போலீஸ் வரவும், மித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரித்து இறுதியில் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தியிருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையும் அதையே உறுதிப்படுத்தியிருந்தது.
மறுநாள் இறுதி சடங்கு முழுமைக்கும் ஆரா கூடவே இருந்தாள். ஆதிராவும், கணேஷும் அவள் கூடவே இருந்தனர். கடைசி வரைக்கும் மித்ரா எதனால் தற்கொலை செய்து கொண்டாள் என்று யாருக்கும் தெரியாமலேயே போனது. பெற்றவர்களுக்கு கூட.
மித்ரா இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், அப்போது அவள் வீட்டில் தான் இருந்தாள் ஆரா. மகளை இழந்து அவர்கள் தவிக்கும் தவிப்பை பார்க்க முடியவில்லை அவளால்.
“வீட்ல எதுவும் பிராப்ளமா ஆன்ட்டி” என்று ஆதிரா தெரியாதவளைப் போல் கேட்டு வைத்தாள்.
“வீட்ல ஒரு பிரச்சனையும் இல்லை ஆதிரா. அவ எங்களுக்கு ஒரே பொண்ணு. என்ன காரணம்னே தெரியலையே” என்றனர்.
“ஏதாவது லவ்?” என்றாள் வேண்டுமன்றே.
“அப்படி எல்லாம் இல்லையே. ஊர்ல இருந்து வந்தப்போ கூட ஒரு சம்பந்தம் வந்திருக்கு. பார்க்கலாமான்னு கேட்டோமே. அதுக்கும் சந்தோஷமா சரின்னு தான் சொன்னா. திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு தெரியாம போச்சு. இத்தனை வருஷம் கல்யாணம் வேணாம்னு சொன்ன பொண்ணு, இப்போ சரின்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சு நாங்க சந்தோஷப்பட்டோம். அதுக்குள்ளே இப்படி பண்ணிட்டா” என்றார்.
“ஒருவேளை கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணிடுவிங்களோன்னு நினைச்சு கூட இப்படி பண்ணியிருக்கலாம் ஆன்ட்டி” என்றாள் ஆதிரா.
அவள் பேசுவதை கேட்ட ஆராவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளை புரியாமல் பார்க்க, அவளோ ‘அமைதியாய் இரு’ என்பதைப் போல் கண்களை சிமிட்டினாள்.
ஆதிரா ஆராவைக் கூட்டிக் கொண்டு கிளம்ப, அவர்கள் பின்னையே வந்தான் கணேஷ்.
“ஆரா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்” என்றான் மன்றாடும் குரலில்.
“யாரும் என்கிட்டே பேச வேண்டாம்” என்றாள் பட்டென்று.
“பேச இஷ்ட்டம் இல்லைன்னா பேச வேண்டாம்” என்று கூறியவன், திரும்பி செல்ல முற்பட்டான்.
அவனைக் கையைப் பிடித்து தடுத்தாள் ஆதிரா.
“யோவ் இருய்யா? இப்ப எதுக்கு மூஞ்சியை தூக்கிட்டு போற? நடந்தது நடந்து போச்சு. உன்னை வீட்டுக்கு வர சொன்னார் தேவ் மாமா” என்றாள் ஆதிரா.
“எனக்கு யாரையும் பார்க்க விருப்பமில்லை. அவர் பார்க்குற அளவுக்கு நான் பெரிய ஆளுமில்லை.இது அவர் அண்ணா சொன்னது. உங்க வீட்டுக்குள்ள நுழையற அளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை, தராதரமும் இல்லை.இது உன் பாட்டி சொன்னது. உன் அக்காவுக்கு நான் நல்ல பிரண்டுமில்லை. இது உன் அக்கா சொன்னது.மொத்தத்துல இங்க யாருக்கும் நான் தேவையுமில்லை” என்றவன் விருட்டென்று சென்று விட்டான்.
“பயபுள்ள உனக்காக ரொம்ப அடிவாங்கிருக்கான்டி. நீயும் மித்ராவும் சேர்ந்து அவனை வச்சு செஞ்சிருக்கிங்க. இந்த காலத்துல பிரண்டுக்காக யாராவது போய் அவ லவ்வர் வீட்டு வாசல்ல பிச்சைக்காரன் மாதிரி நின்னு அடி வாங்கிட்டு வருவானா? அவன் வாங்கிட்டு வந்திருக்கான். இந்த மித்ரா பண்ண சதில அவன் என்ன பண்ணுவான்? நீ ஓவரா பண்ற ஆரா?” என்றாள் ஆதிரா.
“அவன் வெறும் வாய் தான். இந்நேரம் நம்ம வீட்டுக்கு தான் நேரா போயிருப்பான், அவரைப் பார்க்க.” என்ற ஆரண்யா,
“உனக்கெப்படி நடந்ததெல்லாம் தெரியும்?” என்றாள்.
“இது பெரிய சிதம்பர ரகசியம் பாரு. மாமா தான் சொன்னார், வா போகலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
ஆரா கூறியதைப் போல் அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது கணேஷ் அங்கு தான் இருந்தான். பாட்டி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கணேஷை முறைத்திருக்க, அவனோ சற்று சங்கடமாய் உணர்ந்தான்.
“சாரிண்ணா” என்றவனை தேவ் தான் வியந்து பார்த்தான்.
“நீ சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கணேஷ். சொல்லப் போனா நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும். யாதவ் உன்கிட்ட நடந்துகிட்ட முறைகளுக்காக” என்றான் தேவ்.
“பரவாயில்லைண்ணா” என்றவன் அப்போது உள்ளே நுழைந்த ஆராவைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” என்றான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைண்ணா. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். நான் கிளம்புறேன்” என்றான் கணேஷ்.
“ஏன் எங்க மேரேஜ்க்கு வரலை கணேஷ்” என்றான் தேவ்.
“அழைப்பு இல்லாத கல்யாணத்துக்கு எப்படி வர முடியும் ஜெய் அண்ணா. அங்க இருக்கும் போதாவது பக்கத்துல இருந்தாங்க. புது வீட்டுக்கு ஷிப்ட் ஆகவும் பார்க்குறதும் குறைச்சு போய்டுச்சு. நானும் வேலை விஷயமா வெளியவே தங்க வேண்டிய சூழல். அதையும் மீறி இவளைப் பார்க்க வந்தா இங்க வீட்ல இருக்குறவங்களுக்கு பிடிக்காது” என்றான் சுலோச்சனாவைப் பார்த்தபடி.
“என்னடி முறைக்கிற? உண்மையைத் தான் சொல்றேன். அன்னைக்கு உன்னை பார்க்க வந்த இவனை நாயை விரட்டுற மாதிரி விரட்டுனா, அவனுக்கு ரோஷம் இருக்கக் கூடாதா?” என்றாள் ஆதிரா.
“என்ன ஆதிரா கணேஷ்க்கு சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கு. என்ன விஷயம்?” என்றான் தேவ்.
“ஒரு விஷயமும் இல்லை மாமா. நடந்ததை நேர்ல பார்த்தவன்ற முறையில சொன்னேன்” என்றாள்.
“சாரிடா” என்றாள் ஆரா.
“அதை நல்லா சொன்னாத்தான் என்ன?” என்று ஆதிரா மிரட்ட,
“கணேஷ் சாரிடா” என்றவளிடம் அதற்கு மேல் அவனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.