மீண்டும் தன் மொபைலில் இருந்த அந்த சிசிடிவி புட்டேஜை பார்த்தவனின் கண்களில் சிவப்பேற, பணியாளை அழைத்தவன்,

“யாதவ் எங்க?” என்றான்.

“சார் இன்னும் கீழ வரலை சார்” என்று சொல்ல,

“ஓகே நீங்க போங்க” என்றவன், போனை எடுத்து யாருக்கோ அழைக்க,

“சார், அந்த பேரரை விசாரிச்சதுல உங்க பிரதர் தான் மிக்ஸ் பண்ணி, உங்க பேரை சொல்லி குடுக்க சொல்லியிருக்கார்” என்று எதிர்முனையில் இருந்து பதில் வர,

“ஓகே. இனி நான் பார்த்துக்கிறேன்” என்று போனை வைத்தவனுக்குள் சிந்தனை ரேகைகள்.

‘யாதவ் எதுக்கு ஆரா குடிச்ச ஜூஸ்ல ட்ரிங்க்ஸ மிக்ஸ் பண்ண சொல்லணும்? அப்படி அவளை குடிக்க வைக்குறதுல அவனுக்கு என்ன மோட்டிவ்?” என்று யோசித்தவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன், அடுத்து பொறுமையின்றி சென்று அவன் அறைக்கதவை தட்டியிருந்தான்.

கதவைத் திறந்த யாதவன், அங்கு தேவ் நிற்பதைக் கண்டு திகைத்தான்.

“என்னாச்சு தேவ்?எப்பவும் இந்த புளோர் பக்கமே வர மாட்டியே?” என்றான் யாதவ்.

“வர வேண்டிய அவசியம் வந்தா வந்து தான ஆகணும். கொஞ்சம் வெளிய வர்றிய?” என்றான்.

யாதவ் எச்சிலை முழுங்கிக் கொண்டு வெளியே வர,

“என்னாச்சு?” என்றான் எதுவும் தெரியாதவன் போல்.

“என்னாச்சுன்னு உனக்கு தெரியாது இல்லையா?” என்றான் தேவ்.

“புரியலை தேவ்?”

“எதுக்காக நேத்து பார்ட்டில ஆராவுக்கு ஜூஸ்ல ட்ரிங்க்ஸ மிக்ஸ்  பண்ணி குடுத்த?” என்று நேரடியாய் விஷயத்திற்கு வந்தான்.

“நானா? நான் ஏன் அப்படி செய்ய போறேன் தேவ்?” என்றான் நடிப்புடன்.

“நீதான்னு கன்பார்ம் பண்ணிட்டு தான் வந்து பேசிட்டு இருக்கேன். இந்த ஓவர் ஆக்சன் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்” என்றான் கோபமாய்.

அப்போது வேகமாய் அங்கு வந்த சாரு,

“அது நான் தான் இவர்கிட்ட சொல்லி அப்படி குடுக்க சொன்னேன் தேவ். ஆராவை டரிங்க் பண்ண சொன்னேன். மாட்டேன்னு சொல்லிட்டா. அதான் எப்படியாவது பண்ண வைக்கனும்னு” என்று மென்று முழுங்க,

“அவளை குடிக்க வைக்குறதுல உங்களுக்கு என்ன லாபம் அண்ணி” என்றான் மரியாதையாக.

“சோசியல் ட்ரிங்கிங் தப்பில்லையே தேவ், அதான்” என்றாள்.

“அது தப்பில்லை தான். ஆனா விருப்பம் இல்லாதவங்களுக்கு அவங்களுக்குத் தெரியாம கலந்து கொடுக்குறது தான் தப்பு. நீங்க சொல்ற காரணத்தை நம்பி நான் போறேன்னு நீங்க தப்புக் கணக்கு போட்றாதிங்க. யாதவ் பத்தி நான் கேள்விப் படுற விஷயம் எதுவும் சரியில்லை. நீங்க வந்து சரி பண்ணுவிங்கன்னு நினைச்சேன். நீங்க ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி அவன் செய்ற எல்லாத்துக்கும் பக்க பலமா இருக்கீங்க. எல்லா நேரமும் இப்படியே பேசிட்டு இருக்க மாட்டேன். அம்மா முகத்துக்காக பார்க்குறேன்” என்று முறைத்தவன்,

