அத்யாயம் 4:

நினைவு:

அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர் ஆராவும், மித்ராவும்.

“இந்த கணேஷ் பய ரெண்டு நாளா ஆளே சரியில்லாம தெரியறான் மித்ரா. என்ன பிரச்சனையா இருக்கும்?” என்றாள் ஆரா.

“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்?” என்றாள் மித்ரா வெடுக்கென்று.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பட்டுன்னு பதில் சொல்ற மித்ரா? ஏன் அவனோட பிகேவியர்ல உனக்கு வித்யாசம் தெரியலையா? சரியா பேச மாட்டேங்குறான். வீட்ல ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?” என்றாள் கவலையுடன்.

“அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம் ஆரா” என்ற மித்ரா அதோடு பேச்சை முடிக்கப் பார்க்க, அவளைப் பார்த்த ஆராவிற்கு தான் யோசனையாக இருந்தது.

“இதென்னடி பஸ் இவ்வளவு கூட்டமா வருது? என்னால இதுல எல்லாம் ஏற முடியாது. நாம வேணும்னா அடுத்த பஸ்ல போகலாம்” என்றாள் மித்ரா.

‘அடுத்த பஸ்ல போறதா?’ என்று திகைத்த ஆரா,

“அதெல்லாம் பரவாயில்லை.அடுத்த பஸ்க்கு அரைமணி நேரம் வெயிட் பண்ணனும். கூட்டமா இருந்தாலும் இதுலயே போகலாம். இன்னைக்கு முகூர்த்த நாள்ல. அதான் கூட்டமா இருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் ஆரா.

“விளையாடாத ஆரா. ஏற்கனவே புட் போர்ட்ல தொங்கிட்டு வராங்க. நாம எப்படி ஏற முடியும்?” என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பஸ் அந்த ஸ்டாப்பில் நின்றிருந்தது.

“ஹேய் வாடி” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்த ஆரா, ஏற முயற்சி செய்ய,

“அங்க புல் ரஷ்ஷா இருக்கு. பின்னாடி வாங்க” என்று படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்த கணேஷ் அழைத்தான்.

‘பின்னாடியா’ என்று யோசிக்க,

“ஏறனும்னு முடிவு பண்ணிட்ட. இதுல எந்த பக்கம் ஏறுனா என்ன? வாடி” என்ற மித்ரா அவளை இழுத்த படி சென்று, பின் படிக்கட்டில் ஏற வைத்தாள்.

“பக்கிங்களா..!படியில நிக்காம கொஞ்சம் மேல ஏறி நில்லுங்க!” என்றான் கணேஷ், மித்ராவை பார்த்தபடி.

அவனை முறைத்தவள்,

“ ஆமா, படில தொங்கிட்டு வரணும்னு எங்களுக்கு ஆசை பாரு. வந்துட்டான் வாழைக்கா” என்றாள் கடுப்புடன்.

“கூட்டமா இருக்குன்னு எனக்கும் தெரியுது. அட்லீஸ்ட் கொஞ்சம் ட்ரை பண்ணி படிக்கு மேலயாவது நில்லுங்க” என்றான் கணேஷ் அக்கறையாய்.

“முடிஞ்சா ஏற மாட்டோமா? கம்முன்னு வாடா” என்றாள் மித்ரா.

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு வர்றீங்க?” என்றாள் ஆரா.

“ஒண்ணுமில்லை” என்றாள் மித்ரா.

“டேய் கணேஷ்! நீயாவது சொல்லுடா” என்றாள் ஆரா.

“ஒண்ணுமில்லை” என்றான் அவனும்.

அவர்கள் இருவரையும் முறைத்தவள்,

“உங்ககிட்ட கேட்டேன் பார்த்திங்களா ? என்னையே நானே அடிச்சுக்கணும்” என்றாள் கடுப்புடன்.

