அத்தியாயம் 20

புது வண்டியில் வந்து இறங்கியவர்களைப் பார்த்த சரிதா முதன் முறையாக சந்தோஷமாக உணர்ந்தாள். கலையரசியும் நடராஜனும் பார்த்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. செல்வியோ முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.

“புது வண்டி எடுக்கப் போறீங்கன்னு சொல்லவே இல்லை அபர்ணா?” என்றாள் சரிதா.

“திடீர்ன்னு முடிவு பண்ணது தான்க்கா” என்றவள் பேச்சை வளர்க்கவில்லை.

“பிரசாதம் மாமா” என்று நடராஜனிடம் கோவில் பிரசாதத்தை நீட்டியவளை,

“உள்ள வாம்மா” என்றார் நடராஜன்.

“இருக்கட்டும் மாமா” என்றவள் ஏனோ அந்த வீட்டிற்குள் நுழையவே இல்லை. அபர்ணா பேசவாவது செய்தாள். சிவாவோ பேச விரும்பாதவனாய் அப்படியே நின்றான்.

“ஏன் சிவா? அப்பா அம்மாவும் கூட வேண்டாம்னு ஆகிடுச்சா?” என்றார் கலையரசி.

“யாரையும் வேண்டாம்னு நான் முடிவு பண்ணலை. நீங்களா முடிவு பண்ணித் தான் ஒதுங்கியிருக்கிங்க. என்னை ஒதுக்கியும் வச்சிருக்கிங்க. நான் என்ன பத்து மைல் தூரத்துலையா இருக்கேன். இந்தா இருக்கு மாடி? பார்க்கனும் பேசணும்னு தோணினா நீங்க வந்திருக்க வேண்டியது தான? என்னை அமைதியா இருக்க, அடங்கிப் போக சொல்லனும்னா வருவிங்க. இப்போ அதுவும் இல்லைன்னு ஆகிப் போய்டுச்சு. உங்க பெரிய பையனுக்கு நான் இப்போ ஒத்தாசையாவும் இல்லை. அந்த கோபமெல்லாம் உங்களுக்கு இருக்கும் தான. தேவை முடிஞ்சா தேரே தெருவுல தான் நிற்குது. நானெல்லாம் எம்மாத்திரம்?” என்றவன் மேலே சென்று விட்டான்.

“பார்த்திங்களாங்க! சிவா ஒரு நாளாவது நம்மகிட்ட இப்படி யாரோ மாதிரி பேசியிருப்பானா? இன்னைக்கு யார்கிட்டையோ பேசுற மாதிரி பேசிட்டு போறான். அம்மான்னு அவன் வாயில வரவேயில்லை. என் பிள்ளைக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியாது” என்ற கலையரசி அபர்ணாவைப் பார்க்க,

‘அதான..! என்னடா இன்னும் என்னைய இழுக்கலையேன்னு பார்த்தேன்’ என்று பல்லைக் கடித்தவள்,

“ஆமா அத்தை..! உங்க பையனுக்கு ஒண்ணுமே தெரியாது. நான் எழுதிக் குடுத்து பேசச் சொல்லி கூட்டிட்டு வந்தேன்” என்றாள் நக்கலாக.

“நான் எப்போமா அப்படி சொன்னேன்?” என்றார் கலையரசி.

“இப்போ நீங்க என்னைப் பார்த்ததுக்கு அர்த்தம் தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்ன குழந்தையில்லை. உங்களோட தப்பு எப்போதான் உங்க கண்ணுக்குத் தெரியும். இத்தனை நாள் மனசுல வருத்தத்தோட தான நடமாடிட்டு இருந்தாரு உங்க பையன். ஏன் அப்பல்லாம் வந்து ஆறுதலா ரெண்டு வார்த்தை பேச வேண்டாம்னு உங்களை யாரும் கையைப் பிடிச்சு தடுத்தாங்களா என்ன?ஏன் மாமா கூட ஒரு வார்த்தை பேசலையே. அவருக்கு ஆறுதல் சொல்லத் தேவையில்லைன்னு நினைச்சிங்களா? இல்லை அவரே தேவையில்லைன்னு நினைச்சிங்களா?” என்றாள் நடராஜனை நேர் பார்வையாய் பார்த்தபடி.

