அத்யாயம் 19:

பால்கனியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதில் கேள்விகள் அனைத்தும் வரிசையாய் உலா போய் கொண்டிருக்க, அன்று யாதவன் அவளிடம் நடந்து கொண்ட முறையையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அதற்கு அவள் நடந்து கொண்டது அதிகப்படி இல்லை என்றாலும், தேவ் எதுவும் நினைத்துக் கொள்வானோ என்று தான் சத்தம் கேட்டு அவள் அங்கு சென்றது.

ஆனால் அங்கு தேவ் அவன் அண்ணனை புரட்டி எடுத்திருக்க, காரணம் தெரியாமல் குழம்பி போய் நிற்கிறாள்.

“எதுக்காக அப்படி அடிச்சிருப்பாரு? ஒருவேளை என்கிட்டே நடந்துகிட்ட முறைக்காக இருக்குமோ?இல்லை வேற எதுவுமா?” என்று யோசித்துக் கொண்டிருக்க, பாடலில் பார்த்த தேவ்வின் வடிவம் அவள் கண் முன் வந்து போனது. நடந்த, நடக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்த்தவளுக்கு, தன்னைச் சுற்றி ஏதோ ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. மீண்டும் மீண்டும் அந்த பாடலை மொபைலில் பார்க்க, அவளுக்கு தோன்றிய விஷயம் உண்மைதான் என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தெரிந்து கொண்ட விஷயத்தை எவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு. உள்ளமும் உடலும் ஒரு சேர நடுக்கம் கொடுக்க, மறந்து போன நினைவுகள் படமாய் கண் முன் விரிய, கடந்த காலமும், நிகழ்காலமும் அவள் முன் போட்டி போட்டுக் கொண்டு நிதர்சனத்தை உரைக்க முற்பட,அவள் பிடியில் சிக்கியிருந்த அவன் நினைவுகளின் வலியில்,கண்மூடி உண்மையை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

கண்ணீரில் கரைந்த இரவுகள் அதன் கனத்தை அவளுக்கு மீண்டும் நிகழ்த்த முற்பட, அவன் வந்து ஆற்றுவதற்காகவே அவளோடு இருந்த சில காயங்கள் அதன் வலியையும் இருப்பையும் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. தான் பார்த்தது நிஜம் தான் என்று உறுதியாக தெரியாத போதே, அதைத் தாங்க முடியவில்லை அவளால்.

“தேவ் தான் ஜெய்ன்னா அதை ஏன் என்கிட்டே இருந்து மறைக்கணும்? அப்படி என்ன அவசியம் வந்தது? என்னை எதுக்கு தெரியாத மாதிரி காட்டிக்கனும்? இவர் ஜெய்யா இருந்தா கண்டிப்பா என்கிட்டே சொல்லியிருப்பார். இவ்ளோ பெரிய பிரேம்ல இருக்க தேவ் எங்க? சாதாரண பஸ் கண்டக்டரா வந்த ஜெய் எங்க? இது நிஜமா? இல்லை எனக்குத் தான் அப்படித் தோணுதா?” என்ற பல குழப்பங்கள் அவளுக்குள் மீண்டும் படையெடுத்தது..

நிதானமாக மீண்டும் ஒரு முறை யோசித்தாள்.

‘ஜெய் உயிரோட இல்லைன்னு அவர் அண்ணன் சொன்னாரே’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அப்போது தான் புத்திக்கு உரைத்தது.

‘என்கிட்டே பேசினது யாதவா இருக்குமோ, அப்போ அன்னைக்கு போன்ல கேட்டது சிவகாமி ஆன்ட்டி குரலா?” என்று யோசித்தவள், கண்ணீரைத் துடைத்தபடி,பரபரவென்று செல்போனில் ஆக்டர் சத்யதேவ் பயோ டேட்டா என்று செர்ச் செய்ய, அனைத்து தகவல்களும் நொடியில் கண்முன் விரிந்தது. அதில் அவன் ஒரிஜினல் நேம் சத்ய ஜெயதேவ் என்றிருக்க, அந்த பெயரிலேயே அவள் கண்கள் நிலைத்தது.

