தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், சத்ய தேவிற்கு அழைப்பு விடுத்தாள்.

இரண்டு முறை ரிங் அடித்து ஓய, மூன்றாவது முறையில் தான் எடுத்திருந்தான்.

“எஸ், தேவ் ஹியர்” என்றான் கம்பீரமான குரலில். அவளுக்கோ வார்த்தைகள் வராமல் தந்தியடிக்க, பேசாமல் அமைதியாக இருந்தாள். இரண்டு மூன்று ஹலோக்களை சொன்னவன் பொறுமையிழந்து போனை வைக்கப் போக, அந்த நிமிடம் ஞாபகம் வந்தவனாய்,

“ஆரண்யா” என்றான் ஆழ்ந்த குரலில்.

“எஸ், நான்தான்” என்றாள் நடுங்கும் குரலில். எதிரில் இருந்தவனுக்கோ ஆச்சர்யம். அவளாக அவனுக்கு அழைப்பு விடுப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அது அவனின் குரலிலேயே தெரிந்தது.

“நீங்க நினைச்சதை நடத்தி காட்டிட்டிங்கல்ல?” என்றாள் கமரிய குரலில்.

“நீங்க என்ன பேசுறிங்கன்னு எனக்கு புரியலை ஆரண்யா. எனக்கு உங்களைப் பிடிச்சிருந்தது. நான் ப்ரோபோசல் வச்சேன். நீங்க மாட்டேன்னு சொன்னிங்க. நான் யோசிக்க டைம் கொடுத்தேன். உங்க வீட்ல இருந்து உங்களுக்கு ஓகேன்னு சொல்லவும் தான் உங்களை மீட் பண்ண வந்தேன். இதுல என்னோட தப்பு என்ன கண்டிங்க?” என்றார் அதிகாரமாய்.

“எனக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சும் என்னை போர்ஸ் பண்றது தப்புன்னு உங்களுக்கு தோணலையா மிஸ்டர்?” என்றாள்.

“இதை உங்க வீட்ல சொல்லியிருக்கலாமே?” என்றான் அவனும் நக்கலாய்.

“அவங்க கேட்கலை” என்றாள்.

“சோ, நான் மட்டும் கேட்கணும்னு ஏன் எதிர்பார்க்குறிங்க. முடிஞ்சா உங்க வீட்ல கன்வைன்ஸ் பண்ணுங்க” என்றான் தீர்க்கமாய்.

“அதான் அவங்க கேட்கலைன்னு சொல்லிட்டேனே?” என்றவள்,

“எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றாள்.

“என்ன?” என்றான் ஒரு மாதிரியான கூர்மையான குரலில்.

“எனக்கு இந்த மேரேஜ் சிம்பிளா நடக்கணும். லைக் இந்த மீடியா, கேமரா, பப்ளிசிட்டி எல்லாம் இல்லாம” என்றாள்.

“அதெப்படி முடியும். அப்படி திருட்டு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன?” என்றான் கடுமையான குரலில்.

“நான் ஒன்னும் திருட்டு கல்யாணம் பண்ண சொல்லலை. சிம்பிளா பண்ணனும்தான் சொன்னேன்” என்றாள் கோபமாய்.

“எனக்கு லைப்ல நடக்குற முதல் கல்யாணம். அதை எப்படி சிம்ப்ளா பண்ண முடியும்? யு நோ, இன்னைக்கு சினி இண்டஸ்ட்ரியே என்னோட மேரேஜ்க்காகத் தான் வெயிட்டிங்” என்றான்.

“ஆனா, என்னோட கல்யாணத்துக்காக என் குடும்பம் மட்டும் தான் சார் வெயிட் பண்றாங்க. சோ அவங்களுக்கு தெரிஞ்சா போதும். இது ஒரு கண்டிஷன் தான் எனக்கு. இல்ல, அதையும் பண்ண முடியாதுன்னா, உங்க இஷ்ட்டம் என்னவோ அதையே பண்ணிக்கங்க. ஏற்கனவே ஜடமா இருக்குற எனக்கு அப்பவும் அப்படி இருக்குறதுல பெருசா என்ன பிரச்சனை இருக்கப் போகுது?” என்றாள் விரக்தியாய்.

“ஆரண்யா” என்றான் அதிர்ந்த குரலில். அவளின் அந்த குரல் அவனுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

“நான் வைக்கிறேன் மிஸ்டர். சத்யா” என்றாள்.

ஆனால் விஷயத்தைக் கேட்ட சிவகாமிக்குத் தான் ஆரண்யா மேல் கோபம்.

“இங்க பாருப்பா தேவ். உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரு காரணத்துக்காகத் தான் நான் சரின்னு சொன்னேன். ஆனா, கல்யாணத்தை அப்படி எல்லாம் சிம்ப்ளா வைக்க முடியாது. உங்க அண்ணன் தான் லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னான். இப்போ உனக்கும் யாருமில்லாம ஏன் அப்படி பண்ணனும். இது என்னோட ஆசை. இதை நீ மறுக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இல்லைன்னா, வேற பொண்ணை பார்ப்போம்” என்றார் அவர் உறுதியாக.

