“நோ..! அது சரியா வராது. நான் நடந்த எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்லி இந்த சம்பந்தத்தை நிறுத்த ட்ரை பண்றேன்” என்றாள் ஆரா.
“அதுக்கு மேல உன்னோட விருப்பம். ஆனா, உன்னோட பாட்டி அவ்வளவு சீக்கிரம் நீ சொல்றதை ஏத்துப்பாங்கன்னு மட்டும் நினைக்காத” என்றாள் மித்ரா.
அதே நேரம் அங்கே ஓடிக் கொண்டிருந்த டிவியில் பிளாஷ் நியூஸ் போய் கொண்டிருந்தது.
‘வெளிநாட்டில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் நடிகர் சத்ய தேவ்’ என்று அவனின் புகைப்படத்துடன் நியூஸ் போய் கொண்டிருக்க, டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள் ஆரண்யா. அவளையும் டிவியையும் மாத்தி மாத்தி பார்த்த மித்ராவிற்கு உள்ளுக்குள் ஏதோ உருள,
“என்னாச்சு ஆரா? ஏன் இப்படி பார்த்துட்டு இருக்க?” என்றாள் திணறிய குரலுடன்.
“மித்ரா எனக்கு என்னவோ இந்த ஆக்டரை பார்த்தா ஜெய் மாதிரியே தோணுது. உனக்கும் அப்படி தோணுதா?” என்றாள் ஆரா.
“எனக்குத் தோணலை. உனக்கு ஏன் அப்படி தோணுது. நீதான் ஜெய் முகத்தை முழுசா பார்த்ததில்லையே?” என்றாள் மித்ரா.
“உண்மை தான். என்னவோ தெரியலை எனக்கு அப்படி தோணுது” என்றாள் ஆரா.
“உனக்கே காமெடியா தெரியலை? ஆக்டர் சத்ய தேவ் எங்க? சாதாரண கண்டக்டர் ஜெய் எங்க? நடக்குற பிரச்சனையில உனக்கு ஜெய் பைத்தியம் முத்திடுச்சு. அதான் யாரைப் பார்த்தாலும் அவனைப் பார்த்த மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு இருக்க. இது நல்லதுக்கு இல்லை ஆரா. உனக்கு புரியுதா புரியலையா? நீ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர? நீயா பேசிட்டு இருக்க? நீயா அழுதுட்டு இருக்க?சில சமயம் சோகமா இருக்க? சில சமயம் கோபமா இருக்க” என்று மித்ரா முடிக்கும் முன்,
“மொத்ததுல நான் ஒரு பைத்தியமா இருக்கேன்னு நீ நேராவே சொல்லிடு மித்ரா” என்றாள் விரக்தி புன்னகையுடன்.
“நான் அப்படி சொல்ல வரலைடி” என்றாள் மித்ரா.
“இனி எப்படியும் சொல்ல வேண்டாம் மித்ரா. இதைப் பத்தி பேசவே வேண்டாம். எனக்கு அதுல விருப்பமும் இல்லை. நீ சொன்ன மாதிரி இப்படியே போனா நான் சீக்கிரம் பைத்தியம் ஆனா கூட ஆச்சர்யம் இல்லை. ஜெய் வந்தாலும் வரலைன்னாலும்,அவரைத் தாண்டி எனக்கொரு லைப் வேண்டாம். நீ அவரைப் பத்தி பேசவும் வேண்டாம். வேலையைப் பார்ப்போமா?” என்றாள் பட்டென்று ஆரா.
“இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றவங்க கிட்ட என்ன சொல்ல போற?” என்றாள் மித்ரா மீண்டும்.
“மித்ரா பிளீஸ்..! அதை வீட்ல போய் பார்த்துக்கலாம், இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம்.” என்றாள் உறுதியாக.
அவளின் உறுதி கண்டு மித்ராவே திகைத்துப் போனாள்.
