“வாங்க சிவா” என்ற கபிலனின் குரலில் அன்னம் குடும்பம் மொத்தமும் வாயிலைப் பார்க்க, ஒரு தலையசைப்புடன் உள்ளே வந்தவனின் கண்கள் அபர்ணாவைத் தேடியது. கபிலன் அறையைக் கண் காட்ட, யாரையும் சட்டை செய்யாமல் உரிமையுடன் அவள் அறையை நோக்கி சென்றவனைக் கண்டு மாதவனுக்கு ஊசியாய் குத்தியது.
அவன் கதவைத் திறக்கும் முன்னரே கதவைத் திறந்து வெளியே வந்தவள் வந்த வேகத்தில் அவனை அணைத்துக் கொண்டாள்.
“அபி என்னாச்சு?” என்றான் சிவா புரியாமல்.
மற்றவர்கள் தங்களைப் பார்ப்பதை உணர்ந்தவன், அவளைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைக்க, கபிலனின் முகத்தில் அவனறியாமல் ஒரு நிம்மதி புன்னகை. பெற்றவர்களுக்கு வேற என்ன வேண்டும். இதையெல்லாம் பார்த்து கடுப்பானவர்கள் அன்னம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.
“அவ்ளோ தானா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன். பாரேன் அந்த யோசனையில பொண்டாட்டி வந்து கட்டிப் பிடிச்சதைக் கூட நான் பீல் பண்ணலை. என்ன பண்ற? நான் மறுபடியும் முதல்ல இருந்து வரேன். நீ அதே வேகத்துல வந்து கட்டிப் பிடிக்கிற. சரியா?” என்றவனை முறைத்தவளுக்கு சிரிப்பு வந்திருந்தது.
“என்ன இந்த நேரத்துல?”என்றாள் வேண்டுமென்றே.
“வரணும்னு தோணுச்சு. எப்படியும் என் பொண்டாட்டி என்னைத் தேடுவான்னு தெரியும்” என்றான்.
“சும்மா பொண்டாட்டின்னு சொல்லாதிங்க சக்தி. அது ஒரு மாதிரி பீல் குடுக்குது” என்றாள் முனுமுனுப்புடன்.
“அப்போ அண்ணா வர்றது உனக்கு முன்னமே தெரியுமா? அதான் இவ்வளவு நேரம் சாப்பிடாம வெயிட் பண்ணியா?” என்றாள் காயத்ரி.
“தெரியாது காயு. ஆனா அவங்களுக்குத் தான் செஞ்சேன். வரலைன்னா வீட்டுக்குப் போகும் போது எடுத்துட்டு போயிருப்பேன்” என்றவள் பேசிக் கொண்டே அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
அவளை இழுத்து தனக்கருகில் அமர்த்திக் கொண்டவன்,”நேரம் என்ன ஆச்சு பாரு? இப்ப வரைக்கும் சாப்பிடாம என்ன பண்ண அபி?” என்றவன் அவளுக்கும் சேர்த்து பரிமாற, சாந்தியை விட அன்னத்திற்கு தான் அத்தனை நிறைவாய் இருந்தது.
“இதெல்லாம் போங்கு..! அடிப்பாவி பிரான் எல்லாம் என் கண்ணுலையே காட்டலையே?” என்று அவர்களுக்கு எதிரில் வந்து அமர்ந்த கிஷோர் பேசிக் கொண்டே இருக்க அவனுக்கு சரிக்கு சரி பதில் கொடுத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அபர்ணா. அவர்களைப் பார்த்த மாதவனுக்கு ஏதோ அவர்கள் எல்லாம் ஒரே குடும்பம் போல் தோன்றியது இப்போது. திரும்பி மனைவியைப் பார்க்க, அவளோ செல்போனில் மூழ்கியிருந்தாள்.
அபர்ணாவையும் சிவாவையும் பார்த்து மாதவனால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஒரு நிகழ்வே சொன்னது அவர்களின் புரிதலை. அவளுக்குத் தேவையானதை சிவா வைக்க, அவன் தட்டில் காலியாவதை அபர்ணா நிரப்ப என்று கேட்டோ சொல்லியோ செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் இயல்பாக நடந்து கொண்டிருந்தது.
“எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்குண்ணா. எங்க அபர்ணா அப்படியே இருந்திடுவாளோன்னு நினைச்சு நான் கவலைப் படாத நாளே இல்லை” என்றார் அன்னம் மூர்த்தியிடம்.
“நல்ல வேளை அன்னம், என் பொண்ணோட அருமை தெரியாத இடத்துக்கு அவ போகலை” என்றார் மூர்த்தி. மனதில் இருந்த ஆதங்கம் வார்த்தைகளாய் வந்திருந்தது.
மாதவன் சட்டென்று நிமிர்ந்து தன் மாமனைப் பார்த்தான். ஏனோ இந்த முறை அவனை நேர் பார்வையாய் பார்த்திருந்தார் மூர்த்தி.
