அத்தியாயம் 7

மரணத்தை விட கொடுமையானது 

உன்னால் நான் சிந்தும் கண்ணீர்!!!!

     அன்று மாலை ஆதியை அழைத்துக் கொண்டு ஜானகி மருத்துவமனை செல்ல வீட்டில் உள்ளவர்கள் எரிச்சலுடன் இருந்தார்கள். மருத்துவமனை வந்ததும் அவள் சாதாரணமாக ரகுவைப் பார்க்க அவனோ ஏக்கம் நிறைந்த கண்களோடு அவளைப் பார்த்தான். கீர்த்தி இறந்து விட்டாள் என்று எண்ணிய பிறகு அவன் பார்வை அவளுக்கு தவறாக தெரிய வில்லை. நிர்மலாவுக்கு பதில் கொடுத்தவள் அவளை வீட்டுக்கு போய் விட்டு வரும் படி சொன்னாள்.

     நிர்மலா கிளம்ப ஆதி நிர்மலாவின் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க இப்போது அவளாகவே ரகு அருகில் சென்று அமர்ந்தாள். அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேச வில்லை.

     “இப்ப சொல்லு ரகு. ஏன் அப்படி பேசின?”, என்று அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.

     “எனக்கு தோணுச்சு சொன்னேன்”, என்று அவன் அசால்ட்டாக சொல்ல “ரகு, பிளீஸ் தெளிவா பேசு. ஏன் அப்படிச் சொன்ன?”, என்று கேட்டாள்.

     “ஏய் நீ எனக்கு வேணும்னு தோணுச்சு டி. அதான் சொன்னேன். இதுல என்ன இருக்கு?”, என்று உரிமையாக கோபப் பட அவளால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை.

     “கீர்த்தி எங்க டா? அவளுக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்க அவன் மௌனம் மட்டுமே பதிலாய்.

     “சொல்லு ரகு, கீர்த்திக்கு என்ன ஆச்சு? அவ இப்ப உயிரோட இருக்காளா இல்லையா? ஆதி கிட்ட கேட்டா அவனுக்கு அம்மான்னு யாரையும் தெரியாதாம்”

     “அதை எல்லாம் என் கிட்ட கேக்காத. என்னால எதையும் சொல்ல முடியாது. ஆனா இப்ப நானும் ஆதியும் மட்டும் தான். எங்களை ஏத்துக்குறதா இருந்தா கல்யாணம் பண்ணிக்கோ. இல்லையா விட்டுரு”

     “எதுவும் சொல்லாம எப்படி ரகு? நான் உங்க அம்மா கிட்ட கேக்குறேன்”

     “அம்மாவுக்கு நான் காதலிச்சது நீ என்னை அசிங்கப் படுத்தினது எதுவும் தெரியாது. கீர்த்தியும் நானும் ஒண்ணா படிச்சது கூட தெரியாது. அதை எல்லாம் சொல்லி என்ன நடந்ததுன்னு கேளு. கண்டிப்பா உன்னை மன்னிக்கவே மாட்டாங்க”

     “சரி கேக்கலை. நீ சொல்லு கீர்த்தி பத்தி”

     “கீர்த்தி பத்தி உன் கிட்ட எதுக்கு சொல்லணும்?”

     “ரகு?”

     “நான் உன்னை உருகி உருகி காதலிச்சேன். ஆனா நீ எனக்கு கொடுத்த பதில் அவமானம். இப்பவும் உன் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சிக்கிட்டு இருக்கேன். அதை நினைச்சு தான் எனக்கே கேவலமா இருக்கு. விடு இனி நான் எதுவும் சொல்லலை. அந்த நவீனையே கல்யாணம் பண்ணிக்கோ. அம்மா சொன்னாங்க, அவன் தான் உனக்கு பொருத்தமா இருப்பான்னு”

     “கீர்த்தி உண்மையிலே செத்துட்டாளா டா?”, என்று கேட்க அவன் பதிலே சொல்ல வில்லை. ஆனால் அவன் முகம் வேதனையை சுமந்திருந்தது. உண்மையிலே கீர்த்தி இறந்து விட்டாள் என்று முடிவு செய்து கொண்டாள் ஜானகி.

