நான் உன் நிறையன்றோ!..

16

கபாலிக்கு எந்த வகையிலும் தான் தவறானவன்.. என உணரவில்லை. அடுத்தவர்களும் அப்படி உணர கூடாது என அந்த விருந்து முழுவதும்.. வசீகரனையும் தன் மனையாளையும் சுற்றியே நின்றான், கவனித்தான். இயல்பாய் இருக்கிறேன் என சொல்லி.. நிறைய வெறுப்பேற்றினான். அதில் மயூராவின் முகமும் வசீகரனின் முகமும் ஒவ்வாமையை  காட்டியது.

கபாலி, தன் அக்காவிற்கும் மாமாவிற்கும்.. ஹனிமூன் ட்ரிப்க்காக பாக்ஏஜ் எடுத்திருந்தான்.. அதனை பேசுவதற்காக அந்த ஏஜென்ட் வந்திருந்தார். கபாலி தன் அக்கா மாமாவை அழைத்து ‘வந்திருப்பவர் பற்றி சொல்லி.. அவரிடம் கேளுங்கள்.. விவரம் சொல்லுவார்.. இருவரும் பேசி  சொல்லுங்கள், எங்கே போகிறீர்கள் எப்போது.. என, முடிவெடுத்து சொல்லிடுங்க..’ என இருவரையும் அந்த ஏஜென்ட் முன் அமர வைத்து சென்றான். 

ஜெயந்தினி இதை எதிர்பார்க்கவில்லை.. தன் தம்பி இவ்வளவு யோசிப்பானா எங்களுக்காக எனத்தான் தோன்றியது தமக்கைக்கு. அவன்மேல் கோவம் இருந்தது முன்பு.. திருமண நாட்கள் நெருங்க நெருங்க.. அது குறைந்து. திருமணம் முடிந்ததும், ஜெயந்தினிக்கு தன் தம்பி செய்த தவறு மறந்தே போனது. அதிலும் இந்த செய்கையில், தன் தம்பி கபாலிமேல், உயர்ந்த அபிப்ராயம் வந்தேவிட்டது ஜெயந்தினிக்கு. ‘என் அப்பா போல.. யோசிக்கிறான் என் தம்பியும். கேட்காமலே, செய்கிறான்.. என்னை அவ்வளவு பிடிக்குமா.. எப்படி எனக்கு தெரியாமல் போனது, நின்று பேசகூட மாட்டானே.’ என  யோசனையோடு தன் தம்பியை இமைக்காமல் பார்த்தாள் தமக்கை.

கபாலி அதை எல்லாம் கவனிக்கவில்லை.. “பேசிட்டு சொல்லுங்க மாம்ஸ்.. நீயும்தான் ஜெய்.. டென் டேஸ்.. சொல்லியிருக்கேன்.. நீ வேணும்ன்னா, எக்ஸ்டென்ட் செய்துக்கோங்க.. சரி நான் பந்தி பார்த்துட்டு வரேன்” என சொல்லி சென்றுவிட்டான்.

வசீகரன் ஜெயந்தினியின் மறுவிருந்து நன்றாக நடந்தது. ஜெயந்தினிக்கு, கணவன்.. தன் தம்பியிடம் முகம் கொடுத்து பேசாத, தன் கணவன் மேல் ஒரு தாங்கல் இருந்தாலும்.. விழாவின் கலகலப்பில் அது அவளை பாதிக்கவில்லை. கபாலி, வசீகரன் பேசவில்லை என கவலையெல்லாம் படவில்லை போல,  தன் மாமாவிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சகஜமாக பேசினான். வசி, பதில் பேசாதது பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. அவன் சரியாக இருக்கிறானாம். அப்படிதான் அங்கு இருப்போரை உணர செய்தான். 

வசீகரன் வீட்டார்.. தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.  

இரவில் ஜெயந்தினி தனிமையில் தன் கணவனிடம் “ஏங்க, கபில்.. எப்படி சர்ப்ரைஸ் செய்துட்டான். நாம கூட யோசிக்கலை.” என்றாள், மலர்ந்த முகமாக.