உணர்வு:
கட்டிலில் தலை சாய்த்து அமர்ந்திருந்த சத்ய தேவ்விற்குள் கேள்விகள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தன. ஆரண்யா உதிர்த்திருந்த ‘ஜெய்’ என்ற பெயரும், அதற்கு பிறகு அவள் உதிர்த்த வார்த்தைகளும் தான் அவனின் இந்த குழப்பத்திற்கு காரணம்.
‘நிஜமாவே இவளுக்கு நான் யாருன்னு தெரியலையா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறாளா?’ என்று யோசித்தவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.
கடந்து போன ஆறு வருடங்களில் அவன் அனுபவித்த வேதனையும், ரணங்களும் மொத்தமாய் இன்று அவனைத் தாக்கியிருக்க, நிம்மதியின்றி தவித்தான் தேவ்.
கோபத்தில், தன்னை தவிர்க்க, தன்னை தெரியாததைப் போல் நடிக்கிறாள் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க, அவள் நடந்து கொள்வது அனைத்தும் அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது.
‘உன்னைய மறந்துட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணத் தெரிஞ்ச அவளுக்கு, உன்கிட்ட நடிக்கிறது என்ன பெரிய விஷயமா?’ என்றது மூளை.
“கண்டிப்பா அவ நடிக்கலை” என்றான் மனதிடம்.
“உனக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போனவளை இன்னமும் நல்லவன்னு நம்பிட்டு இருக்க. ஏன் நம்ப மாட்ட? காதலி புருஷனை இழந்து விதவையா இருக்கான்னு தெரிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தவன் தான நீ” என்று ஒரு மனம் அவனை நக்கலடித்தது.
பழைய நினைவுகளும், குழப்பங்களும், அழுத்தங்களும் அவனை நிம்மதியிழக்கச் செய்ய, தலையில் கை வைத்தபடி கண் மூடியிருந்தவனை மீட்டது ஆராவின் குரல்.
அவளின் குரலில் கண் திறந்தவன் அவளை அமைதியாய் பார்க்க,
“உங்க ட்ரெஸ்க்கு இந்த பேர்ட்டன், கலர் எல்லாம் ஓகே வான்னு பார்த்து சொல்லுங்க மிஸ்டர். சத்யா” என்றாள் தன் மேக் புக்கை காட்டி. அவள் கவனம் திரையில் இருக்க, அவன் பார்ப்பதை அறியவில்லை அவள்.
“பார்த்துட்டு சொல்லுங்க” என்று நிமிர்ந்தவள் அப்போது தான் அவனைப் பார்த்தாள்.
“என்னாச்சு?” என்றாள் புரியாமல். அவன் எதுவும் பேசாமல் இருக்க,
“உங்களைத்தான் மிஸ்டர். சத்யா” என்றாள் மீண்டும் அழுத்தமாய்.
“அதெல்லாம் நான் பார்க்கனும்னு அவசியம் இல்லை. உனக்கு எது ஓகேன்னு தோணுதோ அதையே பண்ணிடு” என்றான் ஆழ்ந்த குரலில்.
“அதெப்படி பார்க்காம பைனல் பண்ணுவிங்க? பார்த்துட்டா உங்களுக்கும் சேட்டிஸ்பேக்ஷனா இருக்கும்ல. அதுமட்டுமில்லாம கஸ்ட்டமர் டேஸ்ட் தெரியாம நான் எப்படி டிசைன் பண்ண முடியும்?” என்றாள் கேள்வியாய்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு அவளின் பதில் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. அவளின் முகத்தை ஒரு கையால் இறுகப்பற்றி தன் அருகே இழுத்தவன்,
“என் வாழ்க்கையில நிறைய விஷயம் பார்க்காமத்தான் நடந்திருக்கு. அப்பறம், நான் செலக்ட் பண்ணி நீ முடிச்சுக் குடுக்க, நான் ஒன்னும் உன் கஸ்டமர் கிடையாது. நான் உன்னோட புருஷன். அது எப்பவும் மறக்கக் கூடாது உனக்கு. மைன்ட் இட்.” என்று அவளை உதற, சில நொடிகள் தடுமாறி சுவற்றைப் பிடித்து, அதோடு சாய்ந்து நின்றாள் ஆரண்யா.
