அத்தியாயம் 15

‘இதற்கெல்லாமா கணக்குப் பார்ப்பாள்’ என்ற அதிர்ச்சியில் அவர்கள் இருக்க,

“ஒரு நிமிஷம் சக்தி” என்றவள், அவன் டேபிள் மேல் திருப்பி வைத்த பணத்தை எடுத்துக் கொண்டாள்.

“இது என் புருஷனோட ஒரு மாச உழைப்பு. அப்படியெல்லாம் சட்டுன்னு தூக்கிக் குடுத்துட முடியாது” என்றாள் செல்வியை முறைத்தபடி.

“என்ன அபர்ணா? என்னமோ உன் புருஷன் உழைச்ச காசை நான் கேட்ட மாதிரி பேசுற. சிவா வேண்டாம்னு சொன்னா அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?” என்றாள் வேகமாய்.

“கொஞ்ச நேரம் வாயை மூடு செல்வி” என்று அதட்டிய பிரபாகரன்,

“அவ ஏதோ கிறுக்குத் தனமா பேசுறாப்பா. நீ எதுவும் மனசுல வச்சுக்காத. டேய் சிவா, அவளைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? இன்னைக்கு நேத்தா அப்படி இருக்கா? இதையெல்லாம்  பெருசு பண்ணுவியா நீ?” என்றான் சமாதானமாய்.

“இப்ப எதுக்கு நீங்க உங்க தம்பியை சமாதானப் படுத்திட்டு இருக்கீங்க? லீவ் போட்டதுக்கு மட்டும் தான கணக்குப் பார்த்தேன். நான் என்ன சாப்பிடுறதுக்கும்மா கணக்குப் பார்த்தேன்?” என்றவளை பிரபா ஆயாசமாய் பார்க்க, அபர்ணாவிற்கோ கோபம் எல்லையைக் கடந்திருந்தது.

அங்கேயே இருந்தால் கோபத்தில் ஏதாவது பேசிவிடுவோம் என்று எண்ணிய சிவா,

“வா அபி” என்றான் மீண்டும். அவன் கைகளின் அழுத்தத்தில் அவன் எவ்வளவு கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று அபர்ணாவிற்கும் புரிந்தது. ஒரு முடிவு எடுத்தவளாய்,

“அப்படியெல்லாம் வர முடியாது சக்தி” என்று சத்தமாய் சொல்ல, அபர்ணா கத்திய கத்தலில் அனைவரும் திகைத்துப் போய் பார்க்க, செல்வியே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள்.

“சக்தியைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? நீங்க வச்ச ஆளா இவரு? மூணு நாள் லீவ் போட்டதுக்கு கணக்குப் பார்த்த நீங்க, தினமும் பதினஞ்சு மணி நேரத்துக்கு மேல வேலை செய்றாரே அதுக்கு ஏன் கணக்குப் பார்க்கலை. பார்க்கத் தேவையில்லைன்னு விட்டிங்களா? இல்லை தேடினாலும் இப்படி ஒரு இளிச்சவாயன் கிடைக்க மாட்டான்னு நினைச்சு விட்டிங்களா?” என்றாள் வார்த்தைகளில் அனல் தெறிக்க.

“அபி அமைதியா இரும்மா. பேசினா பிரச்சனை பெருசாகும்” என்றான் சத்யா.

“ஆகிட்டுப் போகட்டுமே? இவரு என்ன இவங்க கடையில பண்ணைக்கு இருக்காரா? அவ்வளவு கணக்கு பார்க்குறவங்க தினமும் மூணு மணிக்கு எந்திரிச்சு போய் கடையைத் திறக்க வேண்டியது தான?” என்றாள் அபர்ணா.

செல்வி வாயடைத்து போய் நிற்க,

“உங்க கடையில மத்தவங்களுக்கு வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். ஆனா சக்தி ஒரு நாளோட முக்கால்வாசி நேரமும்  அங்க தான் இருக்காங்க. கணக்குப் பார்த்தா ரெண்டு ஷிப்ட் சேலரி நீங்க குடுக்கணும். அவர் இத்தனை வருஷமா இத்தனை மாசமா வேலை பார்த்திருக்கார். ரெண்டு ஷிப்ட் சேலரியை எண்ணி எடுத்து வைங்க” என்றாள் டேபிளைத் தட்டி.

