“உன்னால தாங்க முடியாது. அதுவும் மித்ராவை அப்படி நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. இதோ இப்ப பீல் பண்ற மாதிரி பண்ணுவ. அதான் உனக்குத் தெரியாம போய் வார்ன் பண்ணிட்டு வந்தேன். ஆனா ஏற்கனவே உன் கண்ணுல சிக்கியிருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சு. அப்பறம் மேடம் என்ன சொன்னிங்க? கேள்வி கேட்க மாட்டிங்க? ஆனா நானா புரிய வைக்கனும்னு தான சொன்னிங்க. அதான் புரிய வச்சுட்டேன்” என்றான் சிரிப்புடன்.
“என்னால தாங்க முடியலை ஜெய்” என்றாள்.
“தப்பு நம்ம ரெண்டு பேர் பேர்லயும் இருக்கு ஆரா. நான் வந்து உங்க வீட்ல பேசுறேன்னு சொன்னப்பவே நீ சரின்னு சொல்லியிருந்தா பிரச்சனை இருந்திருக்காது. நீ என்னை பார்க்கனும்னு சொன்னப்பவே நான் வந்திருந்தா பிரச்சனை இருந்திருக்காது.” என்றான் ஜெயதேவ்.
“மித்ரா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்தது தான் எல்லா பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளி” என்றாள் ஆரா.
“அதுவும் சரித்தான்” என்றவன்,
“சரி இன்னும் எவ்வளவு நேரத்துக்குத் தான் சோக கீதம் வாசிப்ப? நடந்த எதையும் மாத்த முடியாது. சோ இனி நடக்க போறது எல்லாமே நம்ம நினைகிறதாத்தான் இருக்கணும்” என்றான்.
“அப்படியா? நீங்க என்ன நினைச்சிங்க?” என்றாள் சிரிப்புடன்.
“பரவாயில்லை, சென்சார் போர்டு தான் அரண்டு போகும். நானெல்லாம் அரண்டு போக மாட்டேன்” என்றவளை,
“நிஜமாவே நீ என் அரைவேக்காட்டுக்காரி ஆரா தானாடி? என்னால நம்பவே முடியலை. உன் பேச்சு, செயல், பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா, அப்படியே எனக்கு கிக்கா இருக்குடி” என்றான் உல்லாச குரலில்.
“இருக்கும்ல? படத்துல ஹீரோயின்ஸ் கூட மட்டும் சார் ரொமான்ஸ்ல பின்றிங்க? நிஜத்துல ஒன்னையும் காணோமே?” என்றாள் ஆரா நக்கலுடன்.
“அடிப்பாவி! என் பெர்பாமன்சை பார்த்துமா இப்படி பேசுற?” என்றபடி, அவளை இழுத்து அணைத்தவன்,
“நான் வேணும்னா மேட்னி ஷோ நடத்தி பெர்பார்ம் பண்ணி காட்டட்டுமா?” என்றான் அவள் காதோரத்தில்.
“அப்படித்தான் சொன்னேன். பட் இப்போ உடனே முடிச்சுக் குடுத்துட்டா நல்லா இருக்கும்னு தோணுது. ஜஸ்ட் ஒன் மந்த்டி” என்றான்.
“உங்களுக்கு எல்லாமே ஜஸ்ட் தான். ஆனா, எனக்கில்லை ஜெய்” என்றவளுக்கு எங்கே அவன் மீண்டும் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சம் மனதிற்குள் வந்து போனது.
“இது என்னோட புரோபஷன் ஆரா” என்றான் பொறுமையாய்.
“ஐ க்னோ ஜெய்” என்றவளுக்கு ஏனோ குரல் அடைக்க,
“இப்போ ஏன்டி இப்படி பீல் பண்ற?” என்று அவள் முகத்தை திருப்பியவன்,
“எனக்கு உன்னோட பயம் புரியுது ஆரா. ஆனா, இனி அது தேவை இல்லாதது. நான் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன். உன்னையும் எங்கயும் விட மாட்டேன், புரியுதா?” என்றான் பொறுமையாய்.
“இப்ப என்ன? உங்களுக்கு எங்க போகணுமோ போங்க? நான் யாரு அதெல்லாம் கேட்க?” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
“இப்போத்தான்டி ஒரு டிபிகல்ட் வொயிப்பா மாறியிருக்க. ஆனா பாரு நாம நாளைக்கு உங்க வீட்டுக்கு போறோம்” என்றான் சிரிப்புடன்.