வசீகரன் உடைமாற்றி கொண்டு ஏதும் பேசாமல் அமர்ந்துக் கொண்டான். 

ஜெயந்தினி மீண்டும் “வசி.. என்னாச்சு, ஏன் நீ..நீங்க கபில் பற்றி பேசவேமாட்டீங்கிறீங்க.. நீங்க முன்னாடி மாதிரி என்கிட்டே கூட பேசறதில்லை.” என்றாள்.

என்ன சொல்லுவான் வசீகரன். அமைதியாகினான்.

வசீகரன் நேர்மையானவன். குடும்பமும் அவனை கட்டி போட்டது தொழில் விஷயத்தில். இந்த திருமணமும் அவனை கட்டி போட்டது, கபாலி மூலமாக. ம்.. சொல்ல முடியாத.. வெளிக்காட்ட முடியாத  ஒரு தோல்வி வசீகரனுக்கு. ஆமாம், இந்த திருமணத்தை அவன் அப்படிதான் எடுத்துக் கொண்டான்.

வசீகரனுக்கு நேர்மையாக ஜெயிக்க எண்ணம். குடும்பம் முதலில் அவனை படிப்பு.. குடும்ப தொழில் என அவனுக்கு பிடித்ததை செய்ய விடவில்லை, திணித்துவிட்டது.

அப்படிதான் இந்த திருமணத்திலும் நடந்தது. வசீகரன் போராடி கொண்டிருந்தான் ‘நான் ஜெயந்தினியை தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன்’ என.. நேர்மையாக போராடினான். சரி, தங்கையின் திருமணம் முடியட்டும்.. இன்னும் அழுத்தமாக வீட்டில் போராடலாம்.. என எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால், கபாலி முந்திக் கொண்டான். அதிரடியாய்.. தன் அக்காவின் திருமணத்தை நடத்திக் காட்டினான். ஆக, இப்படி தனக்கு பிடித்த விஷயமே.. தனக்கு பிடிக்காத விதத்தில், நடந்ததில் வசீகரன் அப்செட். 

‘நான் என் காதலை போராடி வெற்றிக் கொண்டேன்’ என வசீகரன் தனக்கு தானே சொல்லிக் கொள்ள முடியாத நிலை. அதில், அவனின் மனம் எதையோ நினைத்து நினைத்து பலசமயம் வருத்தம் கொள்கிறான்.. கோவம் கொள்கிறான்.. சிலசமயம் இயல்பாக இருக்கிறான். ஆனால், கபாலியை பார்க்கும் போதெல்லாம் ஒரு தோற்ற உணர்வு அவனுள் எழுந்தே விடுகிறது. அதிலும் இந்த ஒருவாரமாக.. கபாலியை அதிகமாக பார்க்கிறானே. ஆக, அதிகம் தோற்றதாக உணர்கிறான்.  அதனால், தள்ளி நிற்கிறான். 

அத்தோடு, கபாலியோடு தன் தங்கை திருமணம். அது தன்னால்தான் என வசீகரனுக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது. மேலும், இந்த இரண்டு நாட்களாக.. தங்கை அந்த ரவுடியோடு, சேர்ந்து நிற்பதை.. அவனால், பார்க்கவே முடியவில்லை.. என்னமோ ‘யாரின்’ கையிலோ.. தங்களின் பொன்மாலையை, தாங்களே கொடுத்து.. அது சிறிது சிறிதாக உதிர்வதை பார்ப்பதாக அவனுக்கு ஒரு அபத்தமான எண்ணம் வந்துவிட்டது. கபாலியின் அதட்டல் உருட்டல்.. எல்லாம், தங்கள் வீட்டு.. பொன்மானுக்கு தெரியாது. அது எப்போதும் மிரண்ட பார்வையோடு கிட்சென்னிலேயே நிற்பதை பார்க்க பார்க்க.. அண்ணனாக வசீகரனுக்கு தன்னையே மன்னிக்க முடியவில்லை. எனவே, தள்ளி நிற்கிறான். 