நெஞ்சில் கை வைத்த செல்வி,

“என்ன அபர்ணா விட்டா பேசிட்டே போற? அப்படிப் பார்த்தா இந்த வீட்ல சிவாவுக்கு சம்பந்தமே இல்லை. இது முழுக்க முழுக்க என் புருஷனும் சரிதா புருஷனும் கட்டின வீடு. அப்போ நீங்க இருக்குறது எங்க வீட்ல. நீங்க அதுக்கு வாடகை தர்றீங்களா? இல்லை இத்தனை வருஷமா உன் புருஷன் தான் வாடகை தந்தாரா?” என்றாள் செல்வி.

“வாயை மூடு செல்வி” என்றான் பிரபாகரன் கோபமாய்.

“என்னமா செல்வி? என்ன பேசிட்டு இருக்க? சிவா எங்க பிள்ளை? எங்க வீட்ல இருக்க அவன் ஏன் வாடகை தரனும்?” என்றார் நடராஜன்.

“நீங்க சம்பாதிச்சு கட்டினது ஒன்னுமில்லையே?” என்றாள் செல்வி.

“அக்கா வேண்டாம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. பிரச்சனை எங்கயோ போகுது” என்றாள் சரிதா.

“இல்ல சரிதா? நேத்து வந்தவ இத்தனை கேள்வி கேட்குறா? நான் பேசாம இருக்கனுமா?” என்றாள்.

“பசங்க முன்னாடி பிரச்சனை வேண்டாம். நான் நாளைக்கே வேற வீடு பார்த்து போயிடுறேன்” என்றான் சிவா முகம் இறுக.

“சிவா என்னப்பா இது? அவ தான் வீம்புக்கு பேசுறான்னு பார்த்தா, நீயுமா?” என்ற கலையரசி,

“பிரபா ஒழுங்கா உன் பொண்டாட்டியை அடக்கி வைக்கிற வழியைப் பாரு. அவளைப் பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா நீ” என்று மூத்த மகனை சத்தமிட்டார் கலையரசி.

“என்னைய சொல்ற நீங்க, உங்க கடைசி மருமகளையும் சொல்ல வேண்டியது தானே அத்தை. வந்து ஒரு மாசம் கூட ஆகலை குடும்பத்தை பிரிக்கப் பார்க்குறா. இத்தனை நாள் இப்படியெல்லாம் இந்த வீட்ல பிரச்சனை வந்திருக்கா?” என்றாள் செல்வி.

“அண்ணா அவங்களை வாயை மூடச் சொல்லப் போறியா இல்லையா? என்னைப் பேசுன வரைக்கும் சரி. அபியைப் பத்தி பேச அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. இனி ஒரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா வந்தது” என்று எகிறியவனின் கோபம் தான் பிரபாகரனுக்குத் தெரியுமே.

“சிவா அமைதியா இருப்பா” என்றார் நடராஜன்.

“போதும்ப்பா..! உங்களுக்காக நான் எவ்வளவோ அமைதியா இருந்துட்டேன். இனியும் நான் அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறிங்களா?” என்றான் கோபமாய்.

“அம்மாடி அபர்ணா..! நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்லேன்மா” என்றார் நடராஜன்.

“கண்டிப்பா எடுத்து சொல்றேன் மாமா” என்றவள்,

“இனி சக்தி பேக்கரிக்கு போக மாட்டாரு. இவ்வளவு தூரம் ஆனப் பிறகு அவருக்கு அங்க வேலை செய்யணும்னு எந்த அவசியமும் கிடையாது” என்றாள் அபர்ணா.

“அபர்ணா” என்றவர்களுக்கு பேச்சே வரவில்லை. பிரபாகரனுக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. கோபமாய் மனைவியை முறைத்தவன்,

“இங்க பாருப்பா அபர்ணா! நான் அவனை நம்பித்தான் வேற ஏற்பாடு பண்ணலை. இப்ப திடீர்ன்னு இப்படி சொன்னா என்னப்பா அர்த்தம். செல்வி பேசுனதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றான் பிரபாகரன்.

“நீங்க மன்னிப்பு கேட்கணும்னு நான் இதை சொல்லலை மாமா. இவ்வளவு பேச்சு வந்ததுக்கு அப்பறம் சக்தி அங்க வர்றது சரியா இருக்காது. ஏன்? ஊருக்குள்ள வேற வேலையே கிடைக்காதா என்ன? அப்படி உங்க கடையில தான் வேலை செய்யணும்னு என்ன அவசியம் வந்தது?” என்றாள் கேள்வியாய்.

“நான் அவனுக்கு வேலை கிடைக்காதுன்னு எப்பமா சொன்னேன். எனக்கு நம்பிக்கையான ஆள் கிடைக்காதுன்னு தான் சொல்றேன். அடிச்சுட்டும் பிடிச்சுட்டும் நடராஜன் பசங்க ஒண்ணா இருக்காங்கன்ற பேரு தான் வெளிய இருக்கு. இப்போ அது கெடனுமா?” என்றான் பிரபா.

