இதுவே அவர்களின் வாடிக்கை ஆனது. தினமும் காலையும் மாலையும் அவனை ஆராவின் விழிகள் பார்வையால் தொடருவதும், அவன் பார்த்தும் பார்க்காததும் போல் இருக்க, இருவரும் அவர்கள் அறியாமல் பெயரில்லாத ஒரு உணர்வை மனதிற்குள் வளர்த்துக் கொண்டனர். அந்த கண்ணாமூச்சி ஆட்டம் கூட சுவாரஸ்யமாய் இருந்தது. ஏனோ அவன் அருகில் வந்தாலே அவளுக்கு படபடத்துப் போகும். வார்த்தையில் வடிக்க இயலாத சில உணர்வுகள் மேலெழும்பும்.

அந்த பேருந்தில் நாளுக்கு நாள் அவனுக்கு மவுசு கூடிக் கொண்டே போனது. விடலைப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கு அவன் பார்த்தாலே போதும் என்கிற அளவுக்கு  அபிமானி ஆகியிருந்தான். அதற்கு அவன் அமைதி தான் முக்கிய காரணம். யாரிடமும் அனாவசிய பேச்சு இல்லை. அத்யாவசித்திற்கு மட்டுமே வாயைத் திறப்பான். அதிலும் ஆராவிடம் இது வரை வார்த்தை பரிமாற்றங்கள் எதுவும் இல்லை.

பள்ளி,கல்லூரி மாணவர்கள் அவனிடம் அண்ணா அண்ணா என்று அவ்வளவு நெருக்கமாய் பழக ஆரம்பித்திருந்தனர். இப்போதெல்லாம் தேவாவின் காதல் பாடல்கள் மட்டுமே அந்த பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஆரா…ஆரா” என்ற குரலில் உணர்வுக்கு வந்தாள் ஆரண்யா.

கதவைத் தட்டும் சத்தம் கேட்க, வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டவள், கதவைத் திறந்தாள்.

அவளின் முகம் பார்த்த காயத்ரிக்கு அவள் அழுதிருப்பது புரிந்தது.

“சொல்லுங்கம்மா” என்றாள் சோர்வாய். தாயின் பின்னேயே வந்த ரவிக் குமாரை கண்டவள், தலையை கீழே குனிந்து கொண்டாள்.

“இப்ப தலை குனிஞ்சு என்ன பிரையோஜனம் ஆரா. நீயா ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த. அதுவும் இடையிலையே போய்டுச்சு. இப்ப வரைக்கும் நாங்க சொல்றதையும் ஏத்துக்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்றார் ரவி பொறுமையான குரலில்.

“சாரிப்பா..! இன்னொரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை. என்னை கம்பெல் பண்ணாதிங்க. அவங்க வீட்ல பேசி ஆதிராக்கு முடிக்க பாருங்கப்பா. இல்லைன்னா வேற நல்ல இடம் கூட அவளுக்கு பார்க்கலாம்” என்றாள் அமைதியாய்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும் ஆரா?உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா?” என்றார் காயத்ரி. அவரின் கேள்விக்கு விரக்தி புன்னகை மட்டுமே அவளின் பதிலாய் இருந்தது.

“இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?” என்றார் ரவி.

“ஆதிராவைப் பார்க்க வந்துட்டு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதே முதல்ல பெரிய தப்புப்பா. அவ மனசு எவ்வளவு வருத்தப்படும்” என்றாள் ஆரா.

“சும்மா நடிக்காத ஆரா. இப்படி ஆகணும்னு தெரிஞ்சு தான சரியா அந்த நேரத்துக்கு வந்த. இப்ப என்னவோ நல்லவ மாதிரி பேசிட்டு இருக்க?” என்றாள் ஆதிரா அழுது வீங்கிய முகத்துடன்.

“நீ என்னைக்குத் தான் என்னை நம்பியிருக்க? இப்போ நம்புறதுக்கு. மத்தவங்க வாழ்க்கையை தட்டிப் பறிச்சு நான் என்ன செய்ய போறேன்.” என்றாள் ஆரா.

“உன்னைக் கட்டாயப்படுத்துறோம்னு நினைக்க வேண்டாம் ஆரா. விசாரிச்ச வரைக்கும் நல்ல பையன்னு சொல்றாங்க. நல்லா யோசிச்சு சொல்லுமா” என்றார் ரவி.

“கடைசி வரைக்கும் உங்க பொண்ணா உங்க கூட இருக்கத்தான் எனக்கு விருப்பம்” என்றாள் பட்டென்று.

“அப்பா நான் சொல்லல, இவ இப்படித்தான் பேசுவான்னு? இனி என்ன? அடுத்த வரன் பார்ப்பிங்க? அப்ப வர்றவனும் இவளைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போவான்? இவளுக்கு என்னை அவமானப்படுத்தி அழ வைக்கணும். அது மட்டும் தான் நோக்கம். எல்லாம் தான் அழகா இருக்கோம்கிற திமிரு ” என்றாள் ஆதிரா வெறுப்புடன்.

“ஆதிரா” என்று அதிர்ந்தாள் ஆரா.

“சும்மா இப்படி அப்பாவி மாதிரி நடிக்கிறதை முதல்ல நிறுத்து ஆரா. பார்த்தாலே எரிச்சலா இருக்கு.” என்ற ஆதிரா, கோபத்துடன் நகர்ந்துவிட்டாள்.

“யோசிச்சு நாளைக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு ஆரா. எங்க பேச்சை கேட்கனும்னு நினைச்சா சரின்னு சொல்லு” என்ற ரவியும் அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாது சென்று விட்டார்.

