அத்யாயம் 12:

தேவ் மீண்டும் சென்னை வர நேரம் இரவை நெருங்கியிருந்தது. உடலும் உள்ளமும் உடனே ஆராவின் தரிசனத்திற்கு ஏங்க, மனதை அடக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கிப் போய் வந்தான் தேவ்.

“யார்கிட்டயும் எதுவும் சொல்லாம எங்க போன தேவ்?” என்றான் யாதவன்.

“முக்கியமான வேலையா வெளிய போயிருந்தேன். எனி பிராப்ளம்?” என்றான் கேள்வியாய்.

“எனக்கென்ன பிராப்ளம்? அடுத்த ஷூட்டிங் போற பிளான் இருக்கா இல்லையா?” என்றான் யாதவன்.

“நான் ஆல்ரெடி சொன்னது தான். புது ப்ராஜெக்ட் எல்லாம் ஒன் மந்த் கழிச்சு தான். சோ நீ வொர்ரி பண்ணிக்காத யாதவ்” என்றான் தேவ்.

“ஏன் அவ்வளவு நாளை வேஸ்ட் பண்ணனும்? அதுவரைக்கும் என்ன பண்ண போற?” என்றான் யாதவன்.

“நீ மேரேஜ் முடிச்சு த்ரீ மந்த்ஸ் என்ன பண்ணியோ அதைத் தான் பண்ண போறேன். விளக்கம் போதுமா?” என்றவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் யாதவ்.

“ஆராவையும் கீழ வர சொல்லுப்பா. சாப்பிட்டு போவிங்க” என்று சிவகாமி சொல்ல,

“நீங்க மேலயே குடுத்து விட்ருங்கம்மா. நாங்க அங்கயே டின்னர் முடிச்சுக்கிறோம்” என்றான்.

“இதென்ன புதுப் பழக்கம். நம்ம வீட்ல எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடனும். இது அம்மாவோட ரூல். அதை மறந்துட்டு பேசுற?” என்றான் யாதவன் கடுப்பாக. அவனுக்கு ஆராவைப் பார்க்க முடியாமல் போகுமோ என்ற கவலை.

“ஒரு நாள் ரூல்ஸ பிரேக் பண்றதால ஒன்னும் ஆகிடாது” என்றவன்,

“மாம், ஐ பீல் சோ டயர்ட். சோ பிளீஸ் டின்னர் மேல அனுப்பிடுங்க” என்றான்.

“நீ போய் ரெஸ்ட் எடுப்பா. நான் அனுப்பிடுறேன்” என்று சிவகாமி சொல்ல, யாதவுக்குத் தான் எரிச்சலாய் வந்தது.

“புது மருமகளுக்கு சாப்பாடு எல்லாம் மேல போகுது போல ஆன்ட்டி. எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன். உங்க ஊர் பக்கத்துல இருந்து பொண்ணைக் கட்டிட்டு வந்தா, வீட்டோட மருமகளா இருப்பான்னு நீங்க நினைச்சிங்க. அவ என்னடான்னா பிஸ்னஸ் பண்றேன், என்னால வீட்ல எல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டா. இதுக்கு நீங்க என் தங்கச்சியவே தேவ்க்கு முடிச்சிருந்திருக்கலாம்.” என்றாள் நக்கலாய்.

“நீ கூடத்தான் சாரு, கல்யாணத்துக்கு அப்பறம் நடிக்க மாட்டேன்னு சொன்ன. ஆனா, இப்ப நடிக்காமையா இருக்க? ஆரா போகப் போக புரிஞ்சு நடந்துப்பா” என்றார் சிவகாமி.