“ஒண்ணா இருக்கணும்னு ஒருத்தர் மட்டும் நினைச்சா பத்தாது மாமா. எல்லாரும் நினைக்கணும். இவ்வளவு தூரம் யோசிக்கிற நீங்க, ஏன் உங்க மனைவியை பேச விட்டு வேடிக்கை பார்க்குறிங்க? உங்க தம்பிக்காக இது வரைக்கும் என்ன பண்ணியிருக்கிங்க? இல்ல, தம்பியா தான் அவரை மதிச்சிருக்கிங்களா? நானும் வந்த அன்னைக்கு இருந்து பார்க்குறேன். குடும்பம் ஒத்துமையா இருக்கணும், உங்களுக்கு வேலை செய்ய ஒரு ஆள் வேணும். அதுக்கு சிவான்ற இளிச்சவாயன் வேணும். அவரு சாப்பிட்டாரா இல்லையா? எப்ப வர்றாரு? எப்ப போறாரு? இப்படி எதுவுமே தெரியாது. ஆனா கடையில வேலை ஒழுங்கா நடக்கணும், கணக்கு சரியா இருக்கணும். லாபமும் நிறைய வரணும். ஆனா பேர் மட்டும் அவருக்கு போயிடவே கூடாது. என்ன ஒரு நல்ல எண்ணம் உங்களுக்கெல்லாம்?” என்று நிறுத்தியவள்,

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்? இத்தனை நாள் குடும்பம் பிரியாம இருந்ததுக்கு நீங்க எல்லாரும் காரணம்னா? இல்லவே இல்லை, உங்க பொண்டாட்டிங்க பண்றதுக்கும் பேசுறதுக்கும் சக்தி பொறுமையா போகப் போய் தான் குடும்பமும் ஸ்மூத்தா போகுது. கடையும் ஸ்மூத்தா போகுது” என்றாள் கிண்டலுடன்.

“அபி போதும்..! வா போகலாம்” என்றான் சிவா.

“இப்போ ஏன் என்னை தடுக்குறிங்க? நான் பேசக் கூடாதுன்னு நினைக்கிறிங்களா? இல்ல எனக்கு பேச உரிமை இல்லைன்னு சொல்றிங்களா?” என்றாள் அவன் கண் பார்த்து.

“நான் எப்போ அபி அப்படி சொன்னேன்? உனக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கு இருக்கு?” என்றான் சிவா.

“அப்போ இனி பேக்கரிக்கு போகாதிங்க” என்றாள் திடமான குரலில்.

“சரி போகலை. ஆனா அவங்க பேசுனதுக்கு அண்ணா என்ன செய்வான்? சட்டுன்னு விட்டுட்டு வர முடியாது அபி” என்றான் சிவா.

“அப்போ பத்து நாள் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள உங்க அண்ணாகிட்ட எதையெல்லாம் சொல்லணுமோ சொல்லி, எதையெல்லாம் ஒப்படைக்கனுமோ ஒப்படைச்சுட்டு வந்துடுங்க. அதுவும் காலையில  என்னை ஸ்கூல்ல விட்டுட்டு பேக்கரி போகணும். நான் வரும் போது நீங்களும் வந்துடனும். இதுக்கெல்லாம் சரின்னா போங்க. இல்லையா போகவே வேண்டாம். கடையோட ஓனருக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு. அவங்க போய் அதிகாலை மூணு மணிக்கு கடையைத் திறக்கட்டும்” என்றாள் தெளிவான குரலில்.

“சரி அபி” என்றவன் அண்ணனிடம் திரும்பினான்.

“என்னால இவ்வளவு தான் பண்ண முடியும்ண்ணா. நம்பிக்கையான ஒரு ஆளை நீங்க பார்த்துகிட்டாலும் சரி, இல்லை நீங்களே பார்த்துகிட்டாலும் சரி. இந்த பத்து நாள் எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஆனா அதுக்கு மேல நான் இருக்க மாட்டேன்” என்றான் சிவாவும் உறுதியான குரலில்.

“அப்படியெல்லாம் சம்பளம் வேண்டாம்னு சும்மா செய்ய முடியாது மாமா. பத்து நாளைக்கு என்ன சம்பளமோ அதைக் குடுத்துடுங்க” என்றாள் அபர்ணா பட்டென்று.