“நிஜமாவா?” என்றவளின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
“என்னடி இப்படி சந்தோஷப்படுற?” என்றவனை,
“இருக்காத பின்ன? இங்க இருக்குறது எனக்கு ஜெயில்ல இருக்க மாதிரி இருக்கு ஜெய். செய்ய ஒரு வேலையும் இல்லை. வீட்டுக்குள்ளயே ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ளோர். எங்கயும் வெளிய போக முடியலை. யாரையும் பார்க்க முடியலை. என்னவோ ஒரு யுகமே இங்க இருக்குற மாதிரி பீல்” என்றாள் ஆரா.
“ப்ரைவேசி இருக்குமான்னு தெரியாது. பட் நீ இருப்ப தானே” என்று காதலுடன் சொன்னவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அதே சமயம் ஜெய்க்கு கால் வர, யுவன் தான் அழைத்திருந்தான். பேசி முடித்த தேவ்,
“மாம் வந்துட்டாங்க ஆரா. நான் போய் பார்த்துட்டு வரேன்” என்றவன் கீழே செல்ல எத்தனிக்க,
“நானும் வரேன் ஜெய்” என்றாள்.
“இல்ல, நீ இங்கயே இரு” என்றவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
“ஆன்ட்டி ஏதாவது நினைச்சுப்பாங்க. நானும் வரேன்” என்று அவனுடன் சென்றாள் ஆரா.
அங்கே யாதவும் சாருவும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, யாதவ் தலையிலும் கையிலும் கட்டுப் போட்டிருந்தான்.
“தரிசனம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா மாம்?” என்றான் தேவ்.
“தரிசனம் இருக்கட்டும் தேவ். என்ன நடக்குது இங்க? எதுக்காக உங்க அண்ணனை போட்டு இந்த அடி அடிச்சிருக்க தேவ்? இதென்ன புதுப் பழக்கம்? யார் சொல்லி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க தேவ்?” என்றார் சிவகாமி விடாமல், ஆராவைப் பார்த்துக் கொண்டே.
யாதவும் சாருவும் ஒன்றுக்கு இரண்டாய் அவரிடம் சொல்லியிருக்க, அவரும் யாதவின் தலையில் கட்டைப் பார்த்தவுடன் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.
“என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதிங்க மாம்” என்றான் தேவ் பொறுமையாக.
“இவ்வளவு பெரிய கட்டுப் போடுற அளவுக்கு அடிச்சிருக்க? பத்தாததுக்கு ஆரண்யா வேற அடிச்சிருக்கா? என்ன நடக்குது இந்த வீட்ல?” என்றார் கோபமாய்.
“நல்லா கேளுங்க ஆன்ட்டி. இவர் சின்ன சின்ன தப்பு செய்றவர் தான். அதுக்காக இப்படியா போட்டு அடிப்பாங்க? இவ ரொம்ப ஓவராத்தான் பண்றா?” என்று சாரு சொல்ல, கடுப்பின் உச்சியில் இருந்த ஆரா, சாருவை முறைத்திருந்தாள். அதற்குள் தேவ் பாய்ந்திருந்தான்.
“வாயை மூடுங்க. அண்ணின்னு கூட பார்க்க மாட்டேன்” என்று தேவ் கையை ஓங்கியிருக்க,
“என்ன பழக்கம் இது தேவ். அண்ணின்னு கூட பார்க்காம அடிக்க கையை ஓங்குற?” என்றார் சிவகாமி கண்டன குரலில்.
“கோபம் வருதா மாம் உங்களுக்கு? கையை ஓங்குனதுக்கே உங்களுக்கு கோபம் வருதே, இதோ இவன் என் பொண்டாட்டி கையைப் பிடிச்சு இழுப்பான். பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா? தப்புப் பண்ணிட்டேன், அந்த இன்னொரு கையையும் உடைச்சு விட்ருக்கணும்” என்றான் கோபமாய்.
“என்ன தேவ் சொல்ற?” என்றவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“அந்த அசிங்கத்தை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. நீங்க இவன் சொன்னான்னு தான என்னை கூப்பிட்டு வச்சு கேள்வி கேட்குறிங்க? இனி இந்த அசிங்கம் புடிச்சவன் இருக்குற வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது” என்றான் தேவ்.