ஏற்கனவே மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த விஷயம், இப்போது மூர்த்தியின் வார்த்தைகளில் மேலும் உறுத்தலைக் கொடுத்தது மாதவனுக்கு. தனக்கென்று ஒருத்தி இருக்கும் போது தன்னுடைய உறுத்தல் தவறு என்று அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனால் இப்போது அவர்களின் அந்நியோனியத்தைப் பார்க்கும் போது, தான் தவற விட்ட வாழ்க்கை பூதாகரமாய் தெரிந்தது அவனுக்கு. அனைத்தையும் மீறி அபர்ணாவின் இந்த சிரித்த முகம் அவனுக்குள்ளும் ஒரு நிறைவைத் தந்திருந்தது. காரணத்தை அவன் அலசி ஆராய விரும்பவில்லை.
“நாங்க கிளம்பறோம் மாதவா. நீ மருமகளைக் கூட்டிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வா” என்ற முத்துமாணிக்கம் ஒரு முறைப்புடன் அன்னத்தைக் கூட்டிக் கொண்டு சென்றார்.
சாப்பிட்டு முடித்த சிவாவோ கபிலனின் அருகில் வந்து அமர, எதிரே மாதவன் இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் பேருக்கு கூட சிரித்துக் கொள்ளவில்லை.
“அப்போ நான் கிளம்புறேன் அபி” என்று சிவா கிளம்ப,
“நானும் வர்றேன் சக்தி” என்று அவனுடன் எழுந்து நின்றவளை அனைவரும் விநோதமாய் பார்த்தனர்.
“அண்ணா கடைக்குத் தான போறார். நீ ஈவ்னிங் வரைக்கும் இருக்கலாம்ல. எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒண்ணா இருந்து?” என்றாள் காயத்ரி.
“நீ இரு அபி. நான் நைட் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான் சிவாவும்.
“சரி இரு அண்ணாகிட்ட கால் பண்ணி சொல்லிட்டு வர்றேன்” என்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்திருந்தான்.
“இருக்கேன் போதுமா?” என்றவுடன் அவள் முகம் மலர்ந்திருந்தது. அதன் பிறகு இரவு வரை இருந்து இரவு சாப்பாட்டையும் அங்கேயே முடித்து விட்டுத் தான் இருவரும் வீட்டிற்கு திரும்பியிருந்தனர்.
ஜோடியாய் வந்து மேலே சென்றவர்களை பாரத்த செல்வி வேகமாய் கணவனிடம் சென்றாள்.
“அப்போ உங்க தம்பி இன்னைக்கு கடைக்கு வரலையா?” என்றாள் வேகமாய்.
“ஏன் நானெல்லாம் உங்க வீட்டுக்கு வந்ததே இல்லையா? இப்ப வரைக்கும் இங்க இருந்தாலும் உங்க வீட்ல என்னை வீட்டோட மாப்பிள்ளை மாதிரி தான் நடத்துறிங்க. அப்போ அம்மா ஏதாவது சொன்னாங்களா? இப்போ சிவா விஷயத்துலையும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றான் பிரபா பட்டென்று.
‘இவரென்ன தம்பிக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றாரு. காத்து கருப்பு ஏதும் அடிச்சிருச்சா’ என்ற ரீதியில் கணவனைப் பார்த்து வைத்தாள் செல்வி.
உண்மையில் சிவாவின் வேலைகளை இந்த இரண்டு நாளில் உணர்ந்திருந்தான் பிரபா. இரண்டு நாளைக்கே பிரபாவிற்கு நாக்குத் தள்ளியது. இத்தனை வருடம் பொறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்த தம்பியின் மீதும் அவன் உழைப்பின் மீதும் மரியாதையே வந்திருந்தது பிரபாவிற்கு. காலம் கடந்து சில விஷயங்களை உணர்ந்திருந்தான்.
கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு நிலவைப் பார்த்தபடி படுத்திருந்தான் சிவா. அபி இன்றும் அவனுக்கு அருகில் வந்து தலையணையை போட,
“அபி, பாதி நைட்டுக்கு மேல ரொம்ப குளிரும். நாளைக்கு நீ ஸ்கூல் வேற போகணும். உள்ள போய் படு அபி” என்றான்.
அவளோ அவன் சொன்ன எதையும் காதில் வாங்காமல், இந்த முறை நன்றாக போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.
தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளைப் புரியாமல் பார்த்தவன்,
“என்னாச்சு அபி? ஏன் அமைதியா இருக்க?” என்றான் புரியாமல்.
“ஏன் உங்களுக்கு நான் இங்க வந்து உங்க கூட தூங்குறது பிடிக்கலையா? என்னை உள்ள விரட்டுறதுலையே குறிக்கோளா இருக்கீங்க?” என்றாள் வேகமாய்.
‘பாதி ராத்திரிக்கு மேல நீ எப்படி தூங்குவன்னு எனக்குத் தான தெரியும்’ என்று மனதிற்குள் நொந்து கொண்டவன்,
“குளிர் அடிச்சா பக்கத்துல தான் நீங்க இருக்கிங்களே? அப்பறம் என்ன?” என்றவளின் பேச்சில் அவன் தான் அதிர்ந்தான்.
