அறைக்குள் சென்ற ஆராவிற்கு உணர்வுகள் அடங்க மறுத்தது. கால்களை இறுகக் கட்டி, அதில் முகம் புதைத்திருந்தவளுக்கு, சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர, உடல் நடக்கம் கொண்டது.
‘என்னாச்சு எனக்கு? எதுக்கு இப்படி அவன் முத்தம் குடுக்கும் போது உருகிப் போய் நின்னேன்? ஆகாது ஆகாதுன்னு சொல்லி அவனையே கட்டிப் பிடிச்சு, அவன் கிட்டயே ஆறுதல் தேடி.. என்ன நடக்குது எனக்குள்ள?’ என்ற கேள்விகளுடன் குழம்பித் தவித்தவளுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
‘பிடிக்காமத்தான் அவன் முத்தத்துல உருகிக் கரைஞ்சுட்டு வந்தியா? ஆரம்பத்தில் இருந்து அவன் மேல உனக்கு கோபம் தானே தவிர வெறுப்பு இல்லை. உன் மரமண்டைக்குத் தான் அது புரியலை’ என்றது மனசாட்சி.
“உண்மைதானோ? ஆரம்பத்துல இருந்து தேவ் மேல கோபம் தான் இருந்ததே தவிர வெறுப்பு இல்லையே? என்னையும் மீறி நான் அவன் கூட இயல்பா இருக்கேன். இயல்பா பேசுறேன். சொல்லப் போனா தேவ் பக்கத்துல இருக்கும் போது நான் நானா இருக்கேன். எப்படி அவ்வளவு சீக்கிரம் ஜெய்யை என்னால் மறக்க முடியும். இத்தனை வருஷம் மறக்காத ஜெய்யை இந்த மூணு நாள்ல மறக்க முடியுமா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு, எதுவும் புரியாத நிலை.
‘அந்த கோவில் ரஷ்ஷா இருக்கும். என்னால அங்க வர முடியாது’ என்ற ஜெய்யின் குரலும்,
‘அந்த ஏரியா ரஷ்ஷா இருக்கும். அங்க போக முடியாது’ என்ற தேவ்வின் குரலும் மாற்றி மாற்றி ஒலிப்பதைப் போல் தோன்றியது அவளுக்கு.
கைகளுக்குள் புதைத்திருந்த முகத்தை நிமிர்த்தி தேவ்வைப் பார்த்தாள். பால்கனியில் நின்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனின் பக்கவாட்டுத் தோற்றமும், அவன் நின்றிருந்த விதமும் அவளைக் கவர்ந்தது. திரையில் பார்ப்பதை விட நேரில் கூடுதல் கம்பீரத்துடன் இருந்தான்.
அவள் தன்னைத் தான் பார்க்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், எங்கே அவளைப் பார்த்தால் பார்வையை மாற்றி விடுவாளோ என்று எண்ணியவன், கவனிக்காதவன் போல் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
காதலிப்பது சுகம் என்றால் காதலிக்கப்படுவது வரம் என்றே தோன்றியது அவனுக்கு. அதிலும் அவன் மீதான ஆராவின் காதலில் அவனே வியந்து தான் போனான். இத்தனை நாட்கள் அவன் தவித்த தவிப்பை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்திருந்தாள். இன்னமும் ஜெய்யை அவள் உணர்கிறாள் என்றதில் வந்த ஆனந்தம் அவனுக்கு. தன் இருப்பை, தன்னை, தன் நேசத்தை அவள் உணர்கிறாள் என்று உணர்ந்தவனுக்கு அப்படியே மனம் லேசாகிப் பறப்பதைப் போன்ற உணர்வு.
‘நான் தான் ஜெய்ன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவா? சட்டையைப் பிடிப்பாளா? சண்டை போடுவாளா? அக்சப்ட் பண்ணிப்பாளா?’ போன்ற பல கேள்விகள் அவனுக்குள்ளும் இருந்தது.
ஒன்று மட்டும் உறுதியாக புரிந்தது அவனுக்கு. அவளின் இத்தனை வருட தவிப்பையும் அவ்வளவு எளிதாக அவள் வெளிப்படுத்திவிட மாட்டாள் என்பது தான் அது.
அவன் உள்ளே வருவது தெரிந்ததும் பார்வையை மாற்றிக் கொண்டாள் ஆரா.
“தூங்கலையா ஆரண்யா?” என்றான் வேண்டுமென்றே.
“தூங்கனும்” என்றாள்.
“தூங்குறப்போ கூட இந்த சேரியை மாத்திக்க மாட்டியா?” என்றான் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு இதுவே கம்பர்ட்டபிளா இருக்கு” என்றாள் வெடுக்கென்று.
“எனக்கென்ன பிரச்சனை இருக்கப் போகுது. இப்படி ஒன் புளோட்டிங் விட்டு சேரி கட்டி, அதையே பெட்ஷீட் மாதிரி போர்த்தி தூங்குறதுக்கு நீ பெட்ஷீட்டையே போர்த்தி தூங்கலாமே?” என்றான்.