“இங்க ஏற்கனவே இடிச்சுகிட்டு தான் நிக்கிறாங்க. இது ஏன் நீ தனியா அடிச்சுக்கப் போற? ஏன்டி இந்த கூட்டத்துல இந்த பஸ்ல தான்  போயாகணுமா?” என்றாள் மித்ரா சலிப்புடன்.

ஆராவின் கண்கள் வேகமாய் அவனைத் தேட, கூட்டத்தில் அவனை சட்டென்று காண முடியவில்லை அவளால்.

‘எப்பவும் பின்னாடி தான் நிப்பான்’ என்றவள் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்ற,

“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ஆரா. அவ அவளுக்கு இங்க மூச்சு விட முடியலை. இந்த நேரத்துலயும் உன் ஆளைத் தேடிட்டு இருக்க” என்று மித்ரா கேட்க,

“நான் தேடவே இல்ல” என்றாள் ஆரா.

“நம்பிட்டேன்” என்றாள் மித்ரா நக்கல் சிரிப்புடன்.

“ஆரா இன்னைக்கு ஜெய் அண்ணா வரலை. வேற கண்டக்டர் ரெண்டு பேர் தான் வந்திருக்காங்க.” என்றான் கணேஷ் தகவலாய்.

“அப்பறம் ஏன்டா இவ்வளவு கூட்டத்துல எங்கள ஏற சொன்ன?” என்று ஆரா கேட்ட கேள்வியில் மித்ராவிற்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.

“அடிப்பாவி..! நீ சைட் அடிக்க நான் பலியாடா?” என்றாள். அவனைக் காண முடியாத கோபத்தில்  இருந்த ஆரா,

“என்னடி இவ்வளவு ரஷ்ஷா இருக்கு?” என்றாள் பாவமாய்.

“இவ்வளவு நேரம் காதலுக்கு கண்ணில்லைன்ற ரேஞ்சுக்கு பேசிட்டு, ஆள் வரலைன்னு தெரிஞ்ச உடனே, கூட்டமும் கண்ணுக்கு தெரிஞ்சுடுச்சோ மேடம்க்கு” என்றாள் மித்ரா சிரிப்புடன்.

அவள் சிரிப்பதைப் பார்த்து நொந்து கொண்டாள் ஆரா. அவளுக்கு முன்னால் இருந்த ஒருத்தன் அவளை உரசிக் கொண்டே பின்னால் வர, அவளுக்கோ எரிச்சலாய் இருந்தது. அவனில்லாத பயணம் இனிக்கவில்லை அவளுக்கு.  எரிச்சல் கோபம் எல்லாம் ஒன்று சேர, முன்னால் இருந்தவனை திட்டுவதற்காக வாயைத் திறக்கப் போக, அதற்குள் அவளின் இடையில் கை கொடுத்து அவளை பின்னோக்கி இழுத்திருந்தான் அவன். தன் இடையில் பதிந்த ஆடவனின் கரத்தில்,அவனின் அந்த செயலில் அதிர்ந்தவள்,

“பொறுக்கி” என்று முகம் முழுவதும் கோபத்துடன் திரும்ப, அங்கே ஜெய்யைக் கண்டு திகைத்துவிட்டாள் ஆரா. தனக்குப் பின்னால் இருந்தவனை அவன் என்று அறியாது திட்டியிருந்தாள். ஆனால் அவனை அங்கு கண்ட பின்பு அதுவரை இருந்த கோபம், எரிச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்திருந்தது. சட்டென்று மனதிற்குள் பனிக்காற்று வீசத் தொடங்கியது.

அவள் திட்டியவுடன் அவளை ஓர் நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன், பிறகு அவளைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான். ஆனால் அவளோ உள்ளுக்குள் படபடப்புடன் முன்னால் திரும்பிக் கொண்டாள். உரிமையாய் அவன் செய்த செயலில் அதிர்ந்தாலும், அது அவளுக்கு பிடிக்கவே செய்தது. அரண் போல் அவளுக்கு பின்னால் அவன் நிற்க,

“என்னடா நடக்குது இங்க?” என்ற ரீதியில் வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் மித்ரா. அவளின் செய்கையைப் பார்த்த கணேஷிற்கு சிரிப்பு வந்தது.

“எதுக்குடா சிரிக்கிற?”

“உன் ரியாக்ஷன் பார்த்து தான்” என்றான்.

“ஆமா, அந்த அண்ணா வரலைன்னு சொன்ன?” என்றாள் சந்தேகமாய்.

“அவர் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னார்” என்றான் கணேஷ்.

“ஹோ..! அப்ப நீயும் அவருக்கு உடந்தை. இது மட்டும் ஆரா வீட்ல தெரிஞ்சது, மவனே உனக்கு சங்கு தான்டா” என்றாள் மித்ரா.

“தெரியறப்ப பார்த்துக்கலாம் விடு. நம்ம விஷயம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.

“ம்ம்..! செருப்பு பிஞ்சிடும் பரவாயில்லையா?”

“வேற வாங்கிக்கலாம்” என்றான் சிரிப்புடன்.

“படிக்கிற வயசுல அந்த வேலையை மட்டும் பாருடா வெண்ணெய்” என்று மித்ரா  திட்ட, அவனோ அவளை ரசித்துக் கொண்டு வந்தான்.

“நான் உன்னைத் திட்டிட்டு இருக்கேன்டா எருமை மாடே” என்றாள்.

“உரிமை இருக்கப் போய் தான மித்ரா திட்ற? நீ திட்டாம யார் திட்டுவா?” என்றான்.

“அட குரங்கே” என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் மித்ரா.

ஆரா வேறு உலகத்தில் இருந்ததால் இவர்களின் சம்பாஷணையை கேட்டிருக்கவில்லை. உள்ளுக்குள் புதிதாய் முளைத்திருந்த காதல் அவளுக்கு புதுப் புது உணர்வுகளை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்க, அவள் அவளாகவே இல்லை. அவனைத் திரும்பிப் பார்க்க சொல்லி மனம் உந்தினாலும், கூடவே தயக்கமும் சேர்ந்து கொள்ள, அமைதியாக இருந்தாள்.

“ஹலோ பிரதர்” என்ற மித்ராவின் குரலில் திரும்பினான் ஜெய்.

“என்ன?” என்பதைப் போல் அவன் கேள்வியாக பார்க்க,

“அதென்ன கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி எப்பவும் இந்த மாஸ்க்கோடவே சுத்திட்டு இருக்கீங்க? ஏன் உங்களுக்கு எதுவும் வியாதியா?” என்று அவள் கேட்ட தொனியில்  சிரித்து விட்டான் அவன். அவன் சிரிப்பு அவனின் மலர்ந்த கண்களில் தெரிய, முறைத்தாள் மித்ரா.

“ஹேய் மித்ரா சும்மா இருடி” என்று ஆரா முனுமுனுக்க,

 “ஹேய் அவருக்கு டஸ்ட் அலர்ஜி” என்றான் கணேஷ்.

“நான் உன்னைக் கேட்டேனா?” என்றாள்.

ஜெய் வேகமாக மாஸ்க்கை கழட்ட போக, அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்திருந்தது. அதற்குள் இறங்குபவர்கள் இடித்துக் கொண்டு இறங்க, தன் மேல் மொத்தமாய் சரிந்தவளை பிடித்து நிறுத்தி இறங்கச் செய்திருந்தான் ஜெய். அவனின் செய்கையில் ஆராவிற்கு உடலெல்லாம் நடுக்கம் கொடுத்தது.

தெரிந்தவர்கள் பார்க்கக் கூடும் என்பதால் வந்த பட்டம் அது. இறங்கியவள் அவனைத் திரும்பியும் பாராது சென்றிருக்க, அவனுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது. ஜெய் அவளையே பார்த்திருக்க, ஆரா திரும்பவேயில்லை.  பஸ் கிளம்பியவுடன் அவள் வேகமாய் நிமிர்ந்து பார்க்க,அதைப் பார்த்தவன் தனக்குள் ஏகாந்தமாய் புன்னகைத்துக் கொண்டான்.