“அதானே! அவளைப் பத்தி ஒன்னு சொல்லிடக் கூடாதே” என்ற சாரு நிவேதாவிற்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

பொறுமையின்றி மேலே சென்ற தேவ் கண்டது என்னவோ ஹாலில் அமர்ந்து மும்பாரமாய் வேலை செய்து கொண்டிருந்த ஆராவைத்தான். தேவ் வந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை. அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளை சட்டென்று நெருங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அவனுக்குள் குடைந்து கொண்டிருக்க, அவளை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவன், அமைதியாய் அறைக்குள் சென்று தன் மன உணர்வுகளை கட்டுப்படுத்த போராடினான். குளித்து முடித்து ரெப்ரஷாகி வந்தவனுக்கு அப்போதும்  அவனை அடக்க முடியவில்லை.

ஆறு வருடங்களாக அவன் ஓடிய ஓட்டமும், உழைத்த உழைப்பும் தன்னைப் பார்த்து சிரிப்பதை போன்று தோன்றியது அவனுக்கு. அவளை துரோகி என்று குற்றம் சாட்டிய மனம் இன்று அவனை செருப்பால் அடித்துக் கொண்டிருந்தது. அவள் தன்னை மறந்துவிட்டாள் என்று என்று எண்ணிய எண்ணங்கள் இன்று அவனை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது.  அவளைப் பார்க்க துடியாய் துடித்த மனம், அவளைக் கண்டவுடன் குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தது.

அத்தனை வேதனைகள், குற்ற உணர்ச்சிகள் அனைத்தையும் தான்டி அவன் மனம் ஏதோ ஒரு மூலையில் நிம்மதியாய் உணர்ந்தது. அவனுடைய ஆரண்யா, அவனைப் போலவே அவளும்,அவனுக்காகவே இருந்திருக்கிறாள், வாழ்ந்திருக்கிறாள் என்ற விஷயமே அந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம்.

‘எது எப்படி இருந்தா என்ன? அவ எனக்கானவ. விதி அவளை என்கூடவே சேர்த்திடுச்சு. இனி ஒரு தடவை அவளை மிஸ் பண்ணவே மாட்டேன்’என்று எண்ணிக் கொண்டவனுக்கு, கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.

வெளியே வந்தவன், அவள் அருகில் செல்ல, அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆரா.

“எப்போ வந்திங்க ” என்றாள்  இயல்பாய்.

“நான் வந்து ஹாப்னார் ஆச்சு” என்றான் அவளையே பார்த்தபடி உள்ளார்ந்த குரலில்.

அவன் குரலில் ஏதோ ஒன்றை உணர்ந்தவள்,சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.

“சாரி நான் கவனிக்கலை” என்றாள் மீண்டும் மேக் புக்கை பார்த்தபடி.

“நானும் தான் இத்தனை நாள் சரியா கவனிக்கலை” என்றான் தேவ் அவளை மேலும் கீழும் பார்த்தபடி.

“என்ன கவனிக்கல?” என்றாள் புரியாத பார்வையுடன். அவள் அருகில் அமர்ந்தவன், கையில் இருந்த மேக் புக்கை வாங்கி, அதை தள்ளி வைத்தான்.

“என்ன?” என்றாள் யோசனையுடன்.

“இப் யு டோன்ட் மைன்ட் பிளீஸ்” என்றவன், அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவனின் செயலில் விதிர்விதிர்த்தவள்,

“என்ன பண்றிங்க சத்யா?” என்றவள் அவனை விட்டு விலகப் போக,

அவள் கண்ணை நேருக்கு நேராக பார்த்தவன்,

“ஆரா பிளீஸ்டி ஒரு பத்து நிமிஷம் எதுவும் பேசாத” என்றான்.

‘ப்ளீஸ்டி ஆரா” என்ற ஜெய்யின் குரலே அவள் காதுக்குள் ஒலித்தது. சட்டென்று மீண்டவள்,

“ஆரான்னு கூப்பிடாதிங்க. எப்பவும் போல ஆரண்யான்னே கூப்பிடுங்க” என்றாள்.

