அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவன் போனுக்காக காத்திருந்தாள். அவனிடமிருந்து எந்த காலும் வரவில்லை. இப்போது இவள் டயல் செய்ய ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவேயில்லை.

மறுநாள் கல்லூரி விடுமுறையாய் இருக்க, கிளம்ப வேண்டிய அவசியமின்றி அப்படியே பித்துப் பிடித்தவளைப் போல் இருந்தாள்.

அறைக்குள் வந்து அவளைப் பார்த்த காயத்ரிக்கு தான் அதிர்ச்சியாய் இருந்தது.

“ஆரா என்னடா ஆச்சு? ஏன் முகம் எல்லாம் இப்படி வீங்கியிருக்கு?” என்று அவளைத் தொட்டுப் பார்க்க, உடல் நெருப்பாய் கொதித்தது.

“என்ன ஆரா காய்ச்சல் இப்படி அடிக்குது?” என்று பதறியவர், ரவியிடம் சொல்ல, உடனே அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர்.

“இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். வைரல் பீவர் தான். தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்”  என்று டாக்டர் சொல்ல, அவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த ரவிக்கு யோசனையாய் இருந்தது.

“கட்டாயப்படுத்தி காயத்ரி கொடுத்த இட்லியையும், மாத்திரையையும் விழுங்கியவள், யாரையும் பார்க்க முடியாமல் தூங்குவதைப் போல் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவளறியாமல் உறங்கியும் போனாள்.

“ஆராக்கு என்னாச்சு ஆன்ட்டி?” என்றபடி வந்தாள் மித்ரா.

“திடீர்ன்னு பீவர்டா மித்ரா. அதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்தோம். ரெஸ்ட் எடுக்குறா” என்றார் காயத்ரி.

“நான் போய் பார்க்கட்டுமா ஆன்ட்டி” என்றாள் மித்ரா.

“அவ தூங்கிட்டு இருக்கா” என்றாள் ஆதிரா பட்டென்று.

“ஆதிரா” என்று அவளை அதட்டிய காயத்ரி,

“நீ போய் பாருமா” என்றார். அதற்காகவே காத்திருந்தவள் போல் மித்ரா செல்ல,

“ம்ம்மா.! இந்த மித்ராவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை” என்றாள் ஆதிரா.

“மெதுவா பேசு ஆதிரா. இதென்ன பழக்கம்? மித்ராவும் உனக்கு அக்கா மாதிரித்தான்” என்றார்.

“ஆராவையே நான் அக்காவா அக்சப்ட் பண்ணலை. இதுல இவ வேறையா?பாட்டி மட்டும் இப்ப இருக்கணும்” என்று முறைத்துக் கொண்டு சென்றாள்.

ஆராவின் அறைக்கு சென்ற மித்ரா, உறங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். நெற்றியில் கைவைத்துப் பார்க்க, அனலாய் கொதித்தது.

“ஆரா” என்றாள் மெதுவாய். அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சில நிமிடங்கள் அவளைப் பார்த்திருந்தவள், எழுந்து வெளியே செல்ல முற்பட, ஆராவின் செல்போன் ஒலித்தது.

அவள் எழுந்து விடக் கூடாது என்று வேகமாய்  எடுத்து சைலென்ட்டில் மாற்றினாள். எதார்த்தமாய் போன் திரையைப் பார்க்க, ஜெய் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அதிர்ந்து விழித்தவள், பட்டென்று அதை கட் செய்திருந்தாள். அவன் மீண்டும் மீண்டும் அழைக்க, மித்ரா மீண்டும் மீண்டும் கட் செய்தாள்.

“என்னாச்சு ஆரா? கால் அட்டெர்ன் பண்ணு” என்று அவன் மெசேஜ் அனுப்ப, அதையே பார்த்திருந்தவள், பதிலுக்கு எதையும் அனுப்பவில்லை. ஆராவையும் எழுப்பவில்லை. அவனின் அழைப்பிற்காக தவம் கிடந்தவள், அவன் அழைப்பது தெரியாமல்  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மித்ராவோ அவன் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியையும் அழித்தாள்.

“ஆரா சாரிடி. பிளீஸ் போனை எடு. எனக்கு உன்கிட்ட பேசனும்டி” என்று அவன் வாய்ஸ் நோட் அனுப்ப, அதைக் கேட்ட மித்ரா அதையும் அழித்தாள்.

“நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும். பட் என்னால வர முடியாத சூழ்நிலை. இங்க என்னோட டாட் இறந்துட்டார். உடனே கிளம்பி வர வேண்டிய சிச்சுவேஷன். இங்க ஏகப்பட்ட பிரச்சனை. என்னால யார்கிட்டயும் பேச முடியலை. புரிஞ்சுக்கோடி. நான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு சீக்கிரமே வந்து உன்னை மீட் பண்றேன். உன்கிட்ட நிறைய பேசணும் ஆரா.” என்று வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தான். அதைக் கேட்ட மித்ரா அதையும் அழித்தாள்.

