பாக்கு பயந்து அவர் மனச உடைச்சுட்டு வந்துட்ட,
மறுபடியும் அதை உன்னால சரி பண்ணவே முடியாது. அதுமட்டும் இல்லாம அவர்கிட்ட முன்னாடி இருந்த நம்பிக்கையை சம்பாதிக்க நீ ரொம்ப கஷ்டபடனும்”.
“இல்லக்கா. அவருகிட்ட திரும்ப போக எனக்கு விருப்பம் இல்ல. முக்கியமான நேரத்துல இல்லாம. இப்போ நல்லா இருக்கும்போது போய் அவர்கிட்ட ஒட்டிக்கிட்டா எனக்கே என்னவோ போல இருக்கும்”.
“இல்ல மீனு நீ தப்பான முடிவெடுக்கற. அதுமட்டும் இல்லாம. உன் குழந்தை நிலைமையை யோசி. அப்பா இல்லாம….”
“இல்லக்கா. நான் எல்லாம் யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கேன். நான் இங்க இருக்கறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா……”
“போதும் மீனம்மா. இதுக்கு மேல எதுவும் பேசாத. நான் உன்னை தங்கச்சினு வாய் வார்த்தைக்கு சொல்லல, உண்மையா அப்படி நினைச்சதுனாலதான் சொன்னேன்.
உன் விருப்பம் என்னவோ அப்படியே பண்ணலாம். ஒரு அக்காவா கண்டிப்பா உனக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன். சரி சொல்லு நான் இப்போ உனக்கு என்ன பண்ணனும்?”
“அவர் எப்படி இருக்காருன்னு எனக்கு தெரியணும். நல்லா இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டா போதும்”என்க,
“சரி நான் அவரை பத்தி விசாரிக்கறேன்”.
“ரொம்ப நன்றிக்கா……” என்று கண்ணீரோடு கூறியவளை கண்டு, வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்தவள் “யோசிக்காம ஒருத்தவங்க பண்ற தப்பு அவங்களையே பாதிக்கும்போதுதான் அந்த தப்போட வலி புரியுது”என்று சொல்ல, மீனா புரியாமல் அவளை பார்த்தாள்.
மீனா பார்வையை புரிந்து கொண்ட ஸ்ரீ பெரு மூச்சுடன் “ஒன்னும் இல்ல. என்னென்ன வாங்கணும்னு எழுதி வை. அங்க போய் எதையும் மறந்திடாம. நான் போய் ரெடி ஆகிட்டு வரேன்” என்றுவிட்டு செல்ல,
மீனாவும் லிஸ்ட் எழுத துவங்கினாள். இருவரும் ஒன்றாக சேர்ந்து கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வர, அவர்கள் வீட்டின் முன் ஒரு உயர்ரக கார் நின்றது.
மீனா அந்த வண்டியயே பார்த்து கொண்டு வந்தவள். அருகில் வந்த ஸ்ரீயின் முகத்தை கவனிக்க தவறினாள்.
“அக்கா நம்ம வீட்டுகிட்டதான் கார் நிக்குது”. பார்த்த இரண்டு நாட்களில் மீனாவிற்கு ஏனோ ஸ்ரீயிடம் உரிமை உணர்வு வந்திருந்தது. அது அவள் நடந்து கொண்ட முறையால் கூட இருக்கலாம்.
“ம்ம்…. பார்த்தேன்” என்ற ஸ்ரீயின் இறுகிய குரலில், மாற்றத்தை உணர்ந்த மீனா அவள் முகத்தை பார்க்க, அதில் இருந்த இறுக்கம் எதனால் என்று புரியவில்லை.
மீனா கார் அருகில் சென்ற பின் தன் நடையை மெதுவாக்க, அவள் கையை அழுத்தமாக பிடித்த ஸ்ரீ, அவள் என்ன என்று உணரும் வேகமாக வீட்டிற்குள் இழுத்து செல்ல, மீனாவும் அவள் இழுத்த இழுப்பிற்கு காரை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.
காரில் அமர்ந்திருந்த உருவம் செல்லும் ஸ்ரீயையே ஆழ்ந்து பார்த்து கொண்டு இருந்தது.
“அக்கா….. என்ன ஆச்சு? ஏன் என்னை இப்படி இழுத்துட்டு வர்றீங்க. வீட்டு முன்னாடி கார் நிக்குது. யாரு என்னன்னு விசாரிச்சுட்டு வரேன்.
“ஒன்னும் வேண்டாம். ரோடுல போறவன் வர்றவன எல்லாம் விசாரிக்கறதுதான் நம்ம வேலையா? அட்ரஸ் தெரியாம யார்கிட்ட கேட்கலாம்னு நின்னுட்டு இருப்பாங்களா இருக்கும். வா போய் சமைக்கலாம் அப்பாக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும்” என்க,
மீனாவும் அதன்பின் எதுவும் பேசாமல் சமையல் வேலையில் இறங்கினாள். காய்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்த ஸ்ரீ வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்க,
அவள் செல்வாள் என்று வேலையை செய்து கொண்டிருந்த மீனா மீண்டும், மீண்டும் அழைப்பு மணி தொடர்ந்து ஒழிக்க, தானே சென்று பார்க்க எண்ணி முந்தானையில் கைகளை துடைத்தவாறு வந்து கதவை திறக்க,
வாசலை அடைத்தவாறு ஆறடி உயரமும், மாநிறத்துடன் உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டுடன் கம்பீரமாக நின்றிருந்தான் ஒருவன். அவனை கண்டு அரண்டு போனவள், வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் “சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்”.
“ம்ம்…. இந்த வீட்டம்மா வேணும். தருவீங்களா?” என்க,
“எதே……” என்று விழி விரித்து நின்றவளை கண்டவன் “கொஞ்சம் ஓரமா நின்னா நான் உள்ள போக வசதியா இருக்கும்” என்று அழுத்தமான குரலில் சொல்ல,
மீனாவிற்கு ஒன்றும் புரியவில்லை ‘என்னடா இது அவர்பாட்டுக்கு வந்தாரு. வீட்டம்மா வேணும்னு சொன்னாரு. இப்போ விலகி நிற்க சொல்றாரு. ஹையோ பார்க்க வேற ஆளு அர்னால்டுக்கு தம்பி மாதிரி இருக்காரு. நாம போய் அக்காவை வர சொல்லலாம்’ என்று நினைத்தவள்,
“இங்க பாருங்க நீங்க யாருனு தெரியாம உள்ள வர விட மாட்டேன். வெளியவே நில்லுங்க. நான் போய் ஸ்ரீ அக்காவை வர சொல்றேன். அதுவரை இங்கயே நில்லுங்க” என்றவள் குடு குடுவென ஓடி போய் ஸ்ரீயின் முன்னால் நின்றாள்.
“அக்கா ஒருத்தர் உள்ள வரணும்னு….”
“யாரையும் உள்ள விட வேணாம். அவரை போக சொல்லு” என்று மீனா பேசி முடிக்கும் முன் கடுப்பாக சொல்ல,
மண்டையை ஆட்டியவள் வெளியே செல்ல ஆள் இல்லை.’ஹப்பாடா அவரே போய்ட்டாரு போலயே. சந்தோஷம்’ என்று நினைத்தவள் திரும்பி உள்ளே செல்ல போக,
ஹாலில் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.
“ஆவென……” மீனா கத்திய கத்தலில் என்ன ஆனதோ என்று ஓடி வந்த ஸ்ரீ ஹாலில் அமர்ந்திருந்தவனை கண்டு கோபமாக அவனை முறைக்க, அவனோ அவளை கூலாக பார்த்து கொண்டு இருந்தான்.
“அக்கா அவர்பாட்டுக்கு உள்ள வந்து உட்கார்ந்துட்டாரு”
“மத்தவங்களோட அனுமதி இல்லாம உள்ள நுழையறதுதான் சார்க்கு எப்போவும் பிடிக்கும் போல” என்று நக்கலாக சொல்ல,
முகம் இறுகியவன் “உள்ள நுழைய நிர்பந்தபடுத்தபடும்போது, நுழைந்துதானே ஆகணும்” என்று அழுத்தமாக சொல்ல,
அவளோ எரிச்சலாக “ப்ச்….. இப்போ எதுக்கு கண்டது எல்லாம். என்ன விஷயம்”
“கண்டதை பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனா……இதை ஆரம்பிச்சது நீதான்”.
