சாப்பிட்டு முடித்த சத்ய தேவ் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்டார் காயத்ரி.
“எனக்கு வேண்டாம்” என்று அவள் அதை எடுக்கப் போக,
“பூவை வேண்டாம்னு சொல்லக் கூடாது ஆரா” என்ற பாட்டியின் குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.
இதையெல்லாம் பார்க்க பிடிக்காத ஆதிரா அவளுக்கென கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டாள்.
ஆராவின் கைகளை பிடித்துக் கொண்ட சிவகாமி,
“சாரு இப்போதைக்கு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு முகத்துக்கு நேராவே சொல்லிட்டாம்மா. நீயாவது இந்த வீட்டுக்கு ஒரு வாரிசை சீக்கிரம் பெத்துக் குடும்மா. உன்கிட்ட இப்படி கேட்குறேன்னு என்னை தப்பா மட்டும் நினைச்சுடாத ஆரா” என்றார் சிவகாமி.
‘எந்த தைரியத்துல இவங்க என் மூலமா வாரிசை எதிர்பார்க்குறாங்க’ என்று எண்ணியவள் அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தவர்,
“தேர்ட் ப்ளோர் புல்லா தேவ் கன்ட்ரோல் தான். அதோ அங்க லிப்ட் இருக்கு. என்னமோ இப்பதான் முதன் முதல்ல பர்ஸ்ட் நைட்டுக்கு போற மாதிரி!” என்று நக்கலாக சொல்லிவிட்டு சென்று விட்டாள் சாரு.
“அவ எப்பவும் கொஞ்சம் அப்படித்தான் பேசுவாம்மா..!நீ எதையும் மனசுல வச்சுக்காத” என்றவரிடம் தலையை ஆட்டியவள், வேறு வழியின்றி லிப்ட்டை நோக்கிச் சென்றாள். அங்கிருந்த ஆடம்பரம் எதுவும் அவளைக் கவரவில்லை.
தேர்ட் புளோரில் லிப்டை விட்டு வெளியே வந்தவளுக்கு எந்த பக்கம் செல்வதென்று ஒன்றும் புரியவில்லை. அவள் அப்படி முழித்துக் கொண்டு தான் நிற்பாள் என்று முன்கூட்டியே கணித்தவன் போல், அங்கே ஹால் போன்ற அமைப்பில் போடப்பட்டிருந்த சோபாவில் தான் அமர்ந்திருந்தான் சத்ய தேவ்.
“வெல்கம் ஆரண்யா” என்றவனின் குரலில் திரும்பிப் பார்த்தாள். எழுந்து அவளின் அருகில் வந்தவன், “ஒரு வழியா மேடம் பயமில்லாம வந்துட்டிங்க போல” என்றான்.
ஏனோ அது வரை இருந்த தைரியம், திடம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைய, உள்ளுக்குள் தோன்றிய பதட்டத்தை அவனறியாமல் மறைத்துக் கொண்டாள்.
“எனக்கும் அப்படி சொல்லனும்னு தான் ஆசை. ஆனா பாரு நீ பக்கத்துல இருந்தா நான் நானாவே இருக்குறதில்லை. இதுல எங்க இருந்து மனுஷனா இருக்குறது?” என்றான் சிரிப்புடன்.
ஆரா அவனை முறைத்துப் பார்க்க,
“ஓகே..கூல்..!” என்றவன்,
“லெட் மீ ஷோ யு அவர் ரூம்” என்று அவளைத் தோளோடு அணைக்கப் போக,
“நோ” என்று சட்டென்று விலகினாள் ஆரா.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஓகே” என்று தோள்களை குலுக்கிக் கொண்டான்.
என்னதான் வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளே உதறல் எடுக்கத் தான் செய்தது. அவனின் பின்னால் அமைதியாக சென்றவள்,ஏதோ பேய் குகைக்குள் நுழைவதைப் போன்ற பார்வையுடன் நுழைய, அவளின் அந்த பாவனையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. அவளறியாமல் இதழ் மடக்கி அடக்கிக் கொண்டான்.
விசாலமான அறை, அதை ஒட்டிய பால்கனி, பால்கனியில் இருந்து செல்லும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த நீச்சல் குளம் என்று இன்டீரியர் டிசைனுடன் அவ்வளவு அழகாய் வடிவமைக்கப் பட்டிருந்தது.
அவள் பயந்த மாதிரி அறையில் எந்த அலங்காரங்களும் இல்லாமல் இருந்ததே அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது.
“என்ன மூச்செல்லாம் பலமா இருக்கு?” என்றான்.
அவனை முறைத்தபடி கையில் இருந்த பால் டம்ளரை அங்கிருந்த டேபிளின் மீது நங்கென்று வைத்தாள்.