பார்க்கப்பட்டதற்கான புளு டிக் அவனுக்கு காட்ட, பதில் ஏதும் இல்லாததால் அவள் கோபமாக இருக்கிறாள் என்று நினைத்தான்

“ஏதாவது பேசுடி”என்று அவன் அனுப்ப, அவன் குரலில் இருந்த சோகத்தில் மித்ராவே ஒரு நிமிடம் கலங்கிப் போனாள்.

“என்னை பார்க்க முடியலைன்னு கோபத்துல இருக்கேன்னு நினைக்கிறேன். நானும் நிஜத்துல உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் இருந்தேன். உன்னோட எக்சைட்மென்ட்டை பார்க்க ரொம்ப ஆசையா இருந்தேன். பட் இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ஆரா. என் டாட் சூசைட் பண்ணிகிட்டார். இங்க நிலைமை சரியில்லை. நான் கண்டிப்பா வரேன்.” என்றவன்,

“நேர்ல பார்க்காட்டி என்ன? போட்டோ அனுப்புறேன். இப்போதைக்கு அதுல பார்த்துக்கோ. உனக்கு நம்புறது கஷ்ட்டமா இருக்கும். ஆனா, இப்போ இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலைடி”  என்று போட்டோவையும் அனுப்பி வைத்தான்.

அவனைப் பார்த்த மித்ரா ஏகத்திற்கும் அதிர்ந்தாள்.’இவரா?’ என்றவளுக்கு ஏதோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

“போட்டோவைத்தான் பார்த்துட்ட இல்ல. இப்பவாவது பேசேன்டி. அட்லீஸ் சண்டையாவது போடேன்.” என்று வாய்ஸ் நோட் அனுப்பியவன், அவள் நம்பவில்லை என்று நினைத்து வீடியோ காலில் வந்தான்.

மித்ராவிற்கு பதட்டத்தில் கைகள் நடுங்க, வேகமாய் அதை கட் செய்திருந்தாள்.

“எனக்கு உங்க கூட பேச இஷ்ட்டம் இல்லை. உங்களை நம்ப நான் தயாரா இல்லை. எனக்கு கால் பண்ணாதிங்க ஜெய். டோன்ட் டிஸ்டர்ப் மீ” என்று அனுப்பிய மித்ரா, அனைத்தையும் தடம் தெரியாமல் அழித்தாள்.

அவன் மீண்டும் மீண்டும் அழைக்க, மித்ரா சுவிட்ச் ஆப் செய்தாள்.

“ஆரா போனை எடுத்து என்ன பண்றிங்க?” என்றபடி வந்தாள் ஆதிரா.

“ஒண்ணுமில்லை ஆதிரா. ஏதோ கால் வந்தது. யார்னு பார்க்குறதுக்குள்ள சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு” என்றாள் நிதானமாய்.

“சார்ஜ் இல்லாம இருக்கும். குடுங்க சார்ஜ் போட” என்று போனை கேட்க,

“நானே போடுறேன்” என்றாள் மித்ரா.

“ஒன்னும் வேண்டாம். குடுங்க நான் போட்டுக்கிறேன்.” என்று வாங்கியவள் சார்ஜரில் போட்டுவிட்டு போனை ஆன் செய்தாள். மித்ரா பதட்டத்துடன் நிற்க, எந்த அழைப்பும் வரவில்லை.

“சார்ஜ் தான் புல்லா இருக்கே. எப்படி சுவிட்ச் ஆப் ஆகும்?” என்ற ஆதிரா மித்ராவை முறைக்க,

“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும் ஆதிரா” என்றாள் கடுப்புடன்.

“நீங்க வாங்க, அவ தூங்கட்டும்” என்று விடாப்பிடியாய் அவளை இழுத்துக் கொண்டு சென்றாள். ஜெய் மீண்டும் அழைப்பானோ என்ற பதட்டத்துடனேயே சென்றாள் மித்ரா

பாவம் ஆரண்யா..! காய்ச்சலில், தூங்கி எழுந்தவுடன்  கண்டது என்னவோ,

“தப்பித் தவறி இனி எனக்கு கால் பண்ணிடாத ஆரா. ஐ ஹேட் யு. குட் பாய்” என்று ஜெய் இறுதியாக அனுப்பியிருந்த செய்தியைத் தான். பதறியபடி வேகமாய் அவனுக்கு அழைக்க, அவளுக்கு கிடைத்தது என்னவோ, சுவிட்ச் ஆப் என்ற செய்தி தான்.