“ஆரா என் வொயிப். அவ விஷயத்துல இனி தலையிட்டா என்ன நடக்கும்னு சொல்லவெல்லாம் மாட்டேன். செஞ்சு காட்டிட்டு போயிட்டே இருப்பேன்” என்றவன் யாதவை முறைத்துவிட்டு செல்ல, அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“நான் மட்டும் சரியான நேரத்துல வந்து உன் தம்பிகிட்ட பேசலைன்னா, நீயே உளறிக் கொட்டி, மாட்டியிருந்திருப்ப. அவ்வளவு தூரம் சொல்லியும் என்ன வேலை பார்த்து வச்சிருக்க யாதவ்? நான் தான் சொன்னேன்ல, ஆரா விஷயத்துல நீ தலையிடாதன்னு. ட்ரிங்க்ஸ் மிக்ஸ் பண்ணன்னு தெரிஞ்சதுக்கே உன்னை தேடி வந்துட்டான். அவளை பார்க்குற பார்வையெல்லாம் தெரிஞ்சது, உடம்புல உயிர் இருக்கும்னு நினைக்கிற?” என்றாள் சாரு.

“அவன் உன் புருஷனை மிரட்டிட்டு போறான்டி. நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க?” என்றான் யாதவ் எரிச்சலுடன்.

“எனக்கு வேற வழி தெரியலையே. இப்போதைக்கு அவனைப் பகைச்சுகிட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் லாட்டரி அடிக்க சொல்றியா?” என்றவள்,

“போடா டேய்” என்பதைப் போல் சென்றாள்.

அறைக்கு சென்ற தேவ் கண்டது என்னவோ உறங்கிக் கொண்டிருந்த ஆராவைத்தான்.எதுவும் சாப்பிடாமல் லெமன் ஜூசை மட்டும் குடித்திருந்தாள்.

“என்ன இவ்வளவு நேரம் தூங்குறா?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் போன் சத்தம் எழுப்ப, ஆதிரா அழைத்துக் கொண்டிருந்தாள்.

அதை எடுத்து அவன் அட்டென் செய்ய,

“எவ்வளவு நேரம் ஆரா உனக்கு கூப்பிடுறது?” என்று எதிர்முனையில் கத்தத் துவங்கினாள்.

“ஆதிரா  நான் தேவ். ஆரா தூங்கிட்டு இருக்கா” என்றான்.

“ஹோ..சாரி” என்றவள்,

“என்னாச்சு? இவ்வளவு நேரம் வரைக்கும் தூங்கிட்டு இருக்கா? நைட் எதுவும் பிரச்சனை இல்லையே? அதைக் கேட்கத்தான் கால் பண்ணேன்” என்றாள்.

“நோ பிராப்ளம்” என்றான்.

“ஓகே, நான் அவகிட்ட அப்பறமா பேசிக்கிறேன்” என்று வைக்கப் போனவள்,

“ஒரு நிமிஷம் மாமா” என்றாள் வேகமாய்.

“என்ன ஆதிரா?” என்றான்.

“இதை சொல்லலாமா வேண்டாமான்னு தெரியலை. பட் எனக்கு மனசுல பட்டா பட்டுன்னு சொல்லிடுவேன்” என்றாள்.

“என்ன விஷயம் ஆதிரா?” என்றான் மீண்டும் யோசனையுடன்.

“அது உங்க வீட்ல உங்க அண்ணாவும் அண்ணியும் கொஞ்சம் சரியில்லாத மாதிரி தோணுது. உங்க மேரேஜ் அப்பவே எனக்கு தோணுச்சு. இன்பேக்ட் உங்க அண்ணி என்னை வச்சு கலகம் பண்றதுக்கு கூட ட்ரை பண்ணாங்க. எங்கம்மா என்னவோ நான் அக்கா புருஷனை வளைச்சுப் போட்ருவேன்ற ரேஞ்சுக்கு என்னை அங்க தங்க விடலை. அந்த கடுப்புல நானும் எதுவும் பேசாம வந்துட்டேன். நேத்து பார்ட்டில பார்த்து தான் கன்பார்ம் பண்ணேன். அதை ஆராகிட்ட இன்பார்ம் பண்ணத்தான் கூப்பிட்டேன். பட் அவகிட்ட சொல்றதுக்கு உங்ககிட்ட சொன்னாவாவது பிரயோஜனம் இருக்கும்னு தோணுது. பார்த்துக்கோங்க அவளை. அந்த மெண்டலுக்கு ஆட்களை தரம் பிரிச்சு பார்க்குற அளவுக்கு இன்னும் அறிவு வளரலை. என் பாட்டியோட வளர்ப்பு அப்படி. கேட்டா அடக்கமா இருக்குறவ தான் பொண்ணு, மத்தவங்க எல்லாம் மண்ணுன்ற ரேஞ்சுக்கு கிளாஸ் எடுப்பாங்க. எனக்கு இந்த அடக்கம் ஒடுக்கம் எல்லாம் செட்டே ஆகாது” என்றாள் ஆதிரா.