“தேவ் ரொம்ப அருமையா சமைப்பான். அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும் வாரத்துல ஒரு நாள் அவன் தான் எங்க எல்லாருக்கும் சமைச்சுக் குடுப்பான். எப்போ அவர் எங்களை விட்டு போய், குடும்ப பொறுப்பெல்லாம் அவன் தலையில விழுந்ததோ, அன்னைக்கு ஓட ஆரம்பிச்சவன் தான். இப்போ வரைக்கும் ஓடிட்டு இருக்கான். அவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாங்களும் இல்லை, இந்த குடும்பமும் இல்லை” என்றவர் கண் கலங்க,

“இப்ப எதுக்கும்மா பழசெல்லாம். இதெல்லாம் ஒரு விஷயமாம்மா?” என்றான் யாதவன்.

“உட்கார்ந்து அழிச்சவனுக்கு, ஓடி உழைச்சவனோட அருமை எங்க தெரியப் போகுது?” என்றார் கோபமாய்.

“நான் மட்டுமா காரணம்? உங்க புருஷனும் தான் காரணம். என்னமோ எல்லாத்தையும் நான் மட்டும் அழிச்ச மாதிரி பேசுறிங்க?” என்றான் யாதவன்.

“அவரைப் பத்தி பேசுற அருகதை உனக்கு இல்லை யாதவா? என் புருஷன் கடன் பட்டாரு தான் இல்லைன்னு சொல்லலை. எல்லாம் உனக்காக வாங்கித்தான் கடன் பட்டாரு. படம் எடுக்குறேன்னு சொல்லியே அவர் உயிரை எடுத்துட்ட யாதவா” என்றவருக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் எழுந்து சென்று விட்டார்.

ஆரண்யாவிற்கு தான் எதுவும் புரியவில்லை. யாதவன் சரியானவன் இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாக புரிந்தது.

“மேடம் என்ன டீப் திங்க்கிங்ல இருக்கீங்க?” என்று காதோரத்தில் கேட்ட குரலில் பதறி திரும்ப, கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் நின்றிருந்தான் தேவ்.

“நீங்களா?” என்றவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.

“என்னையத் தவிர வேற யார் இவ்வளவு பக்கத்தில் வந்து பேச முடியும்?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அவனின் செய்கையிலும், பேச்சிலும் வாயடைத்து நின்றாள்.

“என்னாச்சு?” என்றான்.

“நேத்து இருந்து நீங்க பேசுற எல்லாமே டிப்ரண்டா பீல் ஆகுது. உங்களுக்கு என்னாச்சுன்னு நான் தான் கேட்கணும்?” என்றாள்.

“எனக்கு பேய் பிடிச்சிருச்சு, காதல் பேய்” என்றவன், அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக,

“என்ன பண்றிங்க? விடுங்க” என்றாள்.

“ஏய்! சைலண்ட்டா வாடி” என்றவன், பூஜை அறைக்கு அழைத்து செல்ல, அவளோ குழம்பினாள்.

“நான் குங்குமம் வச்சு விடணும்னு தான் தினமும் நீ வச்சுக்கிறது இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டவன், அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட, இன்று ஏனோ அவள் மனம் முழுமையாய் உணர்ந்தது.

“இல்ல, நான் மறந்துட்டேன்” என்றாள்.

“இனிமேல் மறக்காத. இல்லைன்னா இப்படித்தான் வச்சுவிட வேண்டியது வரும். நீ ஏன் குங்குமம் வைக்க தயங்கறன்னு யோசிக்க முடியாத அளவுக்கு முட்டாள் இல்லை நான். நிழலை மறந்துட்டு, நிஜத்தை ஏத்துக்க முயற்சி பண்ணு ஆரண்யா” என்றான் முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு.

“நிஜமாவே நான் அப்படி நினைக்கலை” என்றாள்.

“நினைக்காத வரைக்கும் சந்தோசம்” என்றான்.

“காபி” என்றாள்.

“நோ, மார்னிங் எப்பவும் ஜூஸ் தான்” என்றவனை முகத்தை அஷ்ட்ட கோணலாய் வைத்துக் கொண்டு பார்த்தாள்.

“இதென்னடி இப்படி ஒரு பார்வை” என்றான் புரியாமல்.

“காலையில ஸ்ட்ராங்கா காபி குடிக்காத வாழ்க்கை எல்லாம் என்ன வாழ்க்கை” என்றாள்.

“அப்படின்ற? ஓகே குடு” என்றான்.

அவள் சூடாய் எடுத்துக் கொண்டு வந்து தர,

“நைஸ் அரோமா” என்று குடித்தவன்,

“காபி நல்லா இருக்கு. ஆனா சுகர் தான் கம்மியா இருக்கு” என்றான்.

“இதெல்லாம் நாங்க ஏற்கனவே பார்த்தாச்சு. இப்போ நான் குடிச்சுட்டு குடுத்தா சுகர் கூடி இருக்கும் அப்படித்தான?” என்றாள் இடக்காய்.

“ஓவரா சினிமா பார்ப்பியோ” என்றான் சிரிப்புடன்.

“இல்லையே” என்றவளை இழுத்து அவள் வாயில் காபியை ஊற்ற, நிஜமாகவே இனிப்பு குறைவாகத்தான் இருந்தது.

“இப்போ நம்புறியா?” என்றான் சிரிப்புடன்.

“லைட்டா கம்மியா தான் இருக்கு” என்று ஒத்துக் கொண்டாள்.

அவர்களின் நெருக்கத்தைப் பார்த்து கண்களில் அனலைக் கொட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.