“ப்ச்….. என்ன விஷயம். எதுக்கு இப்போ வந்தீங்க. சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு”.
“நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம இருக்கோமா”என்றவன் கோபமாக கேட்க,
“எனக்கு எப்படி அது தெரியும்?”
மீனா, “அச்சோ…. ரெண்டு பேரும் என்ன சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அப்போ இவர் யாருனு உங்களுக்கு தெரியுமாக்கா”
“ம்ம்……” என்று ஸ்ரீ சொன்னாளே தவிர வேற எதுவும் சொல்லவில்லை.
அவனுக்கு பதில் சொல்ல போன ஸ்ரீ கையை எட்டி பிடித்த மீனா “அக்கா ப்ளீஸ். வந்ததுல இருந்து ஏதோ விடுகதை போடற மாதிரியே அவரும் பேசறாரு. நீங்களும் பேசுறீங்க. ப்ளீஸ் என் நிலைமையை யோசிச்சு அமைதியா இருங்களேன். மீ…. பாவம்” என்க,
ஸ்ரீ வந்தவனை உறுத்து விழித்து கொண்டு நிற்க,
“என் தங்கச்சிக்கு கல்யாணம் பேசி முடிச்சாச்சு. மூத்த மருமகளா நீ வந்து முன்னாடி நின்னு எல்லாம் செய்யணும்னு அப்பா ஆசைப்படறார். சோ…. உன்னை கூப்பிடதான் வந்தேன்”.
‘எதே….. மருமகளா…. அக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சா. இவருதான் அவங்க ஹஸ்பண்டா. என்னடா நடக்குது இங்க’ என்று மீனாட்சி யோசித்து கொண்டு இருக்க,
ஸ்ரீயோ “நான் வர மாட்டேன். திடீர்னு உருவான உறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரணும்னு அவசியம் இல்ல”
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். இப்போ அந்த உறவு ஆராய்ச்சிய விட்டுட்டு கிளம்பற வழிய பாரு”
“முடியாது…”
“அப்போ சரி நான். யாரை பார்க்கணுமோ அவரை போய் பார்க்கறேன்”
“என்ன கார்னர் பண்றீங்களா?”
“அப்படியே வச்சுக்கோ. நான் இந்த அளவு பொறுமையா யார்கிட்டயும் பேசுனது இல்ல. அதை சோதிக்கற மாதிரி நடந்துக்காத”.
“டாக்டர்ட்ட பேசிட்டேன். ஹாஸ்பிடல இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகலாம்னு சொல்லிட்டாங்க. அங்க வீட்ல பார்த்துக்க ஒரு நர்ஸ் அரேஞ்பண்ணிட்டேன். இப்போ நீ கிளம்புனா. மாமாவையும் கூட்டிட்டு கிளம்பலாம்”
“சோ….. எல்லாம் முடிவு பண்ணிட்டுதான் வந்துருக்கீங்க. இப்போ என்கிட்ட இன்பர்மேசன்தான் குடுத்துருக்கீங்க அப்படிதானே” என்று அவனையே அழுத்தமாக பார்த்து கேட்க,
அவனோ அசால்ட்டாக தோளை உலுக்கி கொண்டான்.
மீனா வேக வேகமாக கிச்சன் உள்ளே சென்றவள் வரும் போது கையில் டீ கப்புடன் வந்தாள். “உட்காருங்க அண்ணா. அக்கா பேக் பண்ணி கிளம்ப நேரம் ஆகும். அதுவரை இந்த டீய குடிங்க” என்று கொடுக்க,
ஸ்ரீ கோபமாக “மீனு…..” என்க,
அக்கா எதிரியாவே இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கள வாங்கனு கூப்பிடணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. இவரு உங்க புருஷன் வேற அப்படியே விட்டா நல்லா இருக்காதுல” என்று வெகுளியாக சொல்ல,
அந்த வெள்ளந்தி பேச்சு தீரனுக்கு பிடித்து போனது. உடனே அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் “உன் பேரு என்னம்மா” என்க,
“மீனாட்சி அண்ணா” என்றாள்.
