நெருங்கிய  சொந்தங்கள் மட்டுமே அங்கிருந்தனர். சிலர் அவளை உண்மையான அன்புடன் வரவேற்க, சிலரோ இவளுக்கு வந்த வாழ்வா? என்ற ரீதியில் வரவேற்றனர்.

“நல்ல வேலை செஞ்ச சிவகாமி. ஒரு பையனுக்காவது நம்ம சாதி சனத்துல பொண்ணெடுத்தது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். என்ன இருந்தாலும் ஊரும் உறவும் விட்டுப் போயிடக் கூடாது பாரு.” என்று பேச பெரிய மனுஷி சொல்ல,

“சும்மாவா? பொண்ணு ரதி மாதிரில்ல இருக்கா. அதான் சிவாகாமி விடாம மருமகளா கூட்டிட்டு வந்துட்டா” என்றார் இன்னொருவர்.

“ஏன் நம்ம தேவ்க்கு என்ன குறைச்சல். அவரோட கம்பேர் பண்ணும் போது அப்படி ஒன்னும் அழகில்லை” என்றாள் சாரு. அவள் பேசுவது அதிகம் என்று அவளுக்கே தெரியும். ஆனாலும் ஆரண்யாவை எல்லோரும் புகழ்ந்து பேசுவதைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் கடுப்பு.

“வாழ்றதுக்கு அழகோ பணமோ முக்கியமில்லை. நல்ல குணமும், மனசும் இருந்தா போதும். எப்ப பார்த்தாலும் அழகு, பணம். இதை விட்டா வாழ்க்கையில எதுவுமே இல்லையா? நாலு லேடீஸ் ஒன்னு சேர்ந்தா போதும், இதைப் பத்தி தான் பேசுறிங்க?” என்றான் தேவ்.

‘சாத்தான் வேதம் ஓதுது. குணம், மனம் பத்தி எல்லாம் யாரு பேசுறதுன்னு இல்ல’ என்று மனதிற்குள் அவனை வறுத்தாள் ஆரண்யா.

“சரி சரி..! நீ வந்து விளக்கேத்துமா” என்றார் சிவகாமி.

ஆரண்யா தயங்க,

“என்ன யோசனை ஆரண்யா..! விளக்கேத்துடா” என்றார் காயத்ரி. அவளோ நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் முறைத்த முறைப்பில், வேறு வழியின்றி அமைதியாக விளக்கை ஏறினாள். விளக்கொளியில் அவள் முகமும் ஒளிர, அவள் எதிரில் இருந்தவன் அந்த காட்சியை அப்படியே படம் பிடித்துக் கொண்டான்.

“அப்போ நாங்க கிளம்புறோம் ஆரா” என்று பெற்றோர்கள் சொல்ல, இப்போது திகைப்பது அவள் முறையாயிற்று.

“எங்க கிளம்புறிங்கப்பா..? நாம எல்லாம் ஒன்னாவே போகலாம்” என்றாள் ஆரா.

அவளின் பேச்சில் அவர்கள் புரியாமல் முழிக்க,

“என்னப்பா இப்படி பாக்குறிங்க? என்னோட ஷாப் அங்க தான இருக்கு. அப்ப நானும் அங்க இருந்தா தான் சரியா இருக்கும். நான் ஷாப்க்கு பைவ் டேய்ஸ் தான் லீவ் விட்ருக்கேன். நிறைய பெண்டிங் ஆர்டர்ஸ் இருக்கு” என்றாள் அமைதியாய்.

அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சத்ய தேவ்வைப் பார்க்க  அவனோ முகம் இறுக நின்றிருந்தான்.

‘எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணியிருக்கா’ என்று மனதிற்குள் வெகுண்டவன், அமைதியாய் அவளைப் பார்த்து வைக்க,

“என்ன பார்க்குறிங்க? யாருக்காகவும் என்னோட ப்ரோபஷனை நான் விட முடியாது. ஏன் இப்போ உங்களை நடிக்கக் கூடாதுன்னு நான் சொன்னா சரின்னு சொல்லுவிங்களா?” என்றாள் கேள்வியாய்.

“அதெப்படி முடியும்?” என்று வேகமாய் சொல்லியது தேவ் அல்ல, யாதவன் தான்.

“என்ன ஆரண்யா இப்படி சொல்ற? என்ன பெரிய ப்ரோபஷன். நாலு ஜாக்கெட் தச்சு தர்றதா?” என்றாள் சாரு கிண்டலுடன்.

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ். அதென்ன நாலு ஜாக்கெட் தச்சு தர்றதுன்னு அசால்ட்டா சொல்றிங்க? ஏன் உங்களுக்கு கூட தான் கூத்தாடிங்கிற பேர் இருக்கு. நாங்க ஏதாவது சொல்றோமா? எந்த தொழிலும் கேவலமில்லை. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. அப்பறம் நான் ஒன்னும் சாதாரணமா கடை வச்சு நடத்தலை.  செலிபிரிட்டி காஸ்டியூம்ஸ் தான் மெய்னா பண்றோம். உங்களுக்கு தெரியலைன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க” என்றாள் ஆரா பட்டென்று கோபத்துடன்.

எப்போதும் அவள் வேலையைப் பற்றி சொன்னால் அவளுக்கு கோபம் வந்துவிடும். சூட்டோடு சூடாக பதிலும் கொடுத்துவிடுவாள்.

“நான் கேள்விப் பட்டதே இல்லையே?” என்றாள் சாரு சந்தேகமாய்.