“நியாயமா அதை என் கைல தான குடுத்திருக்கணும்” என்றான் இடுங்கிய பார்வையுடன்.
“அதுக்கு வேற ஆளைப் பாரு! என்னால குடுக்க முடியாது. வேணும்னா நீயே எடுத்து குடி” என்றாள் மரியாதையின்றி.
“இப்ப நான் என்ன அசிங்கமா பேசிட்டேன். இன்னைக்கு பர்ஸ்ட் நைட் . பர்ஸ்ட் நைட்ல பால் பழம் சாப்பிடுறது தான வழக்கம். அதைத் தான் சொன்னேன்” என்றான் இடுங்கிய பார்வையுடன்.
“மிஸ்டர் சத்யா, உங்களுக்குத் தான் இது பர்ஸ்ட் நைட் எனக்கில்லை. புரியுதா?” என்றாள் நக்கலாய்.
“அதைதான் நானும் சொல்றேன். எனக்குத்தான் பர்ஸ்ட் நைட். சோ நான் டென்ஷனா இருக்குறதுல நியாயம் இருக்கு. நீ ஏன் டென்ஷனா இருக்க?” என்றவன் அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து,
“உனக்குத் தான் இதுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே. சோ பிளீஸ் நான் எங்கையாவது தடுமாறினா நீ டேக் ஓவர் பண்ணிக்கோ” என்றான் சிரிப்பை அடக்கி.
“யு பிளடி ராஸ்கல்..! என்னவெல்லாம் பேசிட்டு இருக்க நீ. ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா உனக்கு?” என்றாள் முகம் முழுவதும் கோபத்துடன்.
“நான் ஒன்னும் ஏதோ ஒரு பொண்ணுகிட்ட பேசலையே. என் பொண்டாட்டிகிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றவன் அவளை நெருங்க,
“கிட்ட வந்தா மரியாதை கெட்டுரும்!”என்று சீறினாள் ஆரண்யா.
“அது ஒன்னும் பிரச்சனை இல்லை. உன்கிட்ட தானே கெடுது. கெட்டா கெட்டுட்டு போகட்டும்” என்று அவளை மேலும் நெருங்க,
“வேண்டாம் சத்யா” என்றவளை அவன் இழுத்து அணைக்க முற்பட,அவனைத் தடுக்க முடியாமல் கையில் கிடைத்த பிளவர் வாசை தூக்கி அவன் தலையில் அடித்திருந்தாள்.
“ஸ்ஸ்” என்று தலையைப் பிடித்தவனைப் பார்த்து பயந்துவிட்டாள் ஆரண்யா.
“சாரி சாரி..! நான் மெதுவா தான் அடிச்சேன்” என்றாள் பதட்டத்துடன்.
வலியுடன் அவளைப் பார்த்தவன், இன்னொரு அலங்கார பிளவர் வாசையும் எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“வேகமா அடின்னு சொன்னேன்.” என்று அவன் கத்த, அந்த கத்தலில் மிரண்டாள் ஆரா.
“இப்போ அடிக்கப் போறியா இல்லையா ஆரண்யா?” என்று அவன் கத்திய கத்தலில் அவள் கையில் இருந்த பிளவர் வாஸ் அவள் நடுக்கத்தில் கீழே விழுந்திருந்தது.
“என்னைப் பார்த்தா தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி இருக்கா? இல்லை ரேப் பண்றவன் மாதிரி தெரியுதா? ஒரு ஹக் பண்றதுல உன் கற்பு ஒன்னும் கரைஞ்சி போயிடாது.” என்றவனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் அரண்டவள், அப்படியே சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.
அவளின் முகத்தில் பயத்தைப் பார்த்தவன், கொஞ்சம் நிதானத்திற்கு வந்தான்.
“போய் படு” என்றான் பொறுமையான குரலில்.
“எங்க?” என்பதைப் போல் அவள் பார்க்க,
“நீ போய் பெட்ல படுத்துக்க” என்றவன்,
“பயப்படாத உன் பக்கத்துல படுக்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.” என்றவன், அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டான். அன்று முழுவதும் இருந்த அலைச்சல் அசதியில் படுத்தவுடன் உறங்கியும் விட்டான்.
ஆராவிற்கு தான் தூக்கம் துளியும் வரவில்லை. அவன் முன் நெற்றி கொஞ்சம் வீங்கியதைப் போல் இருந்தது.
‘என்ன ஆரா பண்ணி வச்சிருக்க?’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள், ஆழ்ந்து தூங்கும் அவனையே பார்த்திருந்தாள். அவனின் அருகாமையை மனம் நிம்மதியாகவும், ஆசுவாசமாகவும் ஏன் உணர்ந்தது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை.