“என்ன ஆரா? இன்னைக்கு இவ்வளவு அமைதியா வர்ற? முகம் வேற சரியில்லை?” என்றாள் மித்ரா.
”அதெல்லாம் ஒன்னுமில்லடி. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் ஆரா அமைதியாக.
“நீ பொய் சொல்றன்னு உன் முகமே காட்டிக் குடுக்குது ஆரா” என்றான் கணேஷ்.
எப்படி சொல்லுவாள்? தான் காதலில் விழுந்த கதையை? சொன்னால் நண்பர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. தனக்குள் வந்திருக்கும் உணர்விற்கு பெயர் காதல் தானா என்பது கூட அவளுக்கு சந்தேகம் தான். இரண்டு நாட்கள் விடுமுறையில் கல்லூரி செல்லாமல் இருந்தவளுக்கு அவனைப் பார்க்காமல் இருந்தது எதையோ இழந்தது போல் இருக்க, இரண்டு நாட்களையும் அவஸ்தையுடன் தான் கழித்தாள். இதோ இன்று காலை எழுந்ததில் இருந்தே அப்படி ஒரு பரபரப்பு அவளுக்குள். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் பட்ட பாடு அவளுக்குத் தானே தெரியும். எங்கே வாயைத் திறந்தால் மித்ரா கண்டு கொள்வாளோ என்று எண்ணி தான் அமைதியாக வருகிறாள்.
“என்னவோ எங்ககிட்ட மறைக்குறன்னு மட்டும் தெளிவா தெரியுது ஆரா. பிடிக்கிறேன்.. அது என்னன்னு கண்டு பிடிக்கிறேன்” என்றாள் மித்ரா.
ஆரா அவளை முறைக்க,
“இந்த முட்டைக் கண்ணை இப்படி முழுசா காட்டி முறைக்காதடி, பயமா இருக்கு” மித்ரா கூற, சிரித்து வைத்தான் கணேஷ்.
“அந்த கொடுமையை ஏன் கேட்குற மித்ரா? எல்லா லவ் ட்ராக்கும் இப்போ ஒரே ட்ராக்கா மாறி, நம்ம ஜெய் அண்ணா பின்னாடியில்ல போகுது” என்றான் கணேஷ்.
ஆரா விழித்து வைக்க,
“புரியிற மாதிரி சொல்லேண்டா?” என்றாள் கடுப்பாக.
“இப்போ அவருக்குத் தான் அபிமானிகள் கூடிட்டே போறாங்க. பாதி பேர் காதல்னு சுத்துறாங்க. டெய்லி சாங்ஸ் எல்லாம் தேடித் தேடி போடுறார்ல? ஒவ்வொருத்தரும் தனக்காக ப்ளே பன்றதாவே நினைச்சு உருகிட்டு இருக்குதுங்க.எனக்குமே அவரை ரொம்ப பிடிச்சிருக்குன்னா பாரேன்” என்றான்.
”அவனாடா நீ? அப்போ நீயும் அவனை லவ் பண்றியா?” என்றாள் மித்ரா சிரிப்புடன்.
கணேஷ் அவளை முறைத்து வைக்க, ஆராவோ யோசனையுடன் நடந்தாள்.
“மேடம் இவ்வளவு தீவிரமா எங்க போறீங்க?” என்று மித்ரா கேட்க,
“பஸ் ஸ்டாப்க்கு தான்” என்றாள் ஆரா.
“அப்படியா? அப்போ இதென்ன?” என்றாள். அப்போது தான் ஆராவிற்கு உரைத்தது. ஸ்டாப் தாண்டி நடந்து சென்று கொண்டிருப்பது.
“ஹி..ஹி..! ஏதோ ஒரு யோசனைடி” என்றாள்.
“வர வர நீ சரியில்லை ஆரா. நீ அந்த ஜெய் அண்ணாவை பார்க்குற பார்வையே சரியில்லை. எதுவா இருந்தாலும் வேண்டாம். உங்க பாட்டி உன்னை விட்டுட்டு எங்க ரெண்டு பேரையும் உரிச்சு உப்புக் கண்டம் போட்ருவாங்க, பார்த்துக்க” என்றாள் சீரியசாய்.
ஆரா சட்டென்று கண் கலங்க, அவளை யோசனையுடன் பார்த்தனர் மித்ராவும், கணேஷும். அதே நேரத்தில் பேருந்தும் வந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாய் சற்று கூட்டமாய் இருக்க, அவர்கள் எப்போதும் அமரும் இருக்கையும் காலியாக இல்லை.
“என்னடி இன்னைக்கு இப்படி கூட்டம்” என்று முனங்கியவர்கள், முன் சென்று பேனட்டின் அருகில் அமர்ந்து கொண்டனர்.
ஆராவின் கண்கள் அவனைத் தேட, அவனோ பின்னால் இருந்தான். கருப்பு புல் ஹேண்ட் டீசேர்ட் அணிந்து அதற்கு மேல் காக்கி சட்டையை அணிந்திருந்தவன், வழக்கத்திற்கு மாறாய் அன்று ஸ்டைலாய் இருந்தான். ஆரா அவனை பார்த்தும் பார்க்காததும் போல் பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்தும் அவன் அவளைப் பார்க்கவேயில்லை.
ஏனோ அவன் பார்க்காமல் இருப்பது அவளுக்கு நெஞ்சிற்குள் பாரத்தை ஏற்ற, தேவையில்லாமல் படபடத்தாள் ஆரா. மித்ரா அவளின் செய்கைகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அதே சமயம் ஜெய்யையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதைப் போல் இருந்தது அவளுக்கு. தேவாவின் காதல் கீதங்கள் ஒலித்துக் கொண்டிருக்க,
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா?
தேடி வருவாளா?
என்ற வரிகளில் ஆரா விழி விரித்து பார்க்க, அவனும் இப்போது பார்த்து வைத்தான். அந்த பார்வை அவளுக்கு சொல்லிய சங்கதி தான் என்ன?
“அவள் ஓரப்பார்வை
எந்தன் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா? அறிவாளா?”
இந்த வரிகளில் அவனின் பார்வை ரசனையாய் விழுந்ததோ அவள் மீது. சுற்றி நின்ற கூட்டத்தில் அவன் பார்வை திருடன் போல் அவளைத் தொடர்வதும், யாரும் அறியா மொழியில் ஏதோ பேச விழைவதுமாய் இருக்க, அதை அறிந்து கொண்டவளுக்கோ, அவனின் பார்வை ஏனோ உடலைத் தீண்டி உயிரில் சிலிர்ப்பை ஊட்டியது.
“சரித்தாண்டி..! கதை அப்படி போகுதா?” என்ற மித்ராவின் கேள்வியில் சட்டென்று படபடத்து நிஜத்திற்கு வந்தாள் ஆரா. அவள் மித்ராவை தயக்கத்துடன் பார்க்க, அவளோ அவளைப் பாவமாக பார்த்து வைத்தாள்.
“வேண்டாம் ஆரா..! சொன்னா கேளு. இதெல்லாம் உங்க குடும்பத்துக்கு செட்டே ஆகாது. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட உங்க பாட்டி அந்தஸ்து பார்ப்பாங்க. இப்படி ஒரு சாதாரண கண்டக்டரை லவ் பண்றேன்னு எப்படி வீட்ல சொல்லுவ? அதுக்கு எப்படி அவங்க சம்மதம் சொல்லுவாங்க? அதுமட்டுமில்லாம, இந்த ஜெய் அண்ணாவை எத்தனை நாளா தெரியும் உனக்கு? எனக்குத் தெரிஞ்சு ஒரு வார்த்தை கூட நீ அவர் கூட பேசினது இல்லை? எந்த நம்பிக்கையில இப்படி ஆசையை வளர்த்துட்டு இருக்க?” என்றாள் மெதுவான குரலில்.
“தெரியலை மித்ரா. ஆனா, என்னால மனசை மாத்த முடியும்னு தோணலை. கேட்குறவங்களுக்கு,பார்க்குறவங்களுக்கு சிரிப்பா இருக்கலாம். ஏன்? பைத்தியக்காரத் தனமா கூட தோணலாம். ஆனா, எனக்கு பிடிச்சிருக்கு. நானும் எப்படி எல்லாமோ என்னை கண்ட்ரோல் பண்ணி பார்த்துட்டேன். ஆனா, என்னால முடியலைடி மித்ரா. ஒரு நாள் அவரைப் பார்க்கலைன்னா கூட நான் நானாவே இருக்குறதில்லை” என்றாள் கலங்கிய கண்களுடன். அவளையும் மீறி கண்ணீர் வழிந்து விட, அதிர்ச்சியாகிப் போனாள் மித்ரா.
“நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன் ஆரா. நீ இவ்வளவு சீரியஸா இருக்கியா இந்த விஷயத்துல” என்றாள் திகைப்பு மாறாமல். பின்னே இருக்காதா? ஆரா அழுத்தமும், அமைதியும், அழகும் ஒருங்கே பெற்றவள். அவளைப் பேச வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நெருங்கிய நட்பு வட்டத்தில் மட்டுமே கொஞ்சம் அதிகம் பேசுவாள். அப்படிப்பட்டவள் இன்று காதலிக்கிறேன் என்று சொன்னதைத் தான் மித்ராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ஆமா” என்பதைப் போல் ஆராவின் தலை ஆட, மித்ராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.