சாதாரண கண்டக்டராய் அவனைப் பற்றி அறிய முடியாதவளுக்கு, ஒரு பெரிய ஆக்டர் என்றதும் அவனைப் பற்றி நொடியில் அறிந்து கொண்டாள். அவனைப் பற்றிய அனைத்து செய்திகளையும் படித்தவளுக்கு, அப்போது தான் அந்த கட்டுரையும் விரிந்தது. அதில் அவன் நடித்த திரைப்படங்கள், நன்றாக ஓடியவை, பிளாப் ஆனவை, அவன் சொந்த விஷயங்கள் முதல் கடைசியாக நடந்த அவன் திருமணம் முதல் அனைத்தைப் பற்றியும் விவரித்திருந்தனர். அவன் தொடர்புடைய அனைத்து செய்திகளும் விரிய,

‘இளம் நடிகர் சத்ய தேவ்வின் தந்தை கடன் பிரச்சனையால்  தற்கொலை’ என்ற செய்தியை பார்த்தவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.

“இவரோட அப்பா சூசைட் பண்ணிகிட்டாரா?” என்று எண்ணியவளுக்கு, அந்த செய்தி வெளியான வருடமும் தேதியும் தெரிய, அது அவளுக்கு இன்னமும் அதிர்ச்சி. அந்த நாளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடுவாளா அவள்?

“அதனால தான் நீங்க வரலையா ஜெய்” என்றவளுக்கு உடல் லேசாக நடுக்கம் கொண்டது. உறுதியாக இது தான் நடந்தது என்று தெரியாவிட்டாலும், அனுமானமாக இது தான் நடந்திருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் வேதனைகளைச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். சொல்லத் தெரியாத அவள் உணர்வுகள் ஊனமாகி அவளுக்குள்ளேயே புதைய,அணை உடைத்துப் பாயும் அருவியாய் அவள் கண்ணீர் துளிகள், அவனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் வெளி வந்து கொண்டிருந்தது.

“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?” என்றும் எண்ணிக் கொண்டாள்.

அந்த நாட்களில் ‘ஜெய்’ என்ற பெயரை மட்டும் வைத்து அவனைத் தேடிய தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

எத்தனையோ முறை அவனைத் படங்களில் பார்த்துவிட்டு, “இந்த ஆக்டரைப் பார்த்தா ‘ஜெய்’ மாதிரியே தோணுது எனக்கு” என்று மித்ராவிடம் அவள் கூறியதும், அதற்கு அவள்,

“எப்பவும் ஜெய் பத்தியே யோசிச்சுட்டு இருக்கிறதால யாரைப் பார்த்தாலும் ஜெய் மாதிரி தோணுது உனக்கு. இவ்வளவு பெரிய ஆக்டர் எங்க? சாதாரண கண்டக்டர் ஜெய் எங்க?” என்று மித்ரா அதற்கு பதில் கூறியதும் அவள் நினைவடுக்கில் வந்து போனது.

“ஆனா அந்த யாதவ் ஏன் ஜெய் இறந்துட்டதா சொல்லணும்? இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூடவா ஜெய்க்கு என் ஞாபகம் வராம இருந்திருக்கும்? அப்பறம் ஏன் என்னைத் தேடி வரலை? அப்பறம் எதுக்காக தேடி வந்து பிடிவாதமா மேரேஜ் பண்ணார்?” என்று பல கேள்விகள் அவளுக்குள் இருந்தது.

இத்தனை கேள்விகள் இருந்தாலும், அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த வேதனைகளுக்கு எல்லாம் அன்று விடியல் வந்திருந்தது.

கண்ணீரைத் துடைத்து தன்னை சமன் செய்தவள், வேகமாய் எழுந்து அறைக்குள் செல்ல, தேவ் அப்போதும் வந்திருக்கவில்லை.

“எங்க போனார்?” என்று யோசித்துக் கொண்டே, கீழே சென்றாள். அங்கும் அவனைக் காணவில்லை.