அவனை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவள்,
“உனக்குப் புரியுதா புரியலையா?நீ என்னை கட்டாயப்படுத்தி, என் பேமிலியை வச்சு கார்னர் பண்ணி மேரேஜ் பண்ணியிருக்க. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணலாம். காதல் பண்ண முடியாது மிஸ்டர் சத்யா? நான் அமைதியா இருக்கேன்றதுக்காக இப்படியே இருப்பேன்னு அர்த்தம் கிடையாது. நீங்க இப்போ செலக்ட் பண்ணி சொன்னாதான் டைம்க்கு ஸ்டிச்சிங் முடிக்க முடியும்” என்றாள் வரவழைத்த நிதானத்துடன்.
“அந்த வார்த்தைக்கு என் அளவுக்கு வேற யாரும் அர்த்தம் தேடியிருக்க மாட்டாங்க” என்றாள் விரக்தியாய்.
“எல்லாமே நடிப்பு” என்றான் தேவ் கோபமாக.
“நீங்க ஒரு ஆக்ட்டர். உங்களுக்குத் தான் நடிப்பெல்லாம் கை வந்த கலை. எனக்கு இல்லை.” என்று கோபத்துடன் கூறியவள், அங்கிருந்து செல்ல முற்பட, அவளின் கையைப் பிடித்தான் தேவ்.
“என்ன?” என்பதைப் போல் பார்த்து வைத்தாள் ஆரண்யா.
“சாரி ஏதோ டென்ஷன்ல இருந்தேன்” என்றான் தேவ்.
“யாருடா நீ?” என்பதைப் போல் பார்த்திருந்தாள் ஆரா. அவ்வளவு கோபத்தில் இருந்தவன் சட்டென்று எப்படி உடனே மாறி இப்படி அமைதியாக பேச முடியும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“குடு ஆரண்யா. நான் பார்க்குறேன்” என்றவன், அவள் மேக் புக்கை வாங்க, புரியாத பாவனையுடன் அவனிடம் நீட்டினாள்.
அவள் காட்டிய பேட்டன், கலர் அனைத்தும் அவனுக்கு திருப்தியாய் இருக்க,
“ரெண்டு பேர் ட்ரஸ்லையும் ஒரு யுனிக்நஸ் கொண்டுட்டு வரணும். சேம் கலர் இல்லைன்னா வேற மாதிரி ஐடியானாலும் ஓகே தான்” என்றான்.
“சாரி டூ சே. நான் பார்ட்டி டைப் மார்டன் டிரஸ் எல்லாம் வியர் பண்றது இல்லை. எனக்கு எப்பவும் சேரி இல்லைன்னா சல்வார் தான். சோ, நான் பார்ட்டிக்கு வர்றதே பெரிசு. அதுல யுனிக்நஸ் எல்லாம் எதிர்பார்க்காதிங்க” என்றாள் எரிச்சலுடன்.
“லுக் ஆரண்யா. நான் உன்னை டிசைன் பண்ண சொல்லலை. நான் ரக்சனா கிட்ட தான் சொன்னது. நீயா தான் பண்றேன்னு சொன்ன. நீயா தான் வந்து என்னோட ஒப்பீனியன் கேட்ட. நானும் சொன்னா, இப்போ இப்படி பேசுற?என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்றான் கோபத்தை அடக்கி.
“நான் உங்க டிரஸ்க்கு தான் ஒப்பீனியன் கேட்டேன். என்னோடதுக்கு இல்லை. அதை சொல்ற ரைட்ஸ் உங்களுக்கு இல்லை ரைட்” என்றாள்.