“ஆரா.. ஆரா” என்று வீட்டிற்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தனர் மித்ராவும், கணேஷும்.
“இதோ வந்துட்டேன்” என்றவளின் வாயில் தோசையை திணித்துக் கொண்டிருந்தார் சுலோச்சனா. ஆராவின் பாட்டி.
“பாட்டி போதும்” என்று அவள் மறுக்க, அவர் விடாமல் ஊட்டிக் கொண்டிருந்தார்.
“அவ தான் போதும்னு சொல்றால்ல. விடுங்கம்மா” என்று ரவிக் குமார் சொல்ல,
“இந்த ரெண்டு தோசை எப்படி ரவி போதும். வயசுப் பிள்ள, வல்லு வதக்குன்னு சாப்பிட்டாத்தான ஆகும். எல்லாம் உன் பொண்டாட்டியை சொல்லணும்” என்று மருமகள் காயத்ரியை காலையிலேயே வம்பிற்கு இழுத்தார் சுலோச்சனா.
“அது போனா போயிட்டு போகுது. என் பேத்தி சாப்பிட வேணாமா? இதுக்குத்தான் சொன்னேன் பஸ்ல எல்லாம் காலேஜ் போக வேண்டாம்னு. என் பேச்சை யாரு கேட்குறா இந்த வீட்ல” என்று அவர் ஆரம்பிக்க,
“பாட்டி..! மறுபடியும் ஆரம்பிக்காதிங்க” என்றவள் வேகமாய் சாப்பிட்டு விட்டு கிளம்ப, அவளை முறைத்துக் கொண்டு நின்றாள் ஆதிரா.
“இப்ப அவளை எதுக்குடி முறைச்சுகிட்டு நிக்குற?” என்றார் காயத்ரி.
“நான் ஒருத்தி ஸ்கூல் கிளம்பிட்டு இருக்கேன். என்னைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. ஆனா, இப்படி லோ-கிளாஸ் பீப்பிள் கூட சகவாசம் வச்சுகிட்டு அவுட் பஸ்ல காலேஜ் போற அவளுக்குத் தான் இந்த வீட்ல ஓவர் கவனிப்பா இருக்கு” என்றாள் ஆதிரா.
“என்ன பேச்சு ஆதிரா இது? வயசுக்கு தகுந்து தான் பேசணும். அவங்க நம்ம பக்கத்து வீட்டு பசங்க. இப்படி பேசுறது இதுவே முதலும் கடைசியுமா இருக்கணும்” என்றார் காயத்ரி அதட்டும் குரலில்.
“அவளை எதுக்கு அதட்டுற காயத்ரி. நானும் எத்தனை தடவை தான் சொல்றது. ஆரா அவங்களோட பழகுறதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல. நமக்கு இருக்குற வசதிக்கு எதுக்கு இப்படி பஸ்ல போகணும்.” என்றார் சுலோச்சனாவும்.
“அம்மா அவ ஆசையை ஏன் கெடுப்பானேன். ஒண்ணா படிக்கிற பிள்ளைங்க கிட்ட அப்படி பாரபட்சம் பார்த்து எல்லாம் பழக முடியாதும்மா. அதுவுமில்லாம நம்ம பிள்ளைய எல்லாருக்கும் தெரியும். யாரும் வாலாட்ட முடியாது” என்றார் ரவிக் குமார்.
ஆரா அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் என்றால், ஆதிரா நட்பு வட்டத்தை கூட அந்தஸ்து பார்த்து அமைத்துக் கொள்ளும் குணம். அவள் வடக்கு என்றால் இவள் கிழக்கு. இதனால் தானோ என்னவோ இருவருக்கும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு எல்லாம் கிடையாது.
ஆராவும், மித்ராவும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். ஆராவுக்கு பேஷன் டிசைனிங்கில் இருந்த ஆர்வம் ஏனோ அறிவியலிலும் கணிதத்திலும் இல்லாமல் போனது. அவளுக்கு பிடித்ததையே படிக்கட்டும் என்று வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லை. கணேஷ் ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தான். மூவரும் ஒன்றாக ஒரே பேருந்தில் செல்வது தான் வழக்கம்.