அம்மா இன்னும் தேவ் சார் சாப்பிடலை என்று தனம் சொல்ல,

“எடுத்து குடுங்கக்கா, நான் ரூம்க்கு எடுத்துட்டு போறேன்” என்றாள்.

“நான் எடுத்துட்டு வரேன்மா” என்றார்.

“அட பரவாயில்லைக்கா, குடுங்க நானே எடுத்துட்டு போறேன்” என்றவள், அவனுக்கான உணவையும் எடுத்துக் கொண்டு சென்றாள்.

அவனோ அங்கே நிச்சல் குளத்தில் தன் ஆத்திரமும், கோபமும் அடங்கும் வரை நீந்திக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நீருக்குள் இருந்தாலும் அவன் கோபம் மட்டும் அடங்க மறுத்தது.

“ஷிட்..ஷிட்” என்று நீரிலேயே கைகளால் அடித்தவனுக்கு அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை.

‘எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன் நான்? அவளை முட்டாள்ன்னு திட்டிட்டு நானே முட்டாளா இருந்திருக்கேன். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு இருந்திருக்கேன் நான். ஒரு கோபமும், ஈகோவும் என் வாழ்க்கையை எங்க வந்து நிறுத்தியிருக்கு? என்னை நம்பினவளை இத்தனை வருஷம் தவிக்க விட்டு வந்திருக்கேன் நான். நீயும் சராசரி ஆம்பிள்ளையா யோசிச்சு, சராசரி ஆண்தான்னு நிரூபிச்சுட்ட தேவ்’ என்று தனக்குத் தானே எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டவன், ஆராவின் முகம் பார்க்கும் சக்தியின்றி மீண்டும் நீருக்குள்ளேயே சென்றான்.

அவனைக் காணாமல் தவித்தவளுக்கு, அவனில்லாமல் அந்த அறைக்குள் இருப்பதே மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது. இத்தனை வருட பிரிவையும் ஒரே நாளில் தீர்த்துக் கொள்பவளைப் போல் அவள் கண்களும், மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்க, தவிப்பிற்கு சொந்தமானவனோ, அவளைக் காணும் திராணியற்று அறைக்குள் வர யோசித்துக் கொண்டிருந்தான்.

அவள் மனமோ வலியோடு அவன் மடி சாயக் காத்திருந்தது. அவன் குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தது. அத்தனை நாட்கள் அவள் கைப்பையில் பத்திரமாய் இருந்த அவன் அணிவித்த செயினையும், மோதிரத்தையும் எடுத்து ஓராயிரம் முறை பார்த்துவிட்டாள்.

இரவு வெகுநேரம் கடந்த பின்னும் அவனைக் காணவில்லை.

‘தேட வைக்கிறதும், தவிக்க வைக்கிறதும் உங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லை ஜெய். தேடி கலைச்சு போறதும், மனசு மரத்துப் போறதும் எனக்கும் புதுசில்லை’ என்று எண்ணியவள் உறக்கம் வராவிட்டாலும் கண்களை மூடி படுத்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து லோயர் அணிந்து தோளில் தொங்கிய டவலில் தலையை துவட்டியபடி வந்தவன் அப்போதுதான் உறங்கி விட்ட ஆராவைப் பார்த்தான். பார்த்தவனுக்குள் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது.

‘எத்தனை நாளைக்கு இப்படியே தப்பிப்ப தேவ்?” என்று அவனின் மனம் கேள்வி எழுப்ப, அதுவும் சரி என்று தான் பட்டது.

‘எதுவா இருந்தாலும் ஆராகிட்ட பேசிட்டா என்ன?’ என்று கூட தோன்றியது அவனுக்கு. ஆனால் இன்று யாதவ் சொன்ன விஷயத்தை மட்டும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய மனக்காயத்தை அவளுக்கு கொடுத்திருக்கேன் நான் என்று எண்ணி எண்ணியே நொந்து போனான். அந்த மெல்லிய வெளிச்சத்திலும் வரி வடிவமாய் தெரிந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் அத்தனை போராட்டம்.  அதற்கு மேலும் அவனால் அந்த போராட்டத்தை தாங்க முடியவில்லை.