இரவெல்லாம் தூக்கம் தொலைத்தவள், மறுநாள் எப்போதும் போல் கிளம்பி தன் கடைக்கு சென்றாள்.  அங்கு சென்றவளுக்கு வேலைகள் இழுத்துக் கொள்ள, தேவையில்லாத சிந்தனைகளும், நினைவுகளும் பின்னோக்கி சென்றிருந்தன.

“அக்கா உங்களைப் பார்க்க ஆக்டர் சத்ய தேவ் சார்  வந்திருக்காங்க. கீழ ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றாங்க” என்று கடையில் வேலை செய்யும் பெண் வந்து படபடப்புடன் மெதுவாய் கூறினாள்.

“என்னவா  இருக்கும்?” என்று திகைத்தாள்.

“நீங்க இங்க பாருங்க. நான் போய் பார்த்துக்கிறேன். அன்ட் வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். நான் சொல்ற வரைக்கும் யாரும் கீழ வரக் கூடாது.” என்றவள், அலுவலக அறையை நோக்கி சென்றாள்.

‘ஆராஸ் யுனிக் வோர்ல்ட்’ இரண்டு தளங்களைக் கொண்டது. மேல் தளத்தை ஸ்டிச்சிங் யூனிட்டாக பயன்படுத்தி வந்தாள்.

உள்ளே நுழைந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் சத்ய தேவ். யுவன் பாவமாய் அவன் அருகில் நிற்க, அவனை அவளிடத்தில் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அகன்ற விழிகளில் தெரிந்தது.

“நீங்க எங்க இங்க?” என்றாள் அமைதியாய்.

“உங்க முடிவைக் கேட்டுட்டே கிளம்பலாம்னு சார் வெயிட் பண்ணிட்டு இருக்கார் மேம்” என்றான் யுவன். யுவன் தான் பேசினானே தவிர சத்ய தேவ் வாயைத் திறந்தானில்லை.

“நான் தான் என்னோட முடிவை ஏற்கனவே சொல்லிட்டேனே. மறுபடியும் ஏன் வந்து டிஸ்டர்ப் பண்றிங்க?” என்றாள்.

கால்மேல் கால் போட்டு கன்னத்தை இரு விரல்களால் தாங்கியிருந்தவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கோபத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

“மேம் நீங்க எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு” என்று யுவன் பேச ஆரம்பிக்க, தேவ் பார்த்த பார்வையில் அப்படியே அடங்கினான்.

“என்னை மறுக்க காரணம்?” என்றான் அழுத்தமாய்.

“சார் உங்களுக்கு புரியுதா இல்லையா? நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷனை இழந்தவ. என்கிட்டே நீங்க இப்படி பிகேவ் பண்றதே பெரிய தப்பு. அப்படியும் ஒரு விதவைப் பொண்ணுக்குத் தான் வாழ்க்கை குடுக்கனும்னு நீங்க நினைச்சா, ஊர் உலகத்துல நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு குடுங்க. என்னை விட்டுருங்க” என்றாள்.

“உங்க அம்மா அப்பா சரின்னு சொல்லவும் தான் நான் இங்க வந்திருக்கேன் மிஸ். ஆரண்யா” என்றான் தேவ்.

“நோ..! கண்டிப்பா இருக்காது. என்னோட முடிவை அவங்க எப்பவும் மறுத்ததில்லை” என்றாள்.

“உங்களுக்கு சந்தேகம்னா அவங்ககிட்டயே கேட்டுக்கலாம். பட் ஒன் திங்க். ஐ ஹேவ் டிசைடேட் தட் யு ஆர் மை ப்யூச்சர் பியான்சி. இதை யாராலும் மாத்த முடியாது, காட் இட்” என்றவன்,

“யுவன் சீக்கிரம் மீடியால அனௌன்ஸ் பண்ணிடு” என்றான். அவனின் பேச்சில் கோபம் கொண்டு எழுந்தவள்,

“இட்ஸ் இம்பாசிபிள். கெட் அவுட் ஆப் ஹியர் பர்ஸ்ட்” என்றாள் எரிச்சலுடன்.

யுவன் அதிர்ந்து பார்த்தான். தேவ் இப்படியான மரியாதை மீறல்களை எல்லாம் எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

“அப்போ கடைசி வரைக்கும் உன் தங்கச்சிக்கும் மேரேஜ் நடக்காது. உனக்கும் அது தான் ஆசை போல.” என்றவன்,

“இப்படி மரியாதை இல்லாம பேசுறது இதுவே கடைசி முறையா இருக்கனும். நான் எந்த இடத்துலயாவது உங்ககிட்ட மரியாதை குறைவா நடந்தேனா?” என்றான் கோபம் கனன்ற விழிகளுடன்.

அவள் அதிர்வுடன் பார்க்க,

“இது மேரேஜ் புரோபோசல். உங்க பேரண்ட்ஸ் கன்பார்ம் பண்ணவும் தான் இங்க வந்தோம். சோ நீ கேள்வி கேட்க வேண்டியது என்னை இல்லை, அன்டர்ஸ்டேன்ட். நானும் இதுல பிக்ஸ் ஆகிட்டேன். இனி மாத்த முடியாது. கெட் ரெடி பார் தி மேரேஜ்” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தவன்,

“யுவன்” என்றான்.

“காரை எடுக்க சொல்றேன் சார்” என்றவன் வேகமாய் வெளியே  சென்றான்.

அவள் அப்படியே நிற்க, திரும்பி செல்ல எத்தனித்து, மீண்டும் அவளிடம் திரும்பியவன்,

“யு லுக் வெரி கார்ஜியஸ் டுடே. சி யு சூன்” என்றவன் வேக எட்டுக்களுடன் சென்று விட்டான்.

அவள் தான் அதிர்ந்தபடி நின்றிருந்தாள்.