     “நீ உண்மையிலே என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறியா ரகு?”. என்று அவள் கேட்க ஆம் என்று தலையசைத்தான்.

     “சரி நான் எங்க வீட்ல பேசுறேன்”, என்று அவள் சொல்ல “நிஜமாவா?”, என்று கண்கள் மின்னக் கேட்டான்.

     “ஆமா”, என்று தலையசைக்க அவன் முகம் மலர்ந்தது. அடுத்து இருவரும் பேச வில்லை. இருவருக்குள்ளும் பல கேள்விகள் இருக்க அதற்கு இருவரும் விடை தேட முயல வில்லை. ஆனால் கீர்த்தி இந்த உலகத்தில் இல்லை என்று மட்டும் எண்ணிக் கொண்டாள்.

     நிர்மலா வந்ததும் ஆதியை அழைத்துக் கொண்டு அவள் நேராக சென்றது நவீனைப் பார்க்க தான். நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னவள் இப்போது எடுத்திருக்கும் முடிவையும் சொல்ல நவீனுக்கோ என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவள் காதல் தெரியும். இருந்தாலும் ரகு பக்கம் இன்னும் குழப்பம் தீர வில்லையே? அவனும் கீர்த்தி இறந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டான்.

     “உன் விருப்பம் ஜானு. ஒரு பிரண்டா என்னால அதை தான் சொல்ல முடியும். வேற யாரையும் உன் மனசு ஏத்துக்காதப்ப இது தான் சரியான முடிவு. ஆனா ரெண்டாவது கல்யாணம். குழந்தை வேற இருக்கு. சொந்தங்களால் உனக்கு நிறைய காயம் வரலாம். எல்லாத்தையும் தாங்க மனசை பக்குவப் படுத்திக்கோ. ஆனா என்ன கஷ்டம் வந்தாலும் ஒரு பிரண்டா நான் உன் கூட இருப்பேன். அப்புறம் உன் காதல் ஜெயிக்க போகுது வாழ்த்துக்கள்”, என்று சொல்ல அவள் புன்னகைத்தாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு ஆதியுடன் கிளம்பினாள்.

     அன்று இரவு அனைவரும் உண்ணும் போது விஷ்ணுவே அவள் திருமண பேச்சை ஆரம்பித்தான். நவீன் மேலோட்டமாக அவள் முடிவை விஷ்ணுவிடம் சொல்லி இருக்க அது அவனுக்கு பிடிக்க வில்லை என்றாலும் வேறு வழி இல்லை என்று சம்மதித்தான்.

     ஆனால் தங்கை மனதில் என்ன இருக்கிறது என்று அவளே சொல்லட்டும் என்று எண்ணி “அப்பா என்னோட பிரண்டு நாளைக்கு ஜானகியை பொண்ணு பாக்க வரான். எல்லா ஏற்பாடும் பண்ணனும்”, என்றான் விஷ்ணு.

     அதிர்ந்து அவனைப் பார்த்தவள் தந்தையைப் பார்க்க “அண்ணா சொல்ற மாப்பிள்ளை வரட்டும் டா குட்டி. உனக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சா தான் அவன் வாழ்க்கை நல்லா அமையும் மா”, என்றார் மோகன்.

     “சரிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ரகுவைக் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”, என்று ஜானகி நிதானமாக சொல்ல பெற்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.

     “உனக்கு என்ன பைத்தியமா டி? ரெண்டாந்தாரமா போறேன்னு சொல்ற? அதுவும் குழந்தையோட இருக்குறவனை கட்ட போறேன்னு சொல்ற?”, என்று தேவகி கேட்க “அம்மா என்னால ரகுவை மறக்க முடியாது. கீர்த்தி இப்ப உயிரோட இல்லை. ரகுவே என்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டான்.  இந்த வாய்ப்பை நான் தவற விட தயாரா இல்லை. எனக்கு ரகு தான் வேணும்”, என்று பிடிவாதமாக சொன்னாள்.

     “சரி ஜானு, உனக்கு பிடிச்சா எங்களுக்கு ஓகே தான். ஆனா குழந்தை…”, என்று மோகன் இழுக்க “ஆதி என் பையனாவே வளரட்டும் பா”, என்று முடித்தாள் மகள்.

     “சரி மா, எங்களுக்கும் அந்த ரகுவை மறுக்க வேற காரணம் இல்லை. எங்களுக்கு எப்பவும் உன் சந்தோஷம் தான் முக்கியம். எங்களுக்கு சம்மதம்”, என்று மோகன் சொல்ல விஷ்ணுவும் ஆம் என்று தலையசைத்தான். தேவகிக்கு பிடிக்க வில்லை என்றாலும் ஒன்றும் சொல்ல வில்லை.

     அனைவருமே கீர்த்தனா இறந்து விட்டாள் என்று நம்பியதால் வேறு குழப்பம் வரவில்லை. எல்லாருடைய மனமும் திருமணத்தை எதிர்க் கொள்ள தயாராக இருந்தது. ஜானகி சந்தோஷமாக இருந்தாள். அவளது நிறைவேறாத காதல் நிறைவேறப் போகிறது என்று அவ்வளவு சந்தோஷம். அந்த சந்தோசத்துக்கு ஆயுள் கம்மி என்று அவளுக்கு யார் சொல்வது?

     ஒரு வாரம் எப்படியோ நகர்ந்தது. ரகு மெடிக்கல் லீவில் வீட்டில் இருந்ததால் திருமண பேச்சு வார்த்தை அப்படியே இருந்தது. தினமும் ரகு ஜானகியிடம் போனில் பேசினான். அவளும் அவனுடன் நன்றாகவே பேசினாள். அவனது ரிப்பெயரான போனை சரி பண்ணிக் கொடுத்தது கூட அவள் தான். அதற்கு அவன் பணத்தை எடுத்து தர “நான் உனக்கு யாரோன்னா இந்த பணத்தைக் கொடு”, என்று சொல்லி அவனைத் தீர்க்கமாக பார்த்தாள்.

     “நீ என்னோட பொண்டாட்டி டி”, என்று சொன்னவன் பணத்தை உள்ளே வைத்துக் கொள்ள அவளுக்கோ அவன் மேல் இருந்த ஆசைகள் கிளர்ந்தது அவனது பொண்டாட்டி என்ற வார்த்தையில்.

     அவள்  வெட்கத்துடன் அவனைப் பார்க்க “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா ஜானு?”, என்று கேட்டான்.

     “வீட்ல வந்து பேசு. நான் எல்லாம் சொல்லிட்டேன். எங்க வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க”

     “சரி கொஞ்சம் உடம்பு சரி ஆகட்டும். அம்மாவைக் கூட்டிட்டு வந்து பேசுறேன்”, என்று சொல்ல அவளும் சரி என்று சொன்னாள்.

     “சரி அன்னைக்கு ஒரு கேள்வி கேட்டேன், நீ பதிலே சொல்லலை?”, என்று கேட்டு அவன் ஒரு மாதிரி சிரிக்க அது என்னவென்று அவளுக்கு புரிந்தது.

     அவன் கையில் நறுக்கென்று கிள்ளியவள் “தலை வலிக்குதுன்னு பொய் சொல்லி கள்ளத்தனம் பண்ணிட்டு கேள்வியா கேக்குற?”, என்று கோபமாக கேட்பது போல இருந்தாலும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

     அவள் வெட்கத்தை ரசித்த ரகு அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். அவள் அவனது உயிர் ஆயிற்றே. திருமணத்தை அவ்வளவு ஆவலாக எதிர் பார்த்தான். ஆனால் இன்னும் நிர்மலாவிடம் விஷயத்தை சொல்ல வில்லை. அன்னையிடம் எப்படிச் சொல்ல என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.