“இப்ப உனக்கு சந்தோஷமா?” என்ற பிரபா மனைவியை அடிக்கப் போக, அவனைத் தடுத்த சத்யா,

“இப்போ கத்தி என்ன ஆகப் போகுது பிரபா. ஆரம்பத்துலையே இவங்க ரெண்டு பேருக்கும் இடம் குடுத்துட்டோம். அதான் இப்போ இங்க வந்து நிக்கிறோம். உன் மாமனார் முதல் போட்டு ஆரம்பிச்சுக் குடுத்ததால தான இத்தனை பேச்சும். பேசாம அந்த பணத்தை திருப்பிக் குடுத்துடு. கொஞ்ச நஞ்ச மரியாதையாவது நமக்கு மிஞ்சும்” என்றான் சத்யா.

“இன்னொரு கணக்கும் பாக்கியிருக்கு மாமா” என்ற அபர்ணா, நடராஜனிடம் சென்றிருந்தாள்.

“இந்த வீடு யார் கட்டினது மாமா?” என்றாள்.

“பிரபாவும், சத்யாவும் தான்மா. சிவா அப்போ படிச்சுட்டு இருந்தான்” என்றார் நடராஜன்.

“ஹோ” என்றவள்,

“இந்த இடம் நீங்க வாங்கிப் போட்டதுன்னு அத்தை சொன்னாங்க” என்றாள் கேள்வியாய்.

“இடம் நான் தாம்மா வாங்கிப் போட்டேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி வாங்கிப் போட்டது. இப்போ இங்க வாங்க முடியுமா?” என்றார்.

“மொத்தம் எத்தனை சென்ட் மாமா?” என்றாள்.

“பதினஞ்சுக்கும் கொஞ்சம் கூடம்மா” என்றார் நடராஜன்.

“இந்த வீட்ல வேணும்னா சிவாவுக்கு பங்கில்லாம இருக்கலாம். ஆனா இந்த இடத்துல பங்கு இருக்கு தானே?” என்றாள் கேள்வியாய்.

செல்வியும், சரிதாவும் அதிர்ந்து பார்க்க,

“என்ன பார்க்குறிங்க? வீடு மட்டும் தான் உங்க புருஷங்க கட்டினது. ஆனா, இடம் பெரிய மாமா வாங்கிப் போட்டது. சக்தியோட அப்பா வாங்கினதுல சக்திக்கு பங்கில்லைன்னு நீங்க எப்படி சொல்ல முடியும். இன்னைக்கு இங்க ஒரு சென்ட் இடம் எட்டுல இருந்து பத்து லட்சம் போகுது. அப்படி பார்த்தா சிவாவுக்கு அஞ்சு சென்ட் இடம் இருக்கு. நாற்பது இருந்து அம்பது லட்சம் வரைக்கும்னு வச்சுக்கோங்க. இதை இல்லைன்னு உங்களால மறுக்க முடியுமா? காலி இடத்துல நீங்க தான் செட் போட்ருக்கிங்க. உங்க பேக்கரி திங்க்ஸ் எல்லாம் அங்க தான் இருக்கு. பேக்கரி வண்டியை அங்க தான் பார்க் பண்றிங்க. அப்போ நாங்க வாடகை கேட்கலாமா?” என்றாள் அபர்ணா.

“முறைப்படி பிரிச்சா அந்த இடம் எங்களுக்குத் தான் வரும்” என்றாள் செல்வி ரோஷமாக.

“உங்களுக்கே தெரியுது. முறைப்படி பிரிச்சா அந்த இடம் உங்களுக்குத் தான்னு. அப்போ சக்திக்கு எங்க வரும்னு உங்களுக்குப் புரியுதா? நீங்க வீடு கட்டியிருக்கிறதே சக்திக்கு பிரிக்கிற இடத்துல தான். இப்போ எங்களுக்கு இதே இடம் தான் வேணும். வீட்டை என்ன செய்றதா உத்தேசம்?” என்றாள் நக்கலுடன்.

“அபி” என்றான் சிவா.

“இருங்க சக்தி. அவங்க எப்படியும் ஒரு பதில் வச்சிருப்பாங்க” என்றாள் அபர்ணா.

“இப்போ என்ன? வீட்டை இடிக்கனும்னு சொல்றியா?” என்றாள் செல்வி கோபமாய்.