“என்னப்பா சொல்ற? எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? இப்போ நீ வீட்டை விட்டு போற அளவுக்கு என்ன நடந்தது?” என்றார் சிவகாமி.
“என்ன மாம் சொல்றிங்க? நான் ஏன் வீட்டை விட்டு போகணும்?” என்றவன்,
“அவனைப் போக சொல்லிடுங்க” என்றான் தீர்க்கமாக.
“என்னம்மா சொல்லிட்டு இருக்கான் இவன்? நான் ஏன் வீட்டை விட்டு போகணும்?” என்று யாதவன் எகிறிக் கொண்டு வர,
“கண்டிப்பா போய்த்தான் ஆகணும். இனியும் உனக்கு சம்பாரிச்சு கொட்டனும்னு எனக்கென்ன தலையெழுத்தா? உன்னோட சுயநலத்துக்காக எத்தனை வேலை பண்ணியிருக்க நீ? அதுக்கெல்லாம் அனுபவிக்க வேண்டாம்?” என்றான் தேவ் கோபமாக.
“அதுக்காக இப்படி பேசுவிங்களா தேவ்? அவர் உங்க அண்ணன்” என்றாள் சாரு.
“எது தம்பி பொண்டாட்டியை படுக்கைக்கு கூப்பிடுறவன் நல்ல அண்ணனா?” என்றான் நக்கலாக. அவனின் பேச்சில் அதிர்ந்தார் சிவகாமி.
“நான் அந்த அர்த்ததுல பேசலை தேவ்” என்றான் யாதவ் பேச முடியாமல்.
“நீ எந்த அர்த்தத்துல பேசியிருந்தாலும், உன்னோட நோக்கம் அதுவாத்தான இருந்திருக்கு. இல்லைன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்றான் அவனை முறைத்தபடி. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான் யாதவன்.
“தேவ் சொல்றது உண்மையா யாதவ்?” என்றார் சிவகாமி.
“அம்மா நான் அந்த அர்த்ததுல சொல்லலை” என்றவனை,
“ச்சீ வாயை மூடு. இனி ஒரு வார்த்தை பேசின பெத்த பையன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்றவர்,
“இவங்க சொன்னதை நம்பி நானும் என்ன ஏதுன்னு விசாரிக்காம பேசிட்டேன் தேவ்” என்றார் வருந்தும் குரலில்.
“அதை விடுங்க மாம். ஆனா, நான் சொன்னது தான். இனி ஒரு நிமிஷம் அவன் இந்த வீட்ல இருக்கக் கூடாது.”என்றான் உறுதியாய்.
“அவன் எங்கப்பா போவான்? இனி அப்படி நடந்துக்க மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு” என்றார் சிவகாமி.
“அப்போ நான் கிளம்புறேன்” என்றவன்,
“ஆரா போய் தேவையானதை பேக் பண்ணு” என்றவன், யுவனுக்கு அழைத்தான்.
“என்னடி பார்த்துட்டே இருக்க? நான் உன்னைப் போய் கிளம்ப சொன்னேன்.” என்றான் மீண்டும்.
“சொன்னா கேளுப்பா தேவ். ஒன்னா இருக்குற குடும்பம் சிதைஞ்சுடும் தேவ்” என்றார் சிவகாமி.
“போதும் மாம், நான் எல்லாருக்காகவும் பார்த்தது. இனி நானும் கொஞ்சம் சுயநலமா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றான் தீர்க்கமாய்.
“நான் முதல்ல போய் சேர்ந்துடுறேன். அப்பறம் நீங்க என்னவோ பண்ணுங்க” என்று சிவகாமி கண்ணீருடன் சொல்ல,
“மாம்” என்று பல்லைக் கடித்தான் தேவ்.
“தேவ் பிளீஸ் வேண்டாம்.” என்று ஆரா பாவமாய் பார்க்க,
“என்னவோ பண்ணுங்க? ஆனா ஒன்னு இனி இவன் என் கண்ணுலையே படக் கூடாது. இவங்களோட செலவெல்லாம் இனி இவங்க தான் பார்த்துக்கணும். அதையும் தான்டி ஏதாவது சில்லறை வேலை பண்ணனும்னு நினைச்சான், உயிரோடவே விடமாட்டேன். அப்பறம் நீங்க அழுதும் பிரயோஜனம் இல்லை மாம்” என்றவன் ஆராவை முறைத்தபடி சென்று விட்டான்.