நடராஜன் வார்த்தைகளின்றி நிற்க,

“உங்களை இப்படி கேள்வி கேட்கனும்ங்றது என் நோக்கம் இல்லை மாமா. ஆனா அத்தை  இப்போ கூட அவங்க செய்றது, அவங்க நினைக்கிறது தான் சரின்னு இருக்காங்க பாருங்க … அதைப் பார்த்துட்டு தான் என்னால அமைதியா இருக்க முடியலை” என்றவள் செல்வியை முறைத்துவிட்டு சென்று விட்டாள்.

‘இன்னைக்குத்தான் கொஞ்சம் நல்லா இருந்தார். இப்போ மறுபடியும் கம்முன்னு இருப்பாரோ?’ என்று யோசித்துக் கொண்டே மேலே சென்றாள். அவனோ லேப்டாப்பை வைத்துக் கொண்டு எதையோ தீவிரமாய் செய்து கொண்டிருந்தான்.

‘நல்லவேளை! வேதாளம் முருங்கை மரம் ஏறலை’ என்று எண்ணியவளுக்கு அவளையும் மீறி சிரிப்பு வந்திருந்தது.

“என்ன? அங்க இருந்து பார்வை? அதுவும் சிரிப்பு வேற?” என்றான் சிவா.

“ஒண்ணுமில்லை சக்தி” என்றவள் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“என்ன பண்றிங்க?”

“லோன் பேப்பர்ஸ்க்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன். எல்லாமே வாங்கிட்டேன். இனி பேங்க் போற வேலை தான்” என்றான்.

“கையில இருக்குற பணத்தை வச்சு பண்ண முடியாதா சக்தி? ஏன் எடுத்த உடனே அகலக் கால் வைக்கணும்?” என்றாள் கேள்வியாய்.

“கரெக்ட் தான்..! இடம் லீசுக்குப் பார்த்தா லோன் தேவையில்லை. ஆனா கைப்பிடி இடம்ன்னாலும் சொந்த இடத்துல தான் வைக்கணும் அபி. அது தான் பெஸ்ட். லீசுக்கோ வாடகைக்கோ பார்த்தா, கடை பிக்கப் ஆகி நல்லா போற நேரத்துல திடீர்ன்னு வந்து காலி பண்ண சொல்லுவாங்க. அதெல்லாம் நமக்கு செட்டாகாது” என்றான்.

“லோன் கிடைக்குமா?” என்றாள்.

“ம்ம்..! யாராவது ஷூரிட்டி போடணும்” என்றான்.

“யார் போடப் போறா?” என்றாள் கேள்வியாய்.

“எம்எல்ஏ  போடுறேன்னு சொல்லியிருக்கார் அபி” என்றான் லேப்டாப் திரையைப் பார்த்துக் கொண்டே.

“யாரு? அந்த சுஜிதாவோட அப்பாவா?” என்றாள் கேள்வியாய்.

“ம்ம் ஆமா..! அவர் எனக்கு நல்ல பழக்கம்” என்றான்.

“வேண்டாம் சக்தி” என்றவளை சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் சிவா.

“என்னாச்சு அபி? ஏன் வேண்டாம்?” என்றான் புரியாமல்.

“வேண்டாம்ன்னா விடுங்களேன்! அவர் ஷூரிட்டி போட்டுத்தான்  நமக்கு லோன் கிடைக்கும்னா அந்த லோனே வேண்டாம்” என்றாள் தீவிரமான குரலில்.

“ஹேய் அபி..! அவர் ரொம்ப நல்ல மனுஷன். நீ நினைக்கிற மாதிரி இல்லை” என்றான்.

“வேண்டாம் சக்தி” என்று மீண்டும் அழுத்தமாய் உரைத்தவளை கண்களில் கூர்மையுடன் பார்த்தவன்,

“என்னாச்சு?” என்றான். அவன் குரலில் இருந்த வேறுபாடு உணர்ந்தவள் சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“உன்னைத்தான் அபி கேட்குறேன்? என்னாச்சு? ஏதாவது பிராப்ளமா? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா அவரோட உதவி நமக்கு வேண்டாம். சொல்லப் போனா நமக்கு லோனே வேண்டாம்” என்றாள்.

“லோன் போடாம முடியாது அபி” என்றான்.

வேகமாய் எழுந்து சென்றவள் தன் நகைப் பெட்டியை எடுத்து வந்து அவனிடம் நீட்டியிருந்தாள்.

“என்னதிது?” என்றான் புரியாமல்.

“என்னோட ஜுவெல்ஸ் எல்லாம் இருக்கு. நான் போட்டிருக்கிறது இல்லாம இதுல நாற்பத்தி அஞ்சு சவரன் நகை இருக்கு. இதை அடமானம் வச்சாலும் சரி, வித்தாலும் சரி. எனக்குத் தெரிஞ்சு இந்த பணம் போதும்னு நினைக்கிறேன். அப்பறம் கையில இருக்குற அமௌன்ட் வேற இருக்கு” என்றவளை திகைத்தபடி பார்த்திருந்தான்.

“அபி இதெல்லாம் வேண்டாம்” என்றவனை முறைத்தாள்.

“சொன்னா புரிஞ்சுக்கோ அபி. மேரேஜ் முடிஞ்சு முழுசா ரெண்டு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள எப்படி? உன் வீட்ல தெரிஞ்சா என்னை என்ன நினைக்க மாட்டாங்க?” என்றவனிடத்தில் எதுவும் பேசவில்லை அவள்.

“அபி பிளீஸ்! நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். இதுல நீயும் என்னை படுத்தாத. இப்போ ஏன் முகத்தை தூக்கிட்டு இருக்க?” என்றான் சற்று குரலை உயர்த்தி.

“கோபமெல்லாம் இல்லை சக்தி. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணுங்க. ஆனா, யார்கிட்டயும் ஷூரிட்டிக்கு போய் நிக்கக் கூடாது, அவ்வளவு தான்” என்றாள்.

சரியாக அதே நேரம் கபிலனும் அவனுக்கு அழைத்தான்.

“சொல்லுங்க கபிலன்” என்றவனுக்கு சிறிது நேரத்தில் முகம் போன போக்கே சரியில்லை. பேசிவிட்டு வைத்தவன் எதிரே சுவரை வெறித்திருக்க,

“என்னாச்சு சக்தி? அண்ணா என்ன சொன்னான்?” என்றாள் அபர்ணா புரியாமல்.

“நம்ம பார்த்த வீட்டோட ஹவுஸ் ஓனர் இப்போ வீட்டை வாடகைக்கு விடலைன்னு சொல்லிட்டாராம்” என்றான்.

“ஏன் திடீர்ன்னு அப்படி சொன்னார்?” என்றாள்.

“எல்லாம் முத்து மாணிக்கம் சித்தப்பா பண்ண வேலை தான். வேலை வெட்டி இல்லாதவனுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாளைக்கு வாடகைக்கு அலைவிங்களா அப்படி இப்படின்னு பேசி வச்சிருக்கார். ஓனரும் வெளியூர்ல இருக்கிறதால அவர் பேச்சை கேட்டுகிட்டு இப்போதைக்கு விடலைன்னு சொல்லிட்டாராம் அபி” என்றான் இறுகிய குரலில்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தவள்,அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“நாம வேற வீடு பார்த்துக்கலாம் சக்தி. அவர் குணத்தைப் பத்தித் தான் உங்களுக்குத்  தெரியுமே? அவர் பேசுறதை எல்லாம் பெருசா மைன்ட்ல ஏத்திக்காதிங்க” என்றாள் அவனின் தோள் சாய்ந்து.

“படிச்சு முடிச்ச உடனே என்னோட கெரியரைத் தேடி போகாம பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு தோணுது அபி. ரொம்பப் பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன்” என்றவனின் குரலில் மருந்துக்கும் உயிர்ப்பில்லை.

“இப்பவே இப்படி பேசுறவங்க, நாளைக்கு அவர் சம்பந்தி தான் ஷூரிட்டி போடுறாருன்னு தெரிஞ்சா இன்னும் பேசுவாங்க சக்தி. அதான் வேண்டாம்னு சொல்றேன்” என்றாள்.

“இப்படி எல்லாத்தையும் போட்டு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணா,நாளைக்கு ஒரு அவசரம்னா என்ன பண்றது அபி. அதான் யோசிக்கிறேன். லோன் எடுத்துட்டா பிரச்சனை இருக்காது” என்றான்.

“அதான் என்னோட சேலரி இருக்குள்ள. இப்போதைக்கு அது போதும். நீங்க யோசிக்காம ஸ்டார்ட் பண்ணுங்க. லோன் வேண்டாம். நாம ஷாப்பை ஸ்டார்ட் பண்ணிட்டு லோன் கேட்டா ஷூரிட்டி தேவையில்லை. தேவைப்பட்டா அப்போ வாங்கிக்கலாம்” என்றாள் உறுதியாக.

அதற்கடுத்து வந்த நாட்கள் அனைத்தும் அவன் வாழ்வில் கடினமான நாட்களாகத் தான் இருந்தது. எதுவும் அவ்வளவு எளிதில் அமைந்து விடவில்லை. கடைக்கான இடத்தை ஏற்கனவே பார்த்து வைத்திருந்தான். அதை விலை பேசி முடிப்பதற்குள் ஒரு வழியாகியிருந்தான் சிவா.

இதற்கிடையில் வீடு பார்க்கும் வேலையை கபிலன் பார்த்துக் கொள்ள, கடைசியில் கபிலன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடு காலியாக, கபிலனுக்கோ அதில் பரம சந்தோசம்.

சிவா கடைக்கான இடத்தை பேசி முடித்து ரிஜிஸ்டர் செய்யும் வரை யாரிடமும் சொல்லவில்லை.

அவன் எங்கே போகிறான் வருகிறான் என்று வீட்டில் இருப்பவர்கள் யாரும் கேட்க முற்படவில்லை.  யாரிடமும் பேசுவதற்கு அவனும் தயாராக இல்லை. அவனிற்குள் இருந்த வைராக்கியம் அவனை யாரிடமும் உதவி என்று கேட்டுப் போய் நிற்க விடவில்லை.

அபர்ணாவிற்கு அவனைத் தாண்டி யோசிக்க வேறு விஷயமே இல்லை என்ற அளவிற்கு இருந்தது அவனுடனான வாழ்க்கை. அவளிடமிருந்து அப்படி ஒரு புரிதலையும் அனுசரனையையும் சிவாவே எதிர்பார்த்திருக்கவில்லை.

அன்று அவளை அவசரமாய் அழைத்துச் சென்றவன் கடைக்கான இடத்தை அவள் பேரில் தான் முடித்தான்.

“உங்க பேர்ல முடிக்கலாம் சக்தி” என்று அபர்ணா எவ்வளவு கூறியும் அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை.

“உன் பேர்ல இருக்குறது தான் சரியா வரும் அபி” என்பதோடு முடித்துக் கொண்டான்.

“நாளைக்கு புது வீட்ல பால் காய்ச்சுறோம் மாமா” என்று அபர்ணா நடராஜனிடம் கூற, எப்படியும் மகன் வெளியே செல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்த கலையரசிக்கு அது இடியாகத் தான் இருந்தது.

“நல்லதும்மா” என்றார் நடராஜன்.

“என்னமோ புது வீடு கட்டி போற மாதிரித்தான்” என்றாள் செல்வி ஜாடையாய்.

“அதுவும் ஒரு நாள் நடக்காமையா போய்டும்?” என்ற அபர்ணா,

“சக்தி சீக்கிரம் ஒரு கபே ஸ்டார்ட் பண்ண போறாரு மாமா. இடமெல்லாம் பார்த்துட்டோம். இன்னும் ஒரு மாசத்துல ரெடி ஆகிடும்” என்று கூடுதல் தகவலையும் கொடுக்க, உள்ளே இருந்த அண்ணன்கள் இருவருக்கும் அதிர்ச்சி. சிவாவோ யாரிடமும் பேசாமல் அமைதியாகத் தான் நின்றிருந்தான்.

“இதை உள்ள வந்து சொல்லக் கூடாதாம்மா?” என்றார் நடராஜன்.

“பரவாயில்ல மாமா… நாங்க வெளிய இருந்தே சொல்லிட்டு போறோம். நாளைக்கு மேல் ரூமைக் காலி பண்ணிடுவோம். அதையும் அவங்க கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.

வேகமாய் வெளியே வந்த பிரபாகரன்,

“ஏன் சிவா நாங்க அந்த அளவுக்கு வேண்டாதவங்க ஆகிட்டோமா உனக்கு? கடை ஆரம்பிக்கப் போறதைக் கூட இப்போ தான் வந்து சொல்லனும்னு தோணுதா உனக்கு? ஏன் முன்னாடியே சொன்னா நாங்க எதுவும் நினைப்போம்னு நினைச்சியாடா?” என்றான் ஆதங்கத்துடன்.

“உங்க தம்பி ஆரம்பிக்கிறதே நமக்குப் போட்டிக்குத்தான். நீங்க என்னடான்னா போய் பாசத்தை பிழிஞ்சிட்டு இருக்கீங்க?” என்றாள் செல்வி.

“இதுக்குமேல பேசுன, உனக்கு மரியாதை இல்லை செல்வி” என்று மனைவியை அதட்டியவன் தம்பியிடம் திரும்பினான்.

“பிரபா கேட்குற மாதிரி நாங்க வேண்டாதவங்க ஆகிட்டோமா சிவா?” என்றான் சத்யாவும்.

“நான் எப்பவும் யாரையும் வேண்டாம்னு நினைக்கலைண்ணா” என்றவன்,

“கடைக்கு வர்றதை விட்டு இன்னையோட இருபது நாள் ஆகப் போகுது. நீங்களும் இது வரைக்கும் நான் என்ன பண்றேன்? ஏது பண்றேன்னு கேட்கவே இல்லையே? அது சரி அம்மா அப்பாவுக்கே கேட்கத் தோணலை. நீங்க எப்படி கேட்பிங்க?” என்றான் சிவா.

“கேட்டு உன்னை சங்கடப்படுத்த வேண்டாம்னு தான்டா நாங்க எதுவும் கேட்கலை” என்றான் பிரபா.

“ஏதோ ஒண்ணுண்ணா!  எதுக்கு போனதை பேசிட்டு. நாளைக்கு பால் காய்ச்சுறோம் வந்துடுங்க” என்றவன், பெற்றவர்களிடம் திரும்பினான்.

“நீங்களும் வந்திடுங்கப்பா” என்றவன் அறைக்கு சென்று விட்டான்.

“வீட்டுக்கு வெளிய வச்சு கூப்பிடுறோம்ன்னு நினைக்காதிங்க மாமா. கண்டிப்பா எல்லாரும் வந்திடுங்க” என்றவள், பேச வேறு வார்த்தைகள் இன்றிப் போக, மேலே சென்று விட்டாள்.

“நீங்க எல்லாரும் தான் அவங்களைத் தாங்கிட்டு இருக்கீங்க. அவங்க இந்த  வீட்ல இருக்குற யாரையும் மனுஷங்களாவே மதிக்கலை. ஒரு வார்த்தை முன்னமே சொல்லாம, எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்து சொல்றப்பவே தெரிய வேண்டாம், நம்மை எந்த லட்சணத்துல வச்சிருக்காங்கன்னு. நாளைக்கு நீங்க போகக் கூடாது” என்றாள் செல்வி பட்டென்று.

“ஏன் போகக் கூடாது செல்வி?” என்றான் பிரபா எரிச்சலுடன்.

“யாராவது மரியாதை இல்லாத இடத்துக்குப் போவாங்களா?” என்றாள் வேகமாய்.

“அப்போ முதல்ல உங்கப்பா வீட்டுக்குத் தான் போகக் கூடாது. மானங்கெட்டுப் போய் அங்கயே வர்றேன். என் தம்பி வீட்டுக்கு போறதுக்கு என்ன? ஆனா தயவு செஞ்சு நீ மட்டும் வந்துடாத” என்றான் எரிச்சலுடன்.

“உனக்கும் ஏதாவது சொல்லனுமா சரிதா?” என்றான் சத்யா கோபத்துடன்.

“இல்லங்க..! போயிட்டு வரலாம்” என்பதோடு அவள் முடித்துக் கொள்ள, சரிதாவை முறைத்திருந்தாள் செல்வி.

இரவு உணவை முடித்து, மறுநாள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதால் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அபர்ணா.

“என்ன பண்ற அபி?” என்றபடி வந்து நின்றான் சிவா.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு இருக்கேன் சக்தி. இதோ முடிஞ்சது” என்றாள்.

சொந்த வீட்டை விட்டு செல்வது அவன் மனதிற்குள் அத்தனை அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. அவன் பார்வையை வைத்தே அவன் உணர்வுகள் புரிந்தவள்,

“நாம போயித்தான் ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்லை சக்தி. இங்கயே இருக்குறதுல எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை” என்றாள்.

“மிச்சத்தை காலையில பார்த்துக்கலாம் நீ வா” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

“என்ன அதிசயம்? நீங்களே இன்னைக்கு எனக்கும் விரிச்சு வச்சிருக்கிங்க? எப்பவும் உள்ள போய் தூங்கு அபின்னு தான சொல்லுவிங்க?” என்றாள் பொய்யான கோபத்துடன்.

இந்த இருபது நாட்களாக அவன் எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான் என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. அந்த கோபமும் அவளுக்கு சேர்ந்து கொண்டது.

“அப்போ நீ உள்ளயே போய் தூங்கு அபி” என்றவன் மொட்டைமாடிக் காற்றில் படுத்துக் கொண்டான். கடுப்புடன் அவன் பின்னேயே வந்தவள் தலையணையை தூக்கி அவன் மேல் எறிய,

“வேண்டாமா? சரி விடு” என்று அதையும் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டான்.

“உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?” என்றாள் கோபமாய்.

“எது இருக்கான்னு கேட்குற? எதுன்னு தெரிஞ்சா தான இருக்கா இல்லையான்னு சொல்ல முடியும்?” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“உங்ககிட்டயெல்லாம் பேச முடியாது” என்று திரும்பி உள்ளே செல்ல முற்பட்டவளின் கையைப் பிடித்து இழுத்திருந்தான் சிவா. இழுத்த வேகத்திற்கு அவன் மேலேயே விழுந்து வைத்தவளை தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டவன்,

“இன்னைக்குத்தான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. சோ கோபம் வேண்டாமே?” என்றவனைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ? அமைதியாய் அவன் பிடிக்குள்ளேயே இருந்து கொண்டாள்.

“தேங்க்ஸ் அபி” என்றான் ஆத்மார்த்தமாய்.

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும் தான். எப்படியோ பர்ஸ்ட் ஸ்டெப்பை எடுத்து வச்சுட்டோம். அதுவும் வெற்றிகரமா. இன்னும் நிறைய இருக்கு. அதுவும் சரியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு” என்றான்.

“எனக்கும் அப்படித்தான் இருக்கு சக்தி” என்றாள்.

“கடைக்குத் தேவையான டிசைனை செய்ய சொல்லிட்டேன் அபி. அப்படியே வந்து பிட் பண்றது தான். முனிசிபாலிட்டி பிராசஸ் கொஞ்சம் இருக்கு. அதுவும் முடிஞ்சிடுச்சுன்னா எல்லாம் ரெடி ஆகிடும்” என்றான்.

“ம்ம்”

“எல்லாரும் மேரேஜ் முடிஞ்சு ஹனிமூன் அது இதுன்னு ஜாலியா இருந்தா நம்ம நிலமையை பார்த்தியா அபி? உன்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்துறேன்ல” என்றான் குற்ற உணர்வுடன்.

சட்டென்று எழுந்தவள் “ஆமா, இப்படி கேட்டு கேட்டே தான் கஷ்ட்டப்படுத்துறிங்க”  என்றாள் கடுப்புடன்.

“சரி சரி கோபப்படாதிங்க பொண்டாட்டி” என்றான்.

“அப்படி சொல்லாதிங்க சக்தி” என்றவளைப் பார்த்து சிரித்தவன், நகர்ந்து அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான். ஒரு நாளும் அவன் அப்படி அவள் மடியில் தலை வைத்ததில்லை. இன்று சட்டென்று அவன் அப்படி செய்யவும்  ஒரு படபடப்பு ஓடி மறைந்திருந்தது அவளுக்குள்.

மொட்டை மாடியில நிலாவைப் பார்த்துகிட்டே, பொண்டாட்டி மடியில தலை வச்சு படுத்திருக்கிறது என்னா சுகம்?” என்றவனை அவள் முறைக்க, எப்போதும் சிறு புன்னகையுடன் நிறுத்திக் கொள்பவன் அன்று முகம் மலர்ந்து சிரித்திருந்தான்.

அவள் கைகள் இயல்பு போல் அவன் கேசம் கோதிக் கொண்டிருக்க, அந்த சுகந்தத்தில் சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனான் சிவா. அவன் நன்றாகத் தூங்கி இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது.

“நிஜமாவே தூங்கிட்டாங்களா?” என்று அவள் பரிசோதித்துப் பார்க்க, நன்றாக உறங்கியதைப் போல் தான் இருந்தது. சிறு தயக்கத்துடன் அவன் சிகையை விலக்கி நெற்றியில் முத்தமிட்டவள், அவனை தலையணைக்கு மாற்ற பட்டென்று விழித்தவன் அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“பிராடு பிராடு” என்றாள்.

“நீ சொன்னது தான் அபி. நெத்தியில குடுத்த முத்தத்துக்கு இந்த பில்டப் தேவையில்லை” என்றவன் அடுத்த நிமிடம் அவள் இதழ்களை களவாடியிருந்தான். விழி விரித்தவளின் இதழ்களோ அவனுக்கு இரையாகியிருந்தது.

அடுத்த நாள் அவர்களுக்காக பார்த்த வீட்டில் பாலைக் காய்ச்சி குடியேறியிருந்தனர் சிவாவும் அபர்ணாவும்.