அவள் அவனை முறைக்க, நமட்டு சிரிப்பு சிரித்தவன்,
“நான் டேரக்டர்மா. எத்தனை படத்துல இந்த சீன் எடுத்திருக்கேன். புடவைன்னு ஒன்னு கட்டியிருந்தா, தூங்கும் போது கொஞ்சமாவது விலகனும். அப்பத்தான் அந்த புடவைக்கே மதிப்பு. இங்க என்னடான்னா இன்ச் கூட நகர மாட்டேங்குது?” என்றான் அவளை மார்க்கமாய் பார்த்தபடி.
“கண்ணை நோண்டிருவேன்” என்றாள் முறைத்தபடி.
“பாருங்கப்பா” என்றவன், அவளுக்கு அருகில் அமர,
“இப்ப என் பக்கத்துல எதுக்கு வரீங்க?” என்றாள் சற்று நகர்ந்தபடி.
“அப்படியே இன்னும் கொஞ்சம் நகர்ந்து போய் தூங்கு. எனக்குத் தூக்கம் வருது” என்றவன் கட்டிலில் படுக்கப் போக, அரண்டாள் ஆரா.
“என்ன பண்றிங்க? சோபாவுல தான தூங்குவிங்க? இன்னைக்கு என்ன புதுசா?” என்றாள் அவனை மேலும் கீழும் பார்த்தபடி.
“அது உன்னோட கதையெல்லாம் தெரியறதுக்கு முன்னாடி. ஏற்கனவே வாழ்க்கையில அடிப்பட்ட பொண்ணை நம்மளும் காயப்படுத்த வேண்டாமேன்னு கொஞ்சம் விலகி இருந்தேன். அதான் இப்ப எல்லாம் தெரிஞ்சிடுச்சே, இனி இங்க தான் தூங்குவேன்” என்று அவன் சொல்ல, அவள் முழித்த முழியில் அவனுக்குத் தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
“ஆமா..! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவ உன்னை மாதிரி சிடுமூஞ்சி எல்லாம் கிடையாது. அவ ஒரு ஏஞ்சல் மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா அம்சமா, தள தளன்னு தக்காளிப் பழம் போல இருப்பா. ரொம்ப ஸ்வீட். நான் இப்படி கையைப் பிடிச்சாலே போதும், அவளுக்குப் பேச்சே வராது.” என்றவன் அவள் கையைப் பிடிக்க, ஆராவோ ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எவ்வளவு கோபமா இருந்தாலும், நான் பக்கத்துல போய் இப்படி கையை கோர்த்துகிட்டாலே போதும், அப்படியே அவ கோபமெல்லாம் காத்துல பறக்குற பட்டம் மாதிரி சடன்னா பறந்து போயிடும்” என்றவன் அவள் கைகளை தன்னுடன் கோர்த்து கொள்ள, ஆராவின் விழிகளோ விரிந்ததில் இருந்து விலகவேயில்லை.
“இப்படி முட்டைக் கண்ணை முழிச்சுப் பார்க்கும் போது, அப்படியே இழுத்து வச்சு ஒரு டீப்பா ஒரு கிஸ் அடிச்சாலே போதும், அப்படியே எனக்குள்ள உருகிடுவா” என்றவனின் இதழ்கள் அவளின் இதழ்களை சிறை செய்து பூட்டியிருக்க, அவள் இதழ் சுவையில் அவளின் இதழ்களை தத்தெடுத்து, அதில் முத்தெடுத்திருந்தான்.
நீண்ட முத்தத்திற்கு ஏங்கியவன், அவள் மூச்சிற்கு ஏங்குவது தெரிந்ததும் வேறு வழியின்றி பூட்டிய இதழ்களை விடுவித்தான். அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளில் தன்னைத் தொலைத்தவன்,
“ஆனா என்ன? லவ் பண்ற காலத்துல இப்படி டீப்பா ஒரு முத்தம் கூட குடுத்ததில்லை. சைவக் காதலாவே போய்டுச்சு. அந்த அளவுக்கு நான் அக்மார்க் நல்ல பையனா இருந்திருக்கேன்” என்றவனின் பேச்சில் அவனை முறைத்தவள், அவனுக்கு முகம் காட்டாமல் மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
“நான் இன்னமும் கதையை முடிக்கலை ஆரண்யா” என்றான் வேண்டுமென்றே.
“எந்த கதையையும் நான் கேட்க வேண்டாம்” என்று திரும்பாமல் பதில் சொன்னவளின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
‘இவன் என்னென்னமோ பேசி என்னை மயக்கப் பார்க்குறான். இன்னைக்கு இவன் சரியில்லை. ரெண்டு நாளா இருந்த தேவ் இவன் இல்லை. என்னமோ ஒன்னு வித்யாசமா இருக்கு’ என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் காதருகில் கேட்டது அவன் குரல்.
“நான் இங்கயே தூங்கட்டுமா?” என்றவன் உதடுகள் அவள் காதுகளை உரச, சிலிர்த்த தன் உணர்வுகளையும் உடலையும் வெறுத்தவள் சட்டென்று எழுந்தாள்.