அவளைப் ஆழ்ந்து பார்த்தவன்,“எனக்கு ரொம்ப ஹெட் ஏக்கா இருக்கு. கொஞ்சம் தலையை பிடிச்சு விட முடியுமா?” என்றான்.

அவள் ஏதோ சொல்லப் போக,

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது. பட் பிளீஸ்” என்றவனின் குரலில் அவள் தலை தானாக ஆடியது.

“தேங்க்ஸ்” என்றவன் அவளை இடையோடு கட்டிக் கொள்ள, பட்டென்று அவனின் கைகளை விலக்கினாள் ஆரா. அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருக்க,

“என்ன பண்ற நீ. கையை எடு சத்யா” என்றவள்  நெளிந்து கொண்டே விலக முற்பட,

“ஆரா ப்ளீஸ்டி” என்றவனின் கண்ணீர் அவள் வயிற்றுப் பகுதியில் ஈரத்தை உணர வைக்க, அவளுக்குத் தான் ஏதோ மாதிரி இருந்தது.

“ஏதாவது பிராப்ளமா?” என்றவளின் குரல் ஏனோ அதிக சத்தமின்றி ஒலித்தது.

“எஸ்..! ஐ நீட் யுவர் ஹேண்ட்ஸ்” என்றவன், அவளின் கையை எடுத்து தலையை கோதச் செய்ய, அவளின் கரமோ நடுக்கம் கண்டது.

“இது ஹால்” என்றாள் பிசிறிய குரலில்.

“இங்க என்னோட பெர்மிஷன் இல்லாம யாரும் வர முடியாது ஆரா” என்றான்.

“நீங்க என்கிட்ட என்ன ட்ரை பண்றிங்க?” என்றாள் அமைதியாய்.

சட்டென்று அவளை விட்டு எழுந்தவன்,”சாரி” என்றதோடு அறைக்குள் சென்று விட்டான்.

அவளோ செல்லும் அவனையே விக்கித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘பாவம் அவனுக்கு ஏதோ பிரச்சனை. தலையை பிடிச்சு விடுறதுல என்ன ஆகிடப் போகுது? நீ ரொம்ப ஓவரா பண்ற ஆரா’ என்று அவள் மனம் அவளை இடிந்துரைக்க,

‘இவர் என் பக்கத்துல வந்தாலே எனக்கு என்னமோ மாதிரி பீல் ஆகுது. ரொம்ப நாள் பழகின மாதிரி’ என்று நினைத்தவளுக்கு, அவனின் சோர்ந்த முகமும், கலங்கிய கண்களும் ஞாபகத்திற்கு வர, அவனை நோக்கி செல்ல முற்பட்ட கால்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தினாள்.

‘பக்கம் பக்கமா டயலாக் எல்லாம் பேசின? இப்போ புருஷன் முகம் கொஞ்சம் வாடுன உடனே உன்னால பொறுக்க முடியலையோ?” என்று அவளின் மனசாட்சி அவளை கிண்டல் அடித்தது.

அவன் அருகில் வரும் போது ஜெய்யின் நினைவும் சேர்ந்து வருவதை தடுக்க முடியாமல் திண்டாடினாள்.

‘பிடிக்குதோ பிடிக்கலையோ நீ இப்போ சத்ய தேவ் கையால தாலி வாங்கியிருக்க. அவனை மறக்க முடியாம இருக்குறவ எதுக்கு இவனை கல்யாணம் பண்ணனும். சும்மா அவன் மேலயே பழியை போடாத. உன்னை யாரும் கையைக் காலை கட்டி அவனுக்கு கட்டி வைக்கலை. இத்தனை நாள் இருந்த வைராக்கியத்தோட இப்பவும் இருந்திருக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு ஏதோ பெரிய இவ ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க?’ என்று ஒரு மனம் அவளுக்கு புத்தி சொல்ல, தன்னைக் குறித்தே சுய அலசலில் ஈடு பட்டாள்.