“பீல்ட் அவுட் ஆனவங்களுக்கு இப்ப இருக்குற நிலவரம் எல்லாம்  எப்படி தெரியும்?” என்றாள் ஆரா நக்கலாய். அவளின் பதிலில் முகம் சிவந்து நின்றாள் சாரு. ஆராவின் மூக்கை உடைக்க அவள் திட்டம் போட எண்ணினால் அதற்கு முன்பாகவே அவளின் திட்டத்தை உடைத்திருந்தாள் ஆரண்யா.

“மன்னிச்சுக்கங்க தம்பி. எப்பவும் நாலு வார்த்தை பேசவே அப்படி யோசிப்பா. இப்போ கொஞ்ச நாளா ஏன் இப்படி பட்டுப்பட்டுன்னு பேசுறான்னு தெரியலை” என்றார் காயத்ரி பதட்டத்துடன்.

“அவங்க கேட்ட கேள்விக்குத் தான பதில் சொல்லிட்டு இருக்கா ஆன்ட்டி. ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றான் சத்ய தேவ்.

“இன்னைக்கே இதை பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கு?” என்ற சிவகாமி,

“நீங்க எல்லாரும் இருந்துட்டு காலையில தான் போகணும்” என்று ஆராவின் வீட்டினரையும் இருக்க வைத்துவிட்டார்.

“நீயும் போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு ஆரண்யா” என்று அவளை அனுப்பி வைத்தார் சிவகாமி. கீழே அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவளுக்கு அப்போது தான் நிம்மதி மூச்சே வந்தது.

‘ஒரு நாளைக்கே இந்த வீட்ல கண்ணைக் கட்டுதே. எப்படி சமாளிக்கப் போறேன்’ என்று நினைத்தவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த திடமெல்லாம் கரைய, சோர்ந்து போய் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

நேரம் போனதே தெரியாமல் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தவள், அவளின் போன் சத்தத்தில் கண் விழித்தாள். நேரத்தைப் பார்த்தவள் அது மாலை ஆறுமணியைக் காட்ட,  பதறி எழுந்தாள். காயத்ரி தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்கம்மா”

“குளிச்சுட்டு வேற புடவை மாத்திட்டு வாம்மா. உன்னோட பெட்டி அந்த ரூம்ல தான் இருக்குன்னு சொன்னாங்க” என்றார்.

“ம்ம்” என்றவளுக்கு ஆயாசமாய் வந்தது.

அப்பொழுது கட்டுவதற்காக காயத்ரி ஒரு பட்டுப் புடவையை வைத்திருக்க, ‘மறுபடியுமா?’ என்று நொந்து போனவள், அதை விடுத்து இளம் மஞ்சள் நிற லினன் காட்டன் புடவையை எடுத்துக் கொண்டாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,

‘அம்மாவே வந்துட்டாங்களோ?’ என்று எண்ணியபடி கதவைத் திறந்தவளை உள்ளே தள்ளிக் கொண்டு சென்று வேகமாய் கதவை அடைத்தான் சத்ய தேவ்.

சட்டென்று நடந்து விட்ட அந்த நிகழ்வில் அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவனோ அவளை தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடினான். அவன் பார்வையில் நிஜத்திற்கு வந்தவள்,

“இபோ எதுக்காக இப்படி உள்ள வந்திங்க?” என்றாள் கோபமாய்.

“ஹேய்..! சில்..! நானும் மார்னிங் இருந்து சொல்லணும்னு நினைச்சேன். பட் முடியலை. இந்த வெட்டிங் சேரில நீ ரொம்ப அழகா இருக்க. என்னைய அப்படியே டெம்ட் பண்ற?” என்று அவளை ரசனையை பார்த்துக் கொண்டே சொல்ல,

“ரொம்ப தேங்க்ஸ்..! இப்போ கிளம்புங்க” என்றாள்.

“இன்னைக்கு தான் நமக்கு மேரேஜ் முடிஞ்சிருக்கு. மறக்க முடியாத  எந்த மெம்மரியும் கிரியேட் பண்ணலை, சோ..” என்று அவன் நிறுத்த,

“சோ..!” என்று அவள் கேள்வியுடன் பார்க்க,

“இப்ப கிரியேட் பண்ணிட்டு போய்டுறேன்” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். திடீரென்று அணைப்பான் என்று எதிர்பார்க்காதவள்,

“ஏய்..ச்சி..விடு” என்று திமிறினாள்.

“ஆரண்யா பிளீஸ்..! ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இரேன். வேற எதுவும் பண்ற பிளான் எனக்கு இல்லை. நீ முரண்டு பிடிச்சா  அப்பறம் நான் எல்லையைத் தாண்ட வேண்டியது வரும்..” என்றான் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி.

அவளுக்கோ உடல் வெடவெடக்க மூச்சு வாங்கியது. மறந்தும் அவள் கரங்கள் அவனை அணைக்கவில்லை.

சொன்னபடி சரியாக இரண்டு நிமிடத்தில் அவளை விட்டவன், அவள் கழுத்தோரத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைக்க, அவளோ பலம் கொண்டு அவனைத் தள்ளி விட்டாள்.

“தேங்க்ஸ்” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்,

“இனி புடவையை மாத்திக்கோ..! இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட். கொஞ்ச நேரத்துல நம்ம ரூம்க்கு வந்து தான ஆகணும். அங்க வச்சு மிச்சத்தைப் பார்த்துக்கிறேன்” என்று கண்ணடித்தபடி சொல்லிவிட்டு சென்றவனை வெட்டவா? குத்தவா என்று பார்த்திருந்தாள் ஆரண்யா.