“நீ இந்த சீட்ல உட்காரும்மா! நாங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவோம்” என்றவர் அடுத்த ஸ்டாப்பில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி விட, ஆராவும் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் மித்ரா அமரப் போக, அவளைப் பார்வையால் தடுத்த ஜெய் பட்டென்று ஆராவின் அருகில் அமர்ந்தான். தனக்கு அருகில் தோள்களை உரசிக் கொண்டு அமர்ந்தவனைக் கண்டு அவளுக்கு காய்ச்சலே வந்துவிடும் போல் இருந்தது. காதல் ஹார்மோன்கள் ஒரு பக்கம் குதியாட்டம் போட, பயத்தில் அவளுக்கு பார்வை நாலா பக்கமும் சுழல ஆரம்பித்தது.
ஜெய்யை பதட்டத்துடன் பார்த்து வைக்க, அவன் அமர்ந்திருந்த தோரணையே,
‘யார் வந்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை’ என்பதைப் போல் இருந்தது. அவள் கையில் ஒரு மோதிரத்தை கொடுத்தவன், தன் விரலில் போடுமாறு கண்களால் ஜாடை காட்ட, அவளோ பயத்தில் ‘மாட்டேன்’ என்பதைப் போல் தலையை ஆட்டினாள்.
‘போட முடியுமா முடியாதா?’ என்பதைப் போல் தான் இருந்தது அவனின் பார்வை. அவளுக்கோ பார்வை அவனைத்தாண்டி யார் பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதில் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், கோபத்துடன் எழுந்து கொள்ளப் போக, அப்போது தான் அவன் கோபம் உணர்ந்தவள், பட்டென்று அவன் கைகளைப் பிடித்தாள். அவள் தொடுதலில் குளிர்ந்தவன் மீண்டும் அமர, கண்களில் பயத்துடன், கைகள் நடுங்க ஒரு வழியாக அவனுக்கு மோதிரத்தை போட்டிருந்தாள்.
மித்ரா அதிர்ச்சியாய் பார்க்க, அவளின் பார்வையைப் பார்த்த கணேஷிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“லூசே..! அவருக்கு ட்யூட்டி முடிஞ்சிருச்சு. அண்ணா ஆராவைப் பார்க்குறதுக்காகத் தான் வந்திருக்காரு” என்றான்.
“அப்படின்னு அவர் வந்து உன்கிட்ட சொன்னாரா?” என்றாள் இடக்காய்.
“இதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமா? லவ் பண்ணா தானா தெரிஞ்சுடும்” என்றான் கணேஷ்.
“அப்படி எதுவும் எனக்குத் தெரியவே வேண்டாம்” என்றாள் அவளும்.
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஜெய்க்கு சிரிப்பு வந்தது. இப்போது சுற்றும் முற்றும் அவன் அனைவரையும் நோட்டம் விட, பாதிப்பேர் மொபைலில் மூழ்கியிருந்தனர். பின்பக்கம் படியை ஒட்டி கடைசியாய் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தது இன்னும் வசதியாகிப் போனது அவனுக்கு. அவன் செய்கையை அவர்கள் மூவரும் விநோதமாய் பார்த்திருக்க,
சட்டென்று கையிலிருந்த விசிலை ஊதினான் ஜெய். டிரைவர் சடன் பிரேக் போட, நின்றிருந்தவர்கள் முன்னோக்கி ஒருவர் மேல் ஒருவர் விழப் போக, அந்த கண நேரத்தைப் பயன்படுத்தியவன்,
“ஆரா” என்றான் முதன் முறையாக. அவனின் அழைப்பில் விழி விரித்தவள், அவனைப் பார்க்க, சட்டென்று கழுத்தில் அந்த செயினையும் போட்டு விட்டிருந்தான்.
“ஹேப்பி பேர்த்டே.!” என்று கண்கள் நிறைய காதலுடன் சொன்னவனின் வார்த்தைகளில்.. ஆரா, மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பைப் போல் அசையாமல் இருக்க, சட்டென்று எழுந்து கொண்டான் ஜெய். அவன் எழுந்தவுடன், கணேஷ் மித்ராவை லேசாய் தள்ள, பொத்தென்று அமர்ந்தாள் மித்ரா.
நடந்ததில் ஆராவை விட மித்ரா தான் அதிர்ச்சியில் மூர்ச்சையாகி இருந்தாள்.
“ஆனா இந்த கணேஷ் பயலுக்கு தெரிஞ்சிருக்கு. அவன் தான் ஜெய் அண்ணாவுக்கு ஹெல்ப் பண்றான்னு நினைக்கிறேன்” என்றாள் மித்ரா. அவள் பேசும் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை ஆரா. அவள் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். விரலில் இருந்த மோதிரத்தையும், கழுத்தில் இருந்த செயினையுமே மாத்தி மாத்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் நிறுத்தத்தில் இறங்க முற்பட்டவள் ஜெய்யை தேட, பின்னால் படியில் நின்றிருந்தவனின் அவளின் தேடுதலில் தன் சிகையைக் கோதி, தன்னை அடக்கிக் கொண்டான்.