ஆக, இதையெல்லாம் எப்படி தன் காதல் மனைவியிடம் சொல்ல முடியும். எப்படியோ திருமணம் ஆகிற்றே என என்னால் சந்தோஷம் படவில்லை.. அதை எப்படி சொல்லுவான். அதனால் இப்போது யோசனையோடு தன் மனையாளை பார்த்தான்.

ஜெயந்தினி இப்போது கணவனின் அருகில் வந்தாள்.. கணவன் நெருங்காததால்.. இவளும் அவனை நெருங்கவில்லை இந்த இரண்டு நாளில். இன்றும் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.. கணவன் நிமிர்ந்து தன்னை பாரக்காததால்.. தன்னவனின் தாடையை தொட்டு நிமிர்ந்தினாள்.

வசீகரன் என்ன என்பதாக பார்த்தான்.

ஜெயந்தினி “ஏன்.. என்கிட்டே என்ன தயக்கம்.. ப்ரீயா இருங்களேன்.. நீங்க, சரியாகவே இல்ல.. சந்தோஷமாகவே இல்லை நீங்க..” என்றாள் அக்கறையான காதலான குரலில்.

கணவனுக்கு மனையாளின் காதலும்.. அக்கறையும் புரிகிறது. ஆனால், அவளிடம்  சொல்லி.. ஆறுதல் தேடும் விஷயம் இதுவல்லவே. எனவே, தன்னவளை தன்போல இடையோடுய இறுக்கிக் கொண்டான் முதல்முறை.. “தெரியலை டா.. நான் எதிர்பார்த்த நாட்கள் இவையெல்லாம்..  ஆனால், என்னால்..” என எதோ சொல்ல வந்தவன்.. நிதானித்து “எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடேன். ஒரு டூ டேஸ்.. நான் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கேன். அதான், உன் தம்பி ட்ரிப் போக சொன்னதை கூட தள்ளி போடலாம்ன்னு சொன்னேன். நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும். ஒரு டூ டேஸ் என்னை எதுவும் கேட்க்காத.. ப்ளீஸ் டா ஜெய்..” என்றான், பிடியை தளர்த்தாமல். 

ஜெயந்தினிக்கு குழப்பம்தான். ஆனால், கணவன் தெளிவாக இப்படி சொல்லும்  போது என்ன செய்ய முடியும். ஜெயந்தினி “சரி.. எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால், எனக்கு எதோ நீங்க குழப்பத்தில் இப்படி தள்ளி இருக்கீங்கன்னு தோன்றுது. அ..த்தோட, உங்க தங்கச்சி பத்தி யோசிக்கிறீங்களோ” என இவள் முடிக்கவில்லை.

வசீகரன் தன்னவளை விட்டு எழுந்தான். கண்டுக் கொண்டாளோ.. என சட்டென விலகினான்.. “இல்ல ஜெய்.. அப்படி இல்லை” எனத் தொடங்கினான்.

ஜெயந்தினி “இருங்க.. மயூ பத்தி கவலைபடாதீங்க.. அவள் நல்லாத்தான் இருப்பாள். நம்மை போல.. அவங்க லவர்ஸ் இல்லையே.. போக போக சரியாகிடுவாங்க” என்றாள்.

வசீகரனுக்கு ‘ஆக, இவளுக்கும்.. கபாலி மயூவின் வாழ்க்கை கண்ணில் படுகிறது’ என எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

ஜெயந்தினி “கொஞ்சம் வாக் போகலாமா” என்றாள்.

வசீகரனும் எழுந்து சென்றான் மனையாளோடு, தோட்டத்திற்கு.

!@!@!@!@!@!@!@!@!@!@

மயூரா இன்று இரவு நிம்மதியாக உறங்கினாள்.. என்ன, கபாலி மேலே வருவதற்கு முன்பே சென்று படுத்துக் கொண்டாள்.

கபாலி வந்து மனையாளை கூட பார்க்கவில்லை. தானும் குளித்து.. உறங்கிவிட்டான். இன்று வேலை ஜாஸ்தி. எனவே, இருவருக்கும் உறக்கம் வந்து சேர்ந்தது.

காலை இருவரும் இரண்டு நிமிட இடைவெளியில்  எழுந்துக் கொள்வர். ஒருவர் எழும் சத்தம் உணர்ந்ததும்.. மற்றொருவரும் எழுந்துவிடுவார். யார் முதலில் பாத்ரூம் செல்லுவது என மௌனமான போட்டி நடக்கும் இருவருக்குள்ளும். கபாலி, அதில் கூட அமைதியாக இருக்க மாட்டான். அவள் விழித்துவிட்டது தெரிந்தால், முந்திக் கொண்டு.. ரெஸ்ட்ரூம் சென்றிடுவான். அங்கே என்ன புதையல் வைத்திருப்பானோ.. அரைமணி நேரம் இல்லாமல் வெளியே வரமாட்டான். மயூரா உறங்கியே விடுவாள் மீண்டும். பின் அவன், எப்போதும் போல, கதவை அடித்து சாற்றும் வரை.. கண்ணை திறக்க மாட்டாள் பெண்.

மயூராவும் கபாலியும், அடுத்தடுத்து கிளம்பிவிட்டனர் தங்களின் வேலையை பார்க்க. ம்..மகேஸ்வரியிடம் சொல்லியே சென்றாள் பெண் ”அத்தை மதியம் வரமாட்டேன் அத்தை, அடுத்த வாரம், பெங்களூர்ல ஒரு ப்ரோக்ராம் இருக்கு.. ப்ராக்டீஸ் பண்ணும் அத்தை. ஈவ்னிங் சீக்கிரம் வந்திடுறேன்..” என்றாள்.

மகேஸ்வரிக்கு முகமே வாடி போனது.. அது, மயூராவிற்கும் புரிய “அத்தை.. நான் ஒன்னு சொன்னால் கேட்ப்பீங்களா” என்றாள்.

மகேஸ்வரி வாடிய முகத்தோடு “முதலில்.. எத்தனை மணிக்கு கிளம்பனும் நீ.. கையில் லஞ்ச் தந்திடவா..” என்றார்.

மயூ தன் அத்தையை கைபிடித்து நிறுத்தினாள்.. “அத்தை, இங்க தனியாதானே இருப்பீங்க..” என்றாள். 

மகேஸ்வரி “அதுகென்ன..” என்றார்.

மயூரா “நீங்க லெவன் போல, லஞ்ச் எடுத்து வாங்க.. நாம, நம்ம அகாடமில சாப்பிடலாம். எங்ககூட இருங்க.. நிறைய பொண்ணுங்க வருவாங்க.. நீங்க வாங்களேன் சும்மா ஒருநாளைக்கு” என்றாள், ஆசையாக.

மகேஸ்வரிக்கு, மருமகள் இப்படி ஆசையாக சொல்லவும்.. அவருக்கும், ஆசை வந்து ஒட்டிக் கொண்டது.. என்ன சொல்லுவது என தெரியாமல் அப்படியே நின்றார்.

அதை பார்த்த மயூராவும் “அத்தை, வாங்க.. நான் கார் அனுப்பறேன்” என்றாள்.

மகேஸ்வரி அமைதியாகவே இருந்தார். மயூரா இரண்டுமுறை அழுத்தி அழைத்தாள். சம்மதம் என தலையசைத்தார். 

மயூரா “ஹேய்.. சூப்பர் அத்தை.. வாங்க என்தன்செபார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றாள் கண்கள் மின்ன.

மகேஸ்வரிக்கு சிரிப்புதான் வந்தது.. சிறுகுழந்தையாய் மருமகள் சொல்லுவதை கேட்டு. அப்படியே வேலையைகவனிக்க சென்றார்.

மயூராவும் கிளம்ப சென்றாள், மேலே.