“நான் எங்க அப்படி சொன்னேன்? ஓசியில குடியிருக்கோம்னு நீங்க தான சொன்னிங்க. அதைத் தான் உங்களுக்கு புரிய வச்சுட்டு இருக்கேன். நாங்க மேல இருக்குறது ஒரே ரூம் தான். வாடகைன்னு பார்த்தா அதிக பட்சமே ஐயாயிரம் தான். ஆனா இந்த ஏரியால தரை வாடகை அஞ்சு சென்ட்க்கு பத்தாயிரத்துக்கும் மேல. அதனால எங்க வீட்டு வாடகையை கழிச்சுட்டு மிச்ச ஐயாயிரத்தை மாச மாசம் மறக்காம குடுத்துடுங்க” என்றாள் அபர்ணா ஒரே போடாய்.

செல்வி விழி பிதுங்கிப் போய் நிற்க, சரிதாவோ வாயைத் திறக்கவே இல்லை. வாயைத் திறந்தாள் தன்னிடமும் எதுவும் கணக்கு சொல்வாளோ என்ற பயம் அவளுக்கு.

“மறக்காம அந்த ஐயாயிரத்தை அத்தை மாமாகிட்ட குடுத்திடுங்க. அவங்க காலத்துக்குப் பிறகு நாங்க வாங்கிக்கிறோம். எங்க கடைன்னு சொன்ன வரைக்கும் சரி. இனி எங்க வீடுன்னு பேச்சு வந்தது, என்ன செய்வேன்னு தெரியாது” என்றவள் நடராஜன் கலையரசியிடம் திரும்பியவள்,

“இதை நீங்க பேசியிருக்கனும். எப்பவுமே ஒரு வீட்ல ஒரு பிள்ளையை மட்டுமே பொறுமையா போக சொல்றது எந்த விதத்துலயுமே நியாயம் கிடையாது அத்தை. நான் பேசினது தப்புன்னு நினைச்சா.. அப்படியே நினைச்சுக்கோங்க. ஏன்னா, நான் பேசினது சரின்னு எனக்குத் தெரியும்” என்றவள் அடுத்த நிமிடம் கிளம்பியிருந்தாள்.

யாருக்கும் பேச்சே வரவில்லை. என்ன பேசுவதென்று தெரியாமல் அனைவரும் பார்த்திருக்க, சத்யா தான் வாயைத் திறந்தான்.

“சிவா” என்றான் எடுத்த எடுப்பில்.

“அபி பேசுனதுல எந்த தப்பும் இல்லைண்ணா. இதெல்லாம் எனக்குத் தெரியாம இல்லை. பொறுமையா போயிட்டேன். கூடப் பிறந்த பாவத்துக்கு நான் பொறுமையா போகலாம். ஆனா அவ ஏன் பொறுமையா போகணும்?” என்றவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான். புயல் அடித்து ஓய்ந்ததைப் போல் இருந்தது வீடு.

மொட்டைமாடிக் காற்றில் முடிகள் பறக்க, இருளை வெறித்துக் கொண்டு நின்றவளை கைப்பிடி சுவரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. அவன் பார்வையில் அவள் மனம் குறுகுறுக்க.

“என்ன பார்வை?” என்றாள்.

“ஏன் பார்க்கக் கூடாதா?” என்றான்.

“பார்க்கலாம்..! ஆனா சுவத்துல இருந்து இறங்குங்க முதல்ல. கீழ விழுந்தா தெரியும்?” என்றாள்.

சட்டென்று குதித்து இறங்கியவனை முறைத்தாள் அபர்ணா.

அவள் அருகில் வந்து நெருங்கி நின்றவனைக் கண்டவளுக்கு மூச்சடைத்தது. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு பதற்றம் அவளுக்குள் உருவானது.காற்றில் சிலுப்பிக் கொண்டிருந்த அவள் முடிக் கற்றைகளை விலக்கியவனின் மென்மையில் தொலைந்திருந்தாள்.

“ஒரு ஹக் பண்ணிக்கட்டுமா உன்னை?” என்றான்.

அவனின் கேள்வியில் முகம் சிவந்தவள்,

“எதுக்கு?” என்றாள் இழுத்துப் பிடித்த கோபத்துடன்.

“உன் டென்ஷனை குறைக்கத் தான்” என்றான் சிரிப்புடன்.

“ஹக் பண்ணா டென்ஷன் குறையுமா என்ன?” என்றாள்.

“செக் பண்ணி பார்த்திடுவோம்” என்றவன் அவளை இழுத்து அணைத்திருந்தான். அவன் அணைப்பிற்குள் அடங்கியவளுக்கு, மனம் அப்போது தான் ஆசுவாசமாய் இருந்தது. ஒரு அணைப்பில் இத்தனை ஆறுதல் கிடைக்குமென்று அவனும் அன்று தான் உணர்ந்திருந்தான்.