“உன்னால தாண்டி இன்னைக்கு லேட். எப்படியும் பஸ் போயிருக்கும்” என்று மித்ரா புலம்பிக் கொண்டே வர,
“நீ ஒருத்தன் போதும்டா..! இப்படி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்குறதுக்கு” என்றாள் மித்ரா.
“இப்ப எதுக்குடி புலம்பிட்டே வர்ற? பஸ் இப்ப தான் வருது வா..!” என்று ஆரா சொல்லி முடிக்க, வந்து நின்றது பேருந்து. கணேஷ் வழக்கம் போல் பின்னால் ஏறிக் கொள்ள, ஆராவும் மித்ராவும் முன்னால் ஏறிக் கொண்டனர். அது ஸ்கூல், காலேஜ் டைம் என்பதால் பெரும்பாலும் இளைஞர்கள் பட்டாளம் தான் அதிகம். தினசரி வாடிக்கையாக செல்லும் பயணிகள் தான் அந்த நேரத்தில் அதிகம் இருப்பர். அதனால் பெரும்பாலான முகங்கள் தெரிந்த முகங்கள் தான்.
அவர்கள் எப்போதும் அமரும் படியை ஒட்டி இருந்த இருக்கை அவர்களுக்காகவே காலியாய் இருந்தது. அதில் ஆசுவாசமாய் அமர்ந்தனர் இருவரும்.
“என்னமோ ஏழு கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் ஏறுற மாதிரி நீங்க குடுக்குற பில்டப் இருக்கே சாமி… தாங்க முடியலை” என்றாள் ஒருத்தி பின் சீட்டிலிருந்து.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு? ஏன் இன்னைக்கு உன் ஆள் வரலையா?” என்றாள் மித்ரா.
“எலி எங்க பக்கம் ஏரோபிளேன் ஓட்டும் போதே தெரிய வேணாம். இன்னைக்கு கடலை போட உன் ஆள் வரலைன்னு” என்றாள் நக்கலாய்.
“மனசாட்சி இருக்காடி உனக்கு? நானாச்சும் கடலை மட்டும் தான் போடுறேன். அப்படியே பஸ்சுக்குள்ள பாரு. ஸ்கூல் பிள்ளைங்க லவ்வு ஒரு பக்கம், ஆன்ட்டி அங்கிள் லவ்வு ஒரு பக்கம், இதெல்லாம் பத்தாதுன்னு இந்த கண்டக்டர் வேற?” என்று அவள் சலித்துக் கொண்டு சொல்ல,
“அது என்னவோ உண்மை தான்” என்றாள் மித்ராவும்.
கையில் செல்போனும், ஸ்டைல் என்ற பெயரில் வெட்டிய மண்டை வெட்டும் என்று அங்கிருந்த பள்ளி, கல்லூரி டிக்கெட்டுகளை பார்க்கும் போது, ஏனோ ஆரா அவள் அறியாமல் முகத்தை சுளித்துவிடுவாள்.
“உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு. பாட்டுப் போடுற பழைய ஆள் வரலை. புதுசா ஒரு கண்டக்டர் வந்திருக்கான்டி. ஆள் சும்மா செம்மையா இருக்கான். அப்படியே பின்னால பாரு” என்றாள் பின் இருக்கையில் இருந்தவள்.
“அது யாருடா? நமக்குத் தெரியாம?” என்ற மித்ரா பின்னால் திரும்பி பார்க்க, அவனோ சின்சியராய் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவள் திரும்பி பின் இருக்கையில் இருந்தவளை முறைத்தாள்.
“என்னை எதுக்குடி முறைக்கிற?”
“கொரொனோ பேஷன்ட் மாதிரி மாஸ்க் போட்டு சுத்திட்டு இருக்கான்.அந்த முகத்துல எதைப் பார்த்து மயங்குன நீ?” என்றாள் மித்ரா வேண்டுமென்றே.