“கதையில இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில்.
“என்ன?” என்றாள் எரிச்சல் கலந்த குரலில்.
“அது” என்று நிறுத்தியவன், அவள் இடையில் கையிட்டு, தன்னோடு இழுத்து அணைத்தவன்,
“என் லவ்வர் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், இப்படி இழுத்து அணைச்சுகிட்டா அப்படியே அவ டென்ஷன் எல்லாம் மறந்து, என்னையே முட்டைக் கண்ணை முழிச்சு பார்த்துட்டு இருப்பா” என்று அவள் காதோரத்தில் கிசுகிசுக்க, அவன் அணைப்பிலும், ஸ்பரிசத்திலும் கிறங்கியவள்,
“மேரேஜ் லைப்பை இந்த பிசிக்கல் இன்டிமசி கூட இல்லாம எப்படி ரன் பண்ண முடியும்” என்றவன் அவன் அணைப்பை இறுக்க,
“விடுங்க பிளீஸ்” என்றாள்.
“ஆரா ப்ளீஸ்டி” என்று கரகரப்பாய் ஒலித்த அவன் குரல் அவளை மேற்கொண்டு எதுவும் பேசவிடவில்லை. அணைத்தவன் ஐந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். அணைப்பில் அகப்பட்டிருந்தவளுக்கோ உறக்கம் எட்டாக்கனியாகி இருந்தது. படபடப்பையும் மீறி ஒரு பாதுகாப்பையும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியடைந்த மனதையும் ஏன் என்று அவள் ஆராயவில்லை. அப்படி ஆராய்ச்சி செய்திருந்தால் உண்மை விளங்கியிருக்குமோ என்னமோ?
காலையில் கண் விழித்த தேவ் கண்டது, குளித்து முடித்து ஊதா நிற சங்குப் பூ நிறத்தில் லினன் காட்டன் புடவை அணிந்து, தலையில் கட்டிய டவலுடன் வந்தவளைத் தான். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.
“இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்க கிளம்பிட்டிங்க ஆரண்யா மேடம்?” என்றான்.
“கீழ ஏதோ பூஜை இருக்குன்னு ஆன்ட்டி வர சொன்னாங்க, உங்களையும் தான்” என்றாள் பட்டும் படாமல்.
“மறுபடியும் முதல்ல இருந்தா?” என்று சலித்தவன்,
ஆமா, இந்த முந்தானையை மடிப்பு வச்சு கட்ற பழக்கம் எல்லாம் இல்லையா?” என்றான் கடுப்புடன்.
“ஏன்?” என்றாள் முறைத்தபடி.
“வேற எந்த மடிப்பும் தெரிய மாட்டேங்குது” என்று அவள் இடுப்புப் பகுதியைப் பார்த்து அவன் குறைபட்டுக் கொள்ள,
“தீவு மாதிரி இருக்குற இந்த வீட்ல வந்து மாட்டிகிட்டேன். எல்லாம் என் தலையெழுத்து” என்று நொந்தபடி கீழே சென்றாள். அவளைப் பார்த்த சிவகாமிக்கு மனம் குளிர்ந்தது.
“அழகா இருக்கம்மா ஆரா” என்றார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவள்,
“என்ன பூஜை ஆன்ட்டி?” என்றாள் புரியாமல்.
“இன்னைக்கு சஷ்டிமா ஆரா. ஓவ்வொரு சஷ்ட்டிக்கும் நான் தான் பூஜை பண்ணுவேன். அந்த முருகனே எனக்கு பேரனா வந்து பிறக்கணும்னு தான். இன்னைக்கு நீ பண்ணுமா” என்றார்.
‘பேரன் பிறக்கனுமா? கல்யாணம் ஆகி மூணு நாள் தான் முழுசா முடிஞ்சிருக்கு. அதுக்குள்ளவா?’ என்று நினைத்தவள் வெளியே கட்டிக் கொள்ளவில்லை.
அவளுக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் தான். வாரிசுக்காக இல்லையென்றாலும், முருகனுக்காக பூஜை செய்தாள். ஹாலில் இருந்த அந்த மிகப் பெரிய பூஜை அறை அவளை ஏற்கனவே கவர்ந்திருந்தது. முதல் நாள் ஏனோ தானோவென்று பார்த்திருந்த அறையை இன்று நிதானமாக, மனம் முழுவதும் பக்தியுடன் பார்க்க, ஏனோ ஆழ்ந்த அமைதி அவளுக்குள்.
கீழே வந்த யாதவன் பூஜை அறை மணி சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அதிகாலை தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, பார்வையை எடுக்க முடியாமல் திண்டாடினான்.
“வா யாதவா?” என்ற சிவகாமியின் குரலில் கலைந்தவன், அவ்வப்போது ஆராவை திருட்டுப் பார்வை பார்க்கவும் தவறவில்லை. ஆரத்தி தட்டை சிவகாமியிடம் காட்ட.. கும்பிட்ட அவர்,
“யாதவனுக்கும் காட்டுமா?” என்றார்.
ஆராவும் அவன் முன் ஆரத்தி தட்டை காட்ட, அவனோ சூட ஜோதியின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்த அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.