ஸ்ரீ, “மீனு புருஷன்னு நான் சொன்னேனா? மனசுல இன்னொருத்திய……” என்றவள் முடிக்கும் முன் தீரன் கையில் இருந்த டீ கப் உடைய கப்பென்று வாயை மூடி கொண்டாள்.
“நான் வெளிய இருக்கேன்ம்மா. நீயும் கிளம்பி வா. சீக்கிரம்”என்றுவிட்டு விறு விறுவென அவன் வெளியே சென்றுவிட,
கண்ணீர் மறைத்த விழிகளுடன் செல்லும் அவனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் ஸ்ரீ.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரகதீரன் காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது ஸ்ரீயின் கார்.அவன் ஊரை நோக்கி.
மகள் வாழ்க்கை எண்ணி கவலையில் இருந்த அவள் தந்தைக்கு இனியாவது தன் மகள் வாழ்வு சிறக்கும் என்ற எண்ணத்தோடு பயணம் துவங்க,
அங்கு சென்றாள் நிம்மதியாக இருக்க முடியுமா, நிச்சயமாக முடியாது. கல்யாணம் முடிஞ்ச உடனே கிளம்பிட வேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு ஸ்ரீயும்.
இந்த வாழ்க்கை இன்னும் என்னை எங்கெல்லாம் இழுத்து செல்ல போகிறதோ என்ற எண்ணத்தில் மீனாவும் செல்ல,
“ஐயோ……இப்படி குடும்ப மாணத்தையே வாங்கிட்டு போய்ட்டாளே. அவ நல்லா இருப்பாளா. ஏங்க அந்த நொண்டி சேவல்கிட்டதான் அவ போயிருப்பா ஆளுங்களோட போய் அவளை இழுத்துட்டு வாங்க. காலை முறிச்சு வீட்டோட போட்டாதான் அவ சரி பட்டு வருவா” என்று தனம் நெஞ்சில் அடித்து கொண்டு அழுகையோடு சொல்ல,
பெரிய மகள் வீட்டில் இல்லை என்று கேட்டதில் இருந்து கண்கள் சிவந்து முகம் அதீத கோபத்தின் விளைவாக விகாரமாக மாறி அமர்ந்திருந்த சென்னப்பனுக்கு மீனாட்சி கையில் சிக்கினால் அவளை துண்டு துண்டாக வெட்டி போடும் அளவு கோபம் இருந்தது.
மனைவி அழுவது அவருக்கு மேலும் எரிச்சலை கொடுக்க, அங்கிருந்த பூ சாடியை எட்டி உதைத்து தள்ளியவர் கோபமாக அவர் அருகில் சென்று “பொம்பள புள்ளைக்கிட்ட குடும்ப கௌரவம், ஒழுக்கம் எல்லாம் சொல்லி வளக்காம. இப்போ உட்கார்ந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்கியா. வாய மூடு. நான் போய் அந்த ஓடு காலிய கண்டு பிடிச்சு அங்கேயே வெட்டி போட்டுட்டு வரேன்.
இனி இந்த வீட்ல அவ மூச்சு காத்து கூட நுழைய கூடாது” என்று கர்ஜிக்க,
ஓரமாக நின்றிருந்த கண்ணம்மாவும்,ஏழுமலையும் அக்காவை நினைத்து பயந்து போய் நிற்க, அவர்களை அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டார் சென்னப்பன்.
ஸ்ரீக்கும் பிரகதீரனுக்கும் எப்போது திருமணம் முடிந்தது. இருவருக்கும் இடையில் என்ன நடந்தது. ஸ்ரீ தந்தை நினைப்பது போல் அவள் வாழ்க்கை இனி சரியாகுமா,
தந்தை கையில் மீனா சிக்குவாளா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்…..