படியில் இருந்தவனைப் பார்த்தவள், கண்களால் விடை பெற, அவள் கைகளில் குடையை திணித்திருந்தான் ஜெய். அப்போதும் மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருந்தது.
“அண்ணா எங்களுக்கெல்லாம் குடை இல்லையா?” என்று கணேஷ் வம்பிழுக்க,
“எருமை மாட்டு மேல மழை பேஞ்சா அதுக்கு என்ன தெரியவா போகுது? பேசாம இறங்குடா” என்றாள் மித்ரா. அவளை முறைத்துவிட்டு இறங்கினான் கணேஷ்.
இறங்கி குடையை விரித்த ஆரா, பேருந்து கிளம்பவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். குடைக்குள் ஓவியமாய் இருந்தவளை பார்த்துக் கொண்டே சென்றான் அவன்.
பால்கனியின் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு, லேசாக குளிரெடுக்க அறைக்குள் வந்தாள். சத்ய தேவ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
‘இவருக்கு என்ன குறைச்சல்ன்னு இப்படி பிடிவாதம் பிடிச்சு என்னை கட்டியிருக்கார்?’ என்று யோசித்தவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முகம் நிர்மலமாய் இருந்தது. ட்ரிம் செய்யப்பட தாடியும், உடற்பயிற்சியில் முறுக்கேறிய புஜங்களும், படத்தில் பார்ப்பதைப் போன்று நிஜத்திலும் அப்படியே தான் இருந்தான்.
அந்த அறையை பாதி இரவு முழுவதும் நடந்தே பொழுதைக் கழித்தவள், ஒரு கட்டத்தில் அயர்ந்து தூங்கிவிட்டாள்.
வழக்கமாய் எழும் நேரத்திற்கே எழுந்து விட்டான் சத்யா தேவ். எழுந்தவன் கண்டது என்னவோ, அவ்வளவு பெரிய கட்டிலில் உடலை குறுக்கி படுத்துத் உறங்கிக் கொண்டிருந்த ஆரண்யாவைத்தான். அவள் அருகில் சென்று படுத்தவன், அவள் மதி முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான். உறக்கத்தில் கூட நேர்த்தியாய் இருந்த அவள் புடவையைக் கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான். ஆதுரமாய் அவள் தலையை வருட, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு அந்த வருடல் ஆதரவாய் இருந்திருக்க வேண்டும். அவன் புறம் திரும்பியவள், அவன் தோள் வளைவில் தலை வைத்து உறங்கத் தொடங்கினாள். முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை விலக்கி விட்டவனுக்கு ஏனோ அவளை விட்டு எழ மனமே வரவில்லை. தன்னை அவளுக்குள் இழுத்துக் கொள்வதைப் போன்ற பிரம்மை அவனுக்கு.
மீண்டும் சிறிது நேரம் அவளருகில் உறங்கியவனுக்கு, இரவு அவள் நடந்து கொண்டது நினைவிற்கு வர, கண்களைத் திறந்தவனின் முகம் இறுகியிருந்தது. அவள் தலையை தலையணைக்கு மாற்றியவன், எழுந்து கொண்டான்.
செல்போன் ஒலியில் கண்ணைத் திறந்தவளுக்கு, கண்கள் நெருப்பாய் எறிந்தது.
“இதென்ன இவ்வளவு இருட்டா இருக்கு ரூம்” என்ற பயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, அருகில் இருந்த சுவிட்சை போட்டாள். இப்பொழுது அறை முழுவதும் வெளிச்சம் பரவ, சத்ய தேவ் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
செல்போன் விடாமல் ஒலிக்க,
“ஹலோ” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.
“ஆரா..! டைம் என்ன ஆச்சு? இன்னுமா தூங்கிட்டு இருக்க? நான் சீக்கிரம் எந்திருச்சு வர சொன்னேனா இல்லையா? இதென்ன புதுப் பழக்கம்” என்று காயத்ரி வழக்கம் போல் ஆரம்பிக்க,
“விடிஞ்சிருச்சாம்மா!” என்றவள் நேரத்தைப் பார்க்க அது ஒன்பது மணியைக் காட்டியது.
“இவ்வளவு நேரமா தூங்குனேன்” என்று தலையில் கைவைத்துவிட்டாள்.
“சீக்கிரம் குளிச்சுட்டு கீழ வா ஆரா.!” என்று பல்லைக் கடித்தார் காயத்ரி.