“அந்த பொண்ணு சொல்றது கூட ஒரு வகையில ஓகே தானம்மா..! இவன் இப்ப தான் பீக்ல இருக்கான். இப்ப போய் கல்யாணம் அது இதுன்னா, மார்க்கெட் கொஞ்சம் டல்லாகும். அதுக்கு பதிலா, சிம்பிளா முடிச்சுட்டா, யாருக்கும் தெரியாதுல்ல” என்றான் யாதவன்.

“அப்படி கல்யாணத்தை மறைச்சு காசு சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் என்ன ஹீரோயினா? கல்யாணம் ஆன உடனே மார்க்கெட் சரிய?” என்ற சிவகாமி விடாப்பிடியாய் நின்றார். கடைசியில் அவரின் பிடிவாதமே வென்றது.

எப்போதும் போல் ஆரண்யா தான் இந்த முறையும் இறங்கி செல்ல வேண்டியிருந்தது.

அடுத்த கட்ட வேலைகள் துரிதமாக நடக்க, கல்யாண வேலைகள் படு ஜோராய் நடந்து கொண்டிருந்தது. திரை உலகம் முழுவதுமே சத்ய தேவ் திருமண விஷயமே ஓடிக் கொண்டிருந்தது.

ஆரண்யாவோ இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போலவே இருந்தாள். காயத்ரிக்கு கூட ஒரு கட்டத்தில் பயமாக இருந்தது. எங்கே வேறு மாதிரியான முடிவுகள் எதுவும் எடுத்து விடுவாளோ என்று.

அவளைச் சுற்றியே காயத்ரி அலைய, தாயின் மனப் போக்கை அறிந்தவளுக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் கூட இருந்தது.

பெற்றவர்களின் முகத்தில் தெரிந்த அந்த சந்தோசம் மட்டுமே அவளுக்கு அப்போதைக்கு ஆறுதல்.

ஆதிரா எப்போதும் போல் அவளை முறைத்துக் கொண்டு தான் திரிந்தாள். நடக்கும் ஏற்பாடுகளைக் கண்டவளுக்கு, இவை அனைத்தும் தனக்கு நடந்திருக்க வேண்டியவை என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆராவின் மீது அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

இதோ, அரசியல் பெரும் புள்ளிகள், திரை உலக பிரபலங்கள் மத்தியில் அதி விமர்சையாக நடந்து கொண்டிருந்தது சத்ய தேவ்-ஆரண்யா திருமணம். தாமரை வண்ண பட்டுப் புடவையில்,அதற்கேற்ற நகைகளுடன் பேரழகியாய் வந்து நின்றவளைக் கண்டு அவனோ  இமைக்க மறந்திருக்க, அனைவரின் கண்களும் அவர்கள் மேல் தான் இருந்தது. அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. சிவகாமிக்கோ கை கால் தரையில் படவில்லை.

ஆரண்யாவை மணப் பெண் கோலத்தில் கண்ட யாதவன் அவள் அழகில் மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனின் பார்வையை உணர்ந்த சாரு நிவேதா,

“இங்கயும் உங்க புத்தியை காட்டாதிங்க” என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

சில ஹீரோக்கள் கூட அவளைத்தான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். ஹீரோயின்கள் பலருக்கும் காதில் புகை வராத குறை தான். பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரம் கூடி, அழகனாய் நின்றவனது தோரணையில் ஒரு நிமிடம் அசந்து தான் போய் விட்டனர்.

அவனின் அருகில் நெருப்பில் இருப்பதை போன்று அமர்ந்திருந்தாள்  ஆரண்யா. நல்ல நேரத்தில் அனைவரின் ஆசீர்வாதத்துடன் கையில் தாலியுடன் அவளை நெருங்கியவன்,

“கட்டவா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“வேண்டாம்னா விடப் போறியா?” என்றாள் பட்டென்று. மரியாதை எல்லாம் தூரப் பறந்திருந்தது.

“கண்டிப்பா விட மாட்டேன்” என்றவன் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரி பாதியாய் ஏற்றுக் கொண்டான்.

ரவிக்கும் காயத்ரிக்கும் மனம் நிறைந்து போனது. சுலோச்சனா பாட்டியை பற்றி சொல்லவே வேண்டாம். செல்ல பேத்தியின் திருமணம். அழுதே விட்டார் அவர்.

அனைத்து சேனல்களிலும் அவர்களின் திருமண செய்தி தான் ஓடிக் கொண்டிருந்தது. சோசியல் மீடியா முழுவதும் அன்றைக்கு அவர்கள் தான் கன்டென்ட்.

வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான். எப்போதடா இந்த நாடகம் எல்லாம் முடியும் என்று அமைதியாய் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டிருந்தாள் ஆரண்யா.

“உனக்கு டயர்டா இருந்தா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ ஆரண்யா” என்றான் இதமான குரலில்.

“யாரோட அக்கறையும் எனக்குத் தேவையில்லை” என்றாள் பட்டென்று.

அவளைப் பார்த்தவனின் முகத்தில் கடுமை தென்பட, அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலைமையில் இல்லை.