அத்யாயம் 14:

“நான் மித்ராவை மேல கூட்டிட்டு போகட்டுமா? அந்த வொர்க் ஸ்பேஸ் செட் பண்ற விஷயமா கொஞ்சம் பேசணும்” என்றாள் ஆரா தயக்கத்துடன்.

“நீ என்ன ஸ்கூல் ஸ்டூடண்ட்டா ஆரா? ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க?” என்றாள் மித்ரா.

“அப்படி இல்லை மித்ரா. அது அவரோட பிரைவேட் ஸ்பேஸ். மத்தவங்க பிரைவேட் ஸ்பேஸ்குள்ள போறதுக்கு முன்னாடி பர்மிஷன் கேட்கணும் தானே?” என்றாள் ஆரா.

“அது மத்தவங்களுக்குத் தான். நீதான் அவர் வொயிப் ஆச்சே” என்றாள் மித்ரா நக்கலாய்.

மித்ராவின் ஓவ்வொரு அசைவுகளையும் குறித்துக் கொண்டவன்,

“நல்லா சொல்லுங்க மித்ரா உங்க பிரண்டுகிட்ட. இது அவ வீடு. அவளுக்கு இல்லாத உரிமையா?” என்றான் கூர் பார்வையுடன்.

“அப்பறம் என்னடி? தேவ் சாரே சொல்லிட்டார். வா போகலாம்” என்று அவளை மித்ரா உரிமையுடன் இழுத்துக் கொண்டு செல்ல, தேவ் தான் யோசனையுடன் பார்த்தான். மித்ராவிடம் ஏதோ ஒன்று சரியில்லை என்று உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது அவனுக்கு.

வேகமாய் சிந்தித்தவன், யுவனிற்கு அழைத்தான். அடுத்த நிமிடம் யுவன் வந்திருந்தான்.

“சார்” என்று வந்து நின்றவனின் வேகம் கண்டு மெச்சுதல் பார்வை பார்த்தான் தேவ்.

“பரவாயில்லை யுவன். நீ கெஸ்ட் ஹவுஸ்ல தங்கியிருக்கிறது எவ்வளவு சவுகர்யம் பார்த்தியா?” என்றவன்,

“அந்த வொர்க் ஸ்பேஸ் செட் பண்றதைப் பத்தி ஆரா ஏதாவது உன்கிட்ட இன்ஸ்டர்க்ட் பண்ணாளா?” என்றான்.

“என்னென்ன வேணும்னு லிஸ்ட் குடுத்திருக்காங்க சார். திங்க்ஸ் எல்லாம் வந்துட்டு இருக்கு. இன்னைக்கு ரெடி ஆகிடும்” என்றான் யுவன்.

“ஐ சீ” என்று அவனை ஒருநிமிடம் அமைதியாய் பார்த்தவன்,

“ஆராவோட பிரண்ட் மித்ரா வந்திருக்காங்க. இது விஷயமா மேல டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்றவன்,

“இப்ப நீ என்ன பண்ற, அங்க போய் திங்க்ஸ் எல்லாம் எங்க செட் பண்ணனும்ன்னு மட்டும் கேட்டுக்கோ யுவன்” என்றான் தேவ்.

“சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க சார். இந்த வேலையை மட்டும் என்னால செய்ய முடியாது” என்றான் யுவன்.

“ஏன்?” என்றான் தேவ் தீர்க்கமாய்.

“ஓகே சார் நான் போறேன்” என்றபடி யுவன் நகர, தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான் தேவ்.

ஆராவுடன் மேலே சென்ற மித்ரா அந்த வீட்டின் அழகிலும், செழிப்பிலும் மெய் மறந்தாள்.

“நிஜமாவே இதை வீடு சொல்லக் கூடாது ஆரா. பேலஸ்ன்னு தான் சொல்லணும்” என்றாள்.

“எனக்கும் பர்ஸ்ட் டைம் வந்தப்போ அப்படித்தான் தோணுச்சு” என்றாள் ஆரா.

“ஹோ.. இதெல்லாம் பார்த்து தான் ஜெய்யை மறந்துட்டு இந்த சத்ய தேவ்வை அக்சப்ட் பண்ணிகிட்டியா?” என்றாள் மித்ரா நக்கலாய்.

அவளின் வார்த்தைகளில் அதிர்ந்தவள் எதுவும் பேசாமல்,  அந்த பெரிய அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

“இந்த ரூமை தான் என்னை யூஸ் பண்ணிக்க சொன்னார்” என்றாள் ஆரா. குரலில் முன்பிருந்த தெளிவு இல்லை.

“நாட் பேட்..! எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீ பன்றதைத் தவிர” என்ற மித்ராவை விநோதமாகப் பார்த்தாள் ஆரா.

“நான் என்ன பண்ணேன்?” என்றாள்.

“இந்த ஆறு வருஷமும் நீ சொன்னது எல்லாம் பொய்யா ஆரா. ஜெய் நாமம் படிச்சுட்டு இருந்த நீ, எப்படி இப்படி டக்குன்னு மாறி அதுவும் உடனே மேரேஜ்க்கு சம்மதம் சொல்லி, ரொம்ப ஸ்பீட் தான்” என்றாள் மித்ரா.

“எனக்கு விருப்பமில்லாமத்தான் நடந்தது மித்ரா. என்னால ஆதிரா மேரேஜ் தள்ளிப் போகுதுன்னு வீட்ல எல்லாரும் என்னை குற்றவாளி ஆக்குறப்போ, அப்பவும் சுயநலமா என்னால யோசிக்க முடியலை” என்றாள் ஆரா.

“அதெல்லாம் உனக்கு நீயே சொல்லிக்கிற சப்பைக்கட்டு காரணம் ஆரா. இதே தேவ் இல்லாம ஒரு நார்மல் மனுஷன் உன்னை இப்படி கட்டாயப்படுத்தி பொண்ணு கேட்டிருந்தா சரின்னு சொல்லியிருப்பியா?” என்றாள் மித்ரா.

“அப்படி யாரும் கேட்கவும் இல்லை. என்னைக் கட்டாயப்படுத்தவும் இல்லையே. எனக்கு மேரேஜ் ஆனதுல இப்போ உனக்குத்தான் வருத்தமா இருக்குற மாதிரி தோணுது எனக்கு” என்றாள் ஆரா.

“நீ நல்லா இருந்தா சந்தோஷப்படக் கூடிய முதல் ஆளு நான் தான்டி. ஜெய் மேல வச்சிருந்த காதலை மறக்க வைக்கிற அளவுக்கு தேவ் ஏதோ உனக்கு சொக்குப் பொடி போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன். எதுக்கும் அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு ஆரா. எனக்கென்னவோ அவரைப் பார்த்தா சரியா படலை.சினிமாக்காரங்களை நம்ப முடியாது பாரு” என்றாள் மித்ரா.

“உனக்கு யாரைப் பார்த்தா தான் சரியா தோணும். முதல்ல ஜெய் சரியில்லைன்னு சொன்ன. அப்பறம் கணேஷ், உன்னை உண்மையா நேசிச்சான். அவனை துரும்பா கூட மதிக்கலை நீ. இப்போ தேவ் சரியில்லைன்னு சொல்ற? என்ன தான் பிரச்சனை மித்ரா உனக்கு?” என்றாள் ஆரா பொறுமை இழந்து.

“பார்த்தியா பார்த்தியா, நேத்து வந்த தேவ்க்காக இத்தனை வருஷமா உன் கூடவே இருக்குற என்னை எடுத்தெறிஞ்சு பேசுற. சாரி ஆரா, இது உன் லைப். இதுல தலையிட நான் யாரு?” என்றாள் மித்ரா.

“நான் அப்படி சொல்ல வரலை மித்ரா. என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ பிளீஸ்” என்றாள் ஆரா.

“உன் மேல இருக்குற அக்கறையில பேசிட்டேன்டி. தேவ் உன்னை நல்லா பார்த்துகிட்டா எனக்கு அது போதும்” என்றாள்.

“மித்ரா பிளீஸ்! அவர் என்னை எப்படி பார்த்துகிட்டாலும் அது எங்க பர்சனல் ஸ்பேஸ். அதை நான் பார்த்துக்கிறேன். அதுக்குள்ள நீ இன்டெர்பியர் ஆகாத. நான் முன்ன மாதிரி வெறும் ஆரண்யா கிடையாது. இப்போ என் பேருக்கு பின்னால சத்ய தேவ் அப்படின்ற பேரும் சேர்ந்திருக்கு.சோ என்னோட பர்சனல்ன்னு ஒன்னு இல்லை. அது தேவ் கூட சேர்ந்து தான் இருக்கு. அதனால முன்ன  எல்லாத்தையும் ஷேர் பண்ண மாதிரி இப்போ பண்ண முடியாது.” என்றவள்,

“அப்பறம் இன்னொரு விஷயத்தை மைன்ட்ல நல்லா வச்சுக்கோ மித்ரா. என் பார்வையும், என் உள்ளுணர்வும் சரின்னா, ஜெய்யும் நல்லவர் தான். தேவ்வும் நல்லவர் தான். நீதான் குழப்பிக்கிற. ஒருத்தரை நம்புனா கடைசி வரைக்கும் நம்பனும். மதில் மேல் பூனை மாதிரி இருக்கக் கூடாது. நீ ஆரம்பத்துல ஜெய் விஷயத்துல பண்ணதை இப்போ தேவ் விஷயத்துல பண்ணாத பிளீஸ்” என்றாள் ஆரா.

“பரவாயில்லையே ஆரா, உனக்கு இவ்வளவு தெளிவா பேசத் தெரியும்னு கூட எனக்கு இன்னைக்குத் தான் தெரியும். உனக்காக நான் என் மேரேஜ் பத்தி கூட யோசிக்காம, உன் கூடவே இருந்ததுக்கு இன்னைக்கு சட்டுன்னு தள்ளி நிறுத்தி பேசிட்ட. மனசு நிறைஞ்சு போய்டுச்சு” என்றாள் மித்ரா.

“நான் அந்த அர்த்ததுல சொல்லலை மித்ரா. நீ எப்பவும் என்னோட பெஸ்ட் பிரண்ட் தான்டி” என்றாள்.

“மேம்” என்ற குரலில் இருவரும் திரும்ப, யுவன் நின்றிருந்தான்.

“வாங்க யுவன். எப்ப வந்திங்க? என்னை கூப்பிட்டிருக்கலாமே?” என்றாள் ஆரா. மித்ரா அவனை யோசனையுடன் பார்க்க,

“நான் அப்பவே வந்துட்டேன் மேம். நீங்க சீரியஸா பேசிட்டு இருந்திங்க. அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு அமைதியா வெயிட் பண்ணேன்” என்றான்.

“ஒட்டுக் கேட்டிங்கன்னு சொல்லுங்க” என்றாள் மித்ரா.

“சாரி மேம், அது எனக்குப் பழக்கமில்லை” என்றவன்,

“சார் எங்க எதை செட் பண்ணனும்னு உங்ககிட்ட ஒரு கிளியர் பிக்சர் வாங்கிக்க சொன்னார். இன்னைக்கு செட் பண்ணிடலாம் மேம்” என்றான் ஆராவை மட்டும் பார்த்து.

“அது ஒன்னும் பிரச்சனையில்லை யுவன். நான் சொன்ன திங்க்ஸ் எல்லாம் வந்ததுக்கு அப்பறம் செட் பண்ணும் போது நானே வந்து சொல்றேன். எனக்கும் டைம் போன மாதிரி இருக்கும்” என்றாள்.

“ஓகே மேம்” என்றவன் திரும்பி செல்ல முயன்று,

“ஆங் மேம், சார் உங்க மொபைலை உங்க கிட்ட கொடுக்க சொன்னார்” என்று நீட்ட,

“கீழயே வச்சுட்டு வந்துட்டேன் போல. தேங்க்ஸ் யுவன்” என்றபடி வாங்கிக் கொண்டாள். பாவம் அவ்வளவு நேரமும், தேவ் அவன் போனில் இருந்து தொடர்பில் இருந்ததையோ, அப்போது தான் போனை வைத்ததையோ அவள் அறியவில்லை.

“நீ சந்தோஷமா இருக்கியா ஆரா” என்றாள் மித்ரா.