“வரேன்மா” என்று சலித்தவள்,
“எங்க போனாலும் அம்மாக்கள் எல்லாம் டிபிகல்ட் அம்மாக்கள் தான்” என்று முனங்கியவள், அப்போது தான் கவனித்தாள் அறை முழுவதும் இருந்த திரைச்சீலைகள் முழுவதும் இழுத்து விடப்பட்டு, அறை இருட்டாக்கப்பட்டிருப்பதை.
வேகமாய் எழுந்தவள் திரைச் சீலைகளை விலக்க, சூரிய ஒளி பளிச்சென்று அறை முழுவதும் பரவியது.
‘சத்ய தேவ் தான் தன் தூக்கம் கெடாமல் இருக்க இப்படி செய்திருக்க வேண்டும்’ என்று அவளுக்கு புரியாமல் இல்லை. அவள் பொருட்கள் அடங்கிய பெட்டியும் அங்கிருக்க, குளித்து முடித்து வந்தவள், ஆரஞ்ச் நிற காட்டன் புடவையை அணிந்து, ஈர முடியை இரண்டு பக்கமும் கிளிப்பில் அடக்கியவள், வேகமாய் வெளியே வந்தாள்.
வெளியே யுவனுடன் எதையோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்த சத்ய தேவ் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்க்க, வெளியே வந்த ஆரண்யாவை ஒரு நிமிடம் விழுங்குவதைப் போல் பார்த்து வைத்தான். அவள் அவனைப் பார்க்கவும் பார்வையை மாற்றியவன், மீண்டும் யுவனிடம் பேசத் துவங்க,
“இல்ல, உங்க குரல் எனக்கு ரொம்ப பரீட்சியமானவங்க குரல் மாதிரி தெரியுது. அதான்” என்றாள் யோசனையுடன்.
“இல்லையே மேம். நான் இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்ததில்லையே?” என்றான் யுவன்.
“இல்ல, நான் அப்படி சொல்ல வரலை” என்று யோசனைக்குத் தாவியவள்,
“யு கேரி ஆன்” என்றவள் கீழே செல்ல முற்பட்டாள்.
“ஒரு நிமிஷம் ஆரண்யா” என்ற தேவ்,
“ஓகே யுவன் நான் சொன்னதை முடிச்சுடு” என்றபடி எழுந்து கொண்டான்.
யுவன் செல்லவும்,
“என்ன?” என்றாள் புரியாமல்.
“கீழ தான போற, வா சேர்ந்தே போவோம்” என்றான்.
‘இதுக்குத்தான் இந்த அலப்பறையா?” என்று எண்ணிக் கொண்டவள், வேறு வழியின்றி அவனுடன் சேர்ந்தே சென்றாள். அவர்கள் இருவரும் ஜோடியாய் வருவதைப் பார்த்த பெரியவர்களுக்கு மனம் நிறைந்து போனது. குறிப்பாக சுலோச்சனா பாட்டிக்கு. பேப்பர் படிப்பதைப் போல் அமர்ந்திருந்த யாதவனும், யாரும் பார்க்காமல் அவளைத் தான் பார்த்திருந்தான்.
ஆராவிற்கு யாரோ தன்னைப் பார்ப்பதைப் போல் தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தாள். அவனோ தன் பார்வையை மறைத்துக் கொண்டான்.
“வாட் ஹேப்பன்?” என்றான் தேவ், அவள் நிற்பதைப் பார்த்து.
“நத்திங்” என்றாள் யோசனையுடன்.
“பூஜை அறையில் விளக்கேத்துமா” என்று சிவகாமி சொல்ல, மறுக்காமல் சென்று விளக்கேற்றினாள். முதல் நாள் அவளுக்கு எதிரில் நின்றிருந்தவன் இப்போது அவளுக்கு அருகில் நின்றிருந்தான்.
“என்ன?” என்றாள் புரியாமல்.
“என்ன?” என்றான் அவனும்.
“இப்ப ஏன் என் பக்கத்துல நிக்குறிங்க?” என்றாள் கேள்வியாய்.
“இதென்ன வம்பா இருக்கு? பொண்டாட்டி பக்கத்துல புருஷன் நிக்காம வேற யார் நிப்பாங்க?” என்றவன், அவள் கையில் இருந்த ஆரத்தி தட்டில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் இட்டான்.
அவனின் செயலில் அதிர்ந்தவள்,
“என்ன பண்றிங்க?” என்றாள்.
“கல்யாணம் ஆகிட்டா, நெத்தியில குங்குமம் வச்சுப்பாங்க தானே” என்றவன், அவளைப் பார்த்து புன்னகையுடன் சொல்ல, அவன் சிரிப்பில் தன்னை மறந்து அவனைப் பார்த்திருந்தாள் ஆரா.