“ஆரா” என்ற மித்ராவின் குரலில் திரும்பியவள்,

“ஹேய் மித்ரா, வாடி” என்று வேகமாய் எழுந்து செல்ல முற்பட்டாள்.

சட்டென்று அவள் கையைப் பிடித்து தேவ் இழுக்க, அவன் அருகிலேயே பொத்தென்று அமர்ந்தாள் ஆரா.

“வாங்க மித்ரா” என்றான் சத்ய ஜெயதேவ்.

“என்னைய ஏன் நீ பிக்கப் பண்ண வரலை?  நான் வர்றதுக்குள்ள இவ்வளவு அவசரமா மேரேஜ் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றவளின் கேள்விகளில் ஆரண்யா திணற, தேவ்வின் கண்களோ அவளை கூர்மையுடன் எடை போட்டது.

அவர்கள் இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த மித்ராவிற்கு மனதிற்குள் காந்தியது. வெளியே காட்டாமல் சமாளித்தாள்.

“இல்ல மித்ரா அது வந்து” என்று ஆரா இழுக்க,

“ஆராவுக்கு மேரேஜ் சீக்கிரம் நடந்தது பிரச்சனையா? இல்லை மேரேஜ் நடந்ததே பிரச்சனையா மிஸ். மித்ரா?” என்றான் தேவ். கால்மேல் கால் போட்டு அவன் அமர்ந்திருந்த தோரணையும், கண்களில் தெரிந்த தீவிரமும் அவனிடம் பார்த்து பேச வேண்டும் என்ற அறிவுரையை மித்ராவிற்கு வழங்கியது.

“அப்படி இல்லை சார். ஆரா, என்னோட பெஸ்ட் பிரண்ட். என்கிட்டே கூட ஒரு வார்த்தை சொல்லலை. அந்த ஆதங்கம் தான் எனக்கு. மத்தபடி அவ சந்தோசம் தான் என்னோட சந்தோசம்” என்றாள் மித்ரா.

“என்ன சாப்பிடுற மித்ரா?” என்றாள் ஆரா உபசரிப்பாய்.

“ஒன்னும் வேண்டாம் ஆரா” என்று அவள் மறுக்க,

“இரு, நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று சென்றாள் ஆரா. செல்லும் அவளையே மித்ரா பார்த்துக் கொண்டிருக்க, எதுவோ சரியில்லை என்று தோன்றியது தேவ்விற்கு.

“என்னாச்சு மித்ரா? ஏன் ஆராவையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குறிங்க?” என்றான்.

“உங்களுக்கு பெரிய மனசு சார். அவளுக்கு மேரேஜ் ஆகி ஹஸ்பண்ட் இறந்தது தெரிஞ்சும் அவளுக்கு வாழ்க்கை குடுத்திருக்கிங்களே” என்றாள். அவனுக்கு எதுவும் தெரியாது என்று அவள் பேச ஆரம்பிக்க, இப்போது தேவ்வின் பார்வை இன்னமும் கூர்மையாகியது.

“அதனாலென்ன மித்ரா? எனக்கு அவளைப் பிடிச்சிருந்தது. தட்ஸ் ஆல்” என்றான் வேண்டுமென்றே.

‘பெரிய இவன் மாதிரி பேசுறான். இவன் தான் ஜெய்ன்னு எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்ன்னு இவனுக்குத் தெரியாது. இவனைப் பத்தி இவன்கிட்டையே பேசவும் முடியாது’ என்று தனக்குள் எண்ணியவள்,

“ஆரா இவனை விட்டு இன்னொருத்தனை மேரேஜ் பண்ணான்னு இவன் நம்புற வரைக்கும் பிரச்சனையில்லை. ஒருவேளை முன்னால் காதலி விதவைன்னு நினைச்சு வாழ்க்கை குடுத்திருப்பானோ?” என்று எண்ணியவளுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன யோசிக்கிறிங்க மித்ரா?” என்றான்.

“இல்லை, உங்களைப் பார்த்தா ரொம்ப பரீட்சியமானவர் போல இருக்கு” என்று நூல் விட்டு பார்த்தாள்.

“என்னைத்தான் எல்லாருக்கும் தெரியுமே? சத்ய தேவ்வை தெரியாதவங்க இருக்க முடியுமா?” என்று அவனும் பதிலுக்கு நூல் விட்டுப் பார்த்தான்.

“அதுவும் சரித்தான் சார்” என்றாள் மித்ரா.

அதற்குள் ஆரா காபியுடன் வர,

“உன்னோட காபியை ரொம்ப மிஸ் பண்ணேன்டி” என்றவள் அதை வாங்கியபடி, ஆராவை தன்னருகே அமர வைக்க முயல,

“ஆரா இங்க வா” என்றான் தேவ்.

“என்னாச்சு?” என்றாள்.

“இங்க வாடி” என்றான் மீண்டும். அவனை முறைத்தவள் அவன் அருகில் சென்று அமர,

“நீ அனுப்பியிருந்த டிசைன் ரொம்ப அழகா இருந்தது ஆரா. யாரோட ஆர்டர் அது?” என்றாள் மித்ரா.

“அது எனக்குத் தான்  மித்ரா. நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்குன்னு சொன்னார்” என்றாள் தயங்கியபடி.

“பார்ட்டியா? அதெல்லாம் உனக்குப் பழக்கம் இல்லையே” என்றாள் மித்ரா பட்டென்று.

“இனிமேல் பழகிக்குவா மிஸ். மித்ரா” என்றான் தேவ்.

மித்ரா அவனை யோசனையுடன் பார்க்க, அவனோ முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாய் பார்த்திருந்தான்.