“அப்போ நேத்து நீ என்ன போஸ்ல தூங்குனன்னு தெரியுமா உனக்கு?” என்றான் திகைப்பு மாறாமல்.
“தெரியும் தெரியும்” என்றாள்.
“நான் கூட தெரியாம தூக்கக் கலக்கத்துல அப்படி கட்டிப்பிடிச்சு படுத்திருக்கேன்னு நினைச்சேன்” என்றான்.
“நான் என்ன சின்னக் குழந்தையா? தூக்கக் கலக்கத்துல தெரியாம வந்து தூங்குறதுக்கு?” என்றாளே பார்க்கலாம்.
“அப்போ நான்..” என்று திணறியவன்,
“முத்தம் குடுத்ததும் தெரியுமா உனக்கு?” என்றான்.
“தெரியும் தெரியும்” என்று சொல்ல, அவனுக்குத் தான் ‘அய்யோ’ என்றிருந்தது.
“நெத்தியில குடுத்த முத்தத்துக்கு இந்த ரியாக்சன் தேவையில்லை சக்தி” என்றாள் அவன் புறம் திரும்பிப் படுத்தவளாய். அவன் முகம் புன்னகையில் விரிய, ஏனோ அவனின் சிரிப்பு அப்படியே அவள் மனதில் பதிந்து போனது.
அவளை நோக்கி கையை நீட்ட, பாந்தமாய் அவனுக்குள் அடங்கிப் போனாள் அபர்ணா.
“அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கீங்க சக்தி?” என்றாள் அமைதியான குரலில்.
“பிஸ்னஸ் தான்” என்றான்.
“என்ன சொல்றிங்க? இப்போ எப்படி பிஸ்னஸ் பண்ண முடியும்?” என்றாள் புரியாதவளாய்.
“தெரிஞ்சோ தெரியாமலோ பேக்கரியில வேலை பார்த்ததுல தொழில் கத்துகிட்டேன். படிச்ச படிப்பு வேறன்னாலும், இந்த தொழிலுக்குள்ள இருக்குற பிளஸ்,மைனஸ் எல்லாமே தெரியும். இனி புதுசா வேலைக்கு போறதெல்லாம் செட்டாகுமான்னு தெரியலை அபி.. அதுவுமில்லாம நான் ஜாப் போகணும்னா சென்னை பெங்களூர் இப்படித் தான் போக முடியும். அப்பத்தான் ஓரளவுக்கு நல்ல சேலரி கிடைக்கும். இங்க ரூரல்ல என்ன கிடைச்சிடப் போகுது. உன்னை விட்டுட்டு எங்கயும் போற ஐடியாவும் இல்லை” என்றான் சக்தி.
“இன்வெஸ்மென்ட் தேவைப்படுமே சக்தி. அது மட்டுமில்லாம உங்க அண்ணாவுக்கு போட்டிக்கு ஆரம்பிக்கிறதா நினைப்பாங்க உங்க அண்ணி” என்றாள் ஒரு தயக்கத்துடன்.
“அதுக்கு என்ன பண்ண முடியும் அபி? நான் அதே இடத்துல ஆரம்பிக்க போறது இல்லையே? அதே மாதிரி அண்ணன் கடை மாதிரியும் ஆரம்பிக்க போறதில்லை. கொஞ்சம் புதுசா பண்ணனும். இன்னோவேட்டிவா பண்ணனும். அண்ணாவோடது பேக்கரி. என்னோட பிளான் கொஞ்சம் டிப்ரன்ட். பிளான் எல்லாம் ரெடி. லோனுக்குத் தான் ரெடி பண்ணனும். மொய் பணம் இருக்கு. என்னோட சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அதை வச்சு தான் ஸ்டார்ட் பண்ணனும்” என்றான்.
“அப்பறம் ஏன் இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவே இல்லை” என்றாள் மனத்தாங்கலுடன்.
“இதோ இப்போ என்ன பண்ணப் போறோம்னு உரிமையா கேட்ட மாதிரி முன்னாடி நீ கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்” என்றான் அவனும்.
அவனிடமிருந்து வேகமாய் விலகியவள் “பொண்டாட்டி கேட்கலைன்னாலும் நீங்க சொல்லணும்” என்றாள். விலகியவளை இழுத்து மீண்டும் தன் மேல் போட்டுக் கொண்டவன்,
“சரிங்க பொண்டாட்டி மேடம்! இனி நீங்க கேட்கலைன்னாலும் சொல்லிடுறேன் போதுமா?” என்றான் சிரிப்புடன்.
“எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது சக்தி? எப்படி ஈசியா என்னை அக்சப்ட் பண்ணிக்கிட்டிங்க?” என்றாள் கேள்வியாய்.
“இதே கேள்வியை நானும் கேட்கலாம் இல்லையா?” என்றான்.
“நான் தான் முதல்ல கேட்டேன்” என்றாள்.
“சிலர் வேணும்னே உடைச்ச மனசை நான் எனக்கு வேணும்னு சரி பண்ணிகிட்டேன் அவ்ளோ தான்” என்றவனை வார்த்தைகளின்றி பேச்சற்று பார்த